Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏற்பது இகழ்ச்சி!

Posted on July 17, 2014 by admin

ஏற்பது இகழ்ச்சி!
 
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,
 
[ எல்லோரும் அல்லாஹ்விற்காக உண்ணா நோன்பு நோற்று, தான தர்மங்கள் செய்து நன்மைகளை அறுவடை செய்கிறோம்.

ஆனால் நம்முள் வேறு சிலரோ இந்த ரமளானில் எவ்வளவு அறுவடை செய்யலாம். எத்தனை பள்ளிகளில் வசூல் செய்யலாம். எவ்வளவு ஆதாயம் பார்க்கலாம். என்னென்ன நொண்டிச் சாக்குகளைச் சொல்லி வசூல் செய்யலாம் என்று முன்னரே கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்; திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரமளான் மாதத்தை ஓர் அறுவடைப் பருவமாக எண்ணிக்கொண்டு ஒவ்வொரு மஸ்ஜிதையும் நோக்கிப் படையெடுத்துச் செல்லக் காத்திருக்கின்றனர்.
 
தொழுகை முடிந்து வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் கையேந்திகளின் தொல்லைகளை அனுபவிக்காமல் செல்ல முடியாது. இத்தகைய அவல நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது இந்தச் சமுதாயம். 

அதே நேரத்தில் சிலர் தம் கொடிய வறுமையிலும் பிறரிடம் கையேந்த வெட்கப்பட்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டும் அல்லாஹ்வை ஐவேளை தொழுதுகொண்டு சுயமரியாதையோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இத்தகையோரைக் கண்ணுறும்போது திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள இறைவசனமே நெஞ்சில் நிழலாடுகிறது: ”மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்க மாட்டார்கள்.” (2: 273)]

பிறரைச் சார்ந்து வாழ்வதிலேயே சுகம் கண்டவர்கள் சுயமாக உழைத்து முன்னேறவோ சுயதேவைகளைச் சுயமாகப் பூர்த்தி செய்துகொள்ளவோ முயற்சி மேற்கொள்வதில்லை. பிறரைச் சுரண்டிப் பிழைத்தல், அல்லது பிறரிடம் கையேந்திப் பிழைத்தல் அவர்களின் தொழிலாகும். இன்று எங்கு நோக்கினும் கையேந்திகள் கணக்கின்றிக் காணப்படுகின்றனர். மக்கள் கூடுமிடங்களெல்லாம் அவர்களின் தொழிற்தளங்களாகும். கடற்கரை, பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தளங்கள், தெரு முனைகள் என அவர்களின் தளங்கள் விரிந்து கிடக்கின்றன.
 
உடல் ஆரோக்கியத்தோடும் கட்டுறுதியான உடலமைப்போடும் இருந்துகொண்டு பிறரிடம் தயக்கமின்றிக் கையேந்துகின்றார்கள். மனிதர்களின் இரக்க உணர்வைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இத்தகையோர் சாதி, மத வேறுபாடின்றி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள். மிகுதியானோர் ஊர்விட்டு ஊர் சென்று கையேந்திப் பிழைக்கின்றார்கள். உள்ளூரில் சுயரூபம் தெரிந்துவிடும் எனும் அச்சத்தால் வெளியூருக்குச் சென்று வேடமிட்டுப் பிழைக்கிறார்கள். ஸகாத் வழங்கத் தகுதியானவர்கள்கூடப் பிறர் வழங்கும் ஸகாத்தைக் கைநீட்டிப் பெற வெட்கப்படுவதில்லை.
 
யார் யாசகம் பெறத் தகுதியானவர்? எவர் சுயமாகச் சம்பாதிக்க முடியாத அளவுக்கு உடல்ரீதியாக இயலாதவராகவோ, பலவீனமானவராகவோ, உடல்நலம் குன்றியவராகவோ, ஊனமுற்றவராகவோ இருக்கின்றாரோ அவர் தம் பசியைப் போக்கிக் கொள்ளும் அளவிற்குப் பிறரிடம் யாசகம் பெறுவதில் தவறில்லை. இருப்பினும் அவர் தம் பசியைப் போக்கிக்கொள்ளும் நிலைக்கு மேற்பட்டு, சேமிக்கும் அளவிற்கு யாசகம் கேட்பது கூடாது. இதையே நபிகள் நாயகத்தின் கீழ்க்கண்ட கூற்றுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது.
 
”மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள மனிதன் தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவனாகவே மறுமை நாளன்று வருவான்.” (நூல்: புகாரீ: 1474)
 
”எவர் வறுமையின்றி யாசகம் கேட்கின்றாரோ அவர் (நரக) நெருப்புக் கங்கைச் சாப்பிடுபவரைப் போன்றவராவார்.” (நூல்: அஹ்மத்: 16855)
 
நபிகளார் காலத்தில் ஒருவர் யாசகம் கேட்டு வருகின்றார். அவர் ஓர் இளைஞர். அவரை அழைத்து அவருடைய வீட்டிலுள்ள ஏதேனும் பொருளை எடுத்துவரச் செய்து அதை மக்கள் மத்தியில் ஏலம் விட்டு இரண்டு பொற்காசுகளைப் பெற்று, அவரிடம் கொடுத்து, ஒன்றில் உன் குடும்பத் தேவையை நிறைவேற்றிக்கொள். மற்றொன்றில் ஒரு கோடரி வாங்கி வா என்று கட்டளையிட, அவர் அவ்வாறே ஒரு கோடரியை வாங்கி வந்து நபிகளாரிடம் கொடுக்க, நபிகளார் அதற்குத் தம் பொற்கரங்களால் ஒரு பிடியைப் போட்டுக் கொடுத்து, இதன்மூலம் விறகு வெட்டிப் பிழைத்துக்கொள் என்று கட்டளையிட்டார்கள்.
 
கட்டுடல் கொண்ட இளைஞர் மக்களிடம் யாசகம் கேட்டுப் பெறத் தகுதியற்றவர் என்பதால் அவருக்கு ஒரு தொழிலைச் சொல்லிக் கொடுத்து, அதன்மூலம் உழைத்துப் பிழைத்துக்கொள் என்று வழிகாட்டினார்கள் அண்ணலார். எனவே நாம் தர்மம் செய்யுமுன் யோசித்துச் செய்வது நல்லது. நாம் கொடுக்கின்ற தர்மத்தைப் பெற இவர் தகுதியானவரா? அல்லது நாம் தர்மம் கொடுத்து இவரைச் சோம்பேறியாக்குகின்றோமா? என்பதை யோசிக்க வேண்டும். சிலர் யாசகம் கேட்பதைத் தம் தொழிலாகவே ஆக்கிக்கொள்கிறார்கள். போதிய பணம் கிடைத்த பின்னரும் அதை வைத்து ஏதேனும் தொழில் செய்யலாம் என்று எண்ணுவதில்லை. அதிலேயே அவர்கள் சுகம் கண்டுவிடுகின்றார்கள்.
 
எல்லோரும் அல்லாஹ்விற்காக உண்ணா நோன்பு நோற்று, தான தர்மங்கள் செய்து நன்மைகளை அறுவடை செய்கிறோம். ஆனால் நம்முள் வேறு சிலரோ இந்த ரமளானில் எவ்வளவு அறுவடை செய்யலாம். எத்தனை பள்ளிகளில் வசூல் செய்யலாம். எவ்வளவு ஆதாயம் பார்க்கலாம். என்னென்ன நொண்டிச் சாக்குகளைச் சொல்லி வசூல் செய்யலாம் என்று முன்னரே கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்; திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். ரமளான் மாதத்தை ஓர் அறுவடைப் பருவமாக எண்ணிக்கொண்டு ஒவ்வொரு மஸ்ஜிதையும் நோக்கிப் படையெடுத்துச் செல்லக் காத்திருக்கின்றனர்.
 
தொழுகை முடிந்து வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் கையேந்திகளின் தொல்லைகளை அனுபவிக்காமல் செல்ல முடியாது. இத்தகைய அவல நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது இந்தச் சமுதாயம்.  அதே நேரத்தில் சிலர் தம் கொடிய வறுமையிலும் பிறரிடம் கையேந்த வெட்கப்பட்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டும் அல்லாஹ்வை ஐவேளை தொழுதுகொண்டு சுயமரியாதையோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோரைக் கண்ணுறும்போது திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள இறைவசனமே நெஞ்சில் நிழலாடுகிறது: ”மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்க மாட்டார்கள்.” (2: 273)
 
ஏற்பது இகழ்ச்சி என்று கூறிவிட்டுத்தான் ஐயமிட்டு உண் என்று ஔவைப் பாட்டி கூறியுள்ளார். இரண்டிற்குள்ளும் பொருட்செறிவு நிறைந்த அர்த்தங்கள் உள்ளன. பிறரிடம் கையேந்திப் பிச்சையெடுத்தல் இழிவான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்துவிட்டு, உன்னிடம் கேட்டு வருவோரை விரட்டிவிடாதே. அவருக்கு ஐயமிட்டு, நீ உண் என்று செப்புகிறார்.
 
அதேபோல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தாழும் கையைவிட உயர்ந்த கையே சிறந்தது என்று கூறியுள்ளார்கள்.  நீ உன் வலக்கையால் செய்யும் தர்மம் இடக்கைக்குத் தெரியக்கூடாது என்றும் கூறியுள்ளார்கள். நபிகளாரின் இவ்விரண்டு கூற்றையும் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, யாசகம் கேட்பதற்காக ஒருவன் தன் கையை நீட்டும்போது அவனது கை கீழே தாழ்கிறது. அவனுக்குக் கொடுப்பவனின் கை உயர்கிறது. ஆகவே ஒருவர் பிறரிடம் கையேந்தும்போது அவருடைய  சுயமரியாதையும் தாழ்கிறது என்று கூறி எச்சரிக்கை விடுக்கின்றார்கள். அதேநேரத்தில் யாசகம் கேட்போருக்குக் கொடுக்கும்போது விளம்பரமின்றிக் கொடுக்க வேண்டும் என்பதைத்தான் வலக்கையில் கொடுப்பது இடக்கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்ற கூற்று விளக்குகிறது.
 
திருக்குர்ஆனில் அல்லாஹ்வின் கூற்றை உற்று நோக்கும்போது, யாசகரை விரட்டாதீர் (93: 10) எனும் கட்டளை காணப்படுகிறது. ஆகவே யாசகம் கேட்பதோ, தர்மம் செய்வதோ தவறில்லை. ஆனால் அதில் ஒரு கட்டுப்பாட்டையும் நிபந்தனையையும் இஸ்லாம் விதிக்கிறது. ஒருவனின் சுய மரியாதைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்று கருதுகிறது இஸ்லாம். ஆனால் யாசகம் கேட்போர் தம் சுயமரியாதையை இழந்து சுகமாக வாழ்வதற்காகப் பிறரிடம் கையேந்துவதற்கு வெட்கப்படுதில்லை  என்பது இன்றைய நிதர்சன உண்மை.
 
முக்காடு போட்டுக்கொண்டும் முகத்திரை அணிந்துகொண்டும் பெண்கள் பள்ளிவாசல்தோறும் கையேந்தி நிற்பதைக் கண்டு முகம் சுளிக்காமல் இருக்க முடியவில்லை. இது அவர்களின் பசியின் தூண்டலா? அல்லது மக்களை ஏமாற்றும் செயலா? எது உண்மையெனப் படைத்தவனே அறிவான்.
 
ஒவ்வோராண்டும் ரமளான் வருகிறது; நோன்பு நோற்கிறோம்; தான தர்மங்கள் செய்கிறோம்; ஸகாத் வழங்குகிறோம்; ரமளான் சென்றுவிடுகிறது. பின்னரும் அதே ஏழைகள், அதே யாசகர்கள் மீண்டும் மீண்டும் பள்ளிவாசல்தோறும் கையேந்தும் நிலையில்தானே காணப்படுகிறார்கள்? இதற்கு மாற்று வழி இல்லையா?
 
மஹல்லாதோறும் ஏழைகளைக் கணக்கிட்டு, அந்தந்த மஹல்லாவில் ஸகாத், தர்மப் பொருள்கள் அனைத்தையும் வசூலித்து ஒன்றிணைத்து, அங்குள்ள ஏழைகளுக்கு மொத்தமாக வழங்கி, அவருக்கென ஒரு தொழிலைத் துவக்கிக் கொடுத்துவிட்டால் காலப்போக்கில் ஸகாத் பெறத் தகுதியானோர் குறைந்துவிடுவர். பள்ளிவாசல் முற்றங்களில் நின்று பிச்சையெடுக்கும் கூட்டம் குறையும். சமுதாயம்  மேன்மையடையும். இன்ஷா அல்லாஹ் செய்வோமா?

நூ அப்துல் ஹாதி பாகவி M. A.,M.Phil.
மொழிபெயர்ப்பாளர், ரஹ்மத் அறக்கட்டளை,
(நுங்கம்பாக்கம்) சென்னை.

source: www.hadi-baquavi.blogspot.in

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

81 + = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb