பலதார மணம் (POLYGAMY) (4)
1. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்து மக்களுக்காக ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வந்தார்கள். அதுபோலவே வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் மேற்கொண்ட திருமண வாழ்க்கையும் மிகவும் அழகிய முறையில் குடும்ப வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதாகும்.
அவர்கள் அன்பு நிறைந்த ஒரு கணவராக இருந்தார்கள். மனையறத்தின் கடமைகளை மாண்புற நிறைவேற்றினார்கள். மன்னிக்கும் மாண்பைக்கொண்டு மாதர்களுக்கு மனநிறைவைத் தந்தார்கள். தம் மனைவியோடு ஒப்பற்ற வாழ்க்கைத் துணையாக துணை நின்றார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் என்னென்ன அனுபவங்களைப் பெறுவானோ அத்தனை அனுபவங்களையும் பெற்றார்கள். அத்தனை அனுபவங்களிலும் ஒரு அழகிய முன்மாதிரியை அமைத்துத் தந்தார்கள்.
அவர்கள் ஒரு மனைவியோடு வாழ்ந்தார்கள். அதில் ஒரு அழகிய முன்மாதிரியை அவர்களிடம் காணலாம். அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு வாழ்ந்தார்கள். அதிலும் அவர்களிடம் சிறந்ததொரு எடுத்துக்காட்டைக் காணலாம். தன்னைவிட வயதில் முதிர்ந்த மனைவியோடு வாழ்ந்திருக்கின்றார்கள். வயதில் குறைந்த மனைவியோடும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
விதவையாக்கப்பட்ட பெண்களை மறுமணம் செய்து நறுமணம் பரப்பி இருக்கின்றார்கள். மணவிலக்கு செய்து விடப்பட்ட பெண்களை மணந்து கொண்டு மறுவாழ்வு கொடுத்திருக்கின்றார்கள். கோபம் நிறைந்த துணைவியரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். குணத்தில் நிறைந்த மனைவியரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தனை சூழ்நிலைகளிலேயும் அவர்கள் கருணை மிக்கவர்களாக, பார்வையிலே பரிகாரம் கிடைத்திடும் என்ற அளவில் ஆறுதல் தரும் அமைதி வாழ்க்கையையே நடத்தியுள்ளார்கள்.
மனித வாழ்வில் வரும் எல்லாப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வெற்றி பெற்றவர்களாக அவர்கள் வாழ்ந்தார்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வாழ்ந்த விதம் மனித இனம் அழியும்வரை ஒரு அழகிய முன்மாதிரியாக இருந்து கொண்டே இருக்கும். வாழ்வின் அத்தனை துறைகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும், அதன் மூலம் வாழ்வின் அத்தனை துறைகளுக்கும் அவர்கள் ஒரு முன்மாதிரியாக அமைந்திட வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாகும். அவர்கள் வாழ்ந்த குடும்ப வாழ்க்கை உடல் இச்சைகளை இலக்காகக் கொண்டதல்ல. அவர்களின் குடும்ப வாழ்க்கை ஒரு கடினமான சோதனை.
2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயர்ந்த ஒழுக்கத்தை இந்த உலகத்தில் நிலைநாட்டிட வந்தவர்கள். எல்லா முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு, பாதுகாப்பிற்கான உத்திரவாதம், ஆகியவற்றைப் பெற்றுத்தரவும், அமைதியானதொரு வாழ்வை அமைத்துத் தரவும் வந்தவர்கள், அதற்காகவே வாழ்ந்தவர்கள். வெறும் போதனைகளை மட்டும் போதித்திடுவது அல்ல அவர்களின் வாழ்க்கை. ஒவ்வொரு போதனையும் தனது வாழ்வில் நடத்திக் காட்டிட பணிக்கப்பட்டவர்கள். போதனைகளுக்குச் செயல்வடிவம் தருவதே அவர்களின் பணி. எப்போதும் அவர்கள் இந்தச் சோதனைகளில் மிகவும் கடினமான பகுதியை ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் அந்தச் சோதனைகளைச் சந்தித்தார்கள்.
இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்ட போர்களினால் முஸ்லிம்களில் பலர் இறந்து போனார்கள். இதனால் அனேக முஸ்லிம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டார்கள். இவர்களின் வாழ்க்கையை செப்பனிடுவது முஸ்லிம்களின் கடமையானது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விதவைப் பெண்களை தங்களது தோழர்களிடம் மணந்து மறுவாழ்வளிக்கப் பணிப்பது வழக்கம். சில பெண்களைத் தோழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சில பெண்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே அடைக்கலம் கேட்டார்கள். இஸ்லாத்திற்காக அவர்கள் செய்திருக்கும் மிகப்பெரிய தியாகத்தையும், அவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு ஏதேனும் ஒருவழியைத் தேடித்தந்தே ஆகவேண்டும். இதில் அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்திட முடியாது. பல நேரங்களில் அவர்கள் அப்பெண்களை மணந்துகொண்டு அதனால் வரும் குடும்பச் சுமையை எதிர்நோக்குவதன்றி வேறுவழி இருக்கவில்லை. ஆகவே அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் வாழ்ந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை பராமரிப்பது என்பது அத்தனைச் சுலபமானதன்று.
இறைவனின் தூதரவர்கள் அந்த விதவைகள், மணவிலக்குப் பெற்றவர்கள், அநாதைகள், ஆகிய அத்தனை பேருக்கும் மறுவாழ்வை அளிக்கும் பொறுப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டியதிருந்தது. காரணம், அவர்கள் தான் செய்யாத ஒன்றை அல்லது தான் செய்ய விரும்பாத ஒன்றைத் தன் தோழர்களிடம் ஒப்படைக்க முடியாதல்லவா? தனது செயலில் முதலில் செய்து காட்டிவிட்டுத் தானே மற்றவர்களிடம் அதனை செய்யச் சொல்ல முடியும். போர்களிலே விதவைக்கப்பட்டுவிட்ட பெண்கள் முஸ்லிம்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களே ஆவார்கள். அவர்களின் பராமரிப்புக் குறித்து முஸ்லிம்கள் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பொறுப்பை முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட திருமணங்களில் சில இந்த பெரும் பொறுப்பில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பங்கின் விளைவேயாகும். எப்போதும்போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதில் பெருவாரியான சுமையைத் தாங்களே ஏற்றுக் கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் ஏனைய தோழர்களை விட அதிகமான திருமணங்களை முடித்திட வேண்டியதாயிற்று.
3. அன்று நடந்த போர்களில் முஸ்லிம்கள் பல பெண்களை போர் கைதிகளாகப் பெற்றிருந்தார்கள். அவர்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் முஸ்லிம்களின் கடமையாகவே இருந்தது. அந்தப் போர்கைதிகளை முஸ்லிம்கள் கொல்லுவதில்லை. அவர்களின் ஆன்மீக உடல் தேவைகளை மறுக்கவும் முஸ்லிம்கள் தயாராக இல்லை. அவர்களை மணம் முடிக்காமல் ”வைத்துக்” கொள்வதற்குப் பதிலாக அவர்களை பொதுவான மனைவிமார்கள் என்று வைத்துக் கொள்வதற்குப் பதிலாக அவர்களை சட்டப்படி மணம் செய்து மறுவாழ்வளித்தனர். இது முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்த பொதுவான பொறுப்பாக இருந்தது. இங்கேயும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது பொறுப்பை இரண்டு கைதிகளை மணந்து வெளிப்படுத்திட வேண்டியதிருந்தது.
4. ஒரு சில திருமணங்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமுதாய மற்றும் அரசியல் காரணங்களுக்காக செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இஸ்லாத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுடன் தமது நிலைமையைப் பல்வேறு முயற்சிகளின் மூலம் வலுப்படுத்திட முனைந்தார்கள். இதனால்தான் அவர்கள் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறிய வயதுடைய மகளை மணந்து கொண்டார்கள். அபூபக்கர் அவர்கள் பெருமானார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடுத்தப்படியாகப் பொறுப்பேற்றவர்கள். அதேபோல்தான் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளை மணந்து கொண்டதும். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப்பின் பொறுப்பேற்றவர்கள். ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்து கொண்டதன் மூலம் தான் ‘பனீ அல்-முஸ்தலிக்’ என்ற குலத்தவரின் ஆதரவை திரட்ட முடிந்தது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்துத்தான் கடின சித்தமுடன் அரபு நாட்டில் வாழ்ந்த யூதர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடிந்தது. எகிப்திலிருந்து வந்த மேரி என்ற பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம் அவர்கள் எகிப்து அரசரருடன் அரசியல் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஆரம்ப நாட்களில் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் தந்த நாடு அபிசீனியா. இந்த அபிசீனியா நாட்டைச் சார்ந்த ‘நிகஸ்’ அவர்களால் அளிக்கப்பட்ட ’ஜைனப்’ அவர்களை மணந்து கொண்டது, அபிசீனிய மன்னரிடத்திலும் மக்களிடத்திலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்திய நட்பின், நன்றியின் வெளிப்பாடேயாகும்.
5. இந்தத் திருமணங்களில் சிலவற்றைச் செய்து கொண்டதன் மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குலம், கோத்திரம், ஜாதி, மதமாச்சரியங்கள், தேசியம் என்ற குறுகிய கண்ணோட்டங்களை ஒழித்தார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர் நிராதரவானவர்கள், ஏழைகள், அவர்கள் எகிப்திலிருந்து வந்த கிறிஸ்துவப் பெண்மணியை மணந்திருந்தார்கள், வேற்றுச் சமயத்தைச் சேர்ந்திருந்த ஒரு யூதப் பெண்மணியை மணந்திருந்தார்கள், அபிசீனியாவிலிருந்து வந்த ஒரு நீக்ரோ பெண்மணியை மணந்திருந்தார்கள். சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் வாயளவில் பேசிவிட்டு வாளாதிருந்திடுபவர்களல்ல பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதனை செயல்படுத்திக் காட்டிடவும் செய்தார்கள்.
6. சில சட்டப் பிரச்சினைகளுள் தெளிவினைத் தருவதற்காக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு திருமணத்தைச் செய்தார்கள்.
1) அன்றைய நாட்களில் குழந்தைகளைத் தத்தெடுக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. இந்தப் பழக்கத்திற்கு உட்பட்டுத்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஜைத்’ என்ற அடிமையை தத்தெடுத்து இருந்தார்கள். ஆனால் இஸ்லாம் இந்தப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை, தடை செய்தது. இந்தப் பழக்கத்திற்கு நடைமுறையில் முதல் மரணஅடி தந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஆவார்கள்.
’ஜைத்’ அவர்களால் மணவிலக்கு செய்யப்பட்டிருந்த ஜைனப் அவர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்து கொண்டார்கள். இதன் மூலம் தான் ஜைத் அவர்களின் உண்மையான ததை ஆகிவிடவில்லை என்பதையும், தத்தெடுக்கும் முறை தத்தெடுப்பவரைத் தந்தையாகவும் தத்தெடுக்கப்பட்டவரை மகனாகவும் ஆக்கி விடுவதில்லை என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
2) அன்று மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்வதை அரபு மக்கள் அனுமதிக்கவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணவிலக்குச் செய்யப்பட்ட அப்பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம், அதுபோன்ற பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.
வியத்தகு முறையில் இந்த ‘ஜைனப்’ அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முறைப் பெண்ணுமாவார்கள். முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘ஜைனப்’ அவர்களை மணமுடிக்கும் பேச்சு ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது மறுத்து விட்டார்கள். அதன் பின்னர்தான் ‘ஜைத்’ அவர்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டது. ‘ஜைத்’ அவர்களால் விவாகரத்து செய்யப்பட்ட பின்னர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்து கொண்டதன் காரணம், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்து மறுவாழ்வளிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டவேயாகும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில், (அதற்கு மாறாக வேறு) அபிப்ராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யாரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.
…..’ஜைத்’ அவளை தலாக்கு கூறிவிட்ட பின்னர், நாம் அவளை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், விசுவாசிகளால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தங்கள் மனைவிகளைத் தலாக்கு கூறிவிட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளையாக இருந்தது.
உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே அவர் ‘ஜைதுக்கு’ எவ்வாறு தந்தையாக ஆகிவிடுவார்?) ஆனால் அவரோ, அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அணுப்பவில்லை) அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 33:36,37,40)
இந்த உண்மைகளை மனதில் கொண்டே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட திருமணங்களை அணுகிட வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் மனதில் எந்தத் தடுமாற்றமுமில்லை. முஸ்லிமல்லாதவர்கள் நாம் இங்கே தந்திருக்கின்ற உண்மைகளை அவசியம் ஆராய்ந்து தங்களது முடிவுகளை வரையட்டும் என வேண்டுகிறேன்.
source: http://islamkural.com/?p=4344