நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)
وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ 6:153
‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தை கீழ் காணும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.
حدثنا أبو سَعِيدٍ عبد اللَّهِ بن سَعِيدٍ ثنا أبو خَالِدٍ الْأَحْمَرُ قال سمعت مُجَالِدًا يَذْكُرُ عن الشَّعْبِيِّ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كنا عِنْدَ النبي فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عن يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عن يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ في الْخَطِّ الْأَوْسَطِ فقال هذا سَبِيلُ اللَّهِ ثُمَّ تَلَا هذه الْآيَةَ وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ
‘நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள்.
பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு,
‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இப்னுமாஜா 11, அஹ்மத் 4142,4437,15312, தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
இணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (அல்குர்ஆன் 31:13)
விளக்கம்: இந்த வசனம் எப்போது இறக்கப்பட்டது என்ற விபரத்தை அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள்.
32 حدثنا أبو الْوَلِيدِ قال حدثنا شُعْبَةُ ح قال وحدثني بِشْرُ قال حدثنا محمد عن شُعْبَةَ عن سُلَيْمَانَ عن إبراهيم عن عَلْقَمَةَ عن عبد اللَّهِ قال لَمَّا نَزَلَتْ ( الَّذِينَ آمَنُوا ولم يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ ) قال أَصْحَابُ رسول اللَّهِ (ص) أَيُّنَا لم يَظْلِمْ فَأَنْزَلَ الله ( إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ )
‘எவர்கள் தமது ஈமானில் அக்கிரமத்தைக் கலக்காத நிலையில் ஈமான் கொண்டவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு, மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவர்’ (அல்குர்ஆன் 6:83)
என்ற இறைவசனம் இறங்கிய போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், ‘(அல்லாஹ்வின் தூதரே!) எங்களில் யார் தான் அக்கிரமம் (பாவம்) புரியாதவர்களாக இருக்கிறோம்?’ எனக் கேட்டனர்.
அப்போது தான், ‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (அல்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான் என அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 32)