நம் எதிர்காலம் யார்கையில்…? இறைவனின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது
[ இன்று முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர், ஏன்? அவர்கள் குர்ஆனை விட்டு மார்க்கத்தை விட்டு நபியை விட்டு தன்னுடைய மனோஇச்சையை வழியாக்கி கொண்டதால் இதனால் இறை மார்க்கம் இஸ்லாம் வீழ்ச்சியடைந்துவிட்டதா?
ஒருபோதும் இல்லை எப்போதெல்லாம் மக்கள் இஸ்லாத்தை பற்றி பிடித்து வாழ்ந்தாரோ அப்போதெல்லாம் அவர்கள் வெற்றியடைந்தனர்.
எப்போதெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகினார்களோ அப்போதெல்லாம் அவர்கள் வீழ்ச்சியடைந்தனர். இதை சிந்திக்க வேண்டாமா?
முஸ்லிம்கள் மானிட இனத்தின் துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்திட முடியாது. முஸ்லிம்கள் தங்களைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரிந்திட முடியாது. அதுபோலவே அவர்கள் பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருந்திட முடியாது.
வாழ்க்கையின் எல்லா உண்மைகளைக் குறித்தும் அவர்கள் தங்கள் இதயத்தை முழுமையாகத் திறந்து வைத்திட வேண்டியவர்களாவார்கள். அவர்கள் தங்களது நோக்கை – இலட்சியத்தை, இனம், மொழி, தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து செலுத்திட வேண்டியவர்களாவார்கள்.
இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்திக் காட்டும்போது அவர்கள் ஏனைய மக்களோடு இரக்கம், மனிதாபிமானம் இவை தோய்ந்த இஸ்லாமிய உணர்வோடு கலந்திடும்போது மட்டுமே அவர்கள் செய்கின்ற நல்ல சேவைகள் முழுமையாக நிறைவேற்ற முடியும்.]
நம் எதிர்காலம் யார்கையில்…?
அன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இன்று உலகில் எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வட்டி, வரதட்சனைகொடுமை, மது, மாது, சூது, ஏமாற்று, வஞ்சகம், மோசடி, பாலியல்வன்கொடுமை, சாதிவெறி, மதவெறி போன்ற சமூகக்கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன இதற்கு யார்காரணம் அரசியலா? அரசாங்கமா? ஆன்மீகமா? விஞ்ஞானவளர்ச்சி மிகுந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் அமைதிக்கும் சமத்துவத்துக்கும் சகோதரதத்துவத்துக்கும் பெண் விடுதலைக்கும் இன்றைய மனித சமூகம் ஏங்கித் தவிக்கின்றது ஒரு கூட்டம் அரசியலை நோக்கி போகின்றது, ஒரு கூட்டம் அரசை நோக்கி போகின்றது ஒரு கூட்டம் ஆன்மீகத்தை நோக்கி போகின்றது. கிடைக்கும் பதில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!.
இந்த ஏமாற்றம் வெற்றிடத்திற்கும் நடக்கும் அக்கிரமத்திற்கும் அநியாயங்களூக்கும்; காரணம் யார்? எதையும் சாதிக்கலாம் என்ற பருவ வயதில் உள்ள மாணவர்களும் இளைஞர்களும் தான் ஏன்? எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திப்பதில்லை எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்லை.
செல்போனின் சினுங்களுக்கும், பைக்கின் சீறலுக்கும், இசை முழக்கத்திற்கும், ஃபேஸ்புக்கிலும் தன்நிலை மறந்து உன் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கிறாய்? நீ படைக்கப்பட்டதின் நோக்கம் அறியாமல் வாழ்க்கையின் வழி தெரியாமல் தடம் மாறி போய் கொண்டிருக்கிறாய்? இது தேவையா? எனதருமை சகோதரா?
நாகரிக மாற்றம், குறைந்த உடை கலாச்சாரத்தின் உச்சம்என்ற அடிப்படையில் நம்முடைய பண்பாட்டை இழந்து தன்னைத்தானே சீரழித்து, கவுரம் என்று நினைத்து தன்னுடைய அழகிய தோற்றத்தை மாற்றி தன்னைத்தானை பிறருடைய கேலிப்பார்வைக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறாயே இதை என்றாவது நினைத்து பார்த்தாயா எனதருமை சகோதரா?
மதுவுக்கும், மாதுவுக்கும், குடிக்கும், கூத்துக்கும், அடிமைப்பட்டு உன்னுடைய குடும்ப கவுரவத்தை, மார்க்க தத்துவத்தை இழந்து, தோல்வியின் விளிம்பில் உன்னுடைய உடலின் அழகை இழந்து, பொருளாதார நஷ்டதிற்கும், உன்னுடைய வாரிசுகளின் வெற்றியையும், புதைகுழியில் போட்டு புதைத்துக் கொண்டிருக்கிறாயே என்றாவது யோசித்து பார்த்தாயா எனதருமை சகோதரா?
புகைப்பிடிப்புக்கும், புறம் பேசுவதற்கும், தனது நேரத்தையும், காலத்தையும், ஏமாற்றுக்கும், ஊழலுக்கும் அரசியல்பலம் அதிகாரபலம் போடும் பதவி சுகத்திற்காகவும் கொடியையும் கோஷத்தையும் தூக்கி மக்களின் எதிர்காலத்தை நாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோமே? என்று என்றாவது நீ சிந்தித்தாயா எனதருமை சகோதரா?
தலைவனுக்காகவும் தலைமைக்காகவும் தன்னுடைய கொள்கை மறந்து தன்னுடைய வழி மறந்து போய் சேருமிடம் மறந்து எதற்கெல்லாமோ நம்முடைய போராட்டத்தை அமைத்து கொண்டோமே அதை என்றாவது தனிமையில் இருந்து மறுபரீசீலனை செய்தாயா எனதருமை சகோதரா?
இந்த இழிநிலைகளிலிருந்து மாறவழி இல்லையா? ஏன் இல்லை! உண்டு சகோதரா குர்ஆனில் நபிமார்களின் வரலாற்றில் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன அதை என்றாவது படித்திருக்கிறாயா? நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையை நீ படித்துப்பார்இளமைப்பருவத்தில் தன் உடன் பிறந்த சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டபோதும் அடிமையாக வளர்க்கப்பட்டபோதும் தன்னை வளர்த்த எஜமானியால் தவறான பாதைக்கு அழைக்கப்பட்டபோதும் அதனால் சிறையில் அடைக்கப்பட்டபோதும் இரும்பை போன்ற இதயங்கொண்டவராய் இறைவனுக்கு மட்டும் பயந்து அவனை மட்டுமே வணங்கினார் அவருடைய வாழ்க்கை உனக்கு போதாதா?
சிதைந்த சிதிலமடைந்த கடவுள் கொள்கை கொண்டவர்கள் மத்தியில் பெற்ற தந்தையால் மிரட்டலுக்கு உட்பட்டபோதும், அரசனால் நெருப்புக்குண்டலத்தில் வீசப்பட்ட போதும் அல்லாஹ் ஒருவனே அவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று தன் உயிரை பணயம் வைத்து ஏகத்துவ முழக்கமிட்டார்களே நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்க்கை உனக்கு போதாதா?
மக்களை அடிமை படுத்தி அவர்களின் ஆண்குழந்தைகளை அறுத்து பலியிட்ட அக்கிரமக்காரன் ஃபிர்அவ்ன் முன்னால் ”எல்லாரும் மனிதர்கள்தான் நிறத்தாலோ? இனத்தாலோ? பணத்தாலோ? மொழியாலோ? யாரும் யாருக்கும் அடிமையில்லை படைத்தவன் ஒருவனுக்கே தவிர” என்று ஃபிர்அவ்னுக்கு எதிராக வீர முழக்கமிட்டார்களே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்வாழ்க்கை உனக்கு வழி காட்டவில்லையா?
நம்பிக்கை, நாணயம், நல்லொழுக்கம், நேர்மை பணிவு போன்ற அனைத்தையும் தன் இளமைப்பருவத்தை கொண்டு எதிராளிகளாலும் போற்றி புகழப்பட்ட உலகத்தின் அருட்கொடை, உலகத்திற்கு வழி காட்டியாக வாழ்ந்த ஒப்பற்ற தலைவர்எம்பெருமானர் நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை உனக்கு வழிகாட்டவில்லையா?
மதுவுக்கும், மாதுவுக்கும், கவுரத்திற்காகவும், தங்களிடையே பகையையும், வெறுப்பையும், விதைத்து காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கத்து குரைஷியர்களை உத்தம ஸஹாபாக்களாகவும் உலகத்தின் முன்மாதிரியாகவும் தங்களைத் தாங்களே மாற்றி இஸ்லாத்தை முழுமையாக ஏற்று அறியாமையிலும் அக்கிரமத்திலும் மூட பழக்க வழக்கங்களிலும் மூழ்கி கிடந்த மக்களை மீட்டெடுத்த உத்தம தோழர்களின் வாழ்க்கை உனக்கு முன்மாதிரியில்லையா?
சிந்தனை செய் எனதருமை சகோதரா! உனது எதிர்காலம் எந்த வழியில் உத்தம நபியின் வழியிலா? கொள்கையற்ற தலைவனின் வழியிலா? அனாச்சாரத்தின்வழியிலா? அல்லாஹ்வின் வழியிலா? கொள்கைக்காக போராட்டமா? கொடிக்காக போராட்டமா? நபிமார்கள் செய்த பணி என்ன? பரீசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது. இதோ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை “மறுமை நாளில் ஓர்அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்காதவரை அவனுடைய பாதங்கள் இரண்டும் நகர முடியாது”
1) உனது வாழ்வை எவ்வாறு கழித்தாய்?
2) உனது வாலிப பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3) செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவிட்டாய்?
4) பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?
எனதருமை சகோதரா நீ சொர்க்கத்திற்கு உரியவனாக ஆக வேண்டாமா? பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்து அல்லாஹ்வையும் இறைவனாக ஏற்று இணைவைப்பில் மூழ்கி கிடந்த மக்கா குரைஷியர்கள் மத்தியில் அல்லாஹ்வுக்கு இணைவைக்க கூடாது. அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணிய நம் உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவருடைய உற்ற உறவுள்ள முதியவர்கள் இளைஞர்களும் புறக்கணித்தபோது கொலை செய்ய முயற்சித்த போது அவர்களை காத்து இஸ்லாத்தின் கொள்கை குன்றுகளாக தியாக சீலர்களாக தங்களுடைய சொத்துக்களையும் சுகங்களையும் தந்தது உன் போன்ற இளைஞர்கள்தானே எனதருமை சகோதரா?
இன்று முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர், ஏன்? அவர்கள் குர்ஆனை விட்டு மார்க்கத்தை விட்டு நபியை விட்டு தன்னுடைய மனோஇச்சையை வழியாக்கி கொண்டதால் இதனால் இறை மார்க்கம் இஸ்லாம் வீழ்ச்சியடைந்துவிட்டதா? ஒருபோதும் இல்லை எப்போதெல்லாம் மக்கள் இஸ்லாத்தை பற்றி பிடித்து வாழ்ந்தாரோ அப்போதெல்லாம் அவர்கள் வெற்றியடைந்தனர். எப்போதெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகினார்களோ அப்போதெல்லாம் அவர்கள் வீழ்ச்சியடைந்தனர். இதை சிந்திக்க வேண்டாமா எனதருமை சகோதரா?
எனதருமை சகோதரா நீ தடம் மாறி, தடுமாறி, மதுவுக்கும், மாதுவுக்கும், அடிமையானால் யாருக்கு இலாபம்? உன் குடும்பத்திற்கு இலாபமா? உன் வாரிசுகள் மனைவி, மக்களுக்கு, இலாபமா? நீ மதுவுக்கும், மார்க்கத்திற்கும், முரணான காரியத்திற்கும் அடிமையான உன்னை பகடைக்காயாக பயன்படுத்தும் மார்க்க விரோதிகளுக்கு இலாபம். குடியால் பொருள் இழந்து உடல் நலம் கெட்டு அல்ப ஆய்சில் நீ அழிந்நால் உன் குடும்பத்தை காப்பாற்றுவது யார்? மறுமையில் உன்னுடைய நிரந்தர சொர்க்கத்திற்கு பரிந்துரைப்பது யார்?
உன்னை நீயே இழக்கப்போகிறாயா? அல்லது மக்களை வாட்டிவதைக்கும் பெரும்பாவங்களாகிய இணைவைப்பு, வட்டி, விபச்சாரம், வரதட்சனை, மது, மாது, சூது, கற்பழிப்பு, ஆகியவற்றை ஒழித்து அன்பின் பக்கமும், அமைதியின் பக்கமும், சமத்துவத்தின் பக்கமும், சகோதரதத்துவத்தின் பக்கமும், இறைவன் ஒருவனே என்றழைக்கும் இஸ்லாத்தின் பக்கம் நீயும் வாழ்ந்து மக்களையும் அழைக்கப்போகிறாயா?
எனதருமை சகோதரா நீ வாழ்வது ஒருமுறை மார்க்கத்திற்கு உறுதுணையாக இருங்கள் அழிவின் பக்கம் செல்லாதீர்கள். நீ ஆக்கத்தின் பக்கமும், அமைதியின் பக்கமும், நீதியின் பக்கமும், நேர்மையின் பக்கமும், நீயும் வாழ்ந்து மக்களையும் வாழவைப்பது இளைஞனாகிய உன் கையில்தான் உள்ளது? மறுமையில் சொர்க்கத்தில் வாழ நீ என்ன செய்ய போகின்றாய்? இறுதியாக ஒன்றை நினைவில் கொள்…
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள் ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 47:38)
“நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”. எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக காலநேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை நீ காணலாம் எனதருமை சகோதரா.
பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள், இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள். நமது வருங்கால தாய்மார்களின் நிலை என்ன? ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன? சினிமா, சின்னத்திரை, இணையத்தளம், நாவல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரியமுன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என அலைக்கழிந்து கொண்டிருப்பதை நீ காணலாம் எனதருமை சகோதரா.
வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை. பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற உள்ளம் எண்ணங்களை விட்டு அகலும்; அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும். ஞானம் மனித நேயமுள்ள ஒர் உயிர்; ஆயினும் அவைகளே அவர்களுடைய உள்ளுணர்வுகளுக்கு சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவரும்; நாவின் சொற்களைக் கேட்பவரும் உள்ளமே எனதருமை சகோதரா.
உனது நற்செயல்களும், நற்காரியங்களும் தான் உலகை நிரப்பியுள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் உனது உள்ளம் ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது; தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது எனதருமை சகோதரா.
எனதருமை சகோதரா இஸ்லாத்தை அறிந்திட வேண்டும் என உண்மையான ஆர்வம் இருக்குமேயானால். நிச்சயமாக சமய வளர்ச்சியின் உயர் நிலையிலிருக்கும் இஸ்லாத்தின் வழியிலிருந்து வழி தவறி சென்றிருக்கவே மாட்டார்கள். உண்மையிலேயே மனித இனத்தின் ஆன்மீக ஒழுக்க மேம்பாட்டில் அக்கறை உடையவர்களாக இருந்தால் இஸ்லாத்தில் தான் – அது காட்டும் ஆன்மீக மேம்பாட்டில் தான் நிறைவை காண முடியும். ஆகவே இஸ்லாத்தை விடுத்து வேறு ஏதேனும் கூட்டங்களில் சேர்வார்களேயானால் அதில் ஒரு பகட்டுக்காக நடிப்பவர்களாகத் தான் இருப்பார்களேயல்லாமல் அதில் முழுமையாக ஈடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். சேரும் கூட்டங்களில் எதிர்பார்ப்பதை அடையவே முடியாது. இதன் விளைவாக ஏனைய முஸ்லிம்களின் தொடர்பால் ஏற்படும் ஆன்மீக தொடர்பை இழப்பார்கள். அத்தோடு தங்களது புதிய கூட்டங்களின் திட்டங்களையே சுற்றி வருவார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளால் இறுதியாக ஏற்படும் விளைவுகளை ஆராய்வோமானால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகையான இழப்புகளையே தரும் என்பதை அறிவோம். முஸ்லிம்களுக்கு ஏற்படும் இழப்பு எல்லோருக்கும் ஏற்படும் பேரிழப்பாகும். நாட்டிலே பொறுப்புள்ள குடிமக்களை ஏற்படுத்துவதில், உலகில் அமைதியை நிலைநாட்டுவதில், மனிதர்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதில், சகோதரதுவத்தை நிலைநாட்டுவதில், மனசாட்சியின் விடுதலையைப் பெற்றுத் தருவதில், மனித கண்ணியத்தைக் காப்பதில் முஸ்லிம்கள் சிறந்த சேவைகளைச் செய்திட முடியும். இவைகள் முஸ்லிம்களின் கடமைகளாகும். இவைகளை உலகில் நிலைநாட்டும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை இஸ்லாத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இந்தக் கொள்கைகளுக்காக போராட வேண்டிய ஒரு முஸ்லிமை இழந்து விடுவோமேயானால் அல்லது ஒரு முஸ்லிம் இந்தக் கொள்கையில் அக்கறை அற்றவனாக அலைவானேயானால் மானிட இனம் முற்றாக இந்தச் சேவைகளை இழந்து விடுகின்றது என்றே பொருள். இது ஒரு சிறிய நஷ்டமல்ல. பேரிழப்பாகும் எனதருமை சகோதரா.
திருக்குர்ஆனே இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் முடிவானது, அதுவே வேதங்களின் உண்மைக்கு உரைக்கல் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு வலுவான நல்ல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் திருமறையாம் திருக்குர்ஆன் இறைவனின் அழிவற்ற திருச்செய்தியை புதுப்பித்து நிலைநிறுத்த வந்த திருவேதமாகும். ஏற்கனவே வந்த வேத வெளிப்பாடுகள் குறித்து இருந்து வந்த சர்ச்சைகளையும் அதன் வழியாக எழுந்த சண்டைகளையும் தீர்த்து வைக்க வந்த வேதமும் அதுவே. இவைகள் முஸ்லிம்களின் அழுத்தமான நம்பிக்கைகளாகும் எனதருமை சகோதரா.
இப்படிச் சொல்வதனால் முஸ்லிம்கள் தங்களை ஏனைய மனிதர்களிடமிருந்து பிரித்துக் கொள்கிறார்கள் என்றோ அல்லது ஏனைய மனிதர்களிலிருந்து தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்றோ பொருளாகாது. அவர்கள் இஸ்லாத்தை எவர் மீதும் திணித்திட விரும்புவதில்லை. அதுபோலவே மனித இனத்தை உயர்ந்தவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் பாகுபடுத்திக் காட்டிடவும் அவர்கள் விரும்புவதில்லை. வேண்டிய நாடுகள், வெறுப்புக்குரிய நாடுகள் என்ற கோட்பாட்டை அவர்கள் வரவேற்பதில்லை. மாறாக, அவர்கள் இறைவனின் வழிகாட்டுதலை மானிட இனத்திற்கு எடுத்துச் சொல்லும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள். மானிட இனத்திற்குச் சேவை செய்யும்படியும் அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வேறு வார்த்தைகளில் சொல்வதனால் முஸ்லிம்கள் மானிட இனத்தின் துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்திட முடியாது. முஸ்லிம்கள் தங்களைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரிந்திட முடியாது. அதுபோலவே அவர்கள் பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருந்திட முடியாது. வாழ்க்கையின் எல்லா உண்மைகளைக் குறித்தும் அவர்கள் தங்கள் இதயத்தை முழுமையாகத் திறந்து வைத்திட வேண்டியவர்களாவார்கள். அவர்கள் தங்களது நோக்கை – இலட்சியத்தை, இனம், மொழி, தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து செலுத்திட வேண்டியவர்களாவார்கள். இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்திக் காட்டும்போது அவர்கள் ஏனைய மக்களோடு இரக்கம், மனிதாபிமானம் இவை தோய்ந்த இஸ்லாமிய உணர்வோடு கலந்திடும்போது மட்டுமே அவர்கள் செய்கின்ற நல்ல சேவைகள் முழுமையாக நிறைவேற முடியும் எனதருமை சகோதரா.
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள் எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (அல்குர்-ஆன் 13:11)
இறைவனின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது மேற்கண்ட வசனங்களின் முலம் அதை தெளிவுபடுத்துகிறான் உன்னை நீயே மாற்றி கொண்டு மக்களுக்கு நிம்மதியையும், அமைதியையும் தர மறுத்தால் அல்லாஹ் நம்மை இழிவுக்கும் அழிவுக்கும் ஆளாக்கி புதிய சமுகத்தை கொண்டு வந்து அவர்கள் முலம் மக்களுக்கு நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தி நேர் வழி செலுத்துவான். எதை தேர்ந்து எடுக்க போகிறாய் முடிவு அல்லாஹ்வின் அருளால் உன் கையில் எனதருமை சகோதரா!
-ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்
source: http://muslimjamaath.in/al-islam/islamic-articles/2-who-of-us-in-the-future