பலதார மணம். (POLYGAMY) (3)
4. ஆண்கள் இயல்பாகவே சில பணிகளை ஆற்றிட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரம், உத்தியோகம் போன்ற பல காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியதிருக்கின்றது. அவர்கள் வீட்டுக்கு வெளியே தங்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். சில சூழ்நிலைகளில் அவர்கள் அண்டை நாடுகளில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் தங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது.
இதுபோன்ற எல்லாச் சூழ்நிலைகளிலேயும் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்திட முடியாது. பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக வீட்டுக்கு வெளியே தங்குபவர்கள் சில நேரங்களில் புதிய பெண்களிடம் தவறி விழுந்திடுவதுண்டு. சில மனிதர்கள் இயல்பாகவே இதில் பலவீனமானவர்களாக இருக்கலாம். அவர்களால் சாதாரண உந்தல்களைக்கூட கட்டுப்படுத்திட முடியாமல் போகலாம். அவர்கள் உணர்வுகளின் உந்தல்களால் பாவத்தில் விழுந்து விடலாம். இங்கேயும் ஏற்கனவே விவரித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பலதாரமணம் அனுமதிக்கப்படலாம்.
இதுபோன்று வேற்று நாடுகளில் வருடக்கணக்காகத் தங்கிடும் ஆண்கள் சட்டப்படி இன்னொரு மனைவியையும் மணந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் பாவங்கள் இழைப்பதிலிருந்தும், தனது உணர்வுகளால் அழைக்களிக்கப்படுவதிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அந்த (முதல்) மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இது நன்மைப் பயப்பதாகும். தனது கணவன் கண்டவர்களையெல்லாம் கொள்கிறான் என்பதைவிட சட்டப்படியான இன்னொரு மனைவியோடு நீதி நெறிமுறைகளுக்கு உட்பட்டே ஒழுகி வாழ்கிறான் என்பது அவர்களது எரிச்சலையும், ஏக்கத்தையும் தணிப்பதாகவே அமையும்.
தன் கணவன் தனக்கே உரியவனாக இல்லாமல் இன்னொருத்திக்கும் உரியவனாக இருக்கின்றான் என்பதை ஜீரணித்துக்கொள்ள மனைவிக்கு சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதே மனைவி தன் கணவன் வேற்றுப் பெண்களை தீண்டுகிறான் என்பதை அறிந்திட வெட்கப்படவே செய்வாள். தனக்கென அந்தக் கணவனிடம் எதுவுமே இல்லையென எண்ணுவாள். அந்த வேற்றுப் பெண்களைப்போல் தன்னையும் தங்கும் விடுதியாகவே ஆக்கிக் கொண்டானோ என ஏங்கித் தவித்திடுவாள். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவள் தன் கணவன் சட்டத்திற்கும், ஒழுக்க நியதிகளுக்கும் உட்பட்டு நடந்திட வகை செய்யும் பலதார மணத்தை ஏற்றுக் கொள்ளவே செய்வாள்.
எனினும் நமது விவாதம் ஒருதலைப் பட்சமானதன்று. கணவன் பல வருடங்கள் அல்லது மாதங்கள் வெளியே தங்கிடும்போது தனது உரிமைகள் பறிக்கப்படுவதாக மனைவி உணர்ந்தால் அவள் சட்டத்தின் துணையை நாடலாம். அவள் தனக்கு நலன் பயக்கும் எனக் கருதினால் சட்டப்படி மணவிலக்கு கோரிப் பெற்றிடலாம்.
இஸ்லாம் தரும் பலதார மணத்திற்கான அனுமதியின் மூலம் கணவனின் கண்ணியம், முதல் மனைவியின் உரிமை, இரண்டாவது மனைவியின் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. சமுதாயத்தின் ஒழுக்கநெறிகள் பேணிக் காக்கப்படுகின்றன. இவைகளை நாம் ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை, இவை எல்லாம் வாழ்வின் உண்மைகள். இவைகள் வாழ்வில் நடப்பவைகள். அதேபோல் முஸ்லிம்களிடையேயும் பலதாரமணம் அரிதாகவே நடக்கின்றது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பலதாரமணம் முடித்துக் கொண்டவர்கள் மிகவும் சொற்பமே. ஒருதார மணமே சமுதாயத்தில் பொதுவாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
பலதாரமணம் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஒரு மாற்று வழியேயன்று மனமாற நிறைவேற்றப்படுவதல்ல. நயவஞ்சகம், ஏமாற்று, ஒழுக்கமின்மை இவைகளைத் தடுப்பது என்ற வகையில் மிகவும் சிறந்தது. இது மனித வாழ்வின் சில சிக்கலான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைவது. பல நேரங்களில் மனிதன் மனம் உடைந்து போகாமல் அவன் விரக்தி, நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களில் பீடிக்கப்படாமல் பாதுகாப்பது. இல்லற வாழ்வு உடைந்து விடும் என்ற நிலை உருவாகும்போது எல்லோருடைய நன்மையும் பாதுகாக்கத் தரப்பட்ட ஒரு அனுமதியே பலதாரமணம்.
பலதாரமணம் என்பது ஈமான் என்ற நம்பிக்கையின் ஒரு பகுதியல்ல. அது ஒரு கட்டாய கடமையும் அல்ல. நெருக்கடியை சரிகட்டிடத் தரப்பட்ட ஒரு அனுமதியே ஆகும். குடும்பத்தில் குழப்பங்கள் நிகழும்போது மனிதர்கள் இன்று மேற்கொள்ளுகின்றார்களே அந்தச் செயல்களைவிட பலதாரமணம் சிறந்தது என எண்ணுகின்றனர் முஸ்லிம்கள். சின்ன வீடுகளையும், பெரிய குடியிருப்புகளையும் சட்டத்தின் கண்களிலிருந்து மறைத்துவிட்டு நாங்கள் ஒரே ஒரு மனைவியோடு தான் வாழுகின்றோம் என வீராப்பு நடிப்புகளுக்குப் பலதாரமணம் எவ்வளவோ சிறந்தது.
சாதாரணமான சூழ்நிலையில் ஒருதாரமணமே சிறந்தது என்பது மட்டுமல்ல, அதுவே சட்டம். அல்லாதபோது பலதாரமணம் ஒரு நிவாரணமாக அமைந்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவே இஸ்லாத்தின் கொள்கை.
பலதாரமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்வது என்ற இந்த விவாதத்தை நாம் முடிக்குமுன் இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கிடையே எந்த அபிப்பிராய பேதங்களும் இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தத் திருமணங்களின் உட்பொருளை நன்றாக அறிவார்கள். அந்தத் திருமணங்கள் இடம்பெற்ற சூழ்நிலைகளையும் அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் பெரும்பாலும் முஸ்லிமல்லாதவர்கள் அந்தத் திருமணங்கள் நடந்தேறிய சூழ்நிலையை அறிந்திராததால், அவர்கள் அந்தத் திருமணங்களை சரியாக முறையாக புரிந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதத் தன்மைகளையும், புனிதப் பணிகளையும் சரியாக புரிந்து கொள்வதில்லை. இதன் பயனாக அவர்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளுக்கு வந்து விடுகின்றனர். இங்கே நாம் சில உண்மைகளைத் தருகின்றோம். இதில் நாமாக எந்த முடிவுகளையும் அறிவிக்கப் போவதில்லை. மாறாக இதைப்படித்து நிதான நிலையிலிருந்து சிந்தித்து விருப்பு, வெறுப்பின்றி முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என விட்டு விடுகின்றோம்.
1. ’திருமணம்’ என்ற வாழ்க்கை ஒப்பந்தங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது. எல்லா முஸ்லிம்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் பரிந்துரைக்கின்றது. சமுதாயத்தின் உயிரோட்டத்திற்கு திருமணம் மிகவும் முக்கியமானதாகும்.
2. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை இறப்பெய்யாத மனிதர் என்றோ, தெய்வீகமானவர்கள் என்றோ ஒருபோதும் கூறியதில்லை. அவர்கள் தான் இறப்புக்குட்பட்ட மனிதரே என்றும், இறைவனால் அவனது திருத்தூதை இந்த உலகுக்கு அறிவிக்க வந்த திருத்தூதர் என்றே மொழிந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தனித்தன்மைகள் நிறைந்தது. மனித இனத்திற்கு ஓர் அழகிய முன்மாதிரி! எனினும் அவர்கள் ஒரு ‘மனிதர்’ என்ற அளவிலேயே வாழ்ந்தார்கள். அவ்வாறே இறந்தார்கள். ஆகவே திருமணம் என்பது அவர்களுக்கு இயல்பாகவே தேவையான ஒன்றாகும். அவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.
3. அவர்கள் வாழ்ந்த இடம் வெப்பமான பிரதேசமாகும். இந்த வெப்பம் நிறைந்த இடங்களில் வாழும் மக்களிடம் சில தனியான குணங்கள் உண்டு. அவர்கள் சிறு வயதிலேயே உடல் முதிர்ச்சி அடைந்து விடுவார்கள். உடல் சம்பந்தமான விருப்பங்கள் அவர்களிடம் மிகைத்துக் காணப்படும். மக்கள் மிகவும் எளிதான வழிகளில் தங்களது உடல் விருப்பங்களைத் தணீத்துக் கொள்ள விழைவார்கள். அதற்கான சூழ்நிலைகளும் அங்கு நிலவும். இப்படிப்பட்ட இயல்புகளை வளர்க்கக்கூடிய நிலப்பரப்பில் வாழ்ந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய இருத்தைந்தாம் வயதுவரை ஒரு பெண்ணைக்கூட தீண்டியதில்லை. அவர்கள் வாழ்ந்த தூய வாழ்க்கையைக் கண்ட அரேபியர்கள் அவரை எண்ணற்ற அடைமொழிகளைக் கொண்டு அழைத்தார்கள். தனது இருபத்தைந்தாவது வயதிலேதான் அவர்கள் தங்களது முதல் திருமணத்தை முடித்தார்கள். அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் அவர்களை அல்-அமீன் என்ற அடைமொழியைக் கொண்டு அழைத்தார்கள். இதன் பொருள் சிறந்த ஒழுக்கங்களின் உறைவிடம் என்பதாகும்.
4. அந்த மக்களின் பொதுவான பழக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பிந்திய வயதிலேயே அவர்கள் மணமுடித்தார்கள். அவ்வாறு அவர்கள் முதலில் மணம் முடித்தது அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத்தான். அதுபோது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது நாற்பது. அதாவது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட பதினைந்து வயது அதிகமானவர்கள். இரண்டு முறை விதவையாக்கப்பட்டவர்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடல் இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருந்தால் இரு இளம் பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
5. தனது ஐம்பதாவது வயதுவரை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோடுதான் இல்லறத்தை நடத்தினார்கள். இப்றாஹீம் என்ற மகனைத்தவிர ஏனைய குழந்தைகளையும் இந்த கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோடு நடத்திய வாழ்க்கையில்தான் பெற்றார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா தனது அறுபத்தைந்தாவது வயதில் இறந்தார்கள். அதுவரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேறு எந்தத் திருமணத்தையும் செய்து கொள்ளவில்லை.
6. இப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் என்ற உச்சத்து மாமலையுமச்சத்தால் நடுநடுங்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருந்தார்கள். அவர்கள்மீது அவர்களது எதிரிகள் எடுத்தெறிந்த வசையும், வேதனையும் சொல்லத் தகுந்ததாயில்லை. அவர்களைப் பின்பற்றியவர்களும் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதுபோல் கல்லடியும் சொல்லடியும் பட்டுத் தன்பணியை ஆற்றிக் கொண்டிருந்தபோது தான் அவர்களது அன்பிற்குரிய துணைவி கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிது காலம் துணைவியர் எவருமின்றி வாழ்ந்தார்கள்.
அன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றியோருக்கு எதிரிகள் தந்த தொல்லைகளைத் தாங்கமுடியாமல் சிலர் அண்டைநாடான அபிசீனியாவுக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அவர்களில் சௌதா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அவர்களின் கணவரும் அடங்குவர். அங்கிருந்து திரும்பும் வழியில் சௌதா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர் இறந்து விட்டார். ஆகவே சௌதா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபயம் தேடினர். ஏனெனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறையழைப்பிற்கு இணங்கியதால் தானே அவர்களின் கணவர் இறந்தார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சௌதா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்து அபயம் அளித்தார்கள். இந்த நிகழ்வின்போது சௌதா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவ்வளவு இளமையோடு இருக்கவில்லை. அழகிலும் மிகைத்து நின்றவர்களல்ல. அவர்கள் ஒரு சாதாரண விதவை. அத்துடன் அவர்கள் சற்று கோபம் நிறைந்தவர்களாவும் இருந்தார்கள்.
அதே வருடத்தில்தான் தன் அன்புத்தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் புதல்வியான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்துக் கொள்வதாக வாக்களித்தார்கள். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது ஏழு. திருமணம் உடனேயே நிறைவு பெறவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த பிறகே திருமணம் நிறைவு பெற்றது.
இந்தப் பிண்னனிகளைப் புரிந்து கொள்ளும் எவரும் இந்தத் திருமணங்கள் உடல் இச்சைகளின் உந்தல்களால்தான் நிறைவேறின எனக்கூற துணிய மாட்டார்கள். தொடர்ந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரண்டு மனைவியருடனேயே வாழ்ந்தார்கள். அதாவது தனது ஐம்பத்து ஆறாவது வயதுவரை வேறு எந்தத் திருமணத்தையும் செய்து கொள்ளவில்லை.
7. தனது ஐம்பத்தைந்தாவது வயதிலிருந்து அறுபதாவது வயதுக்குள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தடுத்து ஒன்பது திருமணங்களை முடித்தார்கள். அவர்களது வாழ்வின் கடைசி மூன்று வருடங்களில் அவர்கள் எந்தத் திருமணத்தையும் செய்து கொள்ளவில்லை. அவர்களது திருமணங்களில் பெரும்பாலானவை, ஐந்து வருட இடைவெளிக்குள் நிகழ்ந்தவைகளாகும். இந்த இடைவெளியில் தான் அவர்கள் தங்களது எதிரிகளிடமிருந்து மிகவும் அதிகமான துன்பங்களையும், சோதனைகளையும் சந்தித்தார்கள். இந்தக்கால கட்டத்திலேதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் சில கடுமையான போர்களை சந்திக்க வேண்டியதிருந்தது. வாழ்வா? சாவா? என்பதை நிர்ணயிக்கின்ற பெரும் போர்களெல்லாம் இந்தக் காலகட்டத்திலேதான் இடம் பெற்றன.
உட்பகையும், வெளிப்பகையும் வெடித்துக் கிழம்பியது இந்தக் கால கட்டத்திலேதான். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அடுத்தடுத்து திருமணங்களைச் செய்துகொண்ட அந்தக் காலகட்டத்திலே தான், இஸ்லாமிய சமுதாயம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான வரையறைகளும், பொது நியதிகளும் வகுக்கப்பட்டன. அந்தச் சமுதாயத்தின் தேவைகளைக் கவனித்திட வேண்டிய பெரும் பொறுப்பும், அந்தச் சமுதாயத்தை வழிநடத்திட வேண்டிய பெரும் செயலும் அவர்களைச் சார்ந்ததாகவே இருந்தன.
இப்படி அல்லல்களும் அலுவல்களும் தன்னைச் சுற்றி சுமையாக இருந்த காலத்திலேதான் அந்தத் திருமணங்கள் நிறைவேறி இருக்கின்றன என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்த நேரத்தில் அவர்கள் உடல் இச்சைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்க முடியுமா? வரலாற்று வல்லுனர்களும், சமூகவியல் மேதைகளும், சட்டம் இயற்றும் சான்றோர்களும், மனோதத்துவ அறிஞர்களும் இந்தப் பின்னணிகளிலேதான் அந்தத் திருமணங்களை ஆராய்ந்திட வேண்டும். இந்தத் திருமணங்கள் உடல் இச்சைகளை மட்டும் இலக்காகக் கொண்டு நடந்தன என்ற கூற்றைக் கற்பனை செய்துகூட பார்த்திட முடியாது.
8. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் எளிய வாழ்க்கை ஒன்றைத்தான் நடத்தினார்கள். நெறிவழுவா நேரிய வாழ்க்கையே நடத்தினார்கள். அவர்களுடைய காலத்தில் அவர்கள் எண்ணற்ற பொறுப்புகளைச் சுமக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். அமைக்கப்பட்ட அரசினைக் காக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். ஆட்சித்தலைவரின் பணிகள் அனைத்தையும் அவர்களே கவனிக்க வேண்டியவர்களானார்கள். அவர்களே தலைமை நீதிபதி! தலைமைத் தளபதியும் அவர்களே! இத்தனைப் பொறுப்புகளையும் அவர்கள் ஏககாலத்தில் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருந்தார்கள். இரவுப்பொழுதை அவர்கள் இறைவணக்கத்திலேயே கழித்தார்கள். ஒவ்வொரு இரவிலும் மூன்றில் ஒருபகுதியை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவணக்கத்திலேயே கழித்தார்கள். (சான்றாக திருமறையின் 73:20 வசனத்தைப் பார்க்கவும்)
அரபு பெருநிலத்தின் மிகப்பெரும் ஆட்சியாளராக விளங்கிய அவர்கள், பாய், போர்வை போன்றவைகளைத்தான் பெரும் சொத்துக்களாக வைத்திருந்தார்கள். அவர்கள் எத்துணை அளவிற்கு எளிய, வறிய வாழ்க்கையை வாழ்ந்தார் கள் என்றால், அவர்களின் துணைவியர் சில நேரங்களில் சில உலகியல் வசதிகள் வேண்டும் என வேண்டினார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. (சான்றாக திருமறையின் 33:48 வது வசனத்தைக் காணுங்கள்) நிச்சயமாக அது இறைவனுக்கு அடிமைப்பட்ட ஒரு இறைத்தூதரின் உயர்ந்த வாழ்வேயன்றி, உடல் இச்சைகளின் ஓட்டத்தில் ஓடிய வாழ்க்கை அல்ல.
9. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத்தவிர பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணந்துக்கொண்ட அத்தனைப் பெண்களும் கணவனை இழந்த கைம்பெண்களே! அல்லது கணவனால் மணவிலக்குச் (DIVORCE) செய்யப்பட்டவர்களே! இந்தப் பெண்களில் எவரும் அழகிலோ, அங்க அலங்காரங்களிலோ மிகைத்தவர்களல்ல. இவர்களில் சிலர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட வயதில் முதியவர்கள். குறிப்பாக எல்லோரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபயம் கேட்டவர்கள், அவர்களின் வலக்கரம் பற்றிட விரும்பியவர்கள். சிலர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பரிசாக ஒப்படைக்கப்பட்டவர்கள். ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணந்து கொண்டார்கள்.
இதுதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையான பிண்ணணிகளாகும். இந்தப் பிண்ணணியை மனதில் கொண்டு பார்த்திட்டால் அந்தத் திருமணங்கள் உடல் இச்சைகளுக்காக மேற்கொள்ளப்பட்டவைகள் அல்ல என்பது தெளிவாகத் தெரியும். தன்னுடைய இச்சைகளை தணித்திடவும், தனது சுயநலத்திற்காகவும் இவ்வளவு பெரிய குடும்பம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பது நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துகொண்ட திருமணங்களை காரணமாகக் கொண்டு அவர்களது தனி வாழ்வை சந்தேகிப்பவர்கள், அவர்களது ஆன்மீக வாழ்வை ஐயுறுபவர்கள் பின்வரும் கேள்விகளைத் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளட்டும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் தன்னுடைய முதல் திருமணத்தை, வேறு எந்தப் பெண்ணோடும் தொடர்பில்லாது இருந்தும் தனது இருபத்தைந்தாவது வயதில் வைத்துக் கொண்டார்கள்? அந்த மக்களின் வழக்கப்படி அதற்கு முன்பே ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?
அவர்கள் ஏன் இரண்டு முறை விதவையாக்கப்பட்ட முதற் திருமணத்தில் தேர்ந்தெடுத்தார்கள்?
அவர்கள் ஏன் தன்னைவிட பதினைந்து வயது அதிகமான பெண்ணை தனது இளம் வயதில் துணைவியாக்கிக் கொண்டார்கள்?
ஏன் தனது ஐம்பதாவது வயதுவரை அல்லது முதல் மனைவி இறக்கும் வரை அந்த முதல் மனைவியோடு மட்டும் வாழ்ந்தார்கள்? எந்தவித கவர்ச்சிகளும் இல்லாத விதவைகளையும், மணவிலக்குச் செய்யப்பட்டவர்களையும் ஏன் அவர்கள் மணந்து கொண்டார்கள்?
எந்த ஆதாரவுமற்ற பெண்களை அவர்கள் ஏன் மணந்து கொண்டார்கள்?
வசதியான ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ள தேவையான அதிகாரமும், ஆட்சியும் தன் கையில் இருக்கும்போது அவர்கள் ஏன் எளிய, வறிய வாழ்க்கையை நடத்தினார்கள்?
தனது இறைப்பணி மிகவும் சோதனை நிறைந்த ஒரு வேதனையான காலகட்டத்தில் இருந்திடும்போது ஒரு குறிப்பிட்ட ஐந்து வருடங்களுக்குள் பெரும்பாலான திருமணங்களை முடித்துக் கொண்டார்களே அது ஏன்?
அவர்கள் அத்தனை திருமணங்களுக்குப் பிறகும் முன்னால் எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்திருக்கின்றார்களே, திடீரென உடல் இச்சைக்கு அவர்கள் இலக்காகி இருந்தால் இது முடிந்திருக்குமா?
இன்னும் இவை போன்ற எண்ணற்ற வினாக்களைத் தொடுத்திடலாம். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்கள் ‘உடல் ஆசை’ என்ற காரணத்திற்காகத்தான் நடந்தது என்று கூறிடும் அளவிற்கு சாதாரணமானவையல்ல. அவைகள் சீரிய, நேரிய நோக்கங்களைக் கொண்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களைத் தனித்தனியாக எடுத்து ஆராய்ந்திடுபவர்கள், நிச்சயமாக ஒவ்வொரு திருமணத்திற்கும் வழிகோலிய உண்மையான காரணங்களைக் கண்டு கொள்ளலாம். அவைகளில் சிலவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்.