இட்டுவாழும் இலக்கணத்தை நட்டுவைத்தது ரமளான்
முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர்
கோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான்! அல்ஹம்துலில்லாஹ்! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது.
இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் கண் கூடாகக் காணுகிறோம்.
எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்றுபோல் அமைந்ததில்லை செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள்! செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் வாடுகிறார்கள்! இரு நிலைப்பட்ட மனித வாழ்வை ஒரு நிலைப்படுத்தி இருப்பவர்கள் இல்லாதாருக்கு வாரி வழங்கும் இலக்கணத்தை “ஜக்காத்” – “சதக்கா” – தருமம் என்று வகைப்படுத்தி அழகிய அறவாழ்வை இஸ்லாம் நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது! அதன் வழி வாழ நமக்கு அன்புக் கட்டளையும் பிறப்பித்திருக்கிறது.
தருமம் செய்வது ஒரு தனிமனிதனின் விருப்பம் என்றில்லாமல் செல்வம் படைத்திருக்கும் சீமான்கள் தன்னிடமுள்ள செல்வங்களில் நாற்பதில் ஒரு பங்கை வருடம் ஒரு முறை கட்டாய தர்மமாக “ஜக்காத்” கொடுத்தே தீர வேண்டும் என்ற கடமையையும் கட்டுப்பாட்டுடன் கண்ணியமாகச் சொல்லி இருக்கிறது.
இறைவனை வணங்குவது எப்படி ஒரு மனிதனின் கட்டாயக் கடமையோ அதேபோல் இல்லாருக்கு வழங்குவதும் கட்டாயக் கடமை என சட்டம் போட்டுச் சொல்லி விட்டது இஸ்லாம்! உடலால் இறைவனை வணங்கி உள்ளத்தை இறைவன் பக்கம் திருப்பி வைப்பது போல – செல்வத்தின் தர்மத்தால் இறைவனை எண்ணி அந்த தியாக உணர்வை இறைவன் பக்கம் திருப்பி வைப்பதும் வணக்கமே ஆகும்.
தர்மத்தை பற்றிக் கூறாத ஏடில்லை! தர்மத்தைப் பற்றிக் கூறாத நாடில்லை! தர்மத்தைப் பற்றிக் கூறாத வீடில்லை! ஏட்டிலே எழுதப்பட்ட தர்மம், நாட்டிலே பேசப்பட்ட தர்மம் வீட்டிலே செயல் முறைக்கு வந்தால்தான் உலகிலே வறுமை ஒழியும்! அனைவரின் வாழ்க்கையும் செழிக்கும்! அகிலமே அகமும் புறமும் மகிழ்ந்து வாழும்! இதற்காகத்தான் தர்மத்தின் சிந்தனையை எல்லா இனமும், எல்லா மொழியும், எல்லா வழியும், எல்லா ஏடும், எல்லா நாடும் இன்றளவும் இயன்ற அளவு எடுத்து இயம்பிக் கொண்டு இருக்கின்றன.
தர்மத்தின் தலை நிமிர்ந்து நிற்கும் தனி மனிதனையும் தர்மத்தால் தலை சிறந்து வாழும் பல குடும்பங்களையும் தர்மச் சிந்தனையால் தலை சிறந்து நிற்கும் காவியங்களையும் நல்ல நெஞ்சங்கள் மறப்பதில்லை. வாங்கும் கையை விட வழங்கும் கை மேலானது என்றும் – தர்மம் தலைகாக்கும் – அது தர்மவானின் உயிர்காக்கும் என்றும் பாடிவைத்தார்கள். தர்மம் இட்ட இனமே பெரிய இனம் என்றார்கள்.
“சாதி இரண்டொழிய வேறில்லை – சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் – இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி” என்று நீதிபோதனை உரைத்து வைத்தார்கள். நம் தமிழ் முன்னோர்கள்.
வெள்ளைக்கும் கருப்புக்கும் நிறம் பிரித்து மேலை நாடு கீழை நாடு எனத் தரம் பிரித்து கணினி உலகில் வாழும் மனித இனத்தை அன்றே இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்த்து விட்டது. இந்த வெண்பாக் கவிதை! தர்மம் இட்டவரைப் பெரியவர் என்றும் – தர்மம் இடாதவரை இழிகுலத்தவர் என்றும் இனங்காட்டி வைத்து – இந்த இரண்டு சாதிகளைத் தவிர வேறு இனமில்லை என்றும் மனித இனத்தை இடித்துறைத்துக் காட்டி விட்டது.
அன்பார்ந்த நேயர்களே!
கல்லாமையை ஒழிக்கக் கல்வி எப்படி அவசியமோ, அதே போல் இல்லாமையை ஒழிக்க தர்மம் அவசியம். தர்மத்தின் தலைவாசல் திறந்து விட்டால் – தரித்திரமும் ஏழ்மைகளும் அழிந்து போகும். தர்மங்கள் கரை புரண்டு செல்லுமானால் தகுதியற்ற மனிதன் கூட தலைவனாவான்.
ஏழ்மை நிலையால் எத்தனையோ நாடுகள் ஒடுக்கப்பட்டு விடுகின்றன. ஏழ்மைத் தனத்தால் எத்தனையோ அறிஞர் பெருமக்கள் அடையாளம் தெரியாமல் மறக்கப்பட்டு விடுகின்றார்கள். ஏழ்மை குடி புகுந்து எத்தனையோ மனித இனங்களை உலகில் இல்லாமல் ஆக்கி விட்டன. இது உலக சரித்திரம்.
இதற்காகத்தான் இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவதற்கு இஸ்லாம் அன்றே “ஜக்காத்” என்னும் ஏழை வரியை இருப்பவர்களுக்கு சட்டமாக்கி வைத்தது. அதற்கு ஒரு உயிர் ஓட்டமான வடிவத்தைக் கொடுத்தது.
உழைத்து வாழும் எண்ணத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய இஸ்லாம் தான் – இட்டு வாழும் எழில் குணத்தையும் இயற்றிச் சமைத்து உலகுக்கு ஒரு நிலைப்பட்ட சமுதாயத்தையும் உருவாக்கிப்பாடுபட்டது.
தர்மத்தால் எத்தனையோ நோயாளிகள் சுகம் பெற்றிருக்கிறார்கள். தர்மத்தால் எத்தனையோ மாணவர்கள் நலன் பெற்றிருக்கிறார்கள். தர்மத்தால் எத்தனையோ குடிசைகள் கோபுரமாகி இருக்கின்றன. தர்மத்தால் எத்தனையோ ஆராய்ச்சிகள் நிலை பெற்றிருக்கின்றன. தர்மத்தால் எத்தனையோ நீதிகள் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. தர்மத்தால் எத்தனையோ நாடுகள் விடுதலை பெற்றிருக்கின்றன.
தர்மத்தால் எத்தனையோ அடிமை விலங்குகள் உடைபட்டு இருக்கின்றன. தர்மத்தால் உலகம் செழித்திருக்கிறது – சிறந்திருக்கிறது – சிரித்திருக்கிறது.
உலகம் செழிக்க வேண்டும் – உலகம் சிறக்க வேண்டும் – உலகம் சிரிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் ஜக்காத் என்னும் தர்மத்தை ஈமானில் ஒன்றாக இஸ்லாம் இயற்றி இருக்கிறது.
எனவே சகோதரர்களே! சகோதரிகளே! நேயர்களே!
உங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் அருட்கொடைகளில் இருந்து – உங்களுடன் வாழும் இல்லாத மனிதருக்கும் எடுத்து வழங்குங்கள்.
ஏழை மாணவர்களுக்கு தர்மம் வழங்குங்கள் ! நாளை அவர் ஒரு மேதையாகி விட்டால் உலகமே உங்களைப் போற்றும். நோயுற்ற நோயாளிக்கு தர்மம் கொடுங்கள். உங்கள் தர்மத்தால் அவர் சுகமடைந்து விட்டால் அந்தக் குடும்பமே உங்களுக்கு கையெடுத்து துஆச் செய்து பிரார்த்தித்து வாழ்த்தும். உங்கள் அண்டை வீட்டாருக்கு தர்மம் கொடுங்கள். அவர்கள் உங்களுக்கு வாழ்நாளெல்லாம் சுவர்க்கமாக இருப்பார்கள் ! உங்கள் உறவினர்களுக்கு தர்மம் கொடுங்கள். அவர்கள் உங்கள் உறவை மரணம் வரை மறக்க மாட்டார்கள்.
கல்வி நிலையங்களுக்கு, அனாதை இல்லங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்கு, சமய நெறிகளுக்கு, சன்மார்க்க போதனைகளுக்கு, இலவச நூல்களுக்கு, கைவிடப்பட்ட பெரியவர்களுக்கு, வாழ்க்கை இழந்த விதவைகளுக்கு, நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களுக்கு, நன்மைக்குத் துணை நிற்கும் வல்லவர்களுக்கு இப்படி இப்படி எத்தனையோ நபர்களுக்கு தர்மம் செய்யுங்கள். உங்கள் செல்வம் வற்றாத ஊற்றாகப் பொங்கி நிற்கும். வளமான வாழ்வாக உங்கள் வாழ்வு புகழ் பெறும்.
“அறம் செய்ய விரும்பு” அதாவது தர்மம் செய்ய ஆசைப்படு என்ற தத்துவத்தை மனித மனங்களிலே விதைத்து இல்லாதார் நிலையறிந்து இட்டு வாழும் இலக்கணத்தை நட்டி வைத்த ரமளானில் வாழ்வெல்லாம் மறவாது வழங்கி வாழ்ந்த ஏழையின் சிரிப்பில் இறைவனின் அன்பையும், அருளையும் பெற்று வாழ உறுதி கொள்வோம்! வாழ்க ரமளான்! வளர்க ஈகையின் பண்பு!