மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!
ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
”நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்!” (அல்குர்ஆன் 24:31)
”மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்!..” (அல்குர்ஆன் 11 :3)
”நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக (தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…” (அல்குர்ஆன் 66:8)
”அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கும் அதிகமாக அல்லாஹுத் தஆலாவிடம் பிழை பொறுத்திட வேண்டுகிறேன், அவனளவில் தவ்பாச் செய்து மீளுகிறேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
”மனிதர்களே! அல்லாஹுத் தஆலாவிடம் தவ்பாச் செய்யுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரே நாளில் நூறு முறை தவ்பாச் செய்கின்றேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்தார்கள் என்றால்! ”நாம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்”? என்பதை எண்ணிப்பாருங்கள்.
சிறந்தவர் யார்?
எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் , பாவத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. செய்த தவறுகளைவிட்டு தூரமாகி அவற்றிற்காக அல்லாஹ்விடத்திலிருந்து ”பாவமன்னிப்புப்” பெற வேண்டும். இதுதான் உண்மையான ஒரு நல்லடியானின் பண்பாகும். ஆகவே , நாம் செய்திருக்கும் பாவங்களுக்காக உடன் பாவமன்னிப்புத் தேடுவது மிக மிக அவசியமாகும். யார் தாங்கள் செய்த பாவங்களுக்காக உடனடியாக ”தவ்பா” செய்கின்றார்களோ அவர்களின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் , அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்ததையவர்களுக்குத்தான் ஆகவே, அத்தகையோரின் ‘ தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)
நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் நமது பாவங்களை மன்னிப்பதாகவும் வல்ல அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையுற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்,நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டாலோ) பின்னர் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:53,54)
உலகத்தில் நாம் யாருக்காவது தவறிழைத்து விட்டால் அவர்களைவிட்டும் ஒளிந்து தூரமாகி விடுகின்றோம். ஆனால், பாவம் செய்த தன் அடியார்களைப் பார்த்து அவனின் பக்கம் திரும்பி பாவமன்னிப்புத் தேடும்படி அந்த வல்ல அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான். இதைவிட தயாளத் தன்மை வேறு என்னதான் இருக்க முடியும்? தனக்கு மாறு செய்தவர்களை இறக்கத்தோடு அழைக்கின்றான். ஆகவே உங்களின் பாவங்களை உடன் நிறுத்திவிட்டு அவன் பக்கம் மீண்டு தவ்பாச் செய்யுங்கள்.
இன்னும் பாவங்களை தொடரத்தான் போகின்றீர்களா? அல்லது இத்தோடு நிறுத்திக் கொண்டு தவ்பாச் செய்ய போகின்றீர்களா? ஆம்! உங்களை மரணம் வந்தடைவதற்கு முன்பாகவே, உடனடியாக அந்த ரஹ்மானிடம் உங்களின் தவறுகளுக்காக மனம் கலங்கி! கதறி! கண்ணீர் வடியுங்கள்! வல்ல அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவன். மீதியுள்ள காலத்தையாவது அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் வாழ்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏவியவைகளையே செய்யுங்கள், அவ்விருவரும் தவிர்த்தவைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஈருலக வெற்றியாளர்கள்.
”அல்லாஹ்வின் திருப்திதான் மிகப் பெரியது, அதுதான் மகத்தான வெற்றி.” (அல்குர்ஆன் 9:72)
மரண நேரத்தில் செய்யப்படும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது :
யார் இப்போதனைகளுக்குச் செவிமடுக்காமல், இவ்வுலக வாழ்க்கையை மாத்திரம் இலட்சியமாகக் கருதி, மறுமைக்காக எவ்வித அமல்களும் செய்யாமலும் தான் செய்த பாவங்களுக்காக தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவருக்கு அவர் சென்றடையப் போகும் நரகத்தைக் காட்டப்படும்.
அப்போது அவர் நல்அமல்கள் செய்வதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ அல்லாஹ்விடத்தில் அனுமதி வேண்டுவார், அதே போல் அவருடைய பாவங்களுக்காக மன்னிப்பும் கேட்பார்; ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு வினாடி கூட கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிப்படுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!” என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது ”அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன்(பயபக்தியுடையவர்)களில் ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், ”(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (பதில் கூறப்படும்) ”மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.” (அல்குர்ஆன் 39:54-59)
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) ”என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (பரிதவிப்பான்) ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:10,11)
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ”நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே இல்லை, இத்தகையோருக்கு, துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)
”(மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்வான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
மேலே கூறப்பட்ட இறைவசனங்களையும், நபிமொழிகளையும், கவனமாகப் படித்தீர்களா? மீண்டும் பல முறை படித்துப்பாருங்கள். அமல்களில்லாமலும், தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிப்பவர்கள் தங்களின் ”சக்ராத்” நிலையில் கதறக்கூடிய கதறலுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். எத்தனையோ நமது சகோதரர்கள் அவர்கள் மரணிக்கும் போது தாங்கள் உலகத்தில் செய்த தவறுகளைப்பற்றி கவலை அடைந்தவர்களாக அவர்களின் உயிர் பிரிந்ததை பார்த்திருக்கின்றீர்கள், கேள்விப்பட்டும் இருக்கின்றீர்கள். உங்களின் உயிரும் அப்படிப் பிரியக்கூடாது என்பதற்காக இப்போதனையை உங்கள் முன் எடுத்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!
யார் உடனடியாக பாவமன்னிப்புத் தேடாமல் மரணம் வரும்வரை பிற்படுத்துகின்றார்களோ அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். மரணம் வரும் வரை தவ்பாவைப் பிற்படுத்துவதென்பது மரணத்தின் நேரம் முன்கூட்டியே தெரியும் என்பதல்ல. இன்று தவ்பாச் செய்வோம், நாளை தவ்பாச் செய்வோம் என்று தவ்பாவை யார் அலட்சியப் படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு திடீர் என மரணம் வரும்போது அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வார்கள் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதாகும். ஆகவே உடனடியாக தவ்பாச் செய்து கொள்ளுங்கள். காரணம் நாம் எப்போது மரணிப்போம் என்பது யாருக்குமே தெரியாது.
பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகள் :
மனிதர்களின் உரிமைகள் சம்பந்தப்படாது, அல்லாஹ்வின் கட்டளைகள் விஷயத்தில் மாத்திரம் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் அவர் அதிலிருந்து தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும், மூன்று நிபந்தனைகள் உள்ளன.
முதலாவது, தான் செய்து வந்த பாவத்தை விட்டு முற்றிலுமாக நீங்கி விடுவது.
இரண்டாவது, தமது பாவம் குறித்து உண்மையில் வருந்தி கைசேதப்படுவது.
மூன்றாவது, இனிமேல் ஒருபோதும் அப்பாவத்தைச் செய்வதேயில்லை என உறுதிகொள்வது.
மனிதனுக்கு, மனிதன் செய்த குற்றமாயின் மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளுடன் நான்காவதொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது யாருக்கு நாம் அநியாயம் செய்தோமோ அவரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். உதாரணமாக பிறரது பொருளை அபகரித்திருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். பிறரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
உண்மையான தவ்பா :
இப்படி செய்வதுதான் உண்மையான தவ்பாவாகும். இந்நிபந்தனைகளுக்கு உட்பட்டு யார் தவ்பாச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களின் தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும். அப்படி இல்லாமல் தான் சொல்வது தனக்கே புரியாமல் கேட்கப்படும் தவ்பா உண்மையான தவ்பா அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று முஸ்லிம்களில் பலர் தவ்பாவை ஒரு விளையாட்டாக கருதுகின்றார்கள். அதாவது அன்றாடம் பல பெரும் பாவங்களை செய்து கொண்டே தவ்பாவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சினிமா மற்றும் ஆபாசக் காட்சிகளைப்பார்ப்பது, சூதாடுவது, லாட்டரியில் பங்கு கொள்வது மற்றும் வட்டி போன்ற பெரும் பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே தவ்பாவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். தொழுகைக்கு வரக் கூடியவர் அத்தொழுகைக்கு முன்னால் செய்த பெரும்பாவத்துக்காக தவ்பாச் செய்கின்றார். தவ்பாச் செய்யும் போதே அதே பாவத்தை மீண்டும் செய்யலாம் என்ற எண்ணத்துடனேயே தவ்பாச் செய்கின்றார். தவ்பாவை முடித்து விட்டு தன் வீடு சென்றதும் அதே பாவத்தையே திரும்பவும் தொடருகின்றார். அடுத்த தொழுகையின் நேரம் வந்து விடுகின்றது , மீண்டும் தொழுகைக்கு வருகின்றார். தொழுகையை முடித்துவிட்டு தவ்பாச் செய்கின்றார், மீண்டும் அதே பாவத்தையே செய்கின்றார். இப்படி ஒவ்வொரு தொழுகைக்குப் பின் தவ்பாவும் பாவமுமாகவே தொடருகின்றன. இது எப்படி உண்மையான தவ்பாவாக இருக்க முடியும்? ஆகவே சற்றே சிந்தித்து, தான் செய்யும் தவறுகளை முற்றாக விட்டு விட்டு முன் சொல்லப்பட்ட நிபந்தனைகளோடு, தவ்பாச் செய்யுங்கள். நிச்சயம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான். இதுவே உண்மையான தவ்பாவாகும்.
தவ்பாச் செய்வதின் சிறப்புக்கள் :
தவ்பாச் செய்வதினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. அல்லாஹ் நம்மை நேசிக்கிறான். அவனுடன் நம்முடைய தொடர்பு அதிகரிக்கின்றது. அவனுடைய பொருத்தம் நமக்குக் கிடைக்கின்றது.
நிச்சயமாக பச்சாதப்பட்டு மீளுகின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222)
உங்களில், ஒருவரது வாகனம் அதில்தான் அவருடைய உணவும், குடிநீரும் உள்ளது;அது காணமால் போய் அவர் ஆதரவிழந்தவராக ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவ்வாகனம் அவர் முன் திடீரனெத் தோன்றினால் அவர் எவ்வளவு மகிழ்வடைவாரோ, அதனைவிட (பன்மடங்கு) அதிகமாக தன் அடியான் தன்னளவில் தவ்பாச் செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்வடைகிறான். அவர் தனது வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தவராக, இறைவா! நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று கூறிவிடுகிறார். அதிக மகிழ்ச்சியில் திளைத்ததால் நாவு தடுமாறி இவ்வாறு தவறாகக் கூறிவிடுகிறார். (இம்மனிதனின் மாபெரும் மகிழ்ச்சியைவிட பன் மடங்கு அதிகமாக தன் அடியான் தவ்பாச் செய்யும் போது அல்லாஹுத் தஆலா மகிழ்வடைகிறான்) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(நூல்: முஸ்லிம்)
மரணிப்பதற்கு முன் உண்மையான தவ்பா செய்து, பாவமற்றவர்களாக மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக.
தொகுப்பு: அபூஇப்ராஹீம்
சத்திய மார்க்கம்.காம்