பெண்ணே! உன் மடியிருந்து இறங்கித்தான் மண் மடி பார்க்கிறான் மனிதன்.
அவனுக்கு தந்தை என்று நீ காட்டும் உருவம்தான் தந்தை.
உறவையும் சுற்றத்தையும் நீதான் அறிமுகப்படுத்துகிறாய்! அடையாளம் காட்டுகிறாய்.
உலகமே குறைட்டை விடும்போதும் அவனது சின்ன உசும்பல் உன் தூக்கம் கலைக்கிறது.
நீ இருந்தாலும்! இறந்தாலும் அனைத்துத் துன்பத்திலும் முதலில் அவன் மொழிவது அம்மா காரணம்!
பெண்ணே! உணவு மட்டுமல்ல உணர்வும் உன் மூலம்தான் அவனுக்கு ஊட்டப்படுகிறது!
நீ கேட்க ஆசைப்படுவதை சொல்லித் தருகிறாய்! அவன் சொல்லும் அரைகுறை வார்த்தைகள் கேட்டு ஆனந்தமாய் ஆகாசத்தில் பறக்கிறாய்!
நீதான் அவனது முதல் உலகம்!
நீதான் அவனது முதல் ஆசான்!
நீதான் அவனது முதல் வழிகாட்டி!
பெற்றதோடு கடமை முடிந்தது என்று எப்போது நீ நினைக்கிறாயோ? தாயாக உனது பொறுப்பை எப்போது மறக்கிறாயோ? தலைமுறைகளுக்கு வழிகாட்டுவதை எப்போது நீ விடுகிறாயோ அப்போது முதல் தொடங்குகிறது மனிதக் குழந்தைகளிடமிருந்து வன்மமும், வன்முறையும்.
பெண்ணே! பெண்ணியம் பேசுபவர்கள் கேட்கும் பெண் சுதந்திரம் பெண்களுக்கான சுதந்திரம் அல்ல! அது தந்திரம் பெண்களை, பெண்களின் அழகை காசாக்கும் தந்திரம். கூலிக்கு மாறடிப்பது பெண்ணுக்கு அழகல்ல. அது நமக்குத் தேவையும் இல்லை. அவர்களின் வார்த்தைகளில் மயங்கி விடாதே! கவனமாய் இரு!
பெண்ணே நீ…
நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும், கட்டுப்படுபவர்களான ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், பெண்களும், தர்மமம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்புகளை பேணிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை நினைவு கூறும் ஆண்களும், பெண்களும் நிச்சயமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன் – சூரா அஹ்ஸாப் 33: வசனம் 35)
பெண்ணே நீ இல்லாத வீட்டை குடும்பம் என்று எப்படி சொல்ல முடியும்? நீ இல்லாத ஒரு கூட்டத்தை சமூகம் என்று எப்படி சொல்ல முடியும்? பெண்ணே நீ இருப்பதால்தான் குடும்பம் செழிக்கிறது சமூகம் வாழ்கிறது. பெண்ணே நீ வாழ்வதற்காக மட்டும் பிறந்தவள் அல்ல! முழு மனித சமூகத்தின் வாழ்வுக்காக பிறந்தவள்! முதல் மனிதன் தவிர மனித சமூகம் முழுவதும் உன் வழியாகத்தானே மண் பார்க்கிறது. நீ பெற்றவன் மனிதனாகிறான், மன்னனாகிறான், அனைத்தையும் ஆள்கிறான். அதிகாரம் செய்கிறான்.
இந்த உலகம் நல்லவர்களையும், கெட்டவர்களையும் மாறி மாறி சந்தித்து வருகிறது. நீ பெற்றவர்களில் பலரால் உலகமும், சமூகமும் சிக்கலுக்கும், சிதறலுக்கும் உள்ளாகிறது. பெண்ணே நீ பெற்றவர்களாலே நீ சிதைக்கப்படுகிறாய்! எங்ருந்து தொடங்குகிறது இந்த வன்மமும், வன்முறையும். கொடூரமும், கொடுங்கோல் தன்மையும். சற்றே நில்! நிதானமாகு! சீராக சிந்தனை செய்து பார்!
உன் மடியிருந்து இறங்கித்தான் மண் மடி பார்க்கிறான் மனிதன். அவனுக்கு தந்தை என்று நீ காட்டும் உருவம்தான் தந்தை. உறவையும் சுற்றத்தையும் நீதான் அறிமுகப்படுத்துகிறாய்! அடையாளம் காட்டுகிறாய். உலகமே குறைட்டை விடும்போதும் அவனது சின்ன உசும்பல் உன் தூக்கம் கலைக்கிறது. நீ இருந்தாலும்! இறந்தாலும் அனைத்துத் துன்பத்திலும் முதலில் அவன் மொழிவது அம்மா காரணம்! பெண்ணே உணவு மட்டுமல்ல உணர்வும் உன் மூலம்தான் அவனுக்கு ஊட்டப்படுகிறது! நீ கேட்க ஆசைப்படுவதை சொல்லித் தருகிறாய்! அவன் சொல்லும் அரைகுறை வார்த்தைகள் கேட்டு ஆனந்தமாய் ஆகாசத்தில் பறக்கிறாய்!
நீதான் அவனது முதல் உலகம்!
நீதான் அவனது முதல் ஆசான்!
நீதான் அவனது முதல் வழிகாட்டி!
பெற்றதோடு கடமை முடிந்தது என்று எப்போது நீ நினைக்கிறாயோ? தாயாக உனது பொறுப்பை எப்போது மறக்கிறாயோ? தலைமுறைகளுக்கு வழிகாட்டுவதை எப்போது நீ விடுகிறாயோ அப்போது முதல் தொடங்குகிறது மனிதக் குழந்தைகளிடமிருந்து வன்மமும், வன்முறையும். முதலில் குடும்பத்தில் உனது ஆளுமை காணாமல் போகும். சமூகத்தில் உனது பங்களிப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படும். உன் சொல் கேட்காத தலைமுறைகள் உருவாகும். அந்த தலைமுறை உன்னை இளக்காரமாகப் பார்க்கும். வளர்ப்பில் உன் பிடி தளருவதால் வரும் சோதனை இது.
பெண்ணே நீ ஒழுக்கம், மனித நேயம், நற்பண்பு ஆகியவைகளை பாலோடு புகட்டி பண்படுத்தியிருக்க வேண்டும். வழிகாட்ட மறந்தாய் உன் தலைமுறை உனக்கு வன்முறை கற்பிக்கிறது.
பெண்ணே அனைத்துக் குற்றங்களுக்கும் பொறுப்பாளி நீ அல்ல. ஆனால் உன் பொறுப்பில் இருந்தவன் குற்றவாளியாவது உனக்கு பெருமையும் அல்ல! நாளை மறுமையிலும் இழிவையும், அழிவையும் தேடித்தரும். உனக்கும் பொறுப்பிருக்கிறது குடும்பத்திலும் சமூகத்திலும்.
பெண்ணே! ஒரு குடும்பமோ சமூகமோ ஆண்கள் – பெண்கள் எனும் இரு தரப்பினரையும் கொண்டே அமைந்துள்ளது.
இன்று நாம் வாழும் இந்தியா விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊழல், மோசடி, அரசியல் அராஜகங்கள், மனித உரிமை மீறல்கள், இன, மதத் துவேஷங்கள், வன்முறைகள் என பல பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கிறது. இந்நிலையில் பெண்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு நாட்டில் தற்போது நிலவிவரும் பதட்டமான சூழல், நெருக்கடியான நிலை குறித்து புரிதல் இருக்கிறது?
பெண்ணே! சமூக உருவாக்கம், சமூகமாற்றம் என்பது ஒரு கை ஓசை எழுப்பி உருவாகக் கூடியவை அல்ல. அதற்கு கூட்டுப் பொறுப்புணர்வும், கூட்டு உழைப்பும் வேண்டும். பெண்ணே! சமூகத்தில் மாற்றம் வர நீண்ட நெடுங்கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை அதற்கு யாராவது முன் வருவார்களா? என்று காத்திருக்காமல் பெண்களாகிய நாமும் சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. பெண்ணே அதற்கு அடிப்படை நமது கல்வி நிலையை உயர்த்தி, ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பின் மூலமும் தேடலின் மூலமும் நமது சமூகப் பார்வையை, உலகப் பார்வையை விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெண்ணே! பெண்ணியம் பேசுபவர்கள் கேட்கும் பெண் சுதந்திரம் பெண்களுக்கான சுதந்திரம் அல்ல! அது தந்திரம் பெண்களை, பெண்களின் அழகை காசாக்கும் தந்திரம். கூலிக்கு மாறடிப்பது பெண்ணுக்கு அழகல்ல. அது நமக்குத் தேவையும் இல்லை. அவர்களின் வார்த்தைகளில் மயங்கி விடாதே! கவனமாய் இரு!
பெண்ணே மனித சமூகத்தில் பாதி நீ! இன்னும் இருக்கும் பாதியை உருவாக்குபவளும் நீ! எனவே நீ அறிவும் ஆளுமையும் உடையவளாய் உருவாவதே சமூகத்தில் நல்லமாற்றங்கள் பிறக்க வழிவகுக்கும் என்பதை ஒரு போதும் நீ மறந்துவிடாதே! பெண்னே! இன்று பெண் மருத்துவர்கள், கல்விக்கூடங்களுக்கு பெண் முதல்வர்கள், ஆசிரியைகள், பெண் விரிவுரையாளர்கள், பெண் மனநல ஆலோசகர்களின் தேவை அதிகரித்துள்ளது எனவே பெண்களில் இருந்து கல்வி, மருத்துவத்தில் ஆளுமை பெற்றவர்கள் உருவாவதும், உருவாக்கப்படுவதும் அவசியம்.
பெண்ணே! உன் கல்வி பணத்திற்காக அல்ல! நல்ல தலைமுறைகளின் உருவாக்கத்திற்காக! திறன் மிக்க சமூக உருவாக்கத்திற்காக! அறிவும், ஆளுமைத்திறனும் இல்லாத பெண்ணிடமிருந்து வளமான எதிர்கால தலைமுறை உருவாகும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
பெண்ணே நீ சமூகத்தில் பணியாற்றினாலும் சரி வீட்டிலே இல்லத்தரசியாய் இருந்தாலும் சரி புத்தகங்கள் வாசிப்பதன் மூலம், தினசரி செய்திகளை படிப்பதன் மூலம் உன்னுடைய அறிவுத்தேடல் நதியாய் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அது நமது தலைமுறைகளை உருவாக்கத்திற்கும், நமது தன்னம்பிக்கை, சுயசிந்தனை ஆகியவற்றை வளர்க்க உதவும்.
குறிப்பு : பெண்களை அறிவுசார்ந்தும் ஆற்றல் சார்ந்தும் வளப்படுத்துவது என்பது முழு மொத்த சமூகத்தையும் வளப்படுத்துவதாகும். ஆகவே, திறமையுள்ள பெண்கள் துறைசார்ந்த நிபுணர்களாய் உருவாக்கப்படுவதில் பெற்றோர், ஆசிரியர், சமூக நலவிரும்பிகள், மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதும், அது தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஊட்டுவதும் மிக இன்றியமையாத சமூகப் பணியாகும். இதன்மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க நாம் வழிவகுக்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
வீட்டில் உள்ள பெண்களுக்கு சிறந்த வாசிப்புப் பழக்கத்தையும் நல்ல பொழுது போக்குகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆளுமைத் திறன் வளர்வது மட்டுமல்ல, ஒழுக்க மேம்பாட்டுக்கும் அது வழிவகுக்கும். தவறான போக்குகளில் இருந்து விலகிக்கொள்ளவும் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தம்மைத்தாமே தற்காத்துக்கொள்ளவும் அந்த அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு கைகொடுக்கும்.
அப்படி இல்லாமல், “அவர்களுக்கு உலகமே தெரியாது, தொலைக்காட்சி சீரியல்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள், என்று கூப்பாடு போடுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இது நம்முடைய சமூகம். நாம் இதன் பங்காளிகள். ஆகவே, இச்சமூகத்தை நாளைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கட்டமைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் கையிலும் உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
source: http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/172-பெண்ணே-நீ