வீட்டை அலங்கரிக்கும் ரப்பர் தரைகள்
வீட்டை அலங்கரிப்பதில் தரைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
வரவேற்பு அறையின் அழகு ரகசியமும் தரைகளில் அடங்கி இருக்கிறது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அதிகமாக ஈர்க்கும் பகுதியாகவும் தரைகள் விளங்குகின்றன. அவை டைல்ஸ், மொசைக், கான்கிரீட் தரை, மரபலகை தரை, கண்ணாடி தரை போன்ற ரகங்களில் அறைகளை அலங்கரிக்கின்றன. தற்போது தரைகளை அழகு படுத்தும் பாங்கில் ரப்பர் தரைகளும் இணைந்து விட்டன.
பயன்பாடுகள்
ரப்பர் தரைகள் குளியல் அறைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றவை. ரப்பர் தரைகள் மற்ற தரைகளை விட நடப்பதற்கு ஏதுவானவை. இத்தரைகள் வழுக்கி விடுவதில்லை. மேலும் ரப்பர் தரைகளில் இரைச்சல் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறன் அதிகமாக இருக்கின்றன.
கான்கிரீட் கற்களின் மீது ரப்பர் பொருட்கள் பொருத்தப்பட்டு இத்தரைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் பாதங்களுக்கு இதமான உணர்வினையும் வழங்குகின்றன.
குளியல் அறைகளில் தண்ணீர் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அங்கு வழுக்கும் தன்மை பொதுவாக இருக்கும். ஆனால் ரப்பர் தரைகளை பயன்படுத்துவதால் இதுபோன்ற வழுக்கும் தன்மைகள் தவிர்க்கப்படுகின்றன. ரப்பர் தரைகளை குளியல் அறைகளுக்கு தான் பயன்படுத்தலாம் என்பது இல்லை. வீட்டின் அனைத்து அறைகளையும் ரப்பர் தரைகளால் அலங்கரிக்கலாம்.
பல வண்ணங்களில் கிடைக்கின்றன
இந்த ரப்பர் தரைகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக அறையின் வண்ணங்கள் மற்றும் உள் அலங்காரங்களுக்கு ஏற்ற வகையில் பல வகையான வண்ணங்களை கொண்டிருக்கின்றன. இவை படுக்கை அறைகளிலும் பயன்படுத்த ஏற்றவை. வரவேற்பு அறைகளில் ரப்பர் தரைகள் பயன்படுத்துவதால் வசீகரமான அலங்கார அமைப்புகளை பெற முடியும். இதன் நிறங்கள் சுவற்றின் வண்ணங்களுக்கு ஏற்றாற் போன்று அமைவது அறையை அழகுப்படுத்துவதாக மாற்றுகின்றன.
ரப்பர் தரைகளில் வழுக்கி விழும் வகையிலான அமைப்புகள் எதுவும் இல்லை. பொதுவாக தரைகளாக பயன்படுத்தப்படும் பொருட்களில் இம்மாதிரியான வழுக்கும் தன்மைகள் அமைந்திருக்கும். ஆனால் ரப்பர் தரைகள் இவற்றில் இருந்து மாறுபட்டு வழுக்கும் தன்மையை கொடுப்பதில்லை என்பதால் இத்தரைக்கு கட்டுமானத்துறையில் வரவேற்பு கிடைத்துள்ளது.
நடப்பதற்கு ஏற்றவை
ரப்பர் தரைகளில் விழும் கறைகளை எளிமையாக அகற்றிட முடியும். சமையல் அறைகளில் இதுபோன்ற தரைகளை அமைப்பதன் மூலம் பிசுக்கு கறைகள், சமையல் கறைகள் போன்றவற்றை எளிதாக அப்புறப்படுத்தி விடலாம். இந்த தரைகளில் படியும் கறைகளை எளிமையான சோப்பு நுரைகள் மற்றும் சோப்பு கரைசல்களை கொண்டும் அகற்றிவிடலாம். ரப்பர் தரைகள் அமைப்பது குழந்தைகளுக்கு ஏற்றவையாகவும் இருக்கும்.
இவற்றை குழந்தைகள் படிப்பு அறையிலும், விளையாட்டு அறையிலும் அமைக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் தரையில் விழும்போது அடிபடாமல் இருக்க வழிவகை ஏற்படும். ஏனெனில் இத்தரைகளின் மேல் பகுதியில் ரப்பர் படலம் போர்த்தப்பட்டிருப்பதால் சிறுவர்கள் கீழே விழுந்தாலும் அவர்களுக்கு பெரியதாக அடிபடுவதில்லை. இத்தரைகளின் மேற்பகுதி சமதளமாக இருப்பதில்லை. இதன் வடிவமைப்பு பாதங்களில் இருக்கும் அழுத்தம், வலி போன்றவற்றை குணப்படுத்த வல்லவை. அதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நடமாடுவதற்கு ஏற்ற வகையான தரைகளாக இவை மிளிர தொடங்கி உள்ளன.
source: www.dailythanthi.com