புதிய பள்ளிவாசல்கள் கட்டுவதில் நாம் காட்டும் ஆர்வம், அதை பராமரிப்பதில் காட்டுவது இல்லையே..!
இன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் பள்ளிவாசல்கள், அழகாகவும், உயரமாகவும், அதிகப் பொருட்செலவிலும் கட்டப்பட்டுள்ளது, மேலும் கட்டப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ். இதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
ஆனால் அப்படி கட்டப்படும் இறையில்லங்களின் பராமறிப்புகள் சரிவர செய்யப்படுகிறதா என்பதில் தான் குறைகள் எழுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களிடம் லட்சங்கள் திரட்டி அழகிய பள்ளிவாசல்கள் கட்டிவிடப்படுகிறது. இதனை பராமரிக்க கமிட்டி அமைக்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளிவாசல் பராமரிப்புக்காக வருடா வருடம் ரமளான் மாதங்களில் பள்ளிவாசல்களின் நிர்வாகம் பொதுமக்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நாம் யாரும் மறுக்க முடியாது.
ஒரு சில பள்ளிவாசல்களின் நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் வெளியில் கேட்க வெட்கப்பட்டு தங்களுடைய பெருளாதாரங்களை வருடக்கணக்கில் அல்லாஹ்வுக்காக செலவழித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு இறையில்லங்களில் சுற்றியுள்ள நாம் நம்முடைய முஹல்லாவில் உள்ள அல்லாஹ்வின் இல்லத்திற்காக என்ன வகையான அர்ப்பணிப்பை, உதவியை செய்திருக்கிறோம் என்பதை என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?
இன்றைய சூழலில் இஸ்லாமிய ஊர்களில் பள்ளிவாசல்கள் எதிர்க்கொள்ளும் சவால்களில் முக்கிய பங்கு பொருளாதாரமும், சுத்தம் சுகாதாரமும்.
இமாம் மற்றும் முஃஅத்தின் இருவரும் நம்மைப் போன்ற மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. இவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் சம்பளம் உண்மையில் போதுமானதுதானா என்பதை என்றைக்காவது நம்முடைய முஹல்லா பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு விசாரித்து நம்முடைய பங்களிப்பை செய்திருப்போமா?
பள்ளிவாசல்களுக்கு என்று பராமரிப்பு செலவுகள் என்று உள்ளது, குறிப்பாக கழிப்பறைகள் சுத்தம் செய்வது, மின் விளக்கு, மின் விசிரி, பழுதடைவது, தண்ணீர் எடுக்கும் மோட்டார் பழுதடைவது இவைகளை சரி செய்வதற்கான செலவுகள் என்று இப்படி ஏராளமான செலவுகள் இருக்கிறது, இவைகளை என்றைக்காவது நம்முடைய பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு விசாரித்து நம்முடைய பங்களிப்பை செய்திருப்போமா?
பெரும் பொருட்செலவில் கட்டப்படும் பள்ளிகளாட்டும், சிறிய பெருட்செலவில் கட்டும் பள்ளிகளாட்டும், குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய பெயிண்டுகள் அடித்து அழகுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று அதிரைப் போன்ற பள்ளிகள் சில பல வருடங்களாக பெயிண்டு அடிக்காமல், வெளி தோற்றத்தில் பாசி படிந்து கருப்பு நிறங்கள் சூழ்ந்துள்ளதை பார்த்து “நம்மை படைத்த அல்லாஹ்வின் வீடு இப்படி உள்ளதே” என்று என்றைக்காவது கண்ணீர் வடித்திருக்கிறோமா?
பள்ளிவாசல் பராமரிப்பில் உள்ள அடக்கஸ்தலங்களுக்கு ஒரு ஜனாஸா அடக்கம் செய்ய செல்லும் நாம், அங்கு காடுபோல் வளர்ந்திருக்கும் புல் செடிகளை கண்டு பள்ளி நிர்வாகத்தை பல முறை குறை கூறியுள்ளோமே, என்றைக்காவது இது ஏன் சுத்தம் செய்யப்படவில்லை, நம்முடைய முஹல்லாவுக்கு செந்தமான பள்ளியின் அந்த அடக்கஸ்தலம் சுத்தம் செய்ய நம்மால் முடிந்த ஏதாவது ஓர் உதவி செய்ய முன் வந்திருக்கிறோமா?
ரமளான் மாதத்தில், நோன்பாளிகளுக்காக தாயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சிக்கான செலவுகள், ஒரு சில வசதியானவர்கள் குடியிருக்கும் பள்ளிகளுக்கு 30 நாட்களுக்கு ஸ்பான்சர் கிடைத்து விடுகிறது. மேலும் மீடியாக்களை கையில் வைத்துள்ள இயக்கங்கள் நடத்தும் பள்ளிகள் தங்களின் ஊடக பரப்புரை மூலம் 30 நாட்களுக்கும் தங்களுக்கு தேவையான பெருளாதாரத்தை திரட்டி விடுகிறார்கள்.
என்றைக்காவது நம்முடைய முஹல்லா சார்ந்த பள்ளிவாசல்களுக்கு ரமளானில் நோன்பு கஞ்சிக்காக ஆகும் செலவில் பள்ளி நிர்வாகத்தை தானாக தொடர்பு கொண்டு நாமும் பங்கெடுத்திருக்கிறோமா?
இவ்வாறு கேள்விகள் அடுக்கிக் கொண்டே செல்லலாம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நாம் கட்டும் வீட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, அல்லாஹ்வின் இறையில்லத்தை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முதலில் நீங்கள் சார்ந்திருக்கும் முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகத்தை உடனே தொடர்பு கொண்டு, பள்ளிவாசலுக்கு தேவையானவைகள் என்னவென்பதை பற்றி விசாரியுங்கள், உங்களால் முடிந்த உதவியை செய்ய முன் வாருங்கள். நம்மை படைத்த ரப்பின் வீட்டை பாராமரித்து பாதுகாப்போம்.
பல மையில் தூரத்தில் உள்ள பாபர் மசூதி, மத வெறியர்களால் தகர்க்கப்பட்ட போது வெகுண்டெழுந்தோம், இன்றும் அதற்காக போராடுகிறோம். ஆனால் நம் கண் எதிரே நம்மை சுற்றி இருக்கும் இறையில்லங்கள் பராமரிப்பு இன்றி தவிக்கிறதே, இதற்காக நாம் நம்மால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும். இதற்காக நாம் நம்முடையை பங்களிப்பை, அர்ப்பணிப்பை செய்ய வேண்டும், இது போன்ற அர்ப்பணிப்புகள் செய்ய நம்மை சார்ந்த பிறரையும் தூண்ட வேண்டும்.
புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் நாம் காட்டும் ஆர்வம், நம் முஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசல்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், அவர் ஒரு சதவீதம் 100 ரூபாய் தம்முடைய முஹல்லாபள்ளி வாசலுக்காக கொடுப்பதில் நிச்சயம் சிரமம் இருக்காது. மாதம் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள், பள்ளிவாசலுக்காக மாதம் 1000 ரூபாய் நிச்சயம் கொடுக்க முடியும். அல்லாஹ்வுக்காக ஏன் இதை செய்யக்கூடாது என்று கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். அந்த தொகையை நீங்கள் சார்ந்திருக்கும் இறையில்லங்களுக்கு அல்லாஹ்வின் பொருத்த்த்தை நாடி மட்டுமே கொடுத்தப் பாருங்கள். அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.
நம் உயிரினும் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ் நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு சதவீதமாவது நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற கேள்வியை நம் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக்கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பனிப்போம்.
-M.தாஜுதீன்
source: http://adirainirubar.blogspot.in/2014/06/blog-post_18.html