இலங்கை அரசை நடுங்கச்செய்த முஸ்லிம் நாடுகளின் தூதர்கள்
முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து இலங்கை அரசை கண்டித்தது இலங்கையை நடுங்கச் செய்துள்ளது.
மனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியம்.
குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும் என சொல்லியிருந்தேன். நம் கருத்துக்கு ஏற்ப நல்லதொரு நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது.
அதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான ‘லாபி’யை செய்துள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சிங்களர்களுக்கு வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாகும் என்றும், இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு அங்கு தொழில் செய்ய இயலாத நிலை உருவானால் பொருளாதார ரீதியில் இலங்கை கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் இலங்கையிலுள்ள அயலக வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றே எச்சரித்தது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச் செய்துள்ளது.
முஸ்லிம் நாடுகளின் அழுத்தம் ஒருபுறம் வர, மறுபுறம் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். சர்வதேச அளவில் சிக்கல் வெடிப்பதை உணர்ந்த ராஜபக்சே, இனவாதத்தை தூண்டும் சக்திகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் நடவடிக்கை எடுக்கிறாரா இல்லையா என்பது வேறு. ஆனால், சர்வதேச அழுத்தம் அவரைப் பணிய வைக்கிறது. ஈழத் தமிழர் விவகாரத்தில் சவால் விட்டு சவடால் அடித்த ராஜபக்சேவால் இப்போது அப்படிச் செய்ய முடியவில்லை. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் நினைத்தால் அது சாத்தியம், இன்ஷா அல்லாஹ்.
அதுசரி, இந்தியாவிலும் ஒரு இனப்படுகொலை நடந்ததே.. இங்கும் அந்த முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் உள்ளனரே.. சர்வதேச அழுத்தத்தை உருவாக்காதது நம் குற்றமே! ரவூப் ஹக்கீமுக்கு தோன்றியது நமக்குத் தோன்றவில்லையே!
– ஆளூர் ஷாநவாஸ்