திருமணம் என்னும் நி(க்)காஹ்
இந்தியா போன்ற கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், மாறுபட்ட கலாச்சாரங்களைப் பின்பற்றும் பலரையும் பல்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறேன், பழகி இருக்கிறேன் என்றாலும் கூட அவர்களின் திருவிழாக்கள் அல்லது குடும்ப விழாக்களில் நாமும் ஒரு உறுப்பினராய்ப் பங்கேற்கும் போதுதான் அவர்களுக்கும் நமக்குமான கலாச்சார மாற்றங்களை முழுமையாக உணர முடிகிறது. உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது.
இப்போ ஏன் இவ்ளோ நீட்டி முழக்குகிறேன் என்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் காரணம் கடந்த வாரத்தில் நான் கலந்து கொண்ட திருமணம் என்னும் நி(க்)காஹ்தான். திருமணம் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழிக்கு.
கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் இருக்கும் அந்த கிராமமும் அங்கு நடைபெற்ற திருமணமும் அதன்பின் எங்களுக்குள் ஏற்பட்ட கேள்விகளும் விவாதங்களும் உரையாடல்களும் தான் நான் இந்தப் பதிவை எழுதுவதற்கான முழுமுதற் காரணம்.
அலங்கார தோரணங்கள், காதுகிழியும் மைக் செட். தெரு முழுக்க சேர் போட்டு கூடிக் கொட்டமடிக்கும் ஊர்க்காரர்கள், அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் அழுதுகொண்டும் ஆரவாரப்பட்டுக் கொண்டும் திரியும் சிறுவர்கள். பட்டுப்பாவடைகள் தாவணிகள் என ஒரு கல்யாண வீட்டிற்கு உண்டான எந்த அறிகுறியும் அவ்விடத்தில் இல்லை. மாறாக இயல்புக்கு மீறிய ஒருவித அமைதியே அந்த இடம் முழுவதும் வியாபித்திருந்தது.
மணி காலை பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மணப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்தோம். டிப்டாப்பாக இன் பண்ணிய ஒருவர் எங்களனைவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
இயல்பாகவே தன்னைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் நாம் நிபுணர்கள் என்பதால் ஒவ்வொரு தருணங்களிலும் நாமும் அவர்களும் எங்கெல்லாம் மாறுபடுகிறோம் எந்த விசயங்களில் எல்லாம் மாறுபடுகிறோம் என்பதை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது இந்த பாழாய்ப்போன மனசு.
சில ஒப்பீடுகள் ஆச்சரியமாய் இருக்கின்றன, சில ஆச்சரியத்தையும் மீறிய வியப்பைத்தருகின்றன. சில ‘அட’வையும் சில ‘அடடா’வையும் ஏற்படுத்துகின்றன. அந்த திருமணத்தில் நான் கண்ட காட்சிகள் சுவாரசியமானவை. ஒரு புதிய சூழலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவை.
பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே சாப்பிட அழைத்தனர். இங்கே அதிக வியப்பை ஏற்படுத்தியது அவர்கள் அளித்த விருந்தோம்பல் தான். நாங்கள் பதிமூன்று பேரும் அமர்ந்ததும் அவர்கள் உறவினர்களில் ஒருவர் கையில் ஒரு சிறிய வாளியையும் ஜக்கு நிறைய நீரையும் எடுத்துக் கொண்டு எங்கள் அருகில் வந்தார். முதலில் எங்களுக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். அந்த வாளியினுள் கையைவிடும்படிக் கூறி நீரை ஊற்றினார். அப்படி கைகழுவுவதற்கு கொஞ்சம் சங்கோஜமாய் இருந்தாலும் ஆச்சரியமாய் இருந்தது. மட்டன் சால்னாவும் பரோட்டா இட்லி வடையுடன் கூடிய அருமையான காலைச் சாப்பாடு.
வீட்டில் இருந்த உறவினர்கள் திருமண பரபரப்பில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, வீடு முழுக்க உறவினர்கள் நிறைந்து இருந்தாலும் அவ்வீட்டுப் பெண்கள் ஒருவர் கூட கண்ணில் தென்படவில்லை. ஏன் எங்கள் அலுவலக தோழிகளே அவர்கள் இருந்த அறையைவிட்டு வெளியே வரவில்லை. மேலும் இஸ்லாம் வழக்கப்படி சிலநாட்களுக்கு மணப்பெண்ணைக் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேற்று ஆண்கள் யாரும் பார்க்கக்கூடாதாம். அதனால் மணப்பெண்ணையும் பார்க்கமுடியவில்லை. ஒரு சாயாவைக் குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து பள்ளிவாசலை நோக்கிக் கிளம்பினோம்.
எங்களில் பெரும்பாலானோர் ஒருமுறை கூட இஸ்லாமிய திருமண விழாவில் கலந்து கொண்டிராதவர்கள். கலந்து கொண்டிராதவர்கள் என்பதைவிட கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் எனலாம். அதனால் அவர்களின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. கூடவே பரிமாறப்பட இருந்த பிரியாணிக்கும் சேர்த்துதான்.
கடந்த வருடம் இதே கும்பகோணத்தில் வேறொரு அலுவலக நண்பரின் திருமணதில் கலந்து கொண்டவன் என்பதால் எனக்கு தெரிந்த விசயங்களை நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு எங்களோடு வந்திருந்த மஸ்தானை கேள்விமேல் கேள்விகேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள் என் சகாக்கள். முஸ்லீம் வீட்டுக் கல்யாணம் எப்படி நடக்கும்? எவ்வளவு நேரம் நடக்கும்? என்னவெல்லாம் பண்ணுவாங்க?’ என்பதுதான் எங்களில் பெரும்பாலானோரின் கேள்வி.
மணி பதினொன்றைக் கடந்திருந்தது. பள்ளிவாசலில் அவர்கள் கொடுத்த சேமியா கலந்த ரோஸ்மில்க் வெயிலுக்கு இதமாய் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்கினார்கள். அங்கிருந்தவர்களில் நாங்கள் மட்டுமே சொல்லிவைத்தாற்போல் ஜீன்ஸ் அணிந்திருந்தோம். மற்றவர்கள் அனைவருமே எளிமையான வெள்ளை நிறக்கைலி வெள்ளைச் சட்டையுடனேயே வலம் வந்தனர். அவ்வப்போது யாரேனும் ஒருவர் எங்களுடன் வந்து கைகுலுக்கிச் சென்றபடி இருந்தார்களே தவிர நான் இன்னார் என ஒருவருமே அறிமுகம் செய்துகொள்ளவில்லை. நாங்களும் கைகுலுக்கிக் கொண்டோம்.
சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்றில் ஸ்பீக்கர் கட்டி அதன் பின்னால் சிலர் பக்திப் பாடல்களைப் பாடியபடி வர, அவர்களுக்குப் பின்னால் வந்த காரில் மணமகனும் அவருக்குப் பின்னால் வந்த காரில் மணமகளும் வந்து சேர்ந்தார்கள், மணமகனை பள்ளிவாசலுக்கும், மணமகளை பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த முஸ்லீம் சமுதாய நலக்கூடத்திற்கும் அழைத்துச் சென்றவுடன் கடந்த சில வாரங்களாக நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருமண வைபோகம் ஆரம்பமானது.
பள்ளிவாசலுக்கு அருகே நீச்சல் குளம் போன்ற அமைப்பில் கால் கழுவுவதற்கு வசதியாக ஒரு தொட்டி கட்டி வைத்துள்ளார்கள். அங்கு சென்று கால்களை சுத்தப்படுத்திவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானோம். திடிரென்று எங்களுக்குள் ஒரு பரபரப்பு. ஒரு பெரிய டப்பாவில் பிளாஸ்டிக்கால் ஆன குல்லாக்களை எடுத்து வந்து ஒருவர் வைக்க எங்களோடு வந்த சிலநண்பர்கள் அதனை எடுத்து அணிந்து கொண்டார்கள். என்னுடைய மாற்று மதத்து நண்பர்கள் என்னுடன் கோவிலுக்கு வரும்போது சில சமயங்களில் விபூதி வைத்துவிடும்படி கேட்டு ஆர்வத்துடன் வைத்துக் கொள்வார்கள். அதே போன்றதொரு ஆர்வம் இவர்கள் குல்லா அணிந்துகொள்ளும் போது வெளிப்பட்டதை உணர்ந்தேன்.
மசூதியின் வெளியே இருக்கும் பெரிய மண்டபத்தில் வைத்துதான் திருமணம் நடைபெற்றது. மண்டபத்தின் நடுவில் மணமகன் அமர்ந்துகொள்ள அவருக்கு வலப்புறம் மணமகளின் தந்தையும் இடப்புறம் மணமகனின் தந்தையும் அமர்ந்திருந்தார்கள், மணமகனின் எதிர்புறம் அந்தப் பள்ளியின் தலைமை இமாம் அமர்ந்துகொண்டார். இவர்தான் திருமணத்தை வழிநடத்துகிறார்.
தொழுகையுடன் ஆரம்பிக்கும் திருமணத்தில் ஓதி முடித்ததும் திருமண சங்கல்ப்பம் வாசிக்கபடுகிறது. இன்னாரின் மகன் இன்னாரின் மகளை இவ்வளவு கிராம் தாலியுடன் இறைவனின் திருபெயரால் மணமுடிக்கிறார் என்ற வகையில் செல்கிறது அந்த சங்கல்ப்பம். அதை அரபிக்கிலும் சொல்கிறார்கள் என நினைக்கிறன், பின் சிறிது நேரம் தொழுகை நடக்கிறது. இருபதாவது நிமிடத்தில் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீரும் (தண்ணீர் போல் தான் இருந்தது) பாலும் வருகிறது. ஒவ்வொன்றிலும் மூன்று மடக்கு அருந்துகிறார்.
இந்த சமநேரத்தில் மணமகளுக்கு மணமகனின் தாயார் தாலி அணிவித்து விடுவதாக கூறினார்கள். மணமகளும் நீரும் பாலும் அருந்த திருமணம் நிறைவு பெறுகிறது. பின்னர் உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக வந்து மணமகனைத் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதிகபட்சமாக மணமகனின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
மணமேடை இல்லை. மணமகனும் மணமகளும் அருகே அருகே நின்று விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. குடும்பம் குடும்பமாக மேடையேறி தங்கள் வருகைகளை டிஜிட்டலில் பதிந்து கொள்ளவில்லை. போகஸ் லைட், பிளாஷ் லைட், மணமேடையைச் சுற்றிலும் குடை, இன்னிசைக் கச்சேரி, ஆட்டம் பாட்டம் என எதுவுமே இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு திருமணமா என்றால் நிச்சயமாய் இஸ்லாமில் சாத்தியமே!
சமீபத்தில் வியாசர்பாடியில் நடந்த நண்பனின் திருமண வரவேற்பிற்குச் சென்றிருந்தேன், பப்களில் நடத்தப்படும் இன்னிசைக் கச்சேரியை தன்னுடைய திருமண வரவேற்பிலும் ஏற்பாடு செய்திருந்தான். மண்டபத்தின் உள்ளே இருந்த மொத்தபேரும் வைப்ரேட் மோடில் அதிர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு எந்திரம் அவ்வபோது புகையைக் கக்கிக் கொண்டிருக்க இன்னொரு எந்திரம் விதவிதமான வெளிச்சங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது. நகர்ப்புற திருமணங்களில் மேலைநாட்டு ஆதிக்கம் அதிகமாய் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டதை அந்த நிகழ்வில் உணர்ந்தேன்.
அங்கே அப்படியிருக்க இவர்கள் இன்னும் தங்கள் ஆதிகாலத்து எளிமையை மாற்றாமல் அதையே பின்பற்றி வருவது வியப்பாய் இருந்தது. அனைவருமே திருமணம் முடிந்ததும் சாப்பிட்டார்கள் வீட்டை நோக்கிக் கிளம்பிவிட்டார்கள். குடும்பத்து ஆண் பெண் தவிர வேறு யாருமே பொதுவெளியில் பேசிக்கொள்ளவில்லை. வட்டமாய் அமர்ந்து சிரித்துப் பேசும் யாரையும் பார்க்க முடியவில்லை. திருமணதிற்கு வந்திருக்கிறோம் என்பதை விட நண்பனின் வீட்டு விருந்திற்கு வந்துள்ளோம் என்பது போலவே உணர்ந்தோம். இஸ்லாம் எவ்வளவு கட்டுக்கோப்பான மார்க்கம் என்பதை நெருங்கிச் சென்று பார்க்கும் போதுதான் புரிகிறது.
பெரும்பாலானவர்கள் மசூதியை விட்டுக் கிளம்பியதும் மஸ்தானுடன் மெல்ல மசூதிக்குள் நுழைந்தோம். ஒரு பெரிய ஹால். பெரிய என்றால் சுமார் இருநூறு முன்னூறு பேர் அமரக்கூடிய பெரிய ஹால். மிகவும் சுத்தமாக பெருக்கப்பட்டிருந்தது. தூரத்தில் ஒரு அலமாரியில் குண்டுகுண்டான புத்தகங்கள் அடுக்கபட்டிருந்தன. நிச்சயம் அவை குரானாகத்தான் இருக்க வேண்டும். இரண்டு மூன்று பெரியவர்கள் கூட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் திருமணத்தை நடத்தி வைத்தப் பெரியவர். நாங்கள் உள்ளே நுழையவும் எங்களை யார் என்று தலையை உயர்த்திப் பார்த்தார்கள். ஏதேனும் திட்டுவார்களோ என்று நாங்கள் தயங்க, நாங்கள் தயங்குவதைப் பார்த்ததும் தங்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பி மீண்டும் தாங்கள் விட்ட இடத்தில் இருந்து பேசத்தொடங்கிவிட்டார்கள். நாங்களும் எங்களுக்கு வசதியாய் ஒரு ஓராமாய்ச் சென்று அமர்ந்து எங்கள் பங்குக்குப் பேசத்தொடங்கினோம்.
விக்கிதான் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தான். ‘மச்சி அந்த மூணு பேரும் யாரு?, ஏன் இங்க இருக்காங்க?, அது என்ன புக்கு?, அங்க ஏன் பேன் போட்ருக்காங்க?’ என்றபடி அவன் கேள்விகள் அளவே இல்லாமல் சென்று கொண்டிருந்தன. மஸ்தான் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான். விக்கியின் கேள்விகள் எனக்கு எவ்வித வியப்பையும் தரவில்லை. ஒருவேளை அவன் ‘டேய் மச்சி சாமி சிலைய எங்கடா காணோம்’ என்று கேட்டிருந்தாலும் கூட நான் வியந்திருக்க மாட்டேன். காரணம் மசூதிக்குள் நுழையும் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தான் விக்கி, ‘அண்ணே அந்த கோவிலுக்குள்ள நம்மள எல்லாம் விடுவாங்களான்னே, பாக்கணும் போல இருக்கு’ என்று.
source: http://www.seenuguru.com/2014/06/islamic-marriage.html