ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை! பாக்தாத் வீழ்கிறது! பதறுகிறது ஈரான்!
பாக்தாத்: ஈராக் மீண்டும் யுத்த பூமியாகிவிட்டது.. வீழ்த்தப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையினர் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிவிட்டதால் ஈராக்கின் பாதுகாப்புக்கு ஈரான் தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. எல்லைகளில் ஈரான் ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
ஈராக்கில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் ஷியா முஸ்லிம்கள். அதற்கு அடுத்தது சன்னி முஸ்லிம்கள். ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா யுத்தத்தைத் தொடுத்தது. அமெரிக்காவின் இந்த யுத்தத்துக்கு ஷியா பிரிவினர் ஆதரவு கொடுக்க சதாம் உசேனும் சன்னி பிரிவினரும் ஒடுக்கப்பட்டனர்.
இன்று உலகம் பேசும் “The Islamic State of Iraq in Syria ” அதாவது ஐ. எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பு சதாம் உசேன் ஆதரவுப் படையாக தனியே உருவெடுத்துள்ளது.
இந்த அமைப்பினர் ஏற்கெனவே சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தம் வசம் வைத்திருக்கின்றனர். இதன் பின்னர் படிப்படியாக ஈராக் நகரங்களை இலக்கு வைத்து கைப்பற்றத் தொடங்கினர். சிரியாவின் சில பகுதிகள் மற்றும் ஈராக்கை இணைத்து இஸ்லாமிய தேசம் ஒன்றை கட்டமைப்பதே சதாம் ஆதரவுப் படையினரின் இலக்கு.
அமெரிக்கா வெளியேறிய பின்னர்..
2011ஆம் ஆண்டு ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் குறிப்பிட்ட அளவு அமெரிக்க ராணுவத்தினர் இன்னமும் இருப்பதாகவே கூறப்பட்டும் வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து சதாம் ஆதரவுப் படையினர், ஈராக் அரசு படைகள் மீது மெதுமெதுவாக தாக்குதல்களை தொடங்கினர்.
மெதுமெதுவாக முன்னேற்றம்
கடந்த ஜனவரி மாதம் பலூஜா நகரை ஈராக் அரசு படையினரிடம் இருந்து கைப்பற்றிய சதாம் ஆதரவுப் படையினர் பின்னர் படிப்படியாக பிற நகரங்களையும் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.
அடுத்தடுத்து நகரங்கள்
கடந்த ஒரு வார காலமாக மொசூல், சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரீத், நினிவே, சலாஹுதின், கிர்குக் என பல நகரங்களை கைப்பற்றிவிட்டனர்.
பாக்தாத், கர்பாலா நோக்கி..
அத்துடன் ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துலுய்யா நகரை திடீரென தாக்குதல் நடத்தி நேற்று காலை கைப்பற்றினர். தற்போது தலைநகர் பாக்தாத் மற்றும் ஷியா பிரிவினரின் புனித தலமாகிய கர்பாலாவை கைப்பற்றும் வகையில் சதாம் ஆதரவுப் படை முன்னேறி வருகிறது.
குர்து கிளர்ச்சி
சதாம் ஆதரவுப் படையினர் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஈராக் அரச படைகள் தப்பி ஓடுவதால் எண்ணெய் வளம் அதிகம் உள்ள கிர்குக் நகரத்தை குர்து ராணுவம் கைப்பற்றிவிட்டது. அப்பகுதி சுயாட்சி பகுதியாக இருந்தாலும் தற்போதைய சூழலில் உக்ரைனின் கிரிமீயா போல தனிநாடாக தன்னை குர்திஸ்தான் பிரகடனம் செயய்வும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
உலக நாடுகள்..
இப்படி ஈராக்கில் அடுத்தடுத்து சதாம் உசேன் ஆதரவு படைகள் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நெருங்கிவிட்ட நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் நிலைமைகளை கவனித்து வருகின்றன.
அமெரிக்காவிடம் கெஞ்சல்
ஈராக் அரசுப் படைகள், சதாம் ஆதரவு படையினரை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி வருகின்றனர். இதனால் ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்கள் என பலவும் சதாம் படை வசமாகி வலுவடைய வைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் அமெரிக்காவிடம் சதாம் படையினர் மீது தாக்குதல் நடத்துமாறு ஈராக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா மவுனம்
ஆனால் அமெரிக்காவோ இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாஹி கூறுகையில், ஈராக்கில் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஈராக் அரசு மற்றும் அந்நாட்டு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதேசமயம், ஈராக்குக்கு அமெரிக்க படையினரை திரும்பவும் அனுப்பும் திட்டமில்லை என்றார்.
இங்கிலாந்து பதில்
இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக்கும், இங்கிலாந்து படையினரை ஈராக்குக்கு திரும்பவும் அனுப்பும் திட்டமில்லை’ என்று கூறியுள்ளார்.
விமானத் தாக்குதல்?
அதே நேரத்தில் ஈராக் அரசுக்கு உதவும் வகையில், சதாம் ஆதரவு படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்திகள் குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கர்கள் வெளியேற்றம்
இதனிடையே அமெரிக்கர்கள், ஈராக்குக்கு செல்ல வேண்டாம் என்று அந்நாடு அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையை விடுத்தது. இதனால் வடக்கு பாக்தாத் விமான படை தளத்தில் இருந்து ஏராளமான அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்க ராணுவத்துக்கான ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காத்திருக்கின்றனர்.
ஈரான் படைகள் குவிப்பு
அதே நேரத்தில் அண்டை நாடான ஈரான், ஈராக்கின் பாக்தாத்தில் ஏராளமான முதலீடுகளை செய்திருப்பதாலும் கர்பலா புனித நகரம் என்பதாலும் அவற்றைப் பாதுகாக்க தமது படைகளை ஈராக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
எல்லைகளில்..
அதேபோல் எல்லைகளிலும் ஈரான் படைகள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா- ஈரான் கைகோர்ப்பு
தற்போதைய நிலையில் சதாம் உசேன் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்துள்ளதால் அவர்களை எதிர்கொள்ள இதுநாள் வரை எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்காவும் ஈரானும் இப்போது ஈராக்கில் கை கோர்த்து போரிட வேண்டிய நிலை வந்துள்ளது. இது பற்றியும் அமெரிக்கா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. எண்ணெய் வள பூமி எரிந்து கொண்டிருக்கிறது!!
source: thatstamil