இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகிற்கு இறங்கும் முன்பு இவ்வுலகிற்கு வருவார்கள். இவர்கள் பற்றி ஹதீஸ்களில் பல முன்னறிவிப்புகள் உள்ளன.
ஆட்சியும் பெயரும்:
இமாம் மஹ்தீ அவர்கள் அரபுகளை ஆட்சி செய்வார்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரோடு மஹ்தீ அவர்களின் பெயர் ஒத்திருக்கும் என்பதும் இவ்வுலகம் முடிவதற்கு முன்பு அவர்கள் எப்படியும் வர இருக்கிறார்கள் என்பதை, ‘இவ்வுலகில் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை நீட்டுவான்’ என்ற ஹதீஸும் கீழ்காணும் மற்ற ஹதீஸ்களிலிருந்தும் பெறப்படும் உண்மைகளாகும்.
”என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 2331, அபூதாவூது 4269)
‘என் குடும்பத்தைச் சோந்த ஒருவர் ஆட்சியமைப்பார். அவர் பெயர் என் பெயரை ஒத்திருக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 2331)
‘இவ்வுலகில் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான்’ என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல்கள்: திர்மிதி 2332, இப்னுமாஜா 4085)
வேறொரு ஹதீஸில் மஹ்தீ இமாமின் தந்தையின் பெயரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் பெயரும் ஒத்திருக்கும் என்று வந்துள்ளது.
‘…அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயரை ஒத்திருக்கும்…’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 4269)
ஆட்சிக்காலம்:
இமாம் மஹ்தீ அவர்கள் ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிவார்கள்.
‘… அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்’ என்று என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 4272)
வருகையின் நோக்கம்:
போரும் கொடுங்கோல் ஆட்சியும் குழப்பங்களும் பெருகி இருக்கும் போது இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீதியையும் நேர்மையையும் நிலை நிறுத்துவார்கள்.
‘… போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்’ என்று என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 4272)
பெருமானாரின் சந்ததி:
இமாம் மஹ்தீ அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்றும் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சந்ததிகளில் இருந்து தோன்ற இருக்கிறார் என்பதும் குறிப்பாக இமாம் ஹஸனின் வழித்தோன்றல்களில் இருந்து வர இருக்கிறார் என்பதும் கீழ்காணும் ஹதீஸ்களிலிருந்தும் செய்திகளிலிருந்தும் நாம் அறிகிறோம். ‘மஹ்தீ எனது குடும்பத்தைச் சேர்ந்தவராவார், ஃபாத்திமா(ரளியல்லாஹு அன்ஹா)வின் சந்ததிகளில் உள்ளவராவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூது 4271)
அபூ ஈஸா கூறுகிறார்: அலி ரளியல்லாஹு அன்ஹு தனது மகன் ஹஸனைப் பார்த்து, ‘இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரிட்ட படி ஸையத் ஆவார். அவரது சிங்கங்கள் வெளியே வரும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை ஒத்த ஒருவர் வருவார். அவர்களது அதே நடையை உடையவராக இவர் இருப்பார். ஆனால் தோற்றத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருக்க மாட்டார்’ என்று கூறிவிட்டு, பிறகு இந்த பூமியில் நீதியை நிலை நிறுத்துவதைப் பற்றிக் கூறினார். (இது அபூதாவூதில் (4276) காணக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்பாகும்)
அங்க அசைவுகளும் தோற்றமும்:
இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அங்க அசைவுகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருக்கும், ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோற்றத்தில் இருக்க மாட்டார். மேலும் படர்ந்த நெற்றியும் எடுப்பான மூக்கும் உடையவராக இமாம் மஹ்தீ இருப்பார்கள். உயரமானவராக இருக்க மாட்டார்கள்.
அவர்களது அதே நடையை உடையவராக அவர் இருப்பார். ஆனால் தோற்றத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருக்க மாட்டார்’ என்று கூறிவிட்டு, பிறகு இந்த பூமியில் நீதியை நிலை நிறுத்துவதைப் பற்றி அலி ரளியல்லாஹு அன்ஹு, கூறினார்கள். (அபூதாவூது 4276 ஹதீஸின் அடிக்குறிப்பு) ‘மஹ்தீ எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்’ என்று என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸ யீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 4272)
‘உயரமானவராக இருக்க மாட்டார்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அபூஸயீது அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 4083).
காலம்:
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலக அழிவுக்கு முன்பாக இவ்வுலகிற்கு வருகை தருவார்கள். இன்னும் தெளிவாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்பாக வருகை தருவார்கள். ‘என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 2331, அபூதாவூது 4269)
‘இவ்வுலகம் முடியாது’ என்ற வார்த்தைகள் இவ்வுலகம்; முடிவுறும் முன்பு என்ற பொருளைத் தருகிறது.
‘இவ்வுலகின் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால், எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் எழச் செய்வான். போர்களால் நிரம்பி இருக்கும் இந்த பூமியில் அவர் நீதியை நிலை நிறுத்துவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.. (அறிவிப்பவர்: அலி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 4270)
‘இவ்வுலகின் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால்’ என்ற வார்த்தைகளும் உலக முடிவுக்கு முன்பாக என்ற பொருளைத் தருகின்றது. ‘எனதுசமுதாயத்தின் இறுதியில் ஒரு கலீபா வருவார். அவர் மக்களுக்கு கணக்கின்றி வாரி வழங்குவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்) இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகவே உலக அழிவு நாளுக்கு சமீபமாக இமாம் மஹ்தீ அவர்கள் வருவார்கள் என்பதைக் கூறுகிறது.