MUST READ
இம்மையைப் புறக்கணிப்பதா?
உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள்.
”ஒரு முஸ்லிம் ஒரு பயிரை நட்டு, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு மிருகமோ அல்லது ஒரு பறவையோ உட்கொண்டால் அது அவருக்கு தர்மமாக அமையும்.” (புகாரி, முஸ்லிம்)
அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இரு ஸஹாபாக்களும் அறிவிக்கின்ற மேற்படி நபிமொழி, புகாரி, முஸ்லிம், திர்மிதி, தாரமி, முஸ்னத் அஹ்மத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
பொதுவாக ஓர் உலோகாயதச் செயற்பாடாகக் கருதப்படும் விவசாயத்தை அதிலீடுபடுவதை – இந்நபிமொழி ஒரு மேலான வணக்கம் – தர்மம் என்று கூறுகின்றது. இது, மறுமைக்காக உழைப்பதுடன், உலக வாழ்வு சிறக்க, மனிதவாழ்வு வளம்பெற, பூமியில் செல்வம் கொழிக்க, ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் எனும் இஸ்லாத்தின் கருத்துக்கு உரமூட்டுவதாக உள்ளது.
‘இமாரத்’ எனும் உலகை வளப்படுத்தும் பணி, இபாதத்தை விட எவ்வகையிலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல என்பதனை அர்ராகிபுல் அஸ்பஹானி அழகுற விளக்கியுள்ளார்.
கைவிடப்பட்ட ஒரு நிலத்தை ஒருவர் கைப்பற்றி, அதனை வளப்படுத்தினால், அது அவருக்குச் சொந்தமாகிவிடுகின்றது என இஸ்லாம் கூறுகின்றது. ”ஒருவர் ஓர் இறந்த பூமியை உயிர்ப்பித்தால் அது அவருக்குச் சொந்தமாகிவிடுகின்றது.” (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி) இதுவும் மேற்படி கருத்துக்குச் சிறந்ததோர் ஆதாரமாகும்.
இஸ்லாம் ஒருபோதும் துறவறத்தைப் போதித்ததில்லை. ”துறவறம் எங்கள்மீது விதிக்கப்பட்டதல்ல” (அஹ்மத்) என்பது நபிமொழியாகும். உலக விவகாரங்களில் ஒரு முஸ்லிம் உற்சாகமாக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
இவ்வுலகிலும் கூட, தானும் மக்கள் அனைவரும் கவலைகளின்றி மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமென்றே ரஸூலுல்லாஹிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள். இதனால்தான் எப்போதும் கவலைகள், துன்பங்கள் தம்மை அணுகாமலிருக்க அல்லாஹ்வை வேண்டி வந்தார்கள். ‘யா அல்லாஹ், துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” (புகாரி, திர்மிதி) எனப் பிரார்த்திப்பது அண்ணலாரின் வழக்கமாயிருந்தது. ஸஹாபாக்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள். வெறும் பிரார்த்தனையுடன் நின்று விடாது, மக்களின் துயர் துடைக்க அயராது உழைத்தார்கள்.
எனது கண்கள் தூங்கினாலும் என்னுள்ளம் என்றும் துயில் கொள்வதில்லை” (அபூதாவூத், அஹ்மத்) எனக் கூறிய அல்லாஹ்வின் தூதர், மக்களின் துயர் துடைக்க அல்லும் பகலும் அக்கறையோடு உழைத்தார்கள். பனூ முஸ்தலக் எனும் கோத்திரத்தாரிடையே ஏற்பட்ட ஒரு சச்சரவைத் தீர்த்து வைப்பதிலீடுபட்டு, ஒரு நேரத் தொழுகையையே நபியவர்கள் விட்டுவிட்ட வரலாற்றை ஸீரா கூறுகின்றது.
ஆக்கபூர்வமான, மனித சமூகததிற்கு நன்மை பயக்கக் கூடிய அனைத்துக் கருமங்களையும் இஸ்லாம் ‘இபாதத்’ தாகவே கருதுகின்றது. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்: ”அநியாயம் செய்யும் நோக்கமோ, அத்துமீறும் நோக்கமோ இன்றி, எவரொருவர் ஒரு கட்டத்தைக் கட்டினாரோ அல்லது ஒரு பயிரை நட்டாரோ அதனைக் கொண்டு ரஹ்மானுடைய படைப்புகள் நன்மையடையும் காலமெல்லாம் அவருக்கு நிலையான நற்கூலி கிடைத்துக் கொண்டேயிருக்கும்”. (அஹ்மத்). தனது மனைவி மக்களுக்காக உணவளிப்பதும்கூட தர்மமாகவே கருதப்படுகின்றது.உழைப்பையும் உயர்ந்த வணக்கமாகக் கருதுகின்றது இஸ்லாம். அதனை
”அல்லாஹ்வின் அருளைத் தேடிப் பெறல்’ எனக் கூறிச் சிறப்பிக்கின்றது. ஜிஹாதுக்காகச் செல்வோருடன் உழைப்புக்காகச் செல்வோரை இணைத்துக் கூறுவதன் மூலம், உழைப்பின் மகத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றது. (அல்குர்ஆன் ஸுரா முஸ்ஸம்மில் 20ம் வசனத்தைப் பார்க்க.) ”நம்பிக்கையும் நாணயமும் கொண்ட வியாபாரிகள் (மறுமையில்) நபிமார்கள், ஸித்திகீன்கள், ஷுஹதாக்கள் ஆகியோருடன் எழுப்பப்படுவார்கள்”, என்றார்கள் நபியவர்கள். (இப்னு மாஜா)
அனைத்து வகையான சமூக சேவைகளையும் இஸ்லாம் வணக்கமாகவே கருதுகின்றது. ‘மக்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய கற்கள், முட்கள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றிவிடுவதுகூட ஓர் இபாதத்தாகும்’ (முஸ்லிம்). முஸ்லிம்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய, பாதையில் விழுந்திருந்த ஒரு மரக்கிளையைப் பாதையிலிருந்த நீக்கிய ஒரே காரணத்திற்காக சுவர்க்கம் நுழைவிக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி ஹதீஸ் குறிப்பிடுகின்றது. (முஸ்லிம்)
ஆன்மீகத்துறைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து உலகியல் விவகாரங்களைப் புறக்கணிப்பது கூடாது. உலோகாயத விவகாரங்களில் அளவு கடந்து ஈடுபட்டு ஆன்மீகத்துறையை மறந்துவிடுவதும் ஆகாது. இஸ்லாம் உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் இணைத்து அவையிரண்டிற்குமிடையில் சமநிலையைப் பேணி நடுநிலையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது.
கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள் எவ்வாறு ஒரு முஸ்லிம் வர்த்தகம் போன்ற உலக விவகாரங்களிலும், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளிலும் மாறிமாறி ஈடுபடுவதனூடாக, குறித்த இரு வாழ்வுக்கிடையிலான சமநிலையைப் பேணுவான் என்பதனை அழகுற விளக்குகின்றன.
”விசுவாசிகளே! ஜும்ஆத் தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், வர்த்தகத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வைத் தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோர்களாயிருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. தொழுகை முடிவு பெற்றால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் சித்தியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்.” (63:9-10)
கீழ்வரும் திருவசனங்களில் அல்லாஹ் இரு கூட்டத்தாரைப் பற்றிப் பிரஸ்தாபிக்கின்றான். உலகையே நோக்கமாகக் கொண்ட முதற்கூட்டத்தை நிராகரித்து இழிவுபடுத்திக் குறிப்பிடுகின்றான். உலகையும் மறுமையையும் ஒருங்கே எதிர்பார்க்கும் இரண்டாம் கூட்டத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றான். மறுமையை மாத்திரம் விரும்புகின்ற மூன்றாம் கூட்டத்தைப் பற்றி இறைவன் இங்கு ஏதும் குறிப்பிடவில்லை. ஏனெனில், அத்தகைய ஒரு கூட்டம் இவ்வுலகில் வாழ்வது சாத்தியமில்லை என்பதனாலும் இறைவன் அதனை விரும்பாததனாலுமே.
”எங்களிறைவனே, எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலே அளித்துவிடுவாயாக என்று கோருவோரும் மனிதர்களில் இருக்கின்றனர். ஆனால், இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. அன்றி, எங்களிறைவனே, எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக, மறுமையிலும் நன்மையளிப்பாயாக, நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை இரட்சிப்பாயாக, எனக் கோருவோரும் அவர்களில் உளர். தங்கள் வினையின் பயன் இவர்களுக்குத்தான் உண்டு. மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத்தீவிரமானவன்.”
உண்மையில், இஸ்லாம் கீழ்வரும் திருவசனம் எடுத்துக் காட்டுகின்ற மனிதர்களையே உருவாக்க விரும்புகின்றது:
”அந்த மனிதர்கள் எத்தகையோரென்றால், (அவாகள் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்களாயினும்) அவர்களுடைய வர்த்தகமோ கொடுக்கல் வாங்கல்களோ அவர்கள் அல்லாஹ்வை நினைப்பதிலிருந்தும், தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ஸகாத்தைக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பி விடாது. அவர்களுடைய இருதயங்களும், பார்வைகளுமே (பயத்தால் திடுக்கிட்டு) தடுமாறிவிடக் கூடிய நாளையே அவர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர்.” (24:37)
உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும்.
சுருங்கக்கூறின் உலகியல் சார்ந்த எந்தவொரு நடத்தையையும் அல்லாஹ்வினருளைப் பெற்றுத்தரும் வணக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஐந்து நிபந்தனைகள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
1. குறித்த செயல் ஷரீஅத்தின் பார்வையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தல் வேண்டும்.
2. தூய்மையான எண்ணத்தோடு அதனைச் செய்ய வேண்டும்.
3. செயலை முறையாகவும், ஒழுங்காகவும், திறம்படவும் செய்தல் வேண்டும்.
4. குறித்த செயலில் ஈடுபடும்போது அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணுதல் வேண்டும்.
5. இச் செயற்பாடு அடிப்படையான மார்க்கக் கடமைகளைச் செய்வதில் இருந்து ஒருவரைத் தடுத்துவிடக் கூடாது.
”Jazaakallaahu khairan”