தலைவர்கள் பலவிதம்
இன்றைய தலைவர்கள் தம்மிடம் இருப்பது எது இல்லாதிருப்பது எது என்பது பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. சமூகத்தின் ஏதோவொரு தளத்தில் ஒரு தலைமைத்துவத்தை வழங்கும் வாய்ப்புக் கிடைத்ததால் இவர்கள் தலைவர்களாக செயல்படுகிறார்கள் முடிந்ததை செய்துவிட்டுப் போகிறார்கள். முடியாததை விட்டு விடுகிறார்கள்.
அவர்களால் செய்ய முடிந்தவற்றுக்காக அவர்களைப் பாராட்டலாம். எனினும் இந்தப் பாராட்டோடு நிற்காமல் அவர்கள் தங்களைப் பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்வதற்கும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே இது எழுதப்படுகிறது.
இந்த ஆக்கம் தலைவர்களல்லாத சாதாரண மக்களுக்கும் பயனளிக்கலாம். அவர்களும் ஒரு வகையில் சின்னத் சின்னத் தலைவர்களாகத் தொழிற்படும் சந்தர்ப்பங்கள் நிறையவே வருவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தாம் எத்தகைய இயல்புகளோடும் பண்புகளோடும் கருமமாற்ற வேண்டும் என்பதை சிறிதளவேனும் கற்றுக் கொள்வதற்கும் இந்த ஆக்கம் உதவலாம்.
இனி தலைவர்களுக்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்.
1. சமூகத்தில் ஒரு வகையான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை வேலைத் தலைவர்கள் என்று குறிப்பிடலாம். அனைத்து வேலைகளையும் தாமே முன்னின்று தனது கண்காணிப்பிலேயே செய்து முடிக்கும் தலைவர்களே இவர்கள். எந்த ஒரு வேலையையும் பிறர் செய்தால் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கிருக்கமாட்டாது. அதனால் வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்க இவர்கள் விரும்புவதில்லை. ஒப்படைத்தாலும் தமது அறிவுறுத்தலுக்கேற்பவே அவர்கள் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
இவர்களது நிர்வாகம் பற்றி இவர்கள் மட்டுமே அறிந்திருப்பார்கள். வரவு செலவு விவரங்கள், யாரைப் பயன்படுத்தி என்ன செய்கிறார்கள், நியமனங்கள், பதவி நீக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன போன்ற இன்னோரன்ன விடயங்கள் அனைத்தும் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். இவருக்கு அடுத்து வருகின்ற ஒருவரால் இவர் செய்த நிர்வாகத்தை செய்வது சிரம சாத்தியமாக இருக்கும்.
2. மற்றொரு வகையான தலைவர்கள் இருக்கிறார்கள். போடப்பட்ட ஒழுங்குகளுக்குள்ளிருந்து அங்குலமும் அப்பால் இப்பால் நகர மாட்டார்கள். மிகவும் இறுக்கமான தலைவர்கள். சூழ்நிலைகள் மாறினாலும்ஸ பாதிப்புகள், சாதாரணங்கள் என்று எது நடந்தாலும் இவர்கள் தமது நிர்வாக ஒழுங்குகளுக்குள் இறுக்கமாகவே இருப்பார்கள். காரணங்கள், நியாயங்கள் அனைத்திற்கும் அவர்கள் கூறும் ஒரே பதில், அது எனக்குத் தெரியாது. இதுதான் சட்டம்.
இவர்கள் கருணை காட்ட மாட்டார்கள் இறுக்கத்தை கைவிட மாட்டார்கள். இத்தகையவர்களிடம் வேலை செய்பவர்கள் அதிருப்தியுடன் வேலை செய்வார்கள் அல்லது அதிருப்தியுடன் வெளியேறுவார்கள்.
3. மற்றொரு வகைத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் வேறு ஒரு வகையான இறுக்கம் இருக்கிறது. அவர்கள் மிகவும் கவனமாக தமக்கு வசதியானவர்களை நெருக்கிக் கொள்வார்கள். அதாவது, தன்னுடன் முரண்ப டாதவர்களை அருகில் வைத்துக் கொள்வார்கள் மற்றவர்களை கவனமாகத் தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். சமூகத்திற்கு இன்றியமையாத பணிகளை விட தனது ஆர்வத்துக்கும் ஈடுபாட்டுக்கும் எவை பொருத்தமாக இருக்கின் றனவோ அவற்றுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அத்தகைய வேலைகளுக்கு உப குழுக்களும் திட்டங்களும் இவர்களிடமிருக்கும். தமது ஆர்வத்துக்கு அப்பால் ஒரு வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டால் அந்த வேலையை சரிவரச் செய்யாத ஒரு குழுவை நியமித்து விடுவார்கள். அந்தக் குழு இறுதிவரை இயங்கவே மாட்டாது.
சமூகத்தில் இன்ன இன்ன வேலைகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது என்று அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டால் அந்த ஆலோசனைகளுக்கு அரைக் காது கொடுப்பதே இவர்களது வழக்கமாக இருக்கும். இவர்களது இறுக்கம் சட்டம், ஒழுங்குகளில் விடாப்பிடியாக இருக்கும் இறுக்கமல்ல. தனது தீர்மானங்களுக்கும் விருப்பங்களுக்கும் வெளியே எதுவும் நடந்து விடாமல் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்ளும் இறுக்கமே அது.
இந்த இறுக்கத்தினாலும் அதிகமானவர்கள் அதிருப்தியடைந்திருப்பார்கள். எனினும், இந்த இறுக்கத்தை நேரடியாக அவர்களால் சுட்டிக்காட்ட முடியாமலிருக்கும். சட்டம், ஒழுங்குகளில் ஒருவர் இறுக்கமாக இருந்தால் அவரது இறுக்கம் இன்னதுதான் என்று குறிப்பாக சுட்டிக்காட்ட முடியுமாக இருப்பது போன்று இதனைக் குறிப்பாக சுட்டிக்காட்ட முடியாது. இந்தத் தலைவர்கள் தமது போக்கைத் தொடருவதற்கு அதுவும் வசதியாக இருந்து விடுகிறது.
4. இன்னும் சில தலைவர்கள் இருக்கிறார்கள். நிர்வாகக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கிவிட்டுஸ சில முக்கியமான சந்தர்ப்பங்களில் சமூகத்தின் முன்னால் தோன்றி விட்டுத் தனது வழமையான அலுவல்களில் ஈடுபட்டிருப் பார்கள். தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அதிக நேரத்தை இவர்கள் எடுத்துக் கொள்வதனால் பொது நிகழ்ச்சி நிரலை முன்னின்று வழிநடத்துவது இவர்களுக்கு சிரமமாக இருக்கும். இவர்களுள் நல்லவர்கள் தமது தனிப் பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக தமது தலைமைத்துவ செல்வாக்கைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பக்குவமில்லாதவர்கள் பொது நிகழ்ச்சி நிரலூடாக தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுக்கத் தவறுவதில்லை. அத்தகைய பக்குவமற்றவர்கள் சமூகத்தின் முன்னாலோ அல்லது சட்டத்தின் முன்னாலோ ஒரு நாள் விசாரிக்கப்படுவர்.
5. மற்றுமொரு வகையான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லத் தெரியுமே தவிர கேட்கத் தெரியாது. தாம் வழங்கும் தொழில் பதவிகள் மற்றும் ஊதியம், ஊதியத்துக்குப் புறம்பான கவனிப்புகள் என்பவற்றுக்கு அடிமைப்பட்ட கூட்டமொன்றையே அவர்கள் தம்மைச் சூழ வைத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் பேசினால் இவர்களது சிஷ்யர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். பதில் பேச மாட்டார்கள். அனைத்துக்கும் ஆமாம் சொல்வதுதான் அந்தக் கூட்டத்தின் கடமை. சொன்னதை சரி பிழை பார்க்காமல் அப்படியே செய்து விட்டு வருவார்கள். தலைவரின் பலவீனங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவற்றை அவர்கள் தமக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள். எனினும், சமூகத்தினுள் பிரவேசித்தால் தலைவரைக் கடவுள் அந்தஸ்துக்கே உயர்த்தி விடுவார்கள்.
இந்த நயவஞ்சகப் புகழ்ச்சி சமூகத்தின் ஒரு கலாசாரமாக மாறிப்போகின்றபோது சமூகம் பாதாளத்தை நோக்கிச் சரியும் வேகம் அதிகரிக்கிறது.
இத்தகைய தலைவர்களால்தான் பாதாளக் கோஷ்டிகள் உருவாகின்றன. இவர்கள் நல்லதையும் செய்வார்கள் கெட்டதையும் செய்வார்கள். எனினும் நல்லதைவிட கெட்டது நிச்சயம் குறைவாக இருக்க மாட்டாது.
6. தலைவர்களின் மற்றுமொரு வகையினரை “யாப்புத் தலைவர்கள்” எனலாம். இவர்கள் தங்களையும் தங்களது அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கென்றே யாப்பு தயாரித்தவர்கள். சட்ட யாப்புகளின் மூலம் சர்வ அதிகாரங்களையும் தமது கைக்குள் வைத்துக் கொள்வதில் இவர்கள் எல்லையில்லாத மகிழ்ச்சியடைகிறார்கள். மக்களின் நலனைப் பாதுகாக்கின்ற யாப்பைவிட தமது அதிகாரத்தைப் பாதுகாக்கின்ற யாப்பே இவர்களுக்கு முக்கியமானது.
இவர்களுள் சிலபோது நல்லவர்கள் வந்து விடுகிறார்கள். அப்போது அதிகாரங்கள் அனைத்தும் நன் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தீயவற்றை இல்லாமல் செய்வதும் அப்போது அவர்களுக்கு இலகுவாகி விடுகிறது. எனினும், நல்லவருக்கு அடுத்து வருகின்ற தலைவர் கெட்டவராக இருந்து விட்டாலோ நிலைமை தலைகீழாகி விடும். சிலபோது இருந்ததைவிட நிலைமை படுமோசமாகவும் மாறலாம். இன்றைய உலகில் இத்தகைய தலைவர்களுக்கு உதாரணங்கள் மலிந்திருக்கின்றன. சிலபோது யாப்புத் தலைவர்களில் பொம்மைத் தலைவர்களும் வருவதுண்டு. அதிகாரங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு உருப்படியாக எதனையும் செய்யாமல் சென்றுவிடுவார்கள் அவர்கள்.
7. சிம்மாசனத் தலைவர்கள் என்றும் மற்றும் ஒரு வகையினர் உலகில் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு காலத் தில் “யாப்புத் தலைவர்கள்” போன்று சகல அதிகாரங்களோடும் இருந்தவர்கள்தாம். எனினும், “முடிக்குரிய அரசர்” “முடிக்குரிய இளவரசர்” என்ற கௌரவ நாமங்களுடன் சிம்மாசனங்களை மட்டும் தமதாக்கிக் கொண்டு அதிகாரங்களின்றி அரச போகங்களை அனுபவித்து வாழ்கின்றவர்களாக இன்று அவர்கள் மாறியிருக்கின்றார்கள். இவர்களை மியூஸியத்தில் வைக்கப்பட்ட சர்வாதிகாரிகள் என்றுகூடக் கூறலாம். சர்வ அதிகாரங்களும் இல்லாமல் போனாலும் சர்வ சௌபாக்கியங்களும் அவர்களை விட்டுப் போகவில்லை. அவர்களில் சிலர் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதுமுண்டு அறிக்கைகள் மாநாடுகள் ஊடாகஸ
8. அடுத்து உண்மையான மக்கள் தலைவர்கள் பற்றிப் பேசலாம் போலிருக்கிறது. சிம்மாசனத் தலைவர்களுக்கிருப்பதை போல் நேரம் மேல் மிச்சமாக எஞ்சியிருக்கின்ற காரணத்தால் இவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு வரவில்லை. மாறாக, மக்கள் நலனை தங்களது உயிரோடு ஒட்டிய ஒரு பண்பாகக் கொண்ட தலைவர்கள் அவர்கள். இவர்களை சேவகர்கள் என்றும் கூறலாம். மக்கள் எங்கே துன்பப்படுகிறார்களோ அங்கே இவர்கள் இருப்பார்கள். மக்களின் பசி இவர்களது பசி மக்களின் துன்பம் இவர்களது துன்பம்.
இத்தகைய மக்கள் தலைவர்கள் உன்னதமானவர்கள். எனினும், ஒரு சின்ன சறுக்கல் இவர்களுக்கு நிகழலாம். இவர்கள் மக்கள் நலனில் கொண்ட அதீத அக்கறை, மக்களில் பிறிதொரு சாராரை அற்பமாகவும் இழிவாகவும் நோக்க வைத்து விடலாம். அதாவது, மக்கள் நலனில் அக்கறையில்லாத அவர்களை இவர்கள் நிராகரித்து விடலாம். அப்போது இவர்களது தொண்டும் பணியும் பாதிப்படையும் நிலை இவர்களாலேயே சிலபோது உருவாக்கப்பட்டு விடுகின்றது.
9. இன்னும் சில தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களோடு இருப்பது குறைவு அல்லது மக்கள் தலைவர்களது அளவுக்கு மக்களோடு இருப்பதில்லை. எனினும், உயர்ந்த உன்னதமான கொள்கைகளோடும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய சீரிய சிந்தனைகளோடுமிருப்பவர்கள். சமூகம் எத்தகைய அடிப்படைகளின் மீது இருக்க வேண்டும். சமூக அமைப்பு எத்தகைய கோட்பாடுகள் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பன குறித்து இவர்கள் அதிகம் கரிசனை கொண்டிருப்பார்கள். அது பற்றி அறிவூட்டவும் அழைப்பு விடுக்கவும் செய்வார்கள். இவர்களில் சமூக மாற்றத்துக்குத் தேவையான சிந்தனைகளோடு சீரிய செயற்திட்டமுடையோரும் இருப்பர். அவர்களால் சில வற்றை சமூகத் தளத்தில் முன்னெடுத்து வெற்றிபெற முடியும். இன்னும் சிலரோவெறும் கோட்பாடுகளோடு நின்று கொள்பவர்களாக இருப்பர். வெறும் கோட்பாடு களோடு இருப்பவர்கள் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்குமளவு செயல்பாட்டுக்கும் களநிலைவரங்களை மாற்றியமைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
10. இதற்கு நேர் எதிராக எந்தக் கொள்கைகளுமில்லாத, கோட்பாடுகளுமற்ற வேறொரு வகைத் தலைவர்கள் களத்தில் இருப்பதையும் நினைவுகூற வேண்டும். அவர்களது ஒரே கொள்கை அலைக்கு ஆட்படுவதாகும். சமூகம் எந்தக் கொள்கைக்குஸ எந்தப் போக்கிற்குஸ எந்தப் பழக்க வழக்கங்களுக்குஸ எந்த சம்பிரதாயங்களுக்குஸ ஆட்பட்டிருக்கிறதோ அந்த சமூக அலைக்கு இவர்களும் ஆட்படு வார்கள். சமூகத்தை தன் போக்கில் விட்டுத் தானும் தன் பின்னால் போவதுதான் இந்த தலைவர்களது பண்பும் கொள்கையுமாக இருக்கும். சமூகம் மாறினால் சிலபோது இவர்கள் மாறுவார்கள். சமூகத்தில் எந்தப் போக்கிற்கு அதிகம் செல்வாக்கு இருக்கிறதோ அந்தப் போக்கை இவர்கள் சரி காண்பார்கள். சமூகம் மாற்றம் காண வேண்டும் என்பதைவிட தங்களது இடம், செல்வாக்கு என்பன மாற்றம் காணாதிருக்க வேண்டும் என்பதில் இவர்கள் குறியாக இருப்பார்கள்.
11. இவர்கள் அனைவருக்கும் அப்பால் மற்றொரு வகைத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை “வெகுசனத் தலைவர்கள்” எனலாம். இவர்கள் அனைவரோடும் நெருங்கியிருப்பார்கள்ஸ அனைத்துத் தரப்பினருடனும் உறவைப் பேணுவார்கள்ஸ மக்கள் கூடும் இடங்களில் தாமும் இருந்து கலந்து சிறப்பித்துக் கொள்வார்கள். யாரையும் சார்ந்து, சேர்ந்து நடந்துகொள்ள மாட்டார்கள். அனைவருடனும் நல்லவர்களாக இருந்து கொள்ளவே முயற் சிப்பார்கள். எனவே, அனைவருடனும் நலம் என்பதைத் தவிர இவர்களிடம் வேறு ஒரு கொள்கை இருக்கமாட்டாது. அதனால் இவர்களை வெறும் மனிதர்கள் என்றுகூடச் சொல்லலாம். கண்டவர்கள், கதைப்பவர்களுடன் யார் யாருக்கு எது பொருத்தமோ அதனைக் கதைத்துவிட்டு செல்லும் சாணக்கியம் இவர்களிடம் இருக்கும். தங்களைப் பற்றிப் பிறர் தப்பெண்ணம் கொள்ளக் கூடாது என்பதில் இவர்கள் தீவிர கவனமுடையவர்கள். இவர்களால் சமூகத்திற்கு பயன்கள் கிட்டுவது குறைவாகவே இருக்கும். எனினும், ஒரு பயன் நிச்சயமாகக் கிட்டும். இவர்களால் சமூகத்திற்கு எந்த நெருக்கடியும் தொல்லையும் ஏற்பட மாட்டாது.
12. மற்றொரு வகையைச் சேர்ந்த வித்தியாசமான தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் எனலாம். அதாவது அனைத்தையும் எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்கள். இவர்களுக்கென்று ஒரு போக்கு இருக்குமானால் அது ஏனைய கட்சிகளையும் தலைவர்களையும் எதிர்த்துக் கொண்டிருப்பதுதான். இவர்கள் ஆளும் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தபோதிலும் பிறரை எதிர்த்துக் கொண்டிருப்பதுதான் இவர்களது வேலையாக இருக்கும். பிறர் நன்மைகள் செய்வதையும் எதிர்ப்பார்கள் தவறுகள் செய்தாலும் எதிர்ப்பார்கள். ஏனையோரைத் திருத்தும் நன்நோக்குகள் இவர்களிடம் குறைவாகவே இருக்கும். இவர்கள் சமூகத்தில் பிரபல்யம் பெறுவது இவர்களது எதிர்ப்புக் குணத்தினால்தான்.
இவ்வாறு இன்னும் வகை வகையான தலைவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள், இன்று மக்களைவிட தலைவர்கள் அதிகரித்துவிட்ட காலம். அதனால் அவர்களது வகையறாக்களை அளந்து முடிப்பது சிரமம்.
மேலே கூறப்பட்ட இயல்புகளைக் கொண்ட தலைவர்கள் அவர்களுக்கென்று சொல்லப்பட்ட பண்புகளோடு மாத்திரம் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. சிலபோது ஒரு வகையைச் சார்ந்த தலைவர்களிடம் மற்றொரு வகையைச் சார்ந்தவர்களின் பண்புகளும் சேர்ந்திருக்கலாம். உதாரணமாக: 3,4-ஆம் வகையைச் சேர்ந்த தலைவர்களின் குணங்கள் சிலபோது ஒரு தலைவரிடத்தில் இருக்க முடியும். அதேபோன்று இன்னும் சில வகையைச் சேர்ந்தவர்களிடம் மற்றுமொரு வகையைச் சேர்ந்த பண்புகள் இருப்பது சாத்தியமில்லை என்றும் கூறலாம். உதாரணமாக 11 ஆவது வகையைச் சேர்ந்த தலைவர்களிடம் 12 ஆவது வகையைச் சேர்ந்தவர்களின் பண்புகள் அறவே இருக்காது.
எனவே, தலைமைத்துவப் பண்புகளை இன்னாருக்கு இது எனப் பகிர்வது நூறு வீதம் பொருத்தத்திலல்ல. 8ஆம் 9ஆம் வகையைச் சேர்ந்த தலைமைத்துவப் பண்புகள் ஒன்றையொன்று வேண்டி நிற்கின்ற பண்புகளாகும். 8ஆம் வகைத் தலைவர்கள் 9ஆம் வகைப் பண்புகளைத் பெறுவதில் குறைவான அக்கறை கொண்டிருந்தாலும் 9ஆம் வகைத் தலைவர்கள் 8ஆம் வகைப் பண்புகளைப் பெறுவதில் தீவிர கவனமுடையவர்களாக இருப்பார்கள். 10ஆம் வகைத் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்களிடத்தில் எந்த உன்னதமான பண்புகளும் ஒட்டிக்கொள்ள மாட்டாது. அவர்களாக அவர்களது நலன் கருதி சில நல்ல பண்புகளைத் தம்மீது ஒட்டிக் கொண்டாலே தவிர.
இவ்வாறு தலைவர்களின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எப்போதும் ஒரு தலைவர் தன்னால் எது முடியும, எது முடியாது என்பதை தனக்குக் கீழ் இருப்பவர்களுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது அவரது பண்புகளை விளங்கிய நிலையில் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அவரோடிணைந்து பணியாற்றுவார்கள். அது சௌகரியங்களையும் குழப்பங்களையும் தவிர்க்க உதவுகின்றது. தலைவர்கள் தங்களைப் பற்றி தாமும் அறியாமல் பிறருக்கும் புரிய வைக்காமல் பயணிப்பது அவர்கள் எந்த எல்லைக்குள் தலைமைத்துவத்தை வழங்குகிறார்களோ அந்த எல்லைக்குள் சிலபோது பூகம்பத்தையும் குழப்பத்தையும் உருவாக்கலாம். அதனால் தலைவர்கள் மகிமை இழக்கிறார்கள். அவர்களை மக்கள் வெறுக்கவும் பழகி விடுகிறார்கள்.
தலைவர்கள் வரிசையில் எத்தனை தலைவர்கள் பற்றிப் பேசினாலும் நிறைவு காண முடியாது. ஒரு தலைவரைப் பற்றிப் பேசாவிட்டால், அவர்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் பாராட்டிய நீதியான தலைவர். இந்தத் தலைவரின் அந்தஸ்து பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன செய்தி அற்புதமானது. சொன்னார்கள்ஸ
“நிழலே இல்லாத மஹ்ஷர் பெரு வெளியில் ஏழு வகையான மனிதர்களை அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் அமர வைப்பான். அவர்களுள் முதலாமவர்தான் நீதியான தலைவர்.”
13. நீதியான தலைவர்:
நீதியான தலைவர் பற்றி விளக்குவதற்கு ஒரு வசனம் போதுமானது என்று கருதுகின்றேன். நீதியான தலைவர் ஒவ்வொன்றையும் அதற்குரிய இடத்தில் வைப்பார் என்பதே அந்த விளக்கமாகும். காரணம், அநீதிக்கு இஸ்லாம் கூறும் விளக்கம் இதற்கு நேர் எதிரானது. ஒவ்வொன்றையும் இடம் மாற்றி வைப்பதே அநீதி.
இவ்வாறு சொல்லும்போது ஒவ்வொன்றுக்குமுரிய இடத்தைத் தீர்மானிப்பவர் யார் என்ற கேள்வி பிறக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தனது ஆசாபாசங்களுக்கேற்ப, விருப்பு வெறுப்புகளுக்கேற்ப ஒவ்வொருவருக்குமான இடத்தைத் தீர்மானித்தால் அநீதி அதன் உச்ச கட்டத்திற்குச் சென்று விடும். அதனை அவர் நீதி என்று பறைசாற்றுவார். சமூகம் அநீதிகளின் பிடிக்குள் இறுகிக் கொண்டே போகும். இதுதான் இன்றைய உலகின் காட்சியாகும்.
எனவே, ஒவ்வொன்றுக்குமுரிய இடத்தைத் தீர்மானிக்கும் வேலையை மனிதன் செய்யக்கூடாது. அவ்வாறு செய்பவர்களுக்கு அல்லாஹ் கடும் எச்சரிக்கை விடுக்கின்றான்.
“அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் கடும் வேதனையை சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.” (அல்குர்ஆன் 6: 31)
எனவே, இடம் தீர்மானிக்கும் பொறுப்பை அல்லாஹ்வுக்கு விட்டுவிட வேண்டும். அவனது வழிகாட்டலுக்கேற்ப தலைவர்கள் ஒவ்வொன்றையும் தனது இடத்தில் வைத் துப் பராமரிக்க வேண்டும். அப்போது ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்துத் தலைவர்களிடமும் உள்ள நல்ல பண்புகள் ஒன்றுசேர்ந்து அவர்களிடம் குடிகொண்டு விடும். அனைத்து மோசமான பண்புகளும் அவர்களைவிட்டு அகன்று போய்விடும். உன்னதமான தலைமைத்துவப் பண்புகள் பெயர்களிலும் பட்டங்களிலும், பதவிகளிலும் அந்தஸ்துகளிலும், பரிவாரங்களிலும் ஆடை அலங்காரங்களிலும் பிரதிபலிப்பவை அல்ல, விவகாரங்களைக் கையாண்டு சமூகத்தை குழப்பங்கள், மயக்கங்கள், தெளிவின்மைகள், சந்தேகங்கள், பித்தலாட்டங்கள் இல்லாத பிரகாசமான பாதையில் வழிநடத்திச் செல்லும்போதே உன்னதமான தலைமைத்துவப் பண்புகள் பிரகாசிக்கின்றன. அப்போது அந்தப் பண்புகளைப் பலரும் பின்பற்றுவார்கள் போற்றுவார்கள்.
பேரருளாக நினைவுகூறப்படும் தலைவர்…
அல்லாஹ்வின் தூதர் பாராட்டிய நீதியான தலைவருக்கு, பளிச்சென்று படுகின்ற முதல் உதாரணம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே! நீதியைப் பற்றிப் பேசினால் அங்கு உமர் பிரசன்னமாகி விடுவார். காரணம், அவர் நீதியை மறக்கவில்லை, நீதி அவரை மறக்கவில்லை. நபி லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை விட நீதியில் உன்னதமானவர் உமர் அல்லர் என்றாலும், நபி அந்தஸ்து இல்லாத நிலையில் நீதியோடு வாழ்ந்த மகத்துவம் அன்னாருக்கு இருக்கிறது. இன்றைய தலைவர்களும் நபி அந்தஸ்து இல்லாதவர்கள் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். மக்களும் அவர்களுக்கு நபி அந்தஸ்தைக் கொடுக்காதிருக்க வேண்டும். தலைவர்களுக்கு நபி அந்தஸ்தையல்ல கடவுள் அந்தஸ்தைக் கொடுக்கின்ற காலம் இது.
நீதியான தலைவர் அதிகாரத்தை உரிய இடத்தில் வைத்துப் பயன்படுத்துவார். தனது நலனுக்காக அதனைப் பயன்படுத்தமாட்டார். சமூகத்தை உரிய இடத்தில் வைத்து தன் தேவைகளை நிறைவு செய்வார்.
தனது ஆர்வத்துக்கும் ஈடுபாட்டுக்கும் பொருத்தமான பணிகளைச் செய்து விட்டு சமூகத்தை தன் போக்கில் விடமாட்டார். மனிதர்களை உரிய இடத்தில் வைத்து அவர்களால் நடக்க வேண்டிய பணிகளுக்கு ஊக்கமளிப்பார். ஒவ்வொரு நிபுணரும் செய்ய முடியுமான பங்களிப்பை சமூகத்துக்கு அவரவர் மூலம் பெற்றுக் கொடுப்பார். அத்தகைய பங்களிப்புகளில் தனது மூக்கை நுழைத்து நிபுணர்களுக்குத் தொல்லையாக இருக்கமாட்டார். அவர்கள் இஸ்லாமிய வரையறைகளுக்குள் இருந்து கொள்வதை மட்டும் அவர் உறுதி செய்து கொள்வார். அவர்கள் பிழை செய்தாலும் மன்னித்து உற்சாகமூட்டுவார். அவர்களால் சமூகம் பாதிப்படைந்தால் அவர்களை குறித்த பொறுப்புகளிலிருந்து நீக்குவது பற்றி கலந்தாலோசிப்பார்.
இந்த வகையில் அனைத்துத் துறைகளிலும் நிபுணர்களின் பங்களிப்பைப் பெற்ற சமூகமாக அந்தத் தலைவரின் சமூகம் காணப்படும்.
சட்டத்தையும் கூட அதற்குரிய இடத்தில் வைத்துப் பயன்படுத்துவதே நீதியான தலைவரின் பண்பாக இருக்கும். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது காலத்தில் நடை பெற்ற எத்தனையோ சம்பவங்கள் இதற்கு சான்றுகளாக இருக்கின்றன.
ஒரு முறை ஓர் ஒட்டகத்தைக் களவெடுத்து அறுத்து உண்டவர்களின் பிரச்சினை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தது. அறுத்துண்டவர்களின் எஜமானர்களுக்கு ஒட்டகத்திற்கான நஷ்ட ஈட்ட வழங்குமாறும் மீண்டும் அவர்கள் களவெடுத்தால் எஜமானர்களின் கைகளை வெட்டுவதெனவும் எச்சரித்தார். தங்களது வேலையாட்களைப் பசியில் போட்டதால் களவெடுத்தவர்களுக்கெதிராக சட்டத்தைப் பயன்படுத்தாமல் களவெடுக்கத் தூண்டிய எஜமானர்களுக்கெதிராகவே அதனைப் பயன்படுத்தினார். அல்லாஹ் களவு எடுத்தவர்களின் கையை வெட்டச் சொன்னான். எனவே, எது நடந்தாலும் சரி களவு எடுத்தவர்களது கைகளையே வெட்டுவேன் என்று சட்டத்தை இடம்மாற்றி வைக்கவில்லை அந்த உமர்.
சட்டத்தை உரிய இடத்தில் வைத்த இவ்வாறான எண்ணற்ற சம்பவங்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்புக்களில் காணப்படுகின்றன. தனால் உமரின் பிக்ஹு (ஃபிக்ஹு உமர்) என்றொரு தனிப் பாடம் இஸ்லாமிய சட்டத்துறையில் பிரகாசிக்கின்றது.
அனைத்தையும் அதற்குரிய இடத்தில் வைக்கும்போது உலகம் தாளாத மகிழ்ச்சியிலும் தன்னிகரில்லாத அமைதியிலும் மூழ்கித் திளைக்கிறது. அத்தகைய சூழ்நிலையைத் தோற்றுவித்த தலைவருக்கு மறுமையில் அளவிலா மகிழ்ச்சியை அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் ஏன் வழங்க மாட்டான்!
தலைவர்கள் பாரபட்சமில்லாமல் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் அதற்குரிய இடத்தில் வைக்கும் நீதியான தலைவரின் மகிமை என்னவென்றால்ஸ அவரால் முழு சமூகத்தையும் ஒன்றிணைத்துப் பயன்படுத்தி வெற்றிகாண முடியும். அவர் தனது திட்டங்களை செயல்படுத்துவதற்கு தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் நம்பியிருக்க வேண்டியதில்லை. காரணம், அவர் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் உரிய இடத்தில் வைப்பதால் எல்லோரும் தமது இடத்தை அவரிடம் பெற்றுக் கொள்வார்கள் ஒத்துழைத்துக் கருமமாற்றுவார்கள்.
இத்தகைய தலைவர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்கள். மக்களிடமும் உன்னதமான அந்தஸ்தைப் பெறுபவர்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவான். அவர்கள் என்றும் அல்லாஹ்வின் ஒரு பேரருளாக நினைவுகூறப்படுவார்கள்.
source: http://usthazhajjulakbar.org