முஸ்லிம் சமூகத்தின் ஆடுகளம் எது? அது தற்போது எங்கே ஆடிக் கொண்டிருக்கிறது?
உணர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் தொடராகத் தந்து கொண்டிருந்த போட்டி நிகழ்வுகள் வெற்றிக் கோப்பையை ஒரு குழுவின் கைக்கு வழங்கி மறுகுழுவின் கண்ணீரோடு முடிவடைகின்றன.
தஃவாக்களமும் ஒரு ஆடுகளம் தான். இந்த அடுகளம் பற்றி அல்லாஹ்;
“…மாறாக நாம் சத்தியத்தை அசத்தியத்தின் மீது விட்டெறிகிறோம். அது அசத்தியத்தின் மூளையைத் தகர்க்கிறது. அப்போது அசத்தியம் அழிந்து போகிறது.” 21:18 என்று கூறுகிறான்
இங்கும் இரு போட்டிக் குழுக்கள் மோதுகின்றன. எனினும் ஆடுகளத்தில் பந்து இல்லை. ஆடுகளத்தில் சத்தியம் எஞ்சுவதா? அசத்தியம் மிஞ்சுவதா? என்பதே ஆட்டத்தின் இறுதியில் எதிர்பார்க்கபடும் முடிவு?
இந்த ஆடுகளம் சற்று விசித்திரமானது. அது என்ன விசித்திரம் தெரியுமா? இந்த ஆடுகளத்தில் இரு போட்டிக் குழுக்களும் சம எண்ணிக்கையில் சம பலத்தில் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. அது மட்டுமல்ல. ஆடுகளத்தில் (உலகில்)அசத்தியத்தைத் தக்கவைப்பதற்காக போட்டியிடுவோருக்கு சட்டங்கள் விதிகள் என்று எதுவும் இல்லை. அவர்கள் நினைத்தாவறு ஆடலாம். ஒரே ஒரு தகைமை மட்டும் அந்தக் குழுவிடமிருந்தால் போதுமானது. அது தான் “பலம்” ஆட்சிப் பலம்,அதிகாரப் பலம், பண பலம், இராணுவப் பலம் என “பலம்” அவர்களது கைகளில் ஒன்று சேர்ந்தால் போதுமானது.
சட்டத்தை அவர்கள் தங்களது கைகளில் ஒன்று சேர்ந்தால் போதுமானது. சட்டத்தை அவர்கள் தங்களது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். அல்லது அவர்கள் எப்படி ஆடுகிறார்களோ அதை சட்டமாகவும் கொள்ளலாம். அல்லது சட்டத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டும் அவர்கள் ஆடு களத்தை நிர்வகிக்களாம்.
இது இந்த ஆடு களத்தின் ஒரு குழுவினது நிலை. ஆடு களத்தின் அடுத்த குழுவோ முற்றிலும் வேறுப்பட்டது. அது சத்தியத்தை, உண்மையை ஆடுகளத்தில் தக்க வைப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் போட்டியிடும் குழுவாகும். இந்தக் குழுவுக்கு கண்டிப்பான சட்டங்கள் இருக்கின்றன. இந்தக் குழு சத்தியத்தை வாழ வைக்கப் போராடினாலும் சட்டம் வரம்புகளுக்குள்ளிருந்தே போராட வோண்டும். சட்டங்களை மீற முடியாது. இந்தக் குழுவின் ஆட்டத்தில் வெற்றி இலக்கு எத்துனை முக்கியம் வாய்ந்ததோ அதேயளவு குறைவில்லாத முக்கியத்துவம் சட்ட வரம்புகளைப் பெறுவதற்குமுண்டு.
இப்படிச் சொன்னால் நீங்கள் என்னை ஆச்சரியக் குறியோடு பார்ப்பீர்கள். என்னை நோக்கி அலட்சியமாக ஒரு கேள்வி கேட்பீர்கள்.
இந்த ஆடுகளத்தல் சத்தியத்தின் சார்பாகப் போட்டியிட யார் தான் முன்வருவார்கள்?!! ஆடுகளத்தில் இரு குழுக்களிடையேயும் சம பலம் வேறு அவசியமில்லை என்கிறீர்கள்!! எல்லோரும் சென்று அசத்திய அணியிலல்லவா சேர்ந்து கொள்ளப் போகிறார்கள்! சத்தியத்தின் சார்பாக களமிறங்கியிருப்போர் போராடுவார்களா?!! அல்லது செத்து மடிவார்களா?!!! இவர்கள் எதற்காக இந்தப் போட்டியில் பங்கு பற்ற வேண்டும்?! இதனை விட போட்டியே வேண்டாம் என்று விட்டால் இருந்துவிட்டுப் போகலாமே? என்ன அதிசயமான போட்டி ஐயா இது?
சட்டப் பிரச்சினை வந்தால் அசத்தியம் சார்பாகப் போட்டியிடுவோர் தீர்ப்பை அவர்களே வழங்கிக் கொள்வார்களாம்!!! சட்டம் அவர்கள் நினைத்ததாம்!!! சத்தியம் சார்பாகப் போட்டியிடுவோர் சட்டத்தை மீற முடியாதாம்!!! இந்தப் போட்டியில் பங்குபற்ற இறுதியில் ஒரு அணி தான் மிஞ்சும். அவர்கள் போட்டியில்லாமலே வெற்றிவாகை சூடுவார்கள். இப்பிடியும் ஒரு போட்டி தேவை தானா?!!
ஆம். இந்தப் போட்டியின் உள்ளரங்கம் தெரியாதவர்களுக்கு இது ஒரு அதிசயமான போட்டிதான். அவர்கள் இந்தப் போட்டிக்கு வராமல் இருப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணம். ஆடு களத்தை அவர்கள் முற்றாக அசத்திய அணியினர் வசம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருப்பதற்கு மேற்கூறப்பட்ட போட்டி விதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். போட்டியில் சத்தியத்திற்கு சார்பாக களமிறங்கியவர்கள் சொற்ப தொகையினராக இருப்பதும், எதிரணியை ஆடு களத்தில் எதிர் கொள்ள முடியாமல் அவர்கள் தத்தளிப்பதும், அவர்கள் பலம் குன்றியவர்களாக இருக்கின்ற காரணத்தால் சாதிக்க முடியாமலிப்பதும், இத்தகையவர்களின் அவநம்பிக்கைகளை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.
இருப்பினும் இந்தப் போட்டியின் இறுதி முடிவு தெரிந்தவர்கள் அவநம்பிக்கையடைய மாட்டார்கள். ஆடு களத்தின் வெற்றி தோல்விகளை மேலோட்டமாக அளந்துபார்க்க முடியுமானவர்கள் தான் அவநம்பிக்கையால் பிடிக்கப்படுகிறார்களே தவிர முழுப் போட்டியினதும் இறுதி வெற்றியை அறிந்தவர்கள் ஒரு போதும் இந்தப் போட்டியில் களமிறங்க அஞ்சுவதில்லை. அசத்தியம் சார்பாகப் போட்டியிடுவோர் எத்துனை பலம் கொண்டவர்களாக இருந்த போதிலும் அந்தப் பலங்களையெல்லாம் மிகைத்த ஒரு நம்பிக்கைப் பலத்தோடு இவர்கள் களமிறங்குகிறார்கள்.
அது என்ன நம்பிக்கை?!
வேறு ஒன்றுமல்ல, வெற்றி பற்றிய நம்பிக்கையே அது. இரண்டு வெற்றிகள் இந்த ஆடுகளத்தில் சத்தியம் சார்பாகப் போட்டியிடுவோருக்காகக் காத்திருக்கின்றன. அவை இரண்டுமோ அல்லது குறைந்த பட்சம் ஒன்றோ அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கத் தான் போகின்றன.
அதே நேரம் அசத்தியம் சார்பாக போட்டியிடுவோருக்கு இரண்டு தோல்விகள் அல்லது ஒரு தற்காலிக வெற்றியும் ஒரு இறுதி (நிரந்தர)த் தோல்வியும் காத்திருக்கின்றது.
அதிசமயாக இருக்கின்றதா? உண்மை தான் இந்த ஆடுகளத்தில் அனைத்துமே அதிசயமே. வாருங்கள் அந்த அதிசயத்தையும் ஒருக்கால் பார்த்திடுவோம்.
சத்தியம் சார்பாகப் போட்டியிடுபவர்கள் கண்டிப்பாக சட்ட வரம்புக்குள்ளிருந்துதான் போராட வேண்டும் என்ற விதி உண்டல்லவா? அந்த விதியை கௌரவிப்போருக்கும் பேணுவோருக்கும் ஒரு வெற்றியும் பரிசும் உண்டு. அவர்கள் ஆடு களத்தில் வெளிப்பார்வைக்குத் தோல்வியடைந்தாலும் சரியே. அசத்திய அணியின் அராஜகத்தால் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட தோல்வியொன்றை அவர்கள் தழுவ நேர்ந்தாலும் அதிசயமாக ஒரு வெற்றியை அவர்கள் தமதாக்கிக் கொள்கிறார்கள்.
அதாவது எந்த சத்தியம் ஆடுகளத்தில் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் போராடினார்களோ அந்த சத்தியத்தின் சட்ட வரம்புகளை பண்பாடுகளை, உயர் விழுமியங்களை கௌரவித்துப் போற்றிப் பேணிப் பாதுகாத்து தங்களது இதயங்களில் அவற்றை அவர்கள் தக்க வைத்துக் கொண்டார்கள். சுமந்து கொண்டார்கள், ஆடுகளத்தில் தங்கவைக்க முடியாது போன சத்தியம் அவர்களது இதய கலங்களில் வெற்றி பெற்றுவிட்டது. இந்த வெற்றிக்கான பரிசே சுவனமாகும்.
இது ஒஒரு வெற்றியும் அதற்கான பரிசுமாகும். “தோல்வியிலும் கண்ட வெற்றி” என இதைக் குறிப்பிட்டால் அது மிகையல்ல.
இரண்டாவது வெற்றி ஆடு களத்தையும் வெற்றிகொள்வதாகும். அதாவது ஆடு களத்திலிருந்து (உலகிலிருந்து) அசத்தியங்கள், அநீதிகள், அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புகள், அத்து மீறல்கள், பாவங்கள், பீடைகள், நோய் நொடிகள், வறுமைகள், அவநம்பிக்கைகள், விரக்திகள் அத்தனையையும் துடைத்தெரிந்து சத்தியம் அதன் அளைத்து நன்மைகளையும் அள்ளிச் சொரியும் இடமாக ஆடுகளத்தை மாற்றுவதாகும். இதனையே 21ம் அத்தியாயத்தின் 18 வது வசனம் சத்தியம் அசத்தியத்தின் மூளையைச் சிதறச் செய்யும் அப்போது அசத்தியம் அழிந்து விடும் என்கிறது.
சத்தியம் தானாக அசத்தியத்தை வீழ்த்தாது. ஆடு களத்தில் சத்தியத்தை அசத்தியத்தின் மீது வீசுபவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் ஆடித்தான் இந்தப் போட்டி வெற்றிபெறவேண்டும். தான் ஆடாமல் (தனது நாவின்) தசை ஆடி (துஆ செய்வதன் மூலம்) மட்டும் பெறப்படுகின்ற வெற்றியல்ல இது. இறுதித்தூதரின் வெற்றிகளும் அவ்வாறு ஈட்டப்பட்டவைகளல்ல. மாநபியின் முன்மாதிரி அவ்வாறானதொரு வரலாற்றுப் பாடத்தை எமக்குக் கற்றுத்தரவுமில்லை.
ஆக, சத்தியத்தின் சார்பாகப் பெறப்படுகின்ற வெற்றிகள் இரண்டு, அந்த இரண்டு வெற்றிகளும் ஈட்டப்படுவதற்கு ஆடுகளம் இன்றியமையாததாகும். களமிறங்கி ஆட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தான் இந்த வெற்றிகள் கிடைக்கப் போகின்றன. வெற்றிகளுள் ஒன்று களத்தை அசத்தியத்திலிருந்து பாதுகாப்பதாகும். வெற்றிகளுள் மற்றையது ஆடும் போது சத்திய நெறிமுறைகளுகக்கும், விதிகளுக்கு, சட்ட வரம்புகளுக்கும் ஆடுபவர்கள் கட்டுப்படுவதாகும். இந்த இரண்டாவது வெற்றிக்கே சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.
அசத்தியத்தின் சார்பாக ஆடுபவர்கள், சத்தியத்தையும் அதன் நெறிமுறைகளையும், பண்பாடுகளையும், ஒழுக்கங்களையும் களத்திலிருந்து இல்லாமல் ஆக்குகிறார்கள். தங்களது இதயத்திலிருந்தும் அவற்றை இல்லாமல் செய்கிறார்கள். ஆக இரண்டுமே அவர்களுக்குத் தோல்விதான். களத்தை சிறுது காலம் தங்கள கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், வெற்றிக் களிப்பில் மிதப்பதற்குமான ஒரு அவகாசத்தை அவர்கள் பெற்ற போதிலும் யதார்த்தத்தில் அவர்கள் அடைந்திருப்பது தோல்வியே.
மேற்கின் அக்திரமக்கார ஸியோனிஸ சக்திகள் முதல் சத்தியத்தை புதைக்க விரும்பும் அனைத்து ஆடுகள சக்திகள் வரை இந்தத் தோல்கள் நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன. எனினும், அந்தத் தோல்விகள் அவர்களுக்குத் தற்செயலாக வருவதில்லை. அவர்களை எதிர்த்தாடும் அணியொன்றினால் தான் அல்லாஹ் அவர்களுக்குத் தோல்வியைக் கொடுக்கிறான்.
இந்த இரு அணிகளும் வெற்றி இலக்குகளை அடைவதற்கு முன்னால் அல்லது தோல்வியைத் தழுவுவதற்கு முன்னால் ஆடு களத்தில் சந்தித்தேயாக வேண்டும். பரபரப்பான நிகழ்வுகள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், மெய்சிலிர்க்கும் களப் பொழுதுகள், சோகமான கட்டங்கள், எதிர்பாராத அழிவுகள், அதிசயமான திருப்பங்கள், தவிர்க்க முடியாத நட்டங்கள், ஆறுதல் தரும் உடன்பாடுகள், பலவந்தமான திணிப்புகள், பாரபட்சமான அனுகுமுறைகள், கரடுமுரடனான ஏற்றங்கள், நம்பிக்கைதரும் இறக்கங்கள் போன்ற அனைத்தையும் ஆடுகளத்தில் சந்தித்த பின்னரே அல்லாஹ் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பான். ஆடுகளமும், நிகழ்வுகளும் இல்லாமல் வெற்றிகள் இல்லை. உலகின் வெற்றியும் இல்லை. சுவனமும் இல்லை.
இன்றைய ஆடுகளம் ஒரு குறுகிய பிரதேசத்தினுள் சுருங்கியதல்ல. சர்வதேசமும், சர்வதேச சக்திகளும் தான் இன்றைய ஆடுகளத்தில் மோதுகின்றன. இந்த ஆடுகள சக்திகளின் வெற்றி தோல்விகள் உலகம் முழுவதிலும் தாக்கம் செலுத்துகின்றன. நாளை மலரப் போகும் உலகின் விடியல் இந்த சக்திகளின் வெற்றி தோல்விகளில் தங்கியிருக்கின்றன.
இத்தகைய ஆடு களத்தில், சத்தியத்தின் சார்பாக உலக அசத்திய சக்திகளின் ஊடுருவல்கள் தடுத்து நிறுத்துவதற்கும் அவற்றின் தீய நோக்கங்களை முறியடிப்பதற்கும், முஸ்லிம் சமூகம் களமிறங்க வேண்டும். களமிறங்குவதற்குத் தம்மைத் தயார் படுத்த வேண்டும். நவீன உலகின் தகுதிகளுக்கும், தராதரங்களுக்குமேற்ப இத்தயார்படுத்தல்கள் உயர் ராகத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும். ஆய்வும், திட்டமிடலும், நவீன நுட்பங்களும் வழிமுறைகளும் இத்தயார் படுத்தல்களில் நேர்ந்துக் கொள்ளப்படுதல் வேண்டும். விடிந்தெழுந்தவுடன் காலடியில் கானும் பிரச்சினைகளுக்காகவன்றி மனித சமூகத்தின் நல்லதொரு நாளைய விடிவுக்கான தூரநோக்கு இத்தயார் படுத்தல்களில் தாக்கம் செலுத்த வேண்டும். குறுகிய இள நலன்களை விடுத்து பரந்த தேச நலன் இத்தயார் படுத்தலின் பின்புலமாக அமைதல் வேண்டும்.
இன்றைய ஆடுகளத்துக்காக இவ்வாறான ஒரு தயார் படுத்தல் செய்வதை விடுத்து எமது சமூகம் வேறு ஒரு களத்தில் சத்தியம் எப்பக்கம் இருக்கிறது? அசத்தியம் எப்பக்கம் இருக்கிறது என்றொரு வினா எழுப்பினால் ஒவ்வொரு சாராரும் அது எங்கள் பக்கமே இருக்கிறது என்று கூறுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இந்த ஆடுகளத்தில் அதன் மீது எதை விட்டெறிகிறார்கள்? எனப் புருவத்தை உயர்த்தினால் சிலபோது சத்தியத்தின் மீதே சத்தியத்தை விட்டெறிகிறார்கள். சத்தியம் உடைந்து சிதறுகின்றது. ஒரு சில அசத்தியங்கள் உட்படஸ என்ற காட்சியைக் காணமுடியுமாக உள்ளது. இந்தக் கள ஆட்டத்திற்கான சட்டங்கள் நெறிமுறைகள் எவை? வேறுமுண்டா? என்று பார்த்தால் மொத்தத்தில் இஸ்லாத்தின் உயர் நெறிமுறைகள், ஒழுக்கங்கள், பண்பாடுகள் அனைத்தையும் தங்களது இதயங்களிலும் நடை முறைகளிலும் மரணிக்கச் செய்துவிட்டு களத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு முயற்சிப்போர் அனைவருக்கும் தோல்வி தான். அவர்களது நாவுகள் உத்தமர்களை நாகரீகத்துக்காகப் பேசிக் கொண்டிருந்த போதிலும் சரியே. என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
ஆடு களத்தையும் மாற்றி, எதிர்த்தாடும் அணியையும் மாற்றி, ஆடு பொருளையும் மாற்றி விளையாடிக் கொண்டிருக்கும் இந்த ஆட்டம் யாருக்காக? எதற்காக? எதனை சாதிப்பதற்காக?
நாளுக்கு நாள் சமுகத்தின் நிலை பரிதாபமாகிக் கொண்டே செல்கிறது. எமது சமூகத்திலும் அதிகமானோர் இந்த ஆட்டத்தில் அக்கறையற்று களத்தின் பக்கமே பார்க்காமல் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள். ஆடுபவர்கள் கைதட்டுவதற்கும் ஆளின்றி வறுமைப்பட்டிருக்கிறார்கள். சமூகமோ நன்மைகள் குறைந்து வெறுமையாகிக் கொண்டிருக்கிறதுஸ ஆட்டம் எதற்கு??
-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org