மாற்றத்தின் ஊற்றாக திகழ்ந்த இறை இல்லங்கள்
இன்று அநேக முஸ்லிம்கள் மஸ்ஜித் என்றால் அது தொழும் இடம். அதில் உலக விஷயங்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்தல், அரசியல் போன்ற விஷயங்களை பற்றி பேசக்கூடாது என்று பலரை தடுக்கின்றனர்.
மஸ்ஜித் என்ற அரபு வார்த்தை சுஜூது என்ற மூல வார்த்தையில் இருந்து வந்தது. அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்யும் இடம் என்ற பொருளை தரும். இஸ்லாமிய சட்டங்களை பிரகடணம் படுத்தவும், முஸ்லிம்களின் உள்பிரச்சனை வெளிப்பிரச்சனைக்கான தீர்வை தரவும், முஸ்லிம்களின் சகோதரத்துவ உணர்வை பலப்படுத்தக்கூடிய இடமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜித்தை நிர்மாணம் செய்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது மதினாவின் எல்லையை அடைந்த உடன் முதல் வேலையாக மஸ்ஜித் கூஃபாவை கட்டினார்கள். அங்கு முஸ்லிம்களை சங்கமிக்க செய்தார்கள்.
அதைப்போல் மதினாவை அடைந்தவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவில் தங்களுடைய ஒட்டகம் மண்டியிட்ட இடத்தை தான் பள்ளிக் கட்ட முடிவு செய்தார்கள்.
இந்த பள்ளி கட்டும் இடம் இரண்டு அனாதைகளின் இடம். ஆகையால் அவர்களிடம் உரிய விலையை கொடுத்து விட்டு வாங்கினார்கள். பின் அந்த இடத்தில் உள்ள இணைவைப்பாளர்களின் கப்ருகளும், சிதைந்த கட்டிடங்களும், பேரித்த மரங்களும், கற்களும் இருந்தது. அந்த இணைவைப்பாளர்களின் கப்ருக்களை தோண்டி வேறு இடத்தில் புதைத்தனர். மரங்களை வெட்டி கிப்லாவின் திசையில் நட்டனர். அப்பொழுது கிப்லா பைத்துல் முகத்தஸ் ஆகும். பள்ளியின் ஓரங்களில் உள்ள கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.
பள்ளி வாசல் கட்டும் பணியில் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் நின்று கட்டியது, இப்பணியில் அவர்களும் கற்களையும், மரங்களையும் தூக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மஸ்ஜிதுந்நபவி (நபியவர்கள் கட்டிய பள்ளி வாசல்) என்று சிறப்பித்து சொல்லப்படும்.
முஸ்லிம்கள் தொழும் இடமாகவும், பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நீதிமன்றமாகவும், போர்களுக்கு இராணுவப்படையை அனுப்பும் இராணுவத் தளமாகவும், முஸ்லிகளுக்கு மார்க்க கல்வியை பயிற்றுவிக்கும் கல்விச் சாலையாகவும், இஸ்லாத்தை பற்றி மற்ற சமூகத்தாருக்கு எடுத்து சொல்லும் அழைப்பு பணியின் உரைவிடமாகவும் திகழ்ந்தது. மொத்ததில் அனைத்து முஸ்லிம்களின் செயல்பாடுகளை நிர்ணயக்கின் இடமாக திகழ்ந்தது மஸ்ஜித்கள்.
அந்த மஸ்ஜித் அந்நபவியில் தொழுவது அதிக நன்மையை தரும்.
“மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளிகளை தவிர வேறு எந்த பள்ளிகளிலும் அதிகம் நன்மை தரும் என்று பயணம் செய்யாதீர்கள்” என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் (ஆதாரம் நூல்: புகாரி 1189)
பள்ளிவாசல்கள் அனைத்து முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இதில் ஒரு குறிப்பிட்ட ஊர்மக்கள் மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட ஜமாத் மட்டும் தான் தொழவேண்டும் என்று சொல்லவும் அல்லது யாரையும் தடுக்கவும்யாருக்கும் உரிமையில்லை.
”அல்லாஹ்வுடைய மஸ்ஜித்களில் அல்லாஹ்வின் பெயரை கொண்டு துதிசெய்வதை தடுத்து, அதை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்?” (அல்குர்ஆன் 2:114)
இதன் காரணமாகத் தான் உலகில் நாம் எங்கு சென்றாலும் அந்த ஊரில் முதல் பள்ளிவாசல் உள்ளதா என்று பார்ப்போம். அதை தேடிக்கண்டுப்பிடிக்க நாம் முயல்வோம். நமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் உள்ள பள்ளிவாசலில் நுழையும் போதும், நம் சொந்த வீட்டில் நுழையும் உணர்வு இருக்கும். அங்கு நாம் தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறோம்.
ஆகையால் தற்போதைய பள்ளி வாசல்கள் வணங்குதற்குரிய இல்லமாக மட்டுமில்லாமல், நபிகளாரின் வழிதனில், மாற்றத்தை கட்டியமைக்கும் இடமாகவும் மாறவேண்டும்.
– ஆரூர்.யூசுப்தீன்
source: http://www.thoothuonline.com/archives/66532#sthash.YpoyDDqX.dpuf