Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

Posted on June 4, 2014 by admin

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

[ சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா – ரஹீமா சொல்வதை சற்று கேளுங்கள்….

“இன்று விஞ்ஞானம் உண்மைப் படுத்தியுள்ள பல விஷயங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆனில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். உலகம் படைக்கபட்டது எவ்வாறு? போன்ற செய்திகளை குர்ஆனில் படிக்கும் போது ஆச்சரியமடைந்தேன். குர்ஆனைப் படித்த பின்னர் நான் இத்தனை நாள் இந்த மார்க்கத்தை விட்டு ஏன் விலகி நின்றேன்? என்ற கேள்வி என்னுள் எழுவதை தவிர்க்க முடியாமல் உள்ளது”.

ஆனால் இங்கு நம்மில் பலரது நிலை என்னவாக இருக்கிறது…?!

சிந்திக்காத காரணத்தால், குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள்.

இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான்.

மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பதே.]

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்.

குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள்.

இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம். அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும்.

சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது.

இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள்.

இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான்.

குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள் 1.

(நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29)குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.ஹஸனுல் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)

இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)

ஷஃகானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

5. என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)

இப்னு கதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.இப்னுல் கைய்யிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும்.

நபி மொழிகள்

1. அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது, இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது, இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள், அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபிமொழியில், குர்ஆனை, விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத்இதோ நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

2. நான் ஒரு நாள் இரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள்.

‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள்.

அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது. (அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

மேற்கண்ட நபிமொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும்போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள், நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம்.

கருத்துணர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும்.

3. மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, தாரமி)

மேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

source: http://muhasabanet.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

27 − 26 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb