இஸ்லாத்தை தழுவிய பிரபல நடிகை மோனிகா – ரஹீமா
”குர்ஆன் என்னை மாற்றியது, ஹிஜாப் என்னை பாதுகாத்தது” – இஸ்லாத்தை தழுவிய பிரபல நடிகை மோனிகா – ரஹீமா.
தமிழ்நாட்டின் பிரபல நடிகையான மோனிகா புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த மோனிகா, சுமார் 70 படங்களில் கதாநாயகி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது எம்.ஜி ரஹீமா (மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா) என்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
2010 ம் ஆண்டே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட மோனிகா, அதனை பகிரங்கப்படுத்துவதற்குறிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகவும், அதற்குறிய சரியான சந்தர்ப்பம் இதுவாகையினால் தான் தற்போது பகிரங்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஆடை முறையை முற்றிலும் மாற்றிக் கொண்டுள்ள மோனிகா, இஸ்லாமியப் பெண்கள் அணியும், ஹபாயா ஆடையை அணிந்தவராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஏன்? தான் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்குறிய காரணங்களை வெளியிட்டுள்ள மோனிகா அவர்கள் இஸ்லாத்தின் தூய்மையான கருத்துக்கள் தான் தன்னை ஈர்த்தனவே தவிர, எனது இந்த மத, மன மாற்றத்தை மீடியாக்களின் வழமையான பாணியில் திசை திருப்பிவிட வேண்டாம் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
திருமறைக் குர்ஆனையும், நபியவர்களின் ஹதீஸ்களையும், இன்னும் அதிகமான இஸ்லாமிய நூற்களையும் படித்து இஸ்லாத்தை பற்றிய தெளிவாக தெரிந்த பின்னர் தான் இஸ்லாத்தை ஏற்கும் மன நிலைக்கு நான் வந்தேன். இன்று விஞ்ஞானம் உண்மைப் படுத்தியுள்ள பல விஷயங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆனில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
உலகம் படைக்கபட்டது எவ்வாறு? போன்ற செய்திகளை குர்ஆனில் படிக்கும் போது ஆச்சரியமடைந்தேன்.
மாத்திரமன்றி குர்ஆனைப் படித்த பின்னர் நான் இத்தனை நாள் இந்த மார்க்கத்தை விட்டு ஏன் விலகி நின்றேன்? என்ற கேள்வி என்னுள் எழுவதை தவிர்க்க முடியாமல் உள்ளது.
“நான் ஒரு நடிகையாக இருக்கும் போது எனது அன்றாட தேவைகளுக்காக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய தேவையேற்படும் போது, நான் கடைகளுக்கு சென்றால் அங்கு நான் ஒரு நடிகை, அதிலும் பெண் என்ற காரணத்தினால் பலரின் கிண்டல்களுக்கும், கேளிகளுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையை தவிர்த்துக் கொள்வதற்காக இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவை அணிய ஆரம்பித்தேன், பின்னர் புர்கா இல்லாத சாதாரண ஆடையுடன் வெளியில் செல்லும் போது ஏதோ ஒரு வகையான மன அழுத்தத்தை, இருக்கமாக உணர்ந்தேன்.
இதன் பின்னர் இஸ்லாமிய பெண்களின் முழு உடலை மறைக்கும் ஆடையை தொடர்ந்து அணிய முடிவெடுத்தேன். இன்றும் இதன் மூலம் முழு சுதந்திரத்தையும், மன நிம்மதியையும் உணர்கின்றேன்.
முழுமையான ஒழுக்கமான ஒரு மார்க்கத்தில் என்னை நான் இணைத்துக் கொண்டதை உணர்கின்றேன்.
காதலால் ஏற்பட்ட மத மாற்றமா? நான் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் காதல் என்று யாரும் நினைக்க தேவையில்லை. காதலுக்காக எனது மார்க்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய எவ்விதத் தேவையும் எனக்கில்லை.
நான் காதலுக்காக மதத்தை மாற்றிக் கொண்டால், திருமணம் செய்து ஓரிரு மாதங்களில் என்னை எனது கணவர் விட்டு விட்டுச் சென்றால் நான் தான் நடுத் தெருவில் நிற்க வேண்டும். ஆகவே சாதாரணமாக காதலுக்காக மதம் மாற வேண்டிய எவ்விதத் தேவையும் எனக்கில்லை.
முஸ்லிம் பையனுடன் காதல், துபையில் ஒரு ஷேக்கை திருமணம் செய்யப் போகின்றார் என்றெல்லாம் கற்பனைக் கதைகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நான் திருமணம் செய்யும் போது அதனை முறையாக மீடியாக்களில் அறிவிப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்துடன் சினிமாவை விட்டும் நீங்கிக் கொள்கின்றேன்.
சுமார் 70 க்கும் மேற்பட்ட சினிமாப் படங்களில் நடித்த மோனிகா, தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் அதாவது 2014 ம் வருடம் மே மாதத்திலிருந்து சினிமா துறையை விட்டும் முழுமையாக நீங்கிக் கொள்கின்றேன். சினிமா துறை சார்ந்தவர்கள் நடிப்பதற்காக எனக்கு தொலை பேசியூடாக அழைப்பு விடுக்கின்றார்கள். இனிமேல் நடிப்பதற்காக யாரும் என்னை அழைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பகிரங்க வேண்டுகோளையும் நடிகை மோனிகா விடுத்துள்ளார்.
குர்ஆன் என்னை மாற்றியது, ஹிஜாப் என்னை பாதுகாத்தது இதுதான் எனது மன, மத மாற்றத்திற்குறிய காரணமாகும் என்று கூறும் நடிகை மோனிகா அவர்கள் திருமறைக் குர்ஆனும், நபியவர்களின் வாழ்கை முறையும் காட்டித் தந்த அடிப்படையில் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
இஸ்லாத்தை தழுவியதைப் பற்றி சகோ. மோனிகா – ரஹீமாவின் பேட்டியை You tube -ல் காணுங்கள்.
–rasminmisc
source: http://rasminmisc.com/sis-monika/#sthash.IUaIewrk.46YwnkwK.dpuf