அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம்!
முழு உலகையும் சதி, வஞ்சகம், மோசடி, பொய், துரோகம் முதலான இரகசிய நடவடிக்கைகளை வைத்து சமூகம் இயங்குகிறது.
இதில் தேர்ச்சியடைபவர்களையே தொழில் மன்னன், அரசியல் இராஜதந்திரி, நிர்வாகப் புலி என்று அழைக்கிறார்கள். சமூகத்தின் சிறந்த “ரோல் மாடல்களாக’ப் பத்திரிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.
இவர்களைப் பற்றிய செய்திகளும் மக்களுக்கான நோக்கிலிருந்து மதிப்பிடப்படாமல், இரகசியக் கலைகளில் வல்லவர் யார் என்ற கருத்தே உருவாக்கப்படுகிறது.
இதற்குப் பொருத்தமாக பத்திரிகைகளும் அரசியல் செய்திகளை கொள்கை, கோட்பாடு, மக்கள் நிலையிலிருந்து எழுதாமல் கிசுகிசு பாணியில் புனைகிறார்கள். இன்றைக்கு அரசியல் செய்திகளை அறிய கழுகு, சங்கர்லால், வம்பானந்தா போன்ற “ஆய்வாளர்களின்’ ஆய்வுகளைத்தான் மக்கள் படிக்கின்றனர்.
இப்படி, சமூக இயக்கத்தில் சமூக விரோதமாக இருக்கும் இரகசியச் செயல்களிலிருந்தே அந்தரங்க விசயங்களை ரசனையுடன் நாடுவது ஒரு பண்பாகத் தோன்றுகிறது. இத்துடன் பாலுணர்வின் புதிர் சேரும்போது அதன் கவர்ச்சி இன்னும் பல மடங்கு பெருகுகிறது. அதனால்தான் முதலாளித்துவ அரசியல் உலகில் தமது எதிர்த்தரப்பினரை நிலைகுலைய வைக்க பாலுறவு இரகசியங்களை ஏவிவிடுவது ஒரு தந்திரமாக இருக்கிறது.
கிளிண்டன் – மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தின் போது எதிர்க்கட்சியாக இருந்த குடியரசுக் கட்சியினர் அமெரிக்க சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் இந்தக் கள்ள உறவுப் பிரச்சினையை ஒரு மாபெரும் ஒழுக்கப் பிரச்சினை போல மாற்ற முயன்றனர். முதலில் சற்றுத் தடுமாறிய கிளிண்டனோ ஈராக் மீதான தாக்குதலைப் பயன்படுத்தி மோனிகா விவகாரத்தை மூடுவதற்கு முயன்றார். உலகமும் இராக்கை மறந்துவிட்டு வெள்ளை மாளிகையின் அந்தப்புர லீலைகளை இரசித்தது.
கிளிண்டன் ஒரு அமெரிக்க அதிபர் என்ற முறையில் உலக மக்களுக்கு எதிராகச் செய்த அத்துமீறல்களைப் பற்றிப் பேசாத தமிழ்ப் பத்திரிக்கைகளெல்லாம் அவர் மோனிகாவிற்குச் செய்த அத்துமீறல்களைப் பற்றி அட்டைப்படக் கட்டுரையில் இரசித்து எழுதின. மேலும் பிரபலமானவர்களின் பாலுறவுக் கதைகளுக்கு உலகு தழுவிய சந்தையிருப்பதால் டயானா, மைக்கேல் ஜாக்சன் போன்ற நட்சத்திரங்களின் தருணங்களுக்குப் பத்திரிக்கைகள் காத்திருக்கின்றன.
இங்கேயும் இவை ஒரு மனிதனின் பாலுறவு ஒழுக்கம் குறித்துக் கூட விவாதிப்பதில்லை. டயானாவுடன் இன்பம் துய்த்த அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற ஆவலையே அதிகரிக்கின்றன. இப்படி அண்டை வீட்டின் அந்தரங்கத்திலிருந்து அரண்மனையின் அந்தப்புரம் வரை பாலுறவின் கதைகள், ஈடுபாட்டுடன் வாசிக்கப்படும் ரசனையின் முதல் இடத்தைப் பெறுகின்றன.
அரசியலற்ற, சமூக நோக்கமற்ற கண்ணோட்டத்தை உருவாக்குவதில் பாலுறவுக் கண்ணோட்டம் பாரிய பங்கை ஆற்றுகிறது. இது பொது வாழ்க்கை குறித்த ஒரு தனிநபரின் கண்ணோட்டம் மட்டுமல்ல. குடும்பம், உறவினர், அண்டை அயலார், நண்பர்கள் ஆகியோருடன் உறவு கொள்ளும் ஒரு சொந்த வாழ்க்கைக் கண்ணோட்டமாகவும் வினையாற்றுகிறது. சக மனிதர்களுடன் எழும் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பாலியல் பிரச்சினைகளாகத் திரிப்பதற்கு இன்றைய சமூக அமைப்பு மட்டுமல்ல, வரலாற்று ரீதியாகவும் ஒரு காரணம் இருக்கிறது.
முக்கியமாக, பேசப்படும் ஒவ்வொரு அந்தரங்க விசயங்களிலும் ஒரு பெண்ணே அதிகமும் பாதிக்கப்படுவதால் பல பாலியல் வன்முறைகள் குற்றங்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. உயர் பதவிகளில் திறமையினாலும், நேர்மையினாலும் பெயரெடுக்கும் பெண்களை ஒழுக்கமற்றவள் என்ற ஒரு சொல் முடக்கி விடுகிறது. மனைவி நடத்தை கெட்டவள் என்று வரும் மொட்டைக் கடுதாசி கூட ஒரு கணவனை நடைப் பிணமாக்கி விடுகிறது; மனைவிக்கோ வாழ்க்கையே முடிந்தது போல் ஆகிறது. பாலியல் பிரச்சினைகள், வன்முறைச் செய்திகளை வெளியிடவும், வெளியிடாமல் இருப்பதற்கும் போலீசுக்கும் – பத்திரிக்கை நிருபர்களுக்கும் பணம் தரப்படுகிறது.
மொத்தத்தில் பாலியல் செய்திகள், கதைகள், வன்முறைகள், கிசுகிசுக்கள், வதந்திகள் ஒரு மாபெரும் பொழுதுபோக்கு இரசனையை மக்களிடம் உருவாக்கியிருக்கின்றன. இந்த அபாயகரமான இரசனை இத்துடன் மட்டும் முடிவதில்லை. பல துறைகளையும் வேறு வேறு அளவுகளில் பிடித்தாட்டத்தான் செய்கிறது.
எல்லாத் துறைகளையும் இந்தக் கிசுகிசு ரசனை கவ்வியிருப்பதன் காரணம் நமது சமூகத்திலிருக்கும் ஜனநாயகமற்ற உறவுகள்தான். கணவனுக்கு மனைவி அடிமை, பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமை, ஆலமரத்தடிப் பஞ்சாயத்திற்குக் கிராமம் அடிமை, சாதிச் சங்கத்திற்குச் சாதிகள் அடிமை என்று ஒவ்வொரு துறையிலும் இந்த அடிமைத்தனம் பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது.
அடிமைகள் தரப்பில் மோதிப் பார்க்கத் துணிந்தவர்கள் ஜனநாயகத்திற்காக வெளிப்படையாகப் போராடுகிறார்கள். துணியாதவர்கள் ஆண்டைகளைப் பற்றிக் கிசுகிசுத்து மகிழ்கிறார்கள். ஆண்டைகளும் தங்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்காத இந்தக் கிசுகிசுக்களை அனுமதிக்கிறார்கள். அதையே ஜனநாயகமென்று காட்டிக் கொண்டு உண்மையான ஜனநாயகத்தைத் தடை செய்கிறார்கள். இறுதியில் சக மனிதனோடும், சமூகத்தோடும், அரசியலோடும் எழும் பிரச்சினையை ஜனநாயகப்பூர்வமாகச் சந்திக்காமல் அற்ப விசயங்களை அந்தரங்கமாகப் பேசிக் களிக்கும் பண்பு இரத்தத்தோடு கலந்து விடுகிறது. இதுவே ஒரு தனிநபர் சக மனிதர்களை கிசுகிசுக்களால் அலட்சியம் செய்துவிட்டு சுமுக உறவையும் வைத்துக் கொள்ளும் ஒரு அருவருப்பான பண்பை புழக்கத்திற்கு விடுகிறது.
கவிஞர் ஒருவர், “சமீபத்திய இலக்கிய கிசுகிசுக்கள் ஏதும் உண்டா, அப்படி இருந்தால் தெரிவிக்கவும், ரகசியம் காக்கப்படும்” என்று ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தை குமுதம் பத்திரிகை முன்பு வெளியிட்டிருந்தது. “இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வாழ்க்கையின் போதாமை குறித்து கவலைப்படும் கவிமனத்தின் நாட்டமும், இரசனையும்’ எப்படி இருக்கிறது பாருங்கள்!
இப்படித்தான் தமிழ்நாட்டின் இலக்கியச் சிறு பத்திரிக்கைகள் அனைத்தும் எழுத்தாளர்களின் அரட்டை, வம்பு, குடி, அடி தடி, வண்டவாளங்கள், சேட்டைகள் போன்றவற்றை வைத்தே இயங்குகின்றன. சிறுபத்திரிகை வாசகர் விரும்பியும்- எதிர்பார்த்தும் படிப்பது இந்தக் கிசுகிசுக்களைத்தான்.
ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புக்களை விமர்சனம் செய்யும் பொழுதுபோக்கு வெட்டி அரசியல் குழுக்களும் இந்தப் பாணியில்தான் கிசுகிசுக்கின்றன. “”அந்தத் தோழர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார்களாமே, இந்தத் தோழர் இப்போது அமைப்பில் இல்லையாமே, அந்தத் தோழர் இன்ன சாதியாமே’’ என்று காதருகே உரைக்கும் இந்த வெட்டிக் குழுக்கள் புரட்சிகர அரசியலையும் – நடைமுறையையும் நேரடியாக எதிர்கொள்ளத் துணிவின்றி இந்த வழிமுறைகளைக் கையாளுகின்றன.
இக்குழுக்களின் சோம்பிக் கிடக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய அணிகளின் வேலைத்திட்டமே இந்தக் கிசுகிசு அரசியல்தான்!
எனவே அந்தரங்கச் செயல்களை ரசனையுடன் பேசும் இப்பண்பு சமூகத்தின் சகல அரங்குகளையும் ஆட்சி செலுத்துவதன் விளைவாக மனிதர்களுக்கிடையே உண்மையான உறவுகள் நசித்துப் போயுள்ளது. குறிப்பாக, நகரத்து மனிதர்கள் செயற்கையாகப் பழகுவதும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பிரச்சினைகள் வரும்போது உள்ளுக்குள்ளேயே புழுங்குவதும், திடீரென வன்முறையாளனாக மாறுவதும், முடிவில் வாழ்க்கையை தற்கொலை மூலம் முடிப்பது அல்லது நடைப்பிணமாக வாழ்வது என்றும் முடிவுக்கு வருகிறது.
source: http://www.vinavu.com/