நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை நேரில் பார்த்தார்களா…?
மிஃராஜ் தின அமல்கள் என்ற பெயரில், பித்அத்தை செய்கின்றவர்கள், மிஃராஜ் சம்பவத்தைப் பற்றி பேசும் போது, அல்லாஹ்வின் மீதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் இட்டுக்கட்டும் பாவத்தையும் வழமையாக செய்து வருகின்றனர்.
அது என்னவென்றால், மிஃராஜ் பயணத்தின் போது, அல்லாஹ்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேருக்கு நேராக பார்த்தார்கள் என்பது தான், இது மிகப்பெரிய பொய்யாகும், இக்கூற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே மறுத்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
“நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 291)
அல்லாஹ்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரில் பார்த்தார்கள் என்று கூறுவதானது குர்ஆனோடு மோதுவதாகும் உள்ளது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், குர்ஆன் வசனங்களை ஆதாரமாக வைத்து அல்லாஹ்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரில் பார்த்தார்கள் என்ற வாதத்தை நிராகரிக்கிறார்கள்.
நான்(அன்னை) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்தில் அமர்ந்திருந்த ஒருபோது, அவர்கள் (என்னை), “அபூஆயிஷா!” மூன்று (மிகக் கொடிய) விஷயங்கள் உள்ளன. யாராவது அவற்றில் ஒன்றைக் கூறினாலும் அவர் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான், “அவை எவை?” என்று கேட்டேன்.
அதற்கு, “யார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டி விட்டார்” என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்திருந்த நான் நிமிர்ந்து விட்டேன். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். ‘திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்’ (81 :23 ) என்றும் ‘நிச்சயமாக மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53 :13) என்றும் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவரது இயற்கையான தோற்றத்தில் அந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா “எவருடைய பார்வையும் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன் (6:103) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அல்லது, மனிதர்களுள் எவரிடமும் வஹீயின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்து, தான் நாடுகின்றவற்றை (வேதமாக) தன் அனுமதியின் பேரில் அறிவிக்கச் செய்தோ அல்லாமல் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. அவன் மிக்குயர்ந்தவன்; ஞானமிக்கவன்” (42 :51) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா?” என்று என்னை வினவி(மூன்றில் முதலாவதை நிறுவி)னார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவேதத்திலிருந்து எதையும் மறைத்து விட்டார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டிவிட்டார். ‘தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப் பட்ட(வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! (அவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள்…’ (5 : 67) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்று விளக்கி(இரண்டாவதை நிறுவி)னார்கள்.
அதையடுத்து,
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள் என்று யாரேனும் கூறினால் அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைப் புனைந்து விட்டார். ஏனெனில், ‘(நபியே) கூறுவீராக! அல்லாஹ்வைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானவற்றை அறியமாட்டார்…’ (27 : 65) என்று அல்லாஹ் கூறுகிறான்” என்று எடுத்துரைத்(து மூன்றாவதையும் நிறுவி முடித்)தார்கள்.
(அறிவிப்பாளர்: (அன்னை) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாக மஸ்ரூக் ரஹ்மதுல்லாஹி அலைஹி).
குறிப்பு:
இதே ஹதீஸ், தாவூத் ரஹ்மதுல்லாஹி அலைஹி வழி அறிவிப்பில், “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு அருளப்பட்ட(வேதத்)திலிருந்து எதையாவது மறைப்பவராக இருந்தால், கீழ்க்காணும்
‘(நபியே!) அல்லாஹ்வும் அருள்புரிந்து நீங்களும் அருள்புரிந்தவர் (ஆன ஜைது) இடம் நீங்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் துணைவியை (மணவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும் என்று சொன்னபோது, அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை மனிதர்களுக்குப் பயந்து நீங்கள் உங்களது மனதில் மறைத்து வைத்தீர்கள்; அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுடையோன்’ (33:37) என்ற வசனத்தை மறைத்திருப்பார்கள் (ஆனால், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து அவர்கள் எதையும் மறைத்துவிடவில்லை)” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூடுதலாகக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
இப்னு நுமைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி வழி அறிவிப்பில், மஸ்ரூக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மிஃராஜின்போது) தம் இறைவனைப் பார்த்தார்களா?” என்று கேட்டபோது, “ஸுப்ஹானல்லாஹ்! நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறி விளக்கம் சொல்லத் தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. (நூல்: முஸ்லிம் 287)
எவராலும் இறைவனை இம்மையில் காணவே முடியாது., ஆனால் கண்டிப்பாக மறுமையில் எவ்வித தடையுமின்றி காணலாம்.
“அறிந்துகொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்குமுன் தம் இறைவனைப் பார்க்க முடியாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5614)‘
இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? ‘ என்று மக்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ) கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பெளர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்றார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர். “இவ்வாறு தான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமைநாளில் எவ்வித சிரமுமின்றி) காண்பீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7437)
இவ்வளவு தெளிவாக உள்ள போது, அல்லாஹ்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரில் பார்த்தார்கள் என்று கூறுவது அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் இட்டுக் கட்டும் பாவம் ஆகும்.
”அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 6:21)
“திட்டமிட்டு என் பெயரால் எவரேனும் பொய் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 30)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிதராத ஒன்றான மிஃராஜ் தின அமல்கள் என்ற பெயரில் செய்பவர்களில் பெரும்பாலானோர் மிஃராஜ் சம்பவத்திலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளைப் பெறத் தவறி விடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்களுக்கு மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன:
1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப்பட்டன.
2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன.
3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 279)
மிஃராஜ் சம்பவத்தில் தான் ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன, ஆனால் மிஃராஜ் தினம் என்று புதிதாக ஒன்றை உருவாக்கி, பித்அத் செய்பவர்களில் பலர் இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவது கிடையாது, அந்த ஒரு இரவில் நிறைந்து காணப்படும் பள்ளி, மற்ற நாட்களில் வெறிசோடிக்கிடப்பதே இதற்கு போதுமான சான்றாகும். மிஃராஜ் சம்பவத்தில் தான் அல்லாஹ்வுக்கு இணைவைக்காதவர்களுக்கு மற்ற பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுவதான பெரும் பாக்கியமும் நமக்கு கிடைத்துள்ளது, ஆனால் மிஃராஜ் தினம் என்று புதிதாக ஒன்றை உருவாக்கி, பித்அத் செய்பவர்களில் சிலர் சமாதி வழிபாடு, தாயத்து என்னும் இணைவைப்பில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
எனவே அல்லாஹ்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேருக்கு நேராக பார்த்தார்கள் என்று கூறி அல்லாஹ்வின் மீதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் இட்டுக்கட்டும் பாவத்திலிருந்தும், மிஃராஜ் தினம் அமல்கள் என்ற பெயரில் செய்யும் பித்அத் எனும் பாவத்திலிருந்தும் விலகி மிஃராஜ் சம்பத்திலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளைப் பெற்று மறுமை வாழ்வு நன்றாக அமைய வேண்டிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
source: www.dailyhadhees.blogspot.in