பேரீச்சை, திராட்சை – மதுவும் உணவும்
[ திராட்சை மெதுவாக, பழச்சாறு மதுவாக மாறும் மர்மம் என்ன?
பாலாறு, தேனாறு, மது ஆறு என மூன்று பானங்களை இவ்வுலகில் ஓடவிட்ட அல்லாஹ், இரண்டு நல்ல உணவான பால், தேனை அனுமதித்து, நல்ல உணவான பேரீச்சை, திராட்சையில் தயார் செய்யும் மதுவை தடுத்துவிட்டான்.
இரண்டு உயிரினங்களின் வயிற்றிலிருந்து வரும் பால். தேனை ஹலாலாக்கிய அல்லாஹ், மதுவை ஹராமாக்கினான். காரணம் என்ன?
பல பொருட்களின் மூலம் மது தயாரிக்க முடியும் என்ற நிலையில் அல்லாஹ் ஏன் பேரீச்சை, திராட்சை என இரு பழங்களை மாத்திரம் மதுவுக்கு அடையாளப்படுத்துகிறான். இந்த கட்டுரையின் கருப்பொருளே இந்தக் கேள்விதான்.]
பேரீச்சை, திராட்சை – மதுவும் உணவும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…..
“பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.” (அல்குர்ஆன் 16:67)
பொதுவாக எல்லாப் பழங்களும் மனிதனுக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் சத்தாக கொடுக்கின்றன. மனிதன் உண்ணும் மாமிச உணவுகளில் கூட சிலவற்றை அல்லாஹ் ஹராமாக தடுத்துள்ளான். அதேசமயம் தாவர வகைகளில் எதையும் தடை செய்யவில்லை. தானியப் பயிர், காய்கறி, பழங்கள் அனைத்தும் ஹலாலாக்கி நன்மை செய்துள்ளான். மேல் குறிப்பிட்ட வசனத்தில் பேரீச்சை, திராட்சை பழங்களைக்கூறி, அதில் முதலாவதாக மதுவையும் இரண்டாவதாக நல்ல உணவும் இருப்பதாக அல்லாஹ் கூறுவது ஏன்? நல்ல உணவை ஏன் முதலாவதாக குறிப்பிடவில்லை? அதிலும் முதலில் பேரீச்சையையும் இரண்டாவதாக திராட்சையையும் கூறக்காரணம் என்ன.
குர்ஆன் வசனம் இறங்கிய அன்றைய பாலைவன அரபு நாட்டில் பேரீச்சை மதுவே பிரதானமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம், முதன் முதலில் மது தயாரிக்கப்பட்டது பேரீச்சம் பழத்திலிருந்தும் இருக்கலாம். இன்றைய ஜார்ஜியா, ஆர்மீனிய பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் 8000 வருடங்களுக்கு முன் பயன்பட்ட திராட்சை மது ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. http://archaeology.ws/2004-1-2.htm
அதேசமயம் பாகிஸ்தான்,பலுசிஸ்தான் பகுதியில், போலன் கணவாய் அருகில் உள்ள மெஹர்கட் (Mehrgarh) எனும் இடத்தில் நடந்த அகழாய்வில் 9000 வருடங்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் பேரீச்சை பயிரிட்டதற்கான சான்றுகள் உள்ளதாக அறிவிக்கின்றனர்.
மனிதன் முதல் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒருசில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்சை மரங்களாகும். மேலும் 2000 வருடங்களுக்கு முன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பேரீச்சை கொட்டை (விதை) இஸ்ரேலில் உள்ள மஸ்டா(Mazda) கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு, 2008 ல் விதைக்கப்பட்டு இன்று மரமாக வளர்ந்துள்ளதும் ஒரு அதிசயமே. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள பேரீச்சக்கொட்டை மீண்டும் முளைப்பது ஆச்சரியமே! அல்லாஹ் இந்த அற்புதத்தை பேரீச்சைக்கு கொடுத்தது சிந்திக்கத்தக்கது. http://en.wikipedia.org/wiki/Judean_date_palm
“பேரீச்சை, திராட்சையில் மதுவும், நல்ல உணவும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்.” என்ற இந்த வசனம் மக்காவில் மக்கள் மது அருந்திக்கொண்டிருந்த அனுமதிக்கப்பட்ட நிலையில் இறங்கியது. ”மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்.” மது தடை செய்யப்படாத நிலையிலும் அல்லாஹ், நல்ல எனும் சொல்லை (ரிசக் ஹஸனன்) உணவுக்கு மட்டுமே குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. மேலும் “மதுவை நீங்கள் தயாரிக்கிறீர்கள்” என்று கூறி தனக்கு அதில் சம்பந்தமும் இல்லை. என்றும் தெளிவு படுத்துகிறான். அல்லாஹ் கூறிய நல்ல உணவுகளை பழங்களை அப்படியே சாப்பிடலாம்,தயாரிப்பு தேவையில்லை. மது வேண்டுமானால் மனிதன் தான் தயார் செய்ய வேண்டும்.
மதுவை அல்லாஹ் தடை செய்த பிறகு பேரீச்சை மரம் இருக்கும் பாலைவன இஸ்லாமிய அரபு நாடுகள், உணவுக்காகவே மரம் வளர்க்கின்றனர். மது தயாரிப்பதில்லை. அதேசமயம் உலகமுழுவதும் மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பழமான திராட்சையை குறிப்பிடும்போது மதுவையே முதலில் குறிப்பிடுகிறான். அது ஏன்? புள்ளி விபரத்தைப் பார்ப்போம்.
உலக உணவு வேளாண்மை அமைப்பு ( FAO ) தகவல்படி, உலகம் முழுவதும் சுமார் 75,866 சதுர கி.மீ. பரப்பளவில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றுள் சுமார் 71% திராட்சை மது உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 21% பழங்கள் உணவு,மற்றும் ஜுஸ், ஜாம் தேவைக்கும். 2% பழங்கள் உலர் திராட்சை (Resin) க்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வருடம் தோறும் 2% சாகுபடி நிலப்பரப்பு விரிவடைந்து செல்வதாக புள்ளி விபரம் கூறுகின்றன. http://en.wikipedia.org/wiki/Grape
உலகில் பயிரிடப்பட்ட ஒட்டுமொத்த திராட்சை பழங்களில் முக்கால் பங்கு மது தயாரிப்புக்கு போவதால்தான் அல்லாஹ் மதுவை முன்னிலைப்படுத்தி குறிப்பிடுகிறான். நல்ல உணவு என்று திராட்சையை இரண்டாவதாக குறிப்பிடுகிறான்.
”நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.” (அல்குர்ஆன் 8:39)
உலகில் எத்தனையோ பழங்கள் விளைகின்றன.பல்வேறு தானியங்கள் பயிரிடப்படுகின்றன. கார்போ ஹைடிரேட் எனும் ஸ்டார்ச் மாவுப்பொருள் உள்ள பழங்கள், தானியங்கள், மற்றும் காய்,கறியிலிருந்தும் மதுவை தயாரிக்க முடியும். அன்றைய அரபு நாடுகளில் ஐந்து விதமான பொருள்களிலிருந்து மது தயாரிக்கப்பட்டது.
‘மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மது விலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம்பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன். ஆகியனவே அந்த பொருட்கள்.” (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி.5588)
பல பொருட்களின் மூலம் மது தயாரிக்க முடியும் என்ற நிலையில் அல்லாஹ் ஏன் பேரீச்சை, திராட்சை என இரு பழங்களை மாத்திரம் மதுவுக்கு அடையாளப்படுத்துகிறான். இந்த கட்டுரையின் கருப்பொருளே இந்தக் கேள்விதான்.
திராட்சை மெதுவாக, பழச்சாறு மதுவாக மாறும் மர்மம் :
மனிதனும் மதுவும், ஆதி காலத்திலிருந்தே ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக வரலாறு முழுக்க போதையோடுதான் பயணம் செய்கின்றனர். வேத காலத்தில் சோம பானம், சுர பானம் அருந்திய வரலாறு நாம் அறிந்ததே. ஆனால் மது எப்படி உற்பத்தியாகிறது, எதனால் மதுவாக மாற்றப்படுகிறது, என்கிற வித்தை மட்டும் அறிய முடியாத மர்ம நிகழ்ச்சியாக பத்தாயிரம் வருடங்களாக, இருபதாம் நுற்றாண்டு வரை நீடித்து வந்தது ஆச்சரியமான ஒன்று.
1860 ல், மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கப் பட்டபின் டச்சு ஆய்வாளர் அன்டன் வான் லீ வன் கோக் (Anton van Leeu wen hoek) என்பவர், ஈஸ்ட் செல்களை (Yeast cell) உற்று நோக்கினார். அதில் நுண்ணுயிர்கள் அசைவதைக் கண்டார். திராட்சை சாறிலுள்ள சில உயிரிகள் மது உருவாக துணை புரிகிறது என்று அறிவித்தார். அதற்குமேல் ஆய்வு செய்ய அன்று நுட்பமான கருவிகள் இல்லை.
பிறகு சுமார் 105 நீண்ட வருடங்களுக்குப்பிறகு 1785 ல், பிரெஞ்சு நாட்டு ஆய்வாளர், லாவாசியர் (Antonie Laurent Lavoisier) ஆக்சிஜனை கண்டுபிடித்தவர். திராட்சை சாறு நோதித்தலானது (Alcohol Fermentation) ஒரு இரசாயன மாற்றம் என்று கூறினார்.ஆல்கஹால் மது உருவாவதற்கு சுகர் எனும் சர்க்கரை தான் மூலப்பொருள் என்று கூறினார். முழு விபரம் அவருக்கு தெரியவில்லை.
இன்னும் 50 ஆண்டுகள் கடந்த பின்பு, 1835 ல்,சார்லஸ் காக்னார்டு (Charles Cagnaird de la Tour&Schwaan) எனும் பிரேஞ்சுக்காரரும், ஸ்வான் எனும் ஜெர்மானியரும் சற்று மேம்படுத்தப்பட்ட மைக்ரோஸ்கோப் மூலம் விரிவாக ஆய்வு செய்து, ஒரு செல் உயிரினமான ஈஸ்ட் சர்க்கரையில் இரண்டு இரண்டாக பல்கிப்பெருகுவதுதான் மது நொதித்தலுக்கு காரணமே தவிர இரசாயன மாற்றமல்ல, என்ற அரை உண்மையை அறிந்தார்.
1839 ல்,ஜெர்மனியைச் சேர்ந்த ஜஸ்டஸ் பிரைஹெர் (Justus Freiherr Von Liebig) ஈஸ்ட் செல்கள் சர்க்கரையை எடுத்து ஒரு வித கழிவை வெளியேற்றுவதாகவும் இவையே ஆல்கஹாலையும் கார்பன் டை ஆக்சைடையும் வெளியிடுகிறது என்றார். 1846 ல்,ஜோன்ஸ் பெர்சிலியஸ் (Jons Berzelius) தான் முதன் முறையாக நுண்ணுயிர்கள் Catalyst ஆக மாறி சர்க்கரை மூலக்கூற்றை உடைத்து Ethanol எனும் ஆல்கஹாலாக மாறுவதாக கூறினார்.
1857 ல், பால் புளிப்பதர்க்கும்,பழங்கள் அழுகுவதர்க்கும் காரணம் நுண்ணுயிர்களே என்று கண்டுபிடித்த லூயி பாஸ்டர் தனது மைக்ரோஸ்கோப் மூலம் நோபல் பரிசு பெற்றார். ஈஸ்ட் செல்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ்வதாக அறிவித்தார்.ஆனால் இது உண்மையல்ல.
1897 ம், ஆண்டு இரண்டு ஜெர்மன் சகோதரர்கள் எட்வர்ட்,ஹான்ஸ் புக்னர் மருத்துவ ஆய்வில் ஈடுபட்டபோது ஈஸ்ட் செல்கள் ஒரு வித நொதியை (Enzyme) வெளியிடுகின்றன, இந்த என்சைம்களே சர்க்கரையின் மூலக்கூறை உடைத்து ஆல்ஹகாலாகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றுகிறது என்றனர். இந்த கண்டுபிடிப்புக்காக 1901 ல்,புக்னருக்கு இரசாயனத்திற்க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த சிக்கலான மாற்றத்தின் பத்து தொடர் வினைகளின் தெளிவான விளக்கத்தை 1940 ல், குஸ்டாவ் எம்ப்டென் (Gustav Embden), ஓட்டோ மெய்ர்ஹாப் (Ooto Meyerhof),மற்றும் பார்னஸ் (Parnas)ஆகியோரால் விளக்கப்பட்டது. இம் முறையை Embden-Meyerhof-Parnas Pathway என்று அழைக்கின்றனர்.. இதன் முழுமையான விளக்கம் அர்ஜைன்டைனா நாட்டைச் சேர்ந்த லூயிஸ் லெ லோயறல் அளித்தார். அவருக்கு 1970 ல், நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பழத்தோலில் படர்ந்திருக்கும் ஈஸ்ட் நுண்ணுயிரிகள் :
ஈஸ்ட் எனும் ஒரு செல் நுண்ணுயிரானது பூஞ்ச காளான் வகையைச் சார்ந்தது. நமது காற்று மண்டலத்திலும் பூமியிலும் ஆயிரக்கணக்கான, கண்ணுக்குத் தெரியாத உயிர் ஜீவன்கள் உலவுகின்றன. இந்த நுண்ணுயிர்களால் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.மாவு புளிக்கவும் பேக்கரியில் பிரெட் செய்யவும், பால் தயிராக மாற மற்றும் வினிகர் எனும் காடி உருவாக இறந்த உயிரினங்கள் மண்ணில் மக்கவும் உதவுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்,
“அவன் தன்னுடைய அருட்கொடைகளை மறைவாகவும், வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?” (அல்குர்ஆன் 31:20)
திராட்சை சாற்றை மதுவாக மாற்றும் நுண்ணுயிர் ஈஸ்டின் அறிவியல் பெயர் “சாக்கரோ மைசெஸ் செர்விசெஸ்” (Saccharomyces cerevises) ஒரு துளியில் 50 லட்சம் நுண்ணுயிருகள் இருக்கும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்தில் இவை இரண்டு மடங்காக பெருகும். இவை பழத்திலுள்ள இனிப்பில் பல மடங்காக பெருகி நொதிகளை வெளிவிடுகின்றன. இந்த என்சைமே (Zymase) சர்க்கரையை சிதைத்து எத்தனால்(Ethanol) என்னும் ஆல்கஹால் மதுவாக மாற்றுகிறது.
“உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கக்கூடிய நுண்ணுயிர்) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் நாமே அதில் அமைத்தோம்.” (அல்குர்ஆன் 15:20)
“இவர்களையும், பூமியில் முளைப்பிக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப்படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவைகளையும் படைப்பவன் மிகப்பரிசுத்தமானவன்.” (அல்குர்ஆன் 36:36)
இந்த “சாக்கரோமைசஸ் செருவிசெஸ்” நுண்ணுயிருக்கும் அல்லாஹ் குறிப்பிடும் “பேரீச்சை திராட்சை பழங்களிலிருந்து வரும் மதுவுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது.
பேரீச்சம் செங்காய் பழத்தின் மீதும், திராட்சை பழத்தின் தோல் மீதும் மிக மெல்லிய ஆடை போன்ற வெண்ணிற மாவுப்படலம்(Bloom) படிந்திருப்பதை அனைவரும் பார்த்திருக்கிறோம். அது என்ன? பழத்திற்கு அல்லாஹ் பவுடர் மேக் அப் போடக் காரணம் என்ன?
பழத்தின் மேலுள்ள பவுடர் (Bloom) நமது “Saccharomyces Cerevises” ஈஸ்ட் நுண்ணுயிர்கள் தான். இயற்கையாகவே அல்லாஹ் இப்பழங்களின் தோலின் மீது நுண்ணுயிரை அமைத்துள்ளான்.
பிளம்ஸ்,செர்ரி,பீச்,ஆப்பிள், போன்ற பழங்களில் இம்மெல்லிய மாவுப்படலங்கள் இருந்தாலும் இவைகளில் மது தயாரிப்பது அரிது. மதுவுக்கென்றே பரந்தளவில் விளைவிக்கப்படுவது திராட்சை மட்டுமே. திராட்சையை பிழிந்து சாறு எடுத்து அதன் தோலுடன் ஊற வைக்கும்போது திராட்சை தோலில் உள்ள ஈஸ்ட் நுண்ணுயிரிகள் இனிப்பில் பலமடங்காக பல்கிப்பெருகி என்சைமை சுரக்கின்றன. இந்த Enzyme (zymase) கள் இனிப்பில் உள்ள குளுக்கோஸை சிதைத்து (Fermentation) ஆல்கஹால்,மதுவாக மாற்றி கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகின்றன.
“பேரீச்சை,திராட்சை பழங்களிலிருந்து மது தயாரிக்கிறீர்கள்” என்று இரு பழங்களை அல்லாஹ் குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் ஓயின் தயாரிக்கும் ஈஸ்ட் உயிரி (Wine Maker) யை அப்பழங்களோடு இணைத்து படைத்ததால்தான். இந்த அறிவியல் உண்மை அன்று எவருக்கும் தெரியவில்லை. இந்த நூற்றாண்டுகளில்தான் அறிய முடிந்தது. கண்ணுக்குத்தெரியாத கோடானு கோடி, ஈஸ்ட், பாக்டீரியா, வைரஸ், அனைத்தும் மைக்ரோஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே உலகம் அறிந்தது.
”இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.” (அல்குர்ஆன் 16:8)
“என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன்.அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றுள் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவை விட சிறியதோ அல்லது பெரியதோ தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.” (அல்குர்ஆன் 34:3)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்த அறிவியல் உண்மை!
முஸ்லிம்கள் மதுவை குடிக்கக கூடாது என்று அல்லாஹ் தடை செய்தான். மது விலக்கை முழுமையாக அமல்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல தடைகளைப் போடுகிறார்கள்.
“(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும், (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்.”
என்றும் இத்துடன் மண் ஜாடியிலும், பேரீச்சம் மரத்தைக் குடைந்து தயாரித்த மரப் பானையையும் பயன் படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்தார்கள்.” (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி. 5587)
பேரீத்தம் பழங்களையோ திராட்சைகளையோ தண்ணீரில் ஊறவைத்து சுவை ஏற்றுவது அரபியர் வழக்கம்.அவற்றை அவர்கள் போதை தரும் அளவிற்கு நீண்ட நாட்கள் ஊற வைப்பதும், போதை தராத விதத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் போட்டு வைப்பதும் உண்டு.பொதுவாக போதை ஏற்படுத்தினாலும் போதை ஏற்பப்படுத்தாவிட்டாலும்,அதனை “நபீத்” என்றே அழைப்பர்.
மது தடை செய்வதற்கு முன்பு பயன் படுத்திய பாத்திரங்களில், நபீத் எனும் இனிப்பு பானங்களை, பழச்சாற்றை ஊற்றி வைக்கும் பொழுது என்ன நடக்கும்? அப்பாத்திரங்களில் படிந்திருக்கும் ஈஸ்ட் மீண்டும் தன் நொதித்தல் வேலையை ஆரம்பித்துவிடும். பாத்திரங்களை எத்தனை முறை கழுவினாலும் நுண்ணுயிர்களை நீக்கமுடியாது. சஹாபாக்கள் அறியாத நிலையில் மது உருவாகும். ஆகவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்திருக்க வேண்டும்.அல்லாஹ் அறிந்தவன்.!
(ஒருமுறை) “சுரைக்காயில் ஊறிய நபீத் பானத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன். அது நொதித்து இருந்ததை அறிந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை சுவரில் அடித்து அழிக்கச்சொன்னார்கள். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பாதவன் அருந்தும் பானம் என்றார்கள்.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, (நூல்: அபூ தாவூத் 3716)
இனிப்பு + ஈஸ்ட் ஒன்று சேரத் தடை
” நன்கு கனிந்த பேரீச்சம் பழத்தையும், நன்கு கனியாத நிறம் மாறிய செங்காய்களையும் ஒன்று சேர்த்து ஊற வைப்பதையும், பேரீச்சம் பழத்துடன் உலர்ந்த திராட்சையையும் ஒன்று சேர்த்து ஊற வைப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். தனித்தனியாக ஊற வைக்க அனுமதித்தார்கள்.” (அறிவிப்பவர்: அபூ கத்தாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5602)
” நபீத் (சர்பத்) பானத்தை அருந்துங்கள். அவை திராட்சை, அல்லது பேரீச்சம் பழத்தில் மட்டும் அல்லது பழுக்காத பேரீச்சங்காயின் மூலம் மட்டும், ஆனால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்.” (அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
பொதுவாக பறிக்கப்பட்ட பேரீத்தம் குலைகளில் சில கனிகள் நன்கு பழுத்திருக்கும், சில கனிகள் நிறம் மாறி செங்காய் நிலையில் இருக்கும். இவைகளை மொத்தமாக கலந்து போட்டுத்தான் அன்று மது உற்பத்தி செய்தார்கள். மதுவை தடை செய்யப்பட்ட பின்னர், பேரீச்சை சாறு இனிப்பு பானம் செய்வதற்கு கலந்து போடுவதை ஏன் தடை செய்ய வேண்டும்?
இன்றைய இருபதாம் நுற்றாண்டு அறிவியல் உண்மைகள் அன்றே அல்லாஹ்வின் தூதருக்கு அறிவிக்கப்பட்டதே! பழச்சாறு ஒயின் மதுவாக மாற இரண்டு நிபந்தனை அவசியம் தேவை. ஒன்று அதிகமான இனிப்புள்ள (Sugar) பழம், இரண்டாவது பழத்தை நொதிக்க செய்ய தேவையான சாக்கரோஸ் ஈஸ்ட் நுண்ணுயிர்கள். (Saccharomyces Cerevises)
பழுத்த பழங்களும், செங்காயும் கலந்து போடும் போது செங்காயின் தோலில் அதிகம் இருக்கும் ஈஸ்ட் ஆனது பழுத்த பழத்தின் இனிப்பை எடுத்து பல்கிப்பெருகி என்சைமை வெளியிட்டு சர்க்கரையை சிதைத்து மதுவை உற்பத்தி செய்யும். நன்கு பழுத்த பழத்தில் ஈஸ்ட்கள் குறைவு. இதுபோல் பேரீச்சம் பழத்துடன் திராட்சை பழத்தை சேர்த்தால், திராட்சை தோலில் உள்ள ஈஸ்ட் பேரீச்சம் பழத்தின் இனிப்பை எடுத்து நொதிக்கும் (Fermentation) வேலையை ஆரம்பிக்கும்.
இன்று நாம் அறிந்த (நுண்ணுயிர்- ஈஸ்ட்) அறிவியல் உண்மையை அல்லாஹ்வின் தூதர் அறிந்ததால்தான் இவைகள் ஒன்று கலப்பதை தடை செய்தார்கள். பேரீச்சங் செங்காய்களை மட்டும் ஊற வைக்கும் போது, காயின் தோலில் ஈஸ்ட் இருந்தாலும் அவை உண்டு வளர்வதற்கு இனிப்பு போதுமானது இல்லை.ஏனென்றால் செங்காயில் நீர்ச்சத்து 80% மேல் இருக்கும், இனிப்பு மிகக் குறைவாக இருப்பதால் நொதிப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதுபோல் நன்கு கனிந்த பழத்தை மட்டும் ஊற வைக்கும்போது இனிப்பு உள்ளது ஆனால் போதுமான ஈஸ்ட், கனிந்த பழத்தில் இல்லை. ஆக மது உருவாவது தடுக்கப்படுகிறது.அல்லது தாமதமாகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தடை, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு சான்றாக உள்ளது
பொதுவாக மேலை நாடுகளில் விருந்தினர்களை உபசரிக்க, கண்ணியப்படுத்த ஒயின் மதுவை கிண்ணத்தில் ஊற்றிக்கொடுத்து கௌரவிப்பார்கள். மதுவுக்கும் கண்ணியத்திற்கும் அன்றைய அரபு நாட்டிலும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அரபு மக்களின் விருந்தோம்பல் பண்பாடு உலகறிந்தது. ஆக உபசரிப்பில் திராட்சை மதுவுக்கு பெரும் கண்ணியம் கொடுத்தார்கள். ஆம்! திராட்சையை ” அல் கர்ம் ” கண்ணியமானது என்றே அழைத்தனர். இப்படி அழைப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை தடை விதித்தார்கள்.
‘உங்களில் ஒருவர் திராட்சையை “அல் கர்ம்” (கண்ணியமானது) என்று கூறாதிர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்கு தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். – (அறிவிப்பவர் :வாயில் இப்னு ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4527, 2528)
“திராட்சையை “அல் கர்ம்” (கண்ணியமானது) என கூறாதிர்கள். மாறாக “அல் இனப்” என்றோ “அல் ஹப்லா” என்றே கூறுங்கள்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: வாயில் இப்ன் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4530)
”கண்ணியத்தை முஸ்லிம்களுக்கு கொடுங்கள், திராட்சைக்கு கொடுக்காதீர்கள்” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு முஸ்லிமுக்கு உவமையாக பேரீச்சை மரத்தை குறிப்பிடுகிறார்கள்.
“மரங்களில் இப்படியும் ஒரு வகை உண்டு.அதன் இலை உதிர்வதில்லை.அது முஸ்லிமுக்கு உவமையாகும்.”ஸஅது என்ன மரம் என்று அறிவியுங்கள் என்று நபித்தோழர்கள் கேட்டபோது, “பேரீச்சை மரம்” என்றார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி)
வளர்சிதை மாற்றம்-சர்க்கரை சிதைவு-நொதித்தல். (Metabolism-Glycolysis-Fermentation )
இவ்வுலகில் வாழும் ஒட்டு மொத்த உயிரினமும் உணவை உண்டு வளர்ச்சி அடைகின்றன. இந்த வளர்சிதை மாற்றம் (Metabolism) நடைபெற சக்தி தேவை. தாவரங்கள், மரங்கள் செடி கொடிகள் சூரிய ஓளியின் மூலம் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) செய்து சக்தியை பெற்றுக்கொள்கின்றன. கால்நடைகள் தங்களுக்கு வேண்டிய சக்தியை புல் பூண்டு தாவரங்களை மேய்ந்து பெறுகின்றன.
தாவரங்களையும்,கால் நடைகளையும் உண்பதால் மனிதனுக்கு சக்தி கிடைக்கிறது. புல், பூண்டு, கால்நடைகள், மிருகங்கள், அனைத்தும் நம் கண்முன்னால் காணக்கூடியவை. இவைகள் உணவு பெரும் முறை நாம் அறிந்ததே. கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது உயிரினமான நுண்ணுயிரிகளும் (Micro organism) நம்மைப்போலவே “சர்க்கரை சிதைவு” (Glycolysis-Fermentation) எனும் வளர்சிதை மாற்றத்தின் (Metabolism) மூலமே ஜீவிக்கின்றன எனும் உண்மையும் இவ்வசனத்தில் அடங்கியுள்ளது.
“பேரீட்சை,திராட்சையில் மதுவும் நல்ல உணவும் ஸ.”எனும் இந்த ஒரு வசனத்தில் மதுவை குறிப்பிட்டதின் மூலம் நுண்ணுயிரிகள் (Microorganism) வாழ்வையும், செயலையும் அல்லாஹ் கூறுவதுடன் அல்லாமல், எல்லா உயிரினங்களும் உணவை சக்தியாக மாற்றும் முறை (Metabolism) ஒரேவிதமானது எனும் படைப்பின் ரகசியத்தையும் அடக்கியுள்ளான். .அல்ஹம்துலில்லாஹ்!
பழத்தில் உள்ள குளுகோஸ் மனிதர்களுக்கு உணவாகி சக்தியை கொடுக்கிறது. இதே பழத்திலுள்ள குளுகோசை நுண்ணுயிரிகள் என்சைம் மூலம் மதுவாக மாற்றி புத்தியை கெடுக்கிறது. சக்தியை கொடுக்கும் நிகழ்ச்சியும்.புத்தியை கெடுக்கும் மது நொதித்தலும், GLYCOLYSIS எனும் “சர்க்கரை சிதைவு” எனும் ஒரே இரசாய மாற்றத்தின்படியே அனைத்து உயிரினங்களிலும் நடைபெறுவது சிந்திக்கதக்கது. http://en.wikipedia.org/wiki/Glycolysis
பேரீச்சை நல்ல உணவு
பேரீத்தம் பழம் மற்ற பழங்களைக் காட்டிலும் அதிகமான சக்தியை கொடுக்கும். ஒரு கிலோ பழம் சுமார் 3000 கலோரி எரி சக்தியை கொடுக்கிறது. மற்ற பழங்களைக்காட்டிலும் இது பன் மடங்கு அதிகம்..ஆகவே பேரீச்சைக்கு முதலிடம். இரும்புச்சக்தி அதிகம். புரத சத்து, நார்ச்சத்து கால்சியம், மினரல் மற்றும் கூடுதல் மக்னீசியம் உள்ள பழம். ஒட்டு மொத்தமாக பேரீத்தம் பழத்தை ஒரு நுண்ணூட்டச் சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம்.
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும்,இரும்புச்சத்தும் தேவை. மாத விலக்கு உதிரப்போக்கு மற்றும் பிரச காலங்களிலும் இத்தகைய சத்துகள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்து ஒழுங்குபடுத்த பேரீத்தம் பழம் உதவுகிறது. மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரசவத்தின்போது அல்லாஹ் கூறுகிறான்,
” மரியமே! கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” இன்னும் இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.ஆகவே உண்டு பருகி கண் குளிர்ந்து இருப்பிராக!” (அல் குர்ஆன் 19:25)
பாலைவன மக்களுக்கு பலம் கொடுத்த, “உலகின் சத்துணவு பழமாக” மக்களால் விரும்பி உண்ணப்படும் பழம் பேரீச்சை. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை.இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல வைட்டமின் ஏ சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும். இதயம் வலுப்பெறும்.உணவே மருந்தான பழமே பேரீச்சை.சித்தர் பாடலிலும் இதன் சிறப்பை காணலாம்.
பேரீந் தெனுங்கனிக்குப் பித்த மத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் – பேரா
இரத்த பித்த நீரழிவி லைப்பாரும் அரோசி
உரத்த மலக் கட்டு மறும் ஓது. -அகத்தியர் குணபாடம்.
திராட்சை உணவின் சிறப்பு
ஊட்டச் சத்து நிறைந்த பழம் திராட்சையாகும். இதில் வைட்டமின் பி 1, 2, 3, 6, 12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியன உள்ளன. பொட்டாசியம், மக்னீசியம் அதிகளவில் உள்ள பழம். இதயத்திற்கும் இரத்த ஓட்டத்திற்கும் பெரிதும் துணை செய்கிறது. மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உணவாக அல்லாஹ் அளித்த பழம்.
‘ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம், அவள் (மரியம் அலைஹிஸ்ஸலாம் இருந்த மிஹ்ராபுக்குள்(தொழும் அறைக்கு) போகும்போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார். “மரியமே! இது உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது-நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள் கூறினாள்.” (அல்குர்ஆன் 3:37)
நபித்தோழர் குபைப் பின் அதி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ர் போரில் பங்கு பெற்று குறைஷி தலைவர்களில் ஒருவனான அல் ஹாரித் இப்ன் ஆமிர் இப்ன் நவ்பல் என்பவனை கொன்றார்கள். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிய சிறு குழுவில் பயணம் சென்றபோது மக்கத்து காபிர்களால் கைது செய்யப்பட்டு அல்- ஹாரித் வீட்டில் சிறை வைக்கப்பட்டார்கள். ஒரு நாள் அல் ஹாரிதின் மகள் சிறை வைக்கப்பட்ட அறையை பார்த்து வியப்படைந்தாள்,
”அல்லாஹ்வின் மீது ஆணையாக குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை) எடுத்து உண்டுகொண்டிருந்ததைக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புச்சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3045)
அல்லாஹ் நாடியவர்களுக்கு அவன் புறத்திலிருந்து உணவு அனுப்புவான். ஏராளமான பழங்கள் இருக்கும்போது அல்லாஹ் திராட்சையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு மிகப் பலஹீனமான நிலையில் இருந்த குபைப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திராட்சையின் மூலம் உடலை பலப்படுத்துகின்றான். அல்லாஹ் அறிந்தவன்.! உடல் வளர்ச்சிக்கும், தளர்ச்சிக்கும் திராட்சை மிக நல்ல உணவு என்பதற்கு இதற்குமேல் எந்த ஆதாரமும் தேவையில்லை.
நல்ல உணவு-நல்ல பானம் :
தொடர்ந்து வரக்கூடிய நான்கு வசனங்கள் மூலம் சிறந்த உணவையும் பானத்தையும் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான். எல்லா உணவுக்கும் பானத்திற்கும் அடிப்படையான மழையை முதலில் கூறுகிறான்.
” அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகின்றான். செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக ஓர் அத்தாட்சி இருக்கிறது.” (அல்குஆன் 16:65)
“கால் நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு.இரத்தத்திற்கும் சாணத்திற்க்கும் இடையில் அதன் வயிற்றிலிருந்து கலப்பற்ற பாலை நாம் உங்களுக்கு புகட்டுகின்றோம்.அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது.” (அல்குர்ஆன் 16:66)
“பேரீச்சை திராட்சை பழங்களிலிருந்து மதுவையும்,நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றிர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16: 67)
“உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும்,மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள்ளும்படி அறிவூட்டினான். அன்றி “நீ ஒவ்வொரு மலரிலிருந்தும் உணவருந்தி, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் ஓடுங்கிச் செல்.இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு..நிச்சயமாக இதிலும் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.” (அல்குர்ஆன் 16: 68,69)
பாலாறு, தேனாறு, மது ஆறு என மூன்று பானங்களை இவ்வுலகில் ஓடவிட்ட அல்லாஹ், இரண்டு நல்ல உணவான பால், தேனை அனுமதித்து, நல்ல உணவான பேரீச்சை, திராட்சையில் தயார் செய்யும் மதுவை தடுத்துவிட்டான். இரண்டு உயிரினங்களின் வயிற்றிலிருந்து வரும் பால். தேனை ஹலாலாக்கிய அல்லாஹ், மதுவை ஹராமாக்கினான். காரணம் என்ன?
நுண்ணுயிர்களின் வயிற்றிலிருந்து மது வருவதில்லை. இனிப்பை எடுத்துக்கொண்ட ஈஸ்ட்கள் ஒரு நொதியை (Zymase) என்சைமை வெளியாக்குகின்றன. இந்த கழிவுதான் இழிவான மதுவை (Alcohol) உருவாக்குகின்றது. அல்லாஹ் அறிந்தவன்! பாலும்,தேனும் அல்லாஹ்வால் அருளப்பட்ட உணவு; ஆனால் மது மனிதன் உருவாக்கும் ஊறல் பானமாகும்.
அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களை ஏற்று நடக்கும் நல்லடியார்களுக்கு சுவையான மூடி முத்திரையிடப்பட்ட உயர் ரக மது காத்திருக்கிறது. அப்பாக்கியம் பெற நல் அமல் செய்வோம்!
“முத்திரையிடப்பட்ட கலப்பற்ற திராட்சை மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியினால் ஆனதாகும்; (ஆகவே) இன்னும் (நல்லறங்கள் செய்து) அதற்கு முந்திக்கொள்பவர்கள் முந்திக்கொள்ளட்டும்.” (அல்குர்ஆன் 83:25)
அன்புச்சகோதரர்களே!
“பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும் நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.” அல் குர்ஆன் 16:67
என்ற இந்த சிறு வசனத்தில் அல்லாஹ் ஏராளமான இருபதாம் நுற்றாண்டு அறிவியல் துறை ஆய்வுக் கருத்துக்களை ஒன்றோடு ஒன்று உள்ளடக்கி வைத்துள்ளான். (Bio-chemistry,Micro organism, Cell biology,Genetic Engg,Mycology,and Nutrition.) ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும் “நிச்சயமாக சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஒரு அத்தாட்சி இருக்கிறது.” என்று கூறி நம்மை சிந்திக்கச் சொல்கின்றான்.
இந்த எளிமையான உண்மைகளை விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும், ஆலிம் மதரஸா பட்டம் தேவையில்லை. அறிவியலில் முனைவர் பட்டம் வாங்கத் அவசியமில்லை. பள்ளியில் படித்த பொது அறிவே போதுமானது.ஆர்வமும் முயற்சியும் மட்டுமே தேவை.
“மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டு வருவதற்காக இவ் வேதத்தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்;
புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வின் பாதையில் (அவர்களை நீர் கொண்டு வருவீராக!)” (அல்குர்ஆன் 14:1)
-எஸ்.ஹலரத் அலி. ஜித்தா.