பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?
இந்த உலகம் ஆணாதிக்க உலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஓரளவு அனைவரும் அறிந்து வைத்திருப்பர். இதற்கு எதிராக ஆணாதிக்கம் போட்டுத்தந்த பாட்டையில் நடைபோடுவதை பெண்களுக்கான சுதந்திரமாக மேற்கு நாடுகள் விளம்புகின்றன.
ஆணாதிக்கம் என்பதை ஆண் சார்ந்ததாகவும், பெண்ணியம் என்பதை பெண் சார்ந்ததாகவும் மடைமாற்றி ஆணுக்கு எதிராக பெண்ணைப் போராட வைப்பது எனும் ஏற்பாட்டின் மூலம் ஆணாதிக்கத்தை தக்க வைப்பதைத்தான் இன்றைய முதலாளியம் கைக் கொண்டிருக்கிறது.
ஆண்களும் பெண்களும் ஆணாதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களை ஆணாதிக்கத்தில் நீடிக்க வைப்பதின் பலனும் தேவையும் தனியுடமைக்கு இருக்கிறது. ஆகவே தனியுடமையை தக்கவைத்துக் கொண்டு பெண்ணியம் பேசுவது பொருத்தமாகவும் இருக்காது, தனியுடமையை தகர்ப்பதை நோக்கமாக கொள்ளாத வரை அது முழுமையடையவும் முடியாது.
காதல்
இன்று இளவயதின் பொழுது போக்காக இருக்கிறது காதல். அதற்கும் மேல் ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் போராட்டம். தனியுடமை வளர்ந்து வந்த காலங்களில் சமூகத்தின் கலவிக் கட்டுப்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆணின் பலதார வேட்கை (இன்றுவரை இது பல்வித வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது) வரைமுறையின்றி பெண்களைச் சீரழித்த போது, தன்னிடம் நீளும் பலதரப்பட்ட கைகளிலிருந்து தன்னைக் காக்க ஒன்றை தெரிந்தெடுக்கும் முடிவிலான பெண்ணின் ஆயுதம் தான் காதல்.
காதலின் அடிப்படையே ஆணாதிக்க பலத்தின் எதிரே பெண் தன் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளும் உத்தி தான். அதனாலேயே இன்றும் பெண் காதலிப்பவளாகவும், ஆண் காதலிக்கப்படுபவனாகவும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய பெண்ணியத்தின் பார்வையோ சுதந்திரமாய் காதலிக்கும் உரிமை கோருகிறது. அதாவது காதல் என்பதை சமூகத்துக்கு வெளியே தனி மனிதனின் உரிமையாக நுகர்ச்சி சார்ந்த விசயமாக அணுகுகிறது. ஆனால் அது இருவேறு கூறுகளாக பிரிந்து கிடப்பதை பொருட்படுத்த மறுக்கிறது.
ஆளும்வர்க்க மானோபாவத்தில் கட்டுப்பாடுகளற்று சுதந்திரமாக காதல் புரியும் உரிமையைக் கோருவதே இன்றைய பெண்ணியத்தின் செயல்பாடுகளாக இருக்கிறது. அதேநேரம் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் காதலிக்கவே சுதந்திரமின்றி முடக்கப் பட்டுள்ளது. எனவே காதலிக்க சுதந்திரம் கோருவது என்பது சமூக, பொருளாதார விசயங்களுடன் பிணைக்கப் பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் புறந்தள்ளும் எதுவும் காதலாக இருக்க முடியாது, உடல் நுகர்ச்சியாகவே இருக்க முடியும்.
திருமணம்
தொடக்கத்திலிருந்து இப்போது வரை திருமணம் என்பது ஒரே வடிவமாக இருந்து வந்திருக்கவில்லை. கணங்களுக்கு பொதுவான மண முறையிலிருந்து தனி மனிதனுக்கான மணமுறை வரை திருமணம் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. எனவே தற்போதைய திருமண வடிவம் இப்படியே நீடித்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இதில் முதன்மையாக கவனிக்க வேண்டியது, திருமணம் என்பது சொத்துடமையின் சாரம் தானேயன்றி காதலின் சாரம் அல்ல. ஆகவே சொத்துடமை மாறும் போது திருமணங்களும் மாறியே தீரும். ஏனென்றால் ஒருவனுடைய சொத்து வேறு யாரையும் அடைந்துவிடாமல் அவனின் நேரடி இரத்த வாரிசுக்கு கடத்துவது தான் திருமணத்தின் இறுதியான பலன்.
உழைப்பு
இயற்கையோடு வினை புரிந்து மனித முன்னேற்றத்திற்கான உற்பத்தியில் ஈடுபடுவதே உழைப்பு. இதில் பால் வேற்றுமைக்கு இடமில்லை. மனிதனின் தொடக்கமான புராதன பொதுவுடமை சமூகத்தில் பெண் தலைமை ஏற்றிருந்த வரையில் உற்பத்தியில், உழைப்பில் பால் வேற்றுமை ஊடுருவவே இல்லை. மாறாக ஆண் தலைமை ஏற்று ஆணாதிக்கம் கருக்கொண்ட போது பாலியல் ரீதியான பிரிவினைகள் மெல்ல மெல்ல புகுத்தப்பட்டன. சமூக உற்பத்தியில் ஆண் ஈடுபட பராமரிப்பு சார்ந்த பணிகளில் மட்டுமே பெண்கள் முடக்கப்பட்டார்கள்.
விவசாயம், மருத்துவம், கட்டடக் கலை போன்றவைகளை பெண்களே உலகிற்கு வழங்கி இருந்தாலும் திட்டமிட்டு பெண் உற்பத்தியிலிருந்து பிரித்து வைக்கப்பட்டாள். இதன்மூலமே ஆணைச் சார்ந்திருப்பவளாக பெண் மாற்றப்பட்டாள். பெண் ஆணைச் சார்ந்திருப்பவளாக இருபதன் மீதே ஆணாதிக்கம் நிலைபெற்றிருக்கிறது. எனவே ஆணாதிக்கம் தகர்க்கப்பட வேண்டுமென்றால் அதன் முதல் நிபந்தனையே சமூக உற்பத்தியில் பெண் ஈடுபடுத்தப் படவேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். ஆனால் இன்று பெண் உற்பத்திக்கு வெளியே சமையல், குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாள்.
அரசியல்
அரசியலில் பெண்களின் பங்களிப்பு நிச்சயமாய் ஆண்களுக்கு குறைந்ததாய் இருக்க முடியாது. இன்றைய நிலையில் பெண்கள் அரசியலில் பங்களிப்பது அரிதான செயலாகவே இருக்கிறது. அதேவேளையில், எல்லா விதத்திலும் பெண்களை ஒதுக்கி வைத்து விட்டு அரசியலில் பெண்களின் பங்களிப்பு இல்லை என்பது உள்நோக்கம் கொண்டதாகவே இருக்க முடியும்.
நிர்வாக உரிமை என்பது உற்பத்தியின் பங்களிப்பிலிருந்தே பிறக்கும். அரசியல் என்பது நாட்டின் நிர்வாகம். நாட்டின் உற்பத்தியில் பெண்கள் எந்த அளவிற்கு பங்களிக்கிறார்களோ அந்த அளவிற்குத்தான் நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்களிப்பு இருக்கும்.இந்த வகையிலும் பெண்கள் உற்பத்தில் ஈடுபட்டாக வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது.
– See more at: http://mujahidsrilanki.com