ஆர்ப்பாட்டங்களும், பெண்களும்!
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
இஸ்லாத்தின் பார்வையில் பெண்களும் ஆண்களோடு சேர்ந்தோ அல்லது தனி பெண்கள் மட்டுமோ ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாமா?
இஸ்லாம் பெண்களை கண்ணியமாகவும், உயர்வாகவும், மதிக்கிறது. நடக்கும்போது கால்களைத் தட்டி, தட்டி நடக்காதீர்கள்.
மேலாடையான பர்தா இன்றி வெளியே செல்லாதீர்கள்.
ஜாஹிலியாக் காலத்தில் வெளியே சுற்றித் திறிந்ததைப் போல சுற்றித் திரியாதீர்கள்.
வெளியில் செல்லும்போது மணம் பூசி செல்லாதீர்கள். குழைந்து, குழைந்து பேசாதீர்கள்.
ஆண்கள் சபைகளில் இரண்டரக் கலக்காதீர்கள்.
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்.
இப்படியான உபதேசங்கள் மூலம் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், என்பதை இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.
நேரடியாக குர்ஆனிலோ, அல்லது ஹதீஸிலோ பெண்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம் என்பதையோ, அல்லது கூடாது என்பதையோ காணமுடியாது.
இன்றைய உலகில் தனது உரிமைகளை அல்லது சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைக் காணலாம். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு விதங்களில் நடைப்பெற்று வருவதையும் காணலாம்.
சிலர் உண்ணாவிரதம் என்ற பெயரிலும், இன்னும் சிலர் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரிலும், இன்னும் சிலர் வீதி ஓரங்களில் கோஷங்களை எழுப்பியும், இன்னும் சிலர் வீதிகளில் இறங்கி கலவரங்களை ஏற்படுத்தியும், அதே போல சிறைக்கைதிகள் தனது உரிமைகளுக்காக சிறைச் சாலைக்கு மேலே கூறைகளில் ஏறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், தனிப்பட்ட சிலர் உயரமான மரங்களில் அல்லது கட்டடங்களின் மீதேறியும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் காணலாம். இன்னும் சிலர் ஆடையின்றியும், இன்னும் சிலர் சிலரை பயணக் கைதிகளாகப் பிடித்து வைத்தும், இப்படி பல விதங்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதைக் காணலாம்.
அநியாயங்கள் நடக்கும்போது, அல்லது பாதிப்புகளுக்கு ஆளாகும்போது, அநியாயக்கார்களுக்கு எதிராக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் சொல்லித் தருகிறது. அதேநேரம் எல்லை மீறக்கூடாது என்பதையும் இஸ்லாம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. என்றாலும் மார்க்கத்தில் வேறு விடயங்களோடு சொல்லப்பட்ட செய்திகளை ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதாரமாக காட்டக்கூடாது.
உதாரணமாக நபியவர்களின் காலத்தில் பெண்களும் ஒரே சமயத்தில் ஆண்களுக்குப் பின்னால் தொழுதார்கள், பெருநாள் தொழுகையில் ஆண்களுக்குப் பின்னால் தொழுதார்கள், போர்களத்தில் தாதியாக செயல்பட்டார்கள், பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள், ஹஜ், உம்றா காலங்களில் பெண்கள் ஆண்களோடு கலந்து கொண்டார்கள் என்று இது போன்ற ஆதாரங்ளைக் காட்டி எனவே பெண்கள் தாராளமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம் என்பது முற்றிலும் தவறானதாகும்.
ஏன் என்றால் இவைகள் எல்லாம் வணக்கங்களோடு சம்பந்தப்படுகிறது. அந்த வணக்கத்தின்போது எந்தவித சலசலப்புகளோ, கூச்சல்களோ இன்றி அவரவர் களைந்து சென்று விடுவார்கள். மேற்சொல்லப்பட்ட வணக்கங்களை நிறைவேற்றும் போதும் பெண்கள் எல்லை மீறிவிடாமல் நடந்துக் கொள்ளவேண்டும். என்பதையும் இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது.
அதேபோல பெண்கள் சுற்றுலா போகிறார்கள், பஜார்களுக்கு போகிறார்கள், இன்னும் பல இடங்களுக்கு போகிறார்கள் என்றால் ஏன் வீதிகளில் இறங்கி போராடக் கூடாது ? இதுவும் தவறான வாதம், ஏன் என்றால் இஸ்லாம் அனுமதித்த இடங்களுக்கு இஸ்லாமிய வரையரைக்குள் எல்லை மீறாமல் நடந்துகொள்ள முடியும். அதற்காக அங்கு போக முடியும் என்றால் ஏன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று கேட்பது பிழை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் இஸ்லாத்தை மீறி நடந்துக் கொண்டால் அதுவும் தவறுதான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்று உலகில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை அவதானிக்கும்போது, ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் அராஜகம் நடப்பதைக் காணலாம். பொதுவாக ஆர்ப்பாட்டத்தின் போது சத்தமாக கோஷங்ளை எழுப்பி தனது உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டும். இதன்போது கைகளை உயர்த்தி, அசைத்து, வெளிப்படுத்தும்போது ஊடகங்கள் அதை அப்படியே காட்சிப்படுத்தி வெளியிடுகிறார்கள். இதை வக்கிரப்புத்தி படைத்த சிலர் facebookல் போடும்போது அபாயா அணிந்திருந்தாலும் சில உறுப்புகளை வட்டமிட்டு அசிங்கமாக காட்டுவதை காணலாம். அதேபோல் சில துரோகிகள் இப்படியான படங்களை விபச்சாரிகளின் உடம்போடு தலையை எடிட் பண்ணி போட்டு விடுகிறார்கள். இன்று இது சர்வசாதாரணமாக மாறிவிட்டது.
சமீபத்தில் தென் மாகாணத்தில் தஃவா களத்தில் உள்ள ஒரு மௌலவியாவின் முழு விபரத்தையும் விபச்சாரியின் பகுதியில் விளம்பரம் செய்து உலகிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொலைபேசி அழைப்பின் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மௌலவியாவின் தைரியத்தினாலும் மனம் தளர்ந்து விடாமலும் எடுத்த நடவடிக்கையால் அந்த கயவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டார்கள். அந்த நான்கு கயவர்களும் முஸ்லிம் காமுகர்கள்தான். அதே போல சமீபத்தில் தழிழ்நாட்டில் ஒரு மௌலவிக்கு எதிராக திரண்டு விளக்கமாறை எடுத்துக் கொண்டும், சாணியைக் கரைத்தும் அந்த மௌலவியின் வீட்டிற்குள் ஊற்றி கோஷங்ளை எழுப்பினார்கள்.
அந்த காட்சியை சிலர் எடிட் பண்ணி ஒரு அமைப்பின் தலைவரின் போட்டோவை செட் பண்ணி அந்த தலைவரை விளக்கமாறினால் அடிப்பதுப்போல காட்சிப் படுத்தப்பட்டிருந்தை காண முடிந்தது. எனவே நாங்களே எங்கள் பெண்களை பழிக்கொடுத்து விடக்கூடாது. அதேபோல் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமம் அடையும்போது ஆர்பாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தண்ணீர்களை அடித்து விரட்டுவார்கள். அதனுடைய தாக்கத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல், சிதறடித்து ஓடும்போது பலர் காயங்களுக்கும், உயிர்பலி இடம் பெறுவதையும் காணலாம். சில நேரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல் துறையினர்களுக்கும் மோதல் ஏற்படும்போது ஆண்கள், பெண்கள் என்று பாராமல் தள்ளி விடுவதையும், தர, தர என்று இழுத்துச் செல்வதையும், தூக்கிக் கொண்டு அந்த பக்கம் போடுவதையும் காணலாம். மேலும் ஆர்ப்பாட்டங்கள் எல்லை மீறும்போது அவர்களை கைது செய்கிறார்கள்.
சமீபத்தில் எகிப்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பொலிஸ்காரர்களால், அல்லது இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பெண்கள் பல விதமான பாலியலுக்கும், மானபங்கத்திற்கும், பலியாவதை காணலாம். எனவே உரிமை என்ற பெயரில் இதற்கு நாங்களே துணை போகலாமா? மேலும் ஆர்பாட்டத்தின்போது சில எதிரிகள் நல்லவர்களைப் போல வேடம் தரித்து பொலிஸ்காரர்கள் மீது கற்களை எறிந்து நமது நோக்கத்தை சீர்குழைப்பதோடு, பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விடுவார்கள்.
இப்படியான கட்டங்களில் பெண்களை தவிர்ந்து கொள்வது மிகவும் பொருத்தமானதாகும். நமது மனைவியை நமது மகளை, நமது தாயை ஒருவன் பிடித்துத் தள்ளுவதற்கும், வீதிகளில் இழுப்பதற்கும் நாம் இடமளிக்கலாமா? அல்லது நமது குடும்ப போட்டோ facebook இல் சீரழிவதை அனுமதிக்கலாமா?
நடுநிலையோடு சிந்தியுங்கள். யாருக்காகவோ நமது குடும்பப் பெண்களை நாமே நடுத்தெருவுக்குக் கொண்டு வருவது சரியா ? எங்கள் தலைவர் சொன்னால் மட்டும்தான் நாங்கள் கேட்போம். அவர் கீறிய கோட்டை தாண்ட மாட்டோம். சரி-பிழை எங்களுக்கு எவரும் சொல்லித் தர தேவையில்லை என்போர்கள் தான் நினைத்தபடி செய்துகொள்ளலாம்.
source: http://islampaathai.com/index.php?option=com_content&view=article&id=