Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கும் ஒளிவிளக்கு!

Posted on May 19, 2014 by admin

இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கும் ஒளிவிளக்கு!

  சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான்  

நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு. இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் ‘ஆதமின் மக்களே!’ என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.

அவன் எல்லா உலகங்களின் இறைவன் (திருக்குர்ஆன் 1:1)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனித குலம் அனைத்திற்கான இறைத்தூதர் ஆவார்.

”ஓ மக்களே! நான் உங்கள் எல்லோருக்குமான இறைத்தூதன்” (திருக்குர்ஆன் 8:158)

சகல நாடுகளுக்குமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் (திருக்குர்ஆன் 25:1)

எல்லா நாடுகளுக்கும் உம்மை இரக்கத்தின்படியே அனுப்பியிருக்கிறோம். (திருக்குர்ஆன் 21:102)

இஸ்லாத்தைப் போல பிற எந்தச் சமயமும் உலக சகோதரத்துவத்தை வற்புறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு குறுகிய பிரிவினைச் சபை அல்ல. இது இஸ்லாத்தின் உள்ளொளியும், ஆற்றல் களமும் ஆகும், இஸ்லாம் மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒட்டுமொத்தமாக அறைகூவல் விடுக்கிறது. எல்லாப் படைப்புகளும் இறைவனைச் சார்ந்தவையே, அவனது படைப்புகளைச் சிறப்பாக நேசிக்கிறவனே, அவனால் அதிகமாக அன்பு செய்யப்படுகிறவன் ஆவான் என்கிறார். இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

மேலும் அவரே குறிப்பிட்டதாவது: ~என் அருமை எஜமானே! என் உயிரின் மற்றும் எனது எல்லாவற்றிற்குமான கர்த்தாவே! உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று உறுதி கூறுகிறேன்.

கடவுளின் வழிகளைக் கனம் பண்ணுங்கள், கடவுளுக்குச் சொந்தமான உலகப் படைப்பினிடம் அன்பு பாராட்டுங்கள். ஆகவே செயற்கைப் பிரிவுகளால் உருவாகிற வேறுபாடுகள், தடைகள் ஆகியவற்றை இஸ்லாம் ஏற்பது இல்லை. இஸ்லாம் அரேபியர்களுக்காக இறக்கப் பட்டதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனால் உலகத்திற்காக, அனைத்து மக்களுக்குமாக அது இறக்கப்பட்டது என்பதை ஏற்காமலிருந்தால் அது மனித குலத்திற்கு தான் மாபெரும் இழப்பாகிப் போகும்.

இஸ்லாம், சர்வதேச வாழ்க்கை முறையை எவ்வாறு அங்கீகரிக்கிறது, என்று பார்ப்பது நலம். ஒரு இஸ்லாமிய குடியரசிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் மற்ற நாடுகளுக்குமான உறவு முறைகளை இது குறித்துக் காட்டுகிறது. இம்மாதிரியான உறவுமுறைகளும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திடல் வேண்டும். இதற்கான அடிப்படைகளை இப்போது பார்க்கலாம்.

மனிதத் தொடக்கம், மனிதனின் நிலை, அவனது சமுதாய நோக்கம். ஆகியவற்றில் உள்ள ஒரே மனித சமுதாய உணர்வின் மீது அசைவற்ற நம்பிக்கை வைத்திருப்பது (திருகுர்ஆன் 4:1, 7:189, 49:13)

மற்றவர்களாக ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வரை அவர்களது உயிர், உடமை, உரிமைகளுக்கு பாதுகாப்புத் தருவதில் உறுதியாக நிற்பது. (திருகுர்ஆன் 2:190-193,42:42)

நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ணத் தின் அடிப்படையில் சமாதானத்தை உறவு முறைகளில் கடைபிடித்தல். (திருகுர்ஆன் 8:61)

இஸ்லாமிய அரசாங்கத்தின் இறையாண்மைக்குச் சவால் விடுத்து, அதன் உரிமைகளைக் காலில் இட்டு மற்ற நாடுகள் மிதிக்கிறபோது, வேறு வழிகள் பயன் தராவிட்டால் தற்காப்பிற்காகப் போரிடலாம். (திருகுர்ஆன்; 2:190-195,216,218, 22:39-41)

மற்ற நாடுகள் பிரமாணிக்கமாக இருக்கிறவரை அந்த நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மதித்தல்-நிறைவேற்றுதல். (திருகுர்ஆன் 5:1, 8:55-56,58, 9:3-4)

உள்நாட்டில் அமைதியைக் கட்டிக் காத்து, மக்கள் நலத்தை மேம்படுத்துவது மாத்திரம் போதாது: ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், மனித குலத்தின் ஒட்டுமொத்தமான, பொதுவான முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும். இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே வற்புறுத்தி வந்தார்கள். ஆகவே, உலக நலத்திற்காகச் சில சமயங்கள் பிரார்த்திப்பதோடு நின்று விடுகிற நாட்களில், மனித குல ஈடேற்றத்திற்காக முன்நிற்பதை, உழைப்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தை நாடு கடந்து வந்த நதி என்று அழைக்கலானேன்.

இஸ்லாம்;; ஒரே உலகத்திற்கு நம்மை அழைக்கிற ஒளிவிளக்கு… உலகத்தின் பல்வேறு சின்னதும் பெரிதுமான பிரசங்கத் தொட்டிகளிலிருந்து ஒரே மாதிரி எடுத்துச் சொல்லப்படுகிற தத்துவார்த்தம் ஒன்று உண்டென்றால் அது ஒரே உலகம் தான்.

உலகம் ஒன்றாக இல்லை என்பதற்குக் காரணம், உலகத்தின் அடிப்படை அழகான மனிதனும் ஒன்றானவன் இல்லை என்பதுதான். அடையாளம் காண்பதற்காகவே மனிதன் வெவ்வேறாகப் படைக்கப்பட்டான். இப்படித்தான் திருகுர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் உலகம், மதம், மொழி, இனம், நாடு என்கிற அடித்தளத்தில் பிரிந்தும், பிளந்தும் கிடக்கிறது.

ஒருவரிடமிருந்து, மற்றொருவர் எதற்காக வேறுமாதிரி படைக்கப்பட்டாரோ அந்த அடிப்படை அவசியத்தையே மனிதகுலம் தாறு மாறாக்கி விட்டது. தாமஸ் மூரிலிருந்து, ஹெச்.ஜி. வெல்ஸ் வரை-அவருக்குப் பிற்பாடும் ஒரே உலகம் கனவுலக சஞ்சாரமாகவே அமைந்துள்ளது. இப்போது பல்வேறு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளின் இரவு உணவுக்குப் பின்னரான மயக்கம் கலந்த பேச்சுகளில் மாத்திரமே இந்த ஒரே உலகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவை வழிநடத்தும், புதிய ஒரே உலகத்திற்கான அறைகூவலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாம் ஒன்றுதான் அந்த ஒரே உலகத்திற்கான வழி என்பதாகத் தோன்றுகிறது. உலகின் ஒருமை என்பது சில சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து விடுவது அன்று. சில நாடுகள் ஒரு தலைப்படுவதும் அன்று. இவ்வாறான ஏற்பாடு செய்யப்படுகிற அமைதி, கடந்த காலத்தில் உலக அமைதிக்கே குந்தகம் உண்டாக்கியிருக்கிறது. வரலாற்றில் இதற்கு நிரம்ப உதாரணங்கள் உண்டு. ஒருவர் மற்றொருவரைத் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொன்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றாகி விடுகிறது.

ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கொல்லுகிறபோது, அதன் ஆத்மாவை நெறித்து அழிக்கிறபோது, வெற்றி பெறுகிறவர்களும், தோற்றுப்போகிறவர்களும் தங்களுக்காகப் போரிட்டவர்கள், படுகொலைகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி மகிழுகிறார்கள்.ஆகவேதான் சில வேளைகளில் ஒரு நாடு கரை கடந்த தேசப்பற்றால் எரிகிறபோது அது ஒரே உலகம் என்கிற தத்துவத்தற்கு எதிராக போகிறது.

தேசப்பற்று அவசியமே. அது அடுத்த நாட்டை வெறுப்பதாக இருத்தல் ஆகாது. நாடு, நாமே ஏற்றுக்கொண்ட ஏற்பாடுதானே! இதில் அடுத்த நாட்டை வெறுப்பதற்கு எங்கே இடமிருக்கிறது? இவ்வளவு முயன்றும் ஒரு நாட்டை ஏன் நம்மால் ஒற்றுமைப்படுத்த முடியவில்லை? எந்த அடிப்படைகளில் நாட்டு மக்களை ஒன்று சேர்க்க முயலுகிறோமோ, அந்த அடிப்படைகளே தவறானவையாக இருக்கின்றன. இன அடிப்படையில் தனது மக்களை ஒன்று சேர்க்க ஒருவர் முயலுகின்றார். சமயப் பிரிவினைகள் தலைதூக்குகிறபோது, இன ஒற்றுமை எடுபடாமல் போகிறது.

மற்றொருவர் சமய அடிப்படையில் தமது மக்களை ஒன்று திரட்ட முனைகின்றார். இனப் பிரிவுகள் தலைகாட்டி இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. தேசீயம் என்கிற அடிப்படையில் வேறொருவர் மக்களை ஒன்று திரட்ட முற்படுகிறார். ஆனால், பல்வேறு மொழிகள், மொழி உணர்வுகள், அதனதன் வரலாறுகள், செழுமைகள், பாரம்பரியங்கள் தேசீய அடிப்படையில் சேர இயலாமல் இந்த முயற்சியை அழித்து விடுகின்றன. காரணம் மொழிதான் மனிதனின் கடைசியான மானச் சின்னம். அந்த மொழியை அவமானப் படுத்திவிட்டு, நாட்டொருமை பேசுவது வீண்வேலை.

ஒருவர் மொழி அடிப்படையில் அம்மொழி பேசுவோரை ஒன்றிணைக்க முயலுகின்றார். அதிலும் அவர் தோல்வியே பெறுகின்றார். காரணம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணம் படைத்தோர் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டி விடுகின்றன. நீங்கள் ஒன்றாக்க நினைக்கிற மனிதத் தொகுதி மண்புழுவைப் போல பிரிந்து கொண்டே போகிறது! ஏன்?

மனிதர்களைப் பிரிக்கிற, பேதப்படுத்துகிற அடிப்படை அலகுகளை வைத்துக் கொண்டு அவர்களை ஒன்று சேர்க்கிற மடத்தனத்தில் இவர்கள் இறங்குகிறார்கள், இம்மாதிரியான தவறான முயற்சிகளுக்கும் வரலாற்றில் வெற்றி வந்ததுண்டு. ஆனால் அந்த வெற்றி நீடித்ததாகவோ, நிலைத்ததாகவோ இருந்ததில்லை.

முதலாவதாக நம்மில் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தில் ஒரு மகத்தான மகரந்தம் மாத்திரமே என்பதை உணர வேண்டும். வானத்தை, அதில் இயங்கும் பல்வேறு கோளங்களை, தாளகதி தப்பாமல் இயங்கும் உடுக்களை, இரு சுடர்களை எண்ணிப் பார்த்தால் இயற்கையில் ஒரு ஒழுங்கு இருப்பது புலப்படும்.

காஸ்மாஸ் (cosmos) என்கிற வார்த்தைக்கே ஒழுங்கு என்பதுதான் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களும் ஏவல் செய்கிற பேராண்மை நம்மை வியக்க வைக்கிறது. இவற்றையெல்லாம் இயக்குவோன் யார்? எந்தப் பெயராலும் அவனை அழைத்துக் கொள்ளுங்கள்.அவன் இறைவன் அல்லவா? அந்த இறைவன் நாட்டுக்கொரு கதிரவனைப் படைத்தானா? நதிகள் ஏன் நாடுகளைக் கடந்து, ஊடறுத்துப் பாய்கின்றன.?

மழைத்துளிகளில் இது இந்த நாட்டைச் சார்ந்தது- அது அந்த நாட்டைச் சார்ந்தது என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? ஒருவர், சுவாசித்துவிட்ட காற்றையல்லவா நாம் சுவாசிக்கிறோம்: நமது காற்றை வேறொருவர் சுவாசிக்கிறார்.

காற்றுக்கு மொழி உண்டா? இனம் உண்டா? சாதி உண்டா? நாடு உண்டா? நேற்று, இன்று, நாளை என்கிற காலப் பிரிவினை உண்டா? நாம் சுவாசிக்கிற காற்றில் இது இந்தியக் காற்று – இது பாகிஸ்தான் காற்று என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் பிரிவினைகள்? பேதங்கள்? இறைவன் ஒரே உலகத்தைத்தானே படைத்தான். இதில் ஏன் இத்தனை பிளவுகள்? மனிதனே இந்தச் செயற்கையான பிரிவினைகளுக்கெல்லாம் காரணம். இவ்வாறு பிரிவது, பிரிப்பது மனிதனின் மாற்றமுடியாத இயற்கை. அவன் தன்னைத் திருத்திக் கொள்ள இயலுமா? இயலும்: மனிதன் தனது ஆறாவது அறிவை முழுக்கப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்பு(அடிமை)கள் என்பதை அவன் அறிய இயலும். அவன் படைத்த ஒரே உலகத்தைச் செயற்கைச் சுவர்களால் மனிதன் பிரித்துப் பேதப்படுத்திப் பின்னப்படுத்தலாமா?

இறைவனின் வழிகாட்டுதலைப் பற்றியே இஸ்லாம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. இறைவனின் வழிகாட்டுதல் எங்கே இருக்கிறது? திருகுர்ஆனில் கண்கள் படைத்தோருக்கெல்லாம் காணக்கிடக்கிறது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே – முஸ்லிம்கள் பிரகடனப்படுத்துகிறார்கள்.

நமது புகழ் மொழிகள் எந்த அளவிற்கு மனிதர்களை நோக்கி மையம் கொண்டுள்ளன? வேறு வழி இல்லாமல், உடைந்து போன நட்சத் திரங்களையும், ஊளையிடுகிற நரிகளையும் மனிதன் புகழ்ந்து பேசித் திரிகிறான்.

இந்த அற்பமான மனிதர்கள் இந்தப் புகழுக்கு எள்ளவும் உகந்தவர்கள் அல்லர் என்பதனை அவன் அறியமாட்டானா…? நாம் நம்மைச் சோதித்தாக வேண்டும். இறைவன் ஒருவனே என்று இஸ்லாம் அறிவிக்கிற போது, இறை அடிமைகளான மனித குலத்தவர் அனைவரும் ஒருவரே என்றுதானே பொருள்? இறைவனே நமது பேரரசன்; உலகத்தில் நம்மை ஆள வந்துள்ள மற்றோர் அவனது சின்னச் சின்ன பிரதிநிதிகள்; அதை அவர்கள் மறந்தால் வல்ல இறைவனே அவர்களுக்கு அதை நினைவு படுத்துவான்.

மதீனாவில் நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய முதல் சமுதாயத்தை உற்று நோக்குங்கள். போரிடுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்த, குழுக்களாகப் பிரிந்து கிடந்த அரேபியர்களை ஒரு குடையின் கீழ் தம் வாழ்நாளிலே அவர் கொண்டு வந்தது வரலாற்று அதிசயம் அல்லவா? இறை அச்சத்தில் மக்களை ஒன்றி ணைத்து ஒழுக்கக் கேடுகளிலிருந்தும், தப்பறைகளிலிருந்தும், நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடுதலை செய்யவில்லையா?அந்த மக்களை நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்று சேர்த்தது-மொழியை வைத்தா? நாட்டை வைத்தா? இனத்தை வைத்தா?எதை வைத்து…?இறைவனை வைத்து அவனது திருவெளிப்பாடான திருகுர்ஆன் என்ற நெறிநூலை வைத்து.அப்படி என்றால் இறை நெறிநூலின் அடிப்படையில் மாத்திரமே. அவனது வெளிப்பாட்டின் வண்ணம் மாத்திரமே இந்த ஒரே உலகம் சாத்தியமாகும் என்பதற்கான வல்ல அறிகுறிகள் உள்ளன அல்லவா?

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக் கொள்ளுகிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பு உள்ளவனாக இருக்கிறான். (திருகுர்ஆன் 4:1)

என்று இறைவனின் நெறிநூல் உரைக்கின்றது. ஒரே உலகத்திற்கான இஸ்லாம் காட்டும் அடிப்படைகள் எவை என்று பார்த்தால்.

1. இறை அச்சம்

2. ஒரே மனிதனிலிருந்து உண்டான உலக சமுதாயம்

3. ஆண் பெண் சமத்துவம்

4. தனிப்பட்டோர், சமுதாய உரிமைகள், கடமைகள்5. கடவுளின் நித்தியக் கண்காணிப்பு. ஒரே உலகத்திற்கான, தள்ள முடியாத, தவிர்க்க முடியாத அடிப்படைகள் இவை. இறைவனின் மீதான இஸ்லாமிய நம்பிக்கை உலக சமுதாயத்தை ஒரு சேரக் கட்டுகிற இணைப்புச் சங்கிலி; இஸ்லாமியத் தொழுகை மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை நிறுவுகிறது.

இஸ்லாத்தின் ரம்சான் மாத நோன்பு முஸ்லிம்களிடத்திலாவது உலக அளவில் ஒருமை காணுகின்றது. முஸ்லிம்களின் ஜகாத் வறிய சகோதர சகோதரிகளுக்கு வலியச் சென்று உதவ முன்வருகிற வழி. ஆதலால் இந்த உலகம் எல்லோருக்கும் உரியது என்றாகிறது.

இஸ்லாத்தின் ஹஜ் புனித யாத்திரை மனிதனுக்கு மனிதன் உள்ள வேறுபாடுகளை முஸ்லிம்கள் மத்தியிலாவது மறக்கடிக்கப் பண்ணுகிறது.பாழ்பட்டுக் கிடக்கிற உலகத்தை மீட்டு ஒரே உலகமாக இறைவனின் பூந்தோட்டமாக ஆக்குகிற பொறுப்பை இஸ்லாம் மேற்கொண்டுள்ளது.இல்லாவிட்டால் தனது சமுதாயக் கடமை களைச் சரிவர ஆற்றாத முஸ்லிம், இறைவனை உண்மையாகவே தொழ இயலாது என்கிற அளவிற்கு இஸ்லாம் சொல்லியிருக்காது.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிரிருந்தே படைத்தோம், நீங்கள் ஒருவரை – ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்க ளைக் கிளைகளாகவும், கோத்திரங்களாக வும் ஆக்கினோம், (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தி(தக்வா) உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ் விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருகுர்ஆன் 49:13)

என்கிற திருகுர்ஆனின் வரிகள் ஒரு நாட்டினருக்கோ, மொழியினருக்கோ, இனத்தவருக்கோ உரியது என்று எவரேனும் குறிப்பிட இயலுமா? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொறுத்தமட்டில் மனிதர்களில் இரண்டே பிரிவினர்தாம்.

1. இறைவனுக்கு அச்சப்படுவோர்2. இறைவனுக்கு அஞ்சாதோர்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவில் உருவாக்கிய முதல் சமுதாயத்திலேயே ஆப்ரிக்கர்களும், பாரசீகர்களும் சகோதரர்களானார்கள். மனம் மாறி முஸ்லிமான பிலால் என்ற ஆப்ரிக்கர் உமர் குறைஷியாலேயே தலைவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

நேர்வழி நடவாத ஒரு அரேபியனை விட நேர்வழி நடக்கிற ஒரு ஆப்ரிக்கன் ஆளத் தகுதி பெற்றவன் என்று நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடிக்கடி எடுத்துக் காட்டுகிறார்கள். வேகமாக மாறிவருகிற உலகத்தின் சுகக்கேடுகளுக்கு இஸ்லாம் ஒன்றுதான் மாமருந்து என்றெனக்குத் தோன்றுகிறது.

இஸ்லாமிய வாழ்க்கையைக் கவனத்தில் கொள்ளாமல், புறந்தள்ளிவிட்டு உலக சகோதரத்துவம் பேசுவதும், ‘ஒரே உலகம்’ அடைவதற்குப் பாடுபடுவதும் மன்னிக்கவே முடியாத குற்றங்களாகும்.

இறைவன் நமது உலகத் தலைவர்களின் உள்ளங்களில் பேசட்டும், அவர்களும் ஆர்வத்தோடு அவனது மொழிகளைக் கேட்கட்டும், அப்போது ஒரே உலகம் தனது தத்துவார்த்த மேடையிலிருந்து இறங்கி, நிதர்சனத்தை நோக்கி உருளத் தொடங்கும்.

நூல் : இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம், (வலம்புரிஜான்) பக்கம். 256-269)

source: http://orkadavul.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

51 − 50 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb