‘காஃபிர்’ எனக் கூறி பாவியாகாதீர்!
மவ்லானா வஹீதுத்தீன் கான்
[ ஒவ்வொரு பிரிவினர், சமூகத்தினர் அவர்களுக்கென்று இடப்பட்ட பெயர்களை வைத்தே குர்ஆன் கூறியிருக்கிறது. ஒரு இடத்திலும் அவர்களை காஃபிர் எனக்கூறவில்லை.
இஸ்லாம் பார்வைப்படி முஸ்லிமாக இல்லாதவர்களை எளிமையாக முஸ்லிமல்லாதவர்கள் என்று கூறப்படும். இந்த வழி முறையில் தான் வார்த்தை உபயோகித்தல் வரவேண்டும். காஃபிர் எனக் கூறக்கூடாது.
தனிப்பட்ட மனிதரையும் காஃபிர் எனக்கூறும் அனுமதி இஸ்லாத்தில் உள்ளதா?
இஸ்லாத்தின் பார்வையில் இல்லை! அப்படி ஒருவரைப் பார்த்து காஃபிர் என்று கூறுபவர் பாவத்துக்கு ஆளாகுவார். கபடமனிதராகக் கருதப்படுவார்.
காஃபிர் சொல்லாட்சியை நபிமொழி கடுமையாகக் கண்டிக்கிறது. எவர் ஒருவரும் மற்றொருவரை காஃபிர் – ஃபாஸிக் என்று கூறுவாரேயானால் எதிராளி அச்சொல்லுக்கு பொருத்தமானவராக இல்லாத பட்சத்தில், சொன்னவரிடம் அச் சொல் திரும்பும். (ஆதாரம்: முஸ்னத் அஹமத்)
“காஃபி – ஃபாஸிக்” சொற்கள் பிரயோகித்தல் தனிப்பட்ட நபரின் கருத்து, செய்கை. மதக்கருத்துடைய போதனையல்ல. ]
‘காஃபிர்’ எனக் கூறி பாவியாகாதீர்!
மவ்லானா வஹீதுத்தீன் கான்
இஸ்லாம் குறித்து தெரியாத பெரும்பான்மை மக்கள் செவிகளுக்குள்ளும் இரண்டு சொற்கள் ஒலித்திருக்கும். ‘காபிர்’ – மறுப்பவர். ‘குஃப்ர்’ – மறுப்பு.
முஸ்லிம் அல்லாஅதவர்களை காஃபிர் என்பது உலா வரும் பொதுக்கருத்து. இக்கருத்து, எண்ணம் நாட்டின் வளர்ச்சி, அமைதியைக் கெடுக்கும்.
இறை நம்பிக்கையற்றவர்களையும், இறை மறுப்பாளர்களையும் நோக்கியே ‘காஃபிர்’ சொல்லை குர்ஆன் பிரயோகிக்கிறது. குர்ஆன் பிரயோகிக்கும் காஃபிர் சொல் தனி மனிதனுக்குறியது. ஒரு சமூகத்திற்கோ, இனத்திற்கோ உரியது அல்ல.
இஸ்லாம் பார்வைப்படி முஸ்லிமாக இல்லாதவர்களை எளிமையாக முஸ்லிமல்லாதவர்கள் என்று கூறப்படும். இந்த வழி முறையில் தான் வார்த்தை உபயோகித்தல் வரவேண்டும். காஃபிர் எனக் கூறக்கூடாது.
ஒரு சமூகம், பிரிவு எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இடப்பெற்ற பெயரைத்தான் அழைக்க வேண்டும். உதாரணத்திற்கு; அமெரிக்கா எனில் அமெரிக்கா என்றும், அமெரிக்கர் என்றால் அமெரிக்கர் என்றுமே அழைக்க வேண்டும். சுயமாக மாற்றி “தாருல் குஃப்ர்” – குஃப்ருகளின் நிலம்”, காஃபிர்கள் என்றெல்லாம் அழைக்கக்கூடாது. இதற்கு பலவகையில் உதாரணங்கள் குர்ஆனிலிருந்து எடுத்துரைக்க இயலும்.
ஒவ்வொரு பிரிவினர், சமூகத்தினர் அவர்களுக்கென்று இடப்பட்ட பெயர்களை வைத்தே குர்ஆன் கூறியிருக்கிறது. ஒரு இடத்திலும் அவர்களை காஃபிர் எனக்கூறவில்லை.
மக்கா காலத்தில் இறக்கியருளப்பட்ட ஒரு சில சூறாக்கள் “முஸ்லிம் அல்லாதவர்கள் அரபுலகத்துக்கு வெளியே வாழ்கின்றனர்” என்றே கூறுகின்றன. குறிப்பாக 30-வது அத்தியாயம் துவக்கத்தில் Byzantines – பைஸன்டைன்ஸ் என்னும் பிரிவினர் வாழ்ந்தார்கள். இவர்களை வெற்றி கொண்டு வந்தவர்கள் டைன்ஸ் கிறிஸ்துவர்கள். இருப்பினும் அவர்களைக் குர்ஆன் காஃபிர் என்று கூறவில்லை. பைஸன்டைன்ஸ் என்ற பெயர் கொண்டே குறிப்பிட்டிருக்கிறது.
அல்குர்ஆன் அத்தியாயம் 105-இல் உள்ள பதிவு. ஏமன், அப்ரஹா நாடுகளிலிருந்து முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களின் படை வீரர்கள் கஃபத்துல்லாவை தாக்க வந்தனர். அவர்களை “பீப்பிள் ஆஃப் தி எலிஃபெண்ட்ஸ்” – People of the Elephants – “யானைப்படை வீரர்கள்” என்றே குர்ஆன் பதிவு செய்திருக்கிறது. காஃபிர் என்று பதிவு செய்யவில்லை.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 610-இல் நபிப்பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வழங்கப்படும் முன்னதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனிருந்த அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உரையைத் துவங்கும்போது, ஓ மக்களே!, மனிதர்களே! என்றழைத்துத்தான் உரையாற்றுவார்கள். குரைஷி மக்களே!, அப்துல் முத்தலிப் பிள்ளைகளே! என்றும் அழைப்பார்கள். வேறு எந்த சொல்லும் உபயோகித்ததில்லை. வாழ்வின் இறுதி வரை கடைபிடித்தார்கள். காஃபிர் என்ற சொல் கூற மாட்டார்கள். நபிப்பட்டம் பெற்று 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்தார்கள். அதன்பிறகு மதினா புலம் பெயர்வு. முதல் கட்டக் காலம் மக்கா. இரண்டாம் கட்டக் காலம் மதினா.
அல்-குர்ஆன் அத்தியாயம் 109- இன் ஆரம்பத்தில் “ஓ காஃபிர்களே!” என்று தொடங்கும் குர்ஆனில் ஒரு வரி “நான் வண்ங்குபவனை நீங்கள் வணங்க மாட்டீர்கள்” என்று கூறுகிறது. இந்த அத்தியாயம் மக்காவில் இறக்கப்பட்டது. மக்காவில் வாழும் மக்களுக்காகச் சொல்லப்பட்டது. இறக்கப்பட்ட 8 வருடங்களுக்குள் மக்கா மக்கள் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றிருந்தனர்.
அல்-குர்ஆன் அத்தியாயம் 110: 1,2 வசனக்கள்; “இறைவனுடைய உதவி, வெற்றி வரும் போது நீங்கள் காண்பீர்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக இறை மதத்திற்குள் வருவர்”.
மக்கா மக்கள் முழுவதுமாக முஸ்லிம் ஆகப் போகின்றனர், பிறகு ஏன் காஃபிர் எனக்கூறப்பட்டது? “நான் வணங்குபவனை நீங்கள் வணங்க மாட்டீர்கள்” என்று சொல்லப்பட்டதும் ஏன்? கேள்விகள் எழலாம்.
அல்-குர்ஆன் அத்தியாயம் 109 -இல் கூறப்பட்ட காஃபிர் வார்த்தை நயமான கண்டிப்புத் தன்மையுடன் உரைக்கப்பட்ட வார்த்தை. அச் சொல்லை உறுதியானதாக, சட்ட பூர்வமானதாகக் கருதக் கூடாது. ஒரு எச்சரிக்கைக்காக மக்கா மக்களுக்கு இறைவனின் பார்வையில் சொல்லப்பட்டது. அவர்கள் நபியைப் பின்பற்றாவிட்டால் உண்மை மறுப்பாளர் ஆகி நரகத்திற்குச் செல்ல நேரிடும். நம்பிக்கையின் பக்கம் அவர்களை அழைப்பதற்காக தளர்வாகக் கூறப்பட்டது. அதன் பின்னரும் மக்கா மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். அவர்களைப் பழிப்பதற்காக காஃபிர் சொல் பயன்படுத்தப்படவில்லை.
தனிப்பட்ட மனிதரையும் காஃபிர் எனக்கூறும் அனுமதி இஸ்லாத்தில் உள்ளதா? இஸ்லாத்தின் பார்வையில் இல்லை! அப்படி ஒருவரைப் பார்த்து காஃபிர் என்று கூறுபவர் பாவத்துக்கு ஆளாகுவார். கபடமனிதராகக் கருதப்படுவார்.
காஃபிர் சொல்லாட்சியை நபிமொழி கடுமையாகக் கண்டிக்கிறது. எவர் ஒருவரும் மற்றொருவரை காஃபிர் – ஃபாஸிக் என்று கூறுவாரேயானால் எதிராளி அச்சொல்லுக்கு பொருத்தமானவராக இல்லாத பட்சத்தில், சொன்னவரிடம் அச் சொல் திரும்பும். (ஆதாரம்: முஸ்னத் அஹமத்)
“காஃபி – ஃபாஸிக்” சொற்கள் பிரயோகித்தல் தனிப்பட்ட நபரின் கருத்து, செய்கை. மதக்கருத்துடைய போதனையல்ல.
ஃபிஸ்க் – பாவம்”. “குஃப்ர் – மறுப்பு” இவையிரண்டும் தனித்தொரு மனிதனின் இதயம் சம்பந்தப்பட்டவை. மனிதன் உள்ளத்தில் உள்ளதனை அறியக் கூடியவன் இறைவன் மட்டுமே.
காஃபிர் என்ற சொல்லை உதிர்ப்பதன் மூலம் இறைவன் குடைக்குள் தான் வந்துவிட்டதாக சொன்னவர் கருதிக்கொள்கின்றார். உண்மையான இறையச்சவாதி இந்த சொல்லை மற்றொரு நபரை நோக்கி தனித்தோ, பொது மேடையிலோ பிரயோகிக்க மாட்டார். தான் புரியும் இறை நேசித்தலை மற்றவருக்கு எடுத்துரைப்பார். அல்லாஹ்வின் முடிவை தனது முடிவாக எடுத்துக்கொள்ள மாட்டார். தனது பணி இறை ஞானத்தை எடுத்துரைத்தலே என்பதில் கவனமாக ஈடுபடுவார்.
உண்மை முஃமினின் பணி அல்லாஹ் கூறிய வழியில் வாழ்தல். தான் பெற்ற செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்தல். வாழ்நாள் முடிவு வரை இறை பணி ஆற்றுதல். மற்றவையனைத்தும் இறைவனுக்குரியவை என்று உணர்பவரே சிறந்த முஃமின் முஸ்லிம்.
தமிழாக்கம்: நாகூர் மீரான். (முஸ்லிம் முரசு, மே 2014, பக்கம் 3-5)