M U S T R E A D
“பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்மனது என்னவென்று புரியவில்லையே…!”
மேலேயுள்ள பிரபலமான பழைய தமிழ் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா?
முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட! நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன்.
ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும்.
பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள்?
தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றான்; ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாக வளருகின்றான்.
ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..?
பாலியல் தேவைகளுக்காக பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதை ஓர் இயற்கையான உணர்வாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அதையும் மீறி பெண்கள் மீதான மரியாதையற்ற அவனது எண்ணங்களையும் நடத்தைகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?
நமது சமூகத்திலே தனது வயதொத்த ஒரு பெண், தன்னைவிட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருப்பதை விரும்பாத அல்லது சகித்துக்கொள்ள முடியாத போக்கு ஆரம்பப் பாடசாலைப் பருவத்திலிருந்தே ஆண்பிள்ளைகளிடம் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பதின்வயதை அடைந்ததும் ஒரு பெண்பிள்ளை பாடங்களிலோ அல்லது பாடசாலைச் செயன்முறைகளிலோ ஆண் பிள்ளைகளுக்குச் சமமாகவோ அல்லது ஆண்களை விடத் திறமையாகவோ சவாலாக இருந்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவார்கள்?
ஒன்றில் முயன்று படித்துப் பயின்று அவளை முந்துவதற்கு நினைப்பான். முடியாதவிடத்து நேர்மையீனமான வழிமுறைகளைக் கையாண்டு அவளை வீழ்த்துவதற்கு நினைப்பான். இரண்டும் முடியாதவிடத்து அவள் திறமை காட்டும் துறையை மலினமாகச் சித்திரித்து அவளது சுயதிருப்தியை இல்லாதொழிக்க முயற்சிப்பான்.
இதுவே வளர்ந்து தொழிற்துறைக்குள் வந்தபின்பு ஒரு பெண் உயர்பதவிக்கு வந்து விட்டாளெனின் அவளை சக ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள்ஸ? ஒன்றில் அவளை மானசீகமாக வெறுப்பார்கள். அல்லது அவளது பெண் என்ற பால்நிலை வேறுபாட்டை ஒரு பலவீனமாக எடுத்துக்காண்பிக்கும் விதமாக அவளை சுயமாக இயங்கவிடாது மிகை உதவிகளைப்புரிய முற்படுவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு பாடசாலைக்கு அதிபராக சகல தகைமைகளுடனும் ஒரு பெண் நியமிக்கப்பட்டாளாயின் அங்குள்ள பெரும்பான்மையான ஆண் ஆசிரியர்கள் அவளை தமது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வதற்கு உள்ளுர விரும்புவதில்லை. அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஒரு பெண்ணின் கீழே இயங்குகின்றோமே என்ற ஆற்றாமையோடு வெதும்பிக் கொண்டிருப்பார்கள்.
அல்லது ‘நீங்கள் பெண் என்பதால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு ஒத்தாசை புரிகின்றோம்” என்று உதவுவார்கள். உதவிபுரிவது நல்ல விடயம்தான் என்றாலும் அந்த உதவிகளுக்குள்ளே இருக்கும் மறைமுக செய்தி முக்கியமானது. அதாவது ஒரு தகைமையுள்ள பெண்ணைக்கூட அவளது பலவீனங்களை வைத்து வீழ்த்துவதிலே ஆண்களுக்குள்ள குரூர திருப்தியைத்தான் அந்த உதவிகள் வேறுவிதமாக நிறைவேற்றுகின்றன.
இவ்வளவு ஏன் ஒரு நமது நாட்டின் ஆட்சி உயர்பீடத்திலே ஒரு பெண் இருந்த கால கட்டங்களில் எல்லாம் “பொம்பளை ஆட்சிக்குக் கீழ் இருப்பது நல்லது இல்லை’ என்று கூறித்திரிந்த படித்த கனவான்கள் கூட நம்மிடையே இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தமது வாழ்விலே தாய், சகோதரி, தாரம், மகள், மருமகள், பேத்தி என்று ஓர் ஆணுக்கு வாழ்நாள் முழுவதும் பெண் உறவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தும் கூட பெண்ணை சகமனிதனாக கருதுவதற்கு ஆண்கள் ஏன் முன்வருவது கிடையாது…?
ஏன் பெண்களை கடவுள்களாகப் போற்றுகின்றார்களேஸகாதலி என்று கொஞ்சுகின்றார்களேஸமனைவி ஏன்று மாய்கின்றார்களே தாயிற் சிறந்த கோவிலுமில்லைஸதாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருப்பதெல்லாம் ஆணணாதிக்கமுள்ள இந்தச் சமூகம்தானேஸ என்றெல்லாம் நீங்கள் சிநிதிப்பீர்கள்ஸகேட்பீர்கள்…?
அவற்றை நான் மறுக்கவில்லை! ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையவும் முடியவில்லை. ஏனெனில் அது ஆண்வர்க்கத்தினரின் ஒரு விதமான ஏமாற்று அல்லது தப்பித்தல்…
அதாவது.. நீங்கள் பெண்களை ஒரேயடியாக உயர்த்திக் கடவுளாக்குவதிலும் எதிர்மறையாக, “ஆண்களை மயக்கி மோசம்செய்ய வந்த பிசாசுகள்” என்று வசைபாடுவதிலும் நிகழும் விளைவு ஏறத்தாழ ஒன்றுதான். ஆம்! இந்த இரண்டு செயல்களினாலும் பெண்களுக்கு சமூகத்திலே கிடைக்க வேண்டிய நியாயமான சம அந்தஸ்தை அல்லவா மறுக்கின்றீர்கள்.
ஒருவன் தனது மனைவியை ஓர் சகமனிதனாக எண்ணாமல் போகப்பொருளாக நினைத்து அவiளைக் கொண்டாடுவதனால் அவளுக்குரிய சம முக்கியத்தவம் கிடைத்து விடுவதில்லை.
“ஓ! என் அழகிய கிளியே பார்! உன்னை எவ்வளவு விலையுயர்ந்த கூண்டிலே அடைத்து வைத்திருக்கின்றேன்..இதைவிட கௌரவம் வேறென்ன வேண்டும் உனக்கு?” என்று அதுவரை சுதந்திரமாய்ப் பறந்துதிரிந்த கிளியிடம் கூறுவதற்கும் ஒரு மனைவியை அல்லது காதலியை அழகிய துணிமணிகளாலும் விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அலங்கரித்து “கார்கூந்தலழகியே..கயல்விழித் தேனே காலம் முழுக்க நான் உனதழகுக்கு அடிமையே” என்று பிதற்றுவதற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.
ஆண்களின் இந்தப் புகழ்ச்சிக்குப் பின்னாலிருக்கும் ஏமாற்றுச் சதிவலையைப் புரிந்து கொள்ளாத பெண்கள் வேண்டுமானால் ஏமாந்து போகலாம். ஆனால் உண்மைகளை நீண்ட காலத்திற்கு ஒளித்து வைக்க முடியாது. அது ஒரு பெண்ணின் கர்ப்பம் போல என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.
மனைவியைப் புகழ்வதிலே பாலியல் தேவைகள் என்ற தேவையுண்டு. தாயைப் புகழ்வதற்கு காரணமென்ன?
மனிதன் உயர்நிலைப் பகுத்தறிவுள்ள விலங்கு. தான் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் தனது சமூகம் சார்ந்த பெறுமானங்களை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கக்கூடியவன். எந்தவொரு தீங்கான செயலைச் செய்யும்போதும் உள்ளார்ந்த குற்றவுணர்வை வேறு ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் செய்ய வேண்டிய தேவை அவனுக்குள்ளது. (உ-ம் : பாவகாரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்தவர்கள் கோயில் உண்டியல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது பொருளை பரிகாரமாக்குதல்)
ஓர் ஆண் தாய் என்பவளை மிகைத்துப் போற்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்றில் சிறுவயதிலே தாயை இழந்ததனால் உண்டான பிரிவாற்றாமை ஏக்கமாக இருக்கலாம். இருந்தபோதிலும் தனது குற்றவுணர்வை சமாதானம் செய்யும் நோக்கமே பெரும்பாலும் உள்ளது.
சிறுவயதிலே தனது குழப்படிகளால் தாயை வருத்திய குற்றவுணர்வுகள்ஸ இளைஞனானதும் தாயைச் சரிவரப் போஷிக்காத குற்றவுணர்வுகள்.. திருமணமானதும் தனது அன்றாட அலுவல்களினாலும் பொறுப்புகளினாலும் தாயைச் சென்று பார்த்துவரக்கூட முடியாத குற்றவுணர்வுகள்ஸஎன்று உள்மனத்திலே கிளம்பும்போது அவற்றைச் சமாதானஞ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டுமே!
நமது சமூகத்திலேயுள்ள ஆண்கள் தங்களில் ஒருத்தியாகி ஒன்றாய் வாழும் பெண்ணை ஒன்றில் எட்டாத உச்சியில் கொண்டு நிறுத்துவார்கள் அல்லது அதல பாதாளத்தில் வீழத்துவார்களேயொழிய சகமனிதனாக மதிப்பதில்லை என்பதுதான் உண்மை.
இவ்வாறு மதிக்காமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் எதுவாக இருக்க முடியும் என்று பார்ப்போம். வேறு எதுவுமே கிடையாது. நாம் வாழும் குடும்பச் சூழல்தான் முக்கியமான காரணம். சிசுவாகப் பிறக்கும் ஓர் ஆண்குழந்தை ஓரளவு தன்னைப் புரிந்து கொள்ளக்கூடிய பருவம் வந்தவுடன் ஆண்- பெண் பால் வேறுபாட்டையும் அவற்றுக்கிடையேயுள்ள சமமின்மையையும் தனது தாய் தந்தையிடமிருந்துதான் முதலில் புரிந்து கொள்கின்றான்.
வெகு அரிதான விதிவிலக்குகளைத் தவிர, தந்தை நினைத்ததை தடையின்றிச் செய்வதையும் சுதந்திரமாக இயங்குவதையும் மாறாக, தாய் அவ்வாறின்றி தனது பெரும்பான்மையான தேவைகளுக்கும் நடமாட்டங்களுக்கும் தந்தையைச் சார்ந்து வாழ்வதையும் பார்க்கின்றான். அத்துடன் அடிக்கடி தாயின் நியாயமான கோரிக்கைகள் கூட தந்தையினால் வரையறுக்கப்படுவதையும் காண்கின்றான். அங்கிருந்தே ஆரம்பமாகின்றது ஒரு ஆண்மகனின் பெண்களின் மீதான மேலாதிக்கக் கருத்துருவாக்கம்.
இந்தக் கருத்து மேலும் வலுவடைவது தனது சகோதரி அல்லது உறவுப் பெண் பருவ வயதுக்கு வந்தவுடன் திடீரென வேறுபட்டு நடாத்தப்படும் விதம். அவளை சுயமாக நடமாட விடாது கட்டுப்படுத்துவதும் அவளது நிலைகுறித்து குடும்பத்தினரால் அதீத கவனம் செலுத்தப்படுவதும் சிறிய சிறிய மீறல்களுக்கெல்லாம் அவள் கண்டிக்கப்படும் விதமும் அவனைப் பெரும் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன.
பலவேளைகளிலே அதற்குரிய உருப்படியான காரணங்கள் கூட அவனுக்குச் சரிவரக்கூறப்படவதில்லை. இதனால் ஆண்- பெண் எனும் பால்வேறுபாடுள்ள மனிதர்களின் இயற்கையான உடல்சார்ந்த வேறுபாடுகள் பற்றிய புரிந்துணர்வு முறையாகச் செய்யப்படாத வெற்றிடம் ஒன்று அவனிடம் உருவாகின்றது.
அந்த வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவது அவனது வயதொத்த கற்றுக்குட்டி நண்பர்களே. முறையான பாலியல் கல்வி மூலமாகச் செய்யப்பட வேண்டிய மேற்கூறப்பட்ட விடயம் கற்றுக்குட்டித்தனமான அரைகுறை விளக்கங்களால் நிரப்பப்படுகின்றது. இதனால்தான் பொதுவாக ஆண்கள் இளம்பருவத்தை எட்டும்போது தமது நண்பர் வட்டத்தின் தன்மைகளுக்கேற்ப பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்களுக்கும் வக்கிர உணர்வுகளுக்கும் ஆளாகி விடுகின்றனர்.
இன்றைய முதலாளித்துவ சமூக நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளான சினிமா, தொலைக்காட்சி, நச்சு இலக்கியங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்களை வெறும் போகத்திற்குரிய உயிரினங்களாக மட்டுமே கருதுகின்ற வக்கிர உணர்வுகளையும் மரியாதையின்மையையும் மேலும் தூண்டி விடுகின்றன.
சில சமூகங்களிலே பின்பற்றப்படும் நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களும் ஆண்களின் மனதிலே பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகக் கருதும் எண்ணப்பாங்குகளுக்குக் காரணமாக இருந்து வருகின்றது. தாம் பின்பற்றுகின்ற மதம் கலாசாரம் ஆண்கள்-பெண்கள் தொடர்பாக எத்தகைய வழிமுறைகளை காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றதோ அத்தகைய நிலைப்பாடே ஆண்களின் மனோபாவமாக உருவெடுத்து வளருகின்றது. கல்வி வளர்ச்சி, தர்க்க ரீதியான சிந்தனை, ஏனைய சமூகங்களின் இடைத்தாக்கங்கள் இத்தகைய நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களில் தாக்கங்களை விளைவித்தாலும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குவதில்லை.
உதாரணமாக ஒரு ஆண்மகன் தனது துறைசார் கல்வியினூடாக தனது சமூக நம்பிக்கைகள் பற்றி எழும் கேள்விகள் குறித்து சிந்திக்க முன்வருவதில்லை. இதற்குரிய காரணங்களில் ஒன்றாக அந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தம்போது தான் வாழும் சமூகத்திலிருந்து கிடைக்கும் உவப்பற்ற எதிர்வினைகளைக் கூறலாம். இதைவிடவும் முக்கியமான காரணம் ஒன்றுள்ளது.
இயல்பாகவே சமூக நம்பிக்கைகளால் ஆண்களுக்கு தரப்பட்டிருக்கும் ‘பெண்களை மேலாதிக்கம் செய்யும் வசதியை’ அவர்கள் இழக்க விரும்புவதில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்மகன் எவ்வளவுதான் தான் சார்ந்திருக்கும் துறையில் பெரும் அறிஞனாகவோ புத்திஜீவியாகவோ இருந்தபோதிலும் தனது சமூகம் பின்பற்றி வருகின்ற நம்பிக்கை மரபுகளைக் கேள்விக்குட்படுத்துவதில்லை.
இதை ஓர் எளிய உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நானறிந்த நன்கு படித்து பெரும்பட்டங்களும் புகழும் பெற்ற ஒரு டாக்டர் தனது சிக்கலான சத்திரசிகிச்சைகளை முடித்துக் கொண்டதும் ஓய்வறைக்குச் சென்று சிகரட் ஒன்றைப்புகைக்கும் பழக்கமுடையவாக இருந்து வருகின்றார்.
புகைத்தல் ஒரு மனிதனின் நுரையீரல்களுக்கு எவ்வளவு கேடானது என்பதை ஐந்தாம் தரத்தில் கற்கும் ஒரு சிறுவன் கூட நன்கறிவான். அவ்வாறெனின் இத்தனை பட்டம்பெற்ற டாக்டருக்கு அது தெரிவதில்லையா? தனது சேவைக் காலத்திலே புகைத்தலின் தீங்கைப்பற்றி பொதுமக்களுக்கு அவர் பெரும் சொற்பொழிவுகளைக் கூட ஆற்றியிருக்கக்கூடும்.
அவரிடம் இதுபற்றி நான் ஒருதடவை வினவியபோது, “தெரியும்தான்.. என்ன செய்வது? பழகிவிட்டது… டென்ஷனைக் குறைப்பதற்குத்தான் அப்படிச் செய்யகின்றேன்” என்றார். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது?
இந்த டாக்டரின் மனோநிலைதான் பெண்களை இரண்டாம்தரப் பிரஜையாகக் கருதுவதை அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கின்ற சமூகங்களிலிருந்து வரும் பெரும்பாலான படித்த ஆண்களிடமும் இருந்து வருகின்றது.
பெருந்தீங்குபயக்கும் காட்டுமிராண்டித்தனமான கருத்தாக்கங்களைத்தான் இன்னும் கும்பல் கும்பலாகப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நன்கு அறிந்தாலும் கூட அவற்றிலிருந்து தமது மக்களை விடுவிக்கும் எண்ணமோ செயற்பாடுகளோ இல்லாமல் வாளாவிருக்கின்றார்கள் இந்த “அறிவுஜீவி”கள்.
அப்படிச் சும்மா இருப்பதுகூட அவர்களுக்குச் சுகமாக இருக்கின்றதோ என்னவோ..? என்றாலும் கற்ற கல்வியினாலும் பெற்ற அறிவினாலும் உண்மைகளைப் புரிந்துகொண்ட நேர்மை மிக்கவர்களால் அவ்வாறு இருக்க நிச்சயமாக முடியாது. அவர்களது மனசாட்சி எங்கோ நான் படித்த பின்வரும் சிறுகவிதையைப் போன்று எப்போதும் உறுத்திக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உண்மையோ உண்மை.
“தொல்லை தவிர்ப்பதற்காக
தொலைபேசியை அணைத்து வைத்தபின்பும்
‘யாராவது அவசரச்செய்திக்காக அழைத்திருப்பார்களோ’
என்ற எண்ணத்திலிருந்து மட்டும்
ஏனோ தப்பிக்க முடியவில்லை!”
-மூதூர் முஹம்மது ரஃபீ