பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ?
பார்ப்பன சுப்பிரமணியன் சுவாமி ‘பார்ப்பனரல்லாத’ மோடியை ஒரு அக்மார்க் பார்ப்பனர் என்று சான்றிதழ் அளிப்பதற்கான காரணங்கள் என்ன?
கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? – டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல ‘கர்நாடக’ இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு.
“எனக்கு தரப்பட்ட அதிகாரத்தின் படி நான் நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடம் பார்ப்பன குணங்கள் உள்ளன” என்று சுப்பிரமணியன் சுவாமி சென்றவாரம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டார்.
பார்ப்பன சுப்பிரமணியன் சுவாமி ‘பார்ப்பனரல்லாத’ மோடியை ஒரு அக்மார்க் பார்ப்பனர் என்று சான்றிதழ் அளிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை பிரபர ‘கர்நாடக’ இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் இந்தக் கட்டுரை விளக்குகிறது.
நான் ஒரு கர்நாடக சங்கீதக் கலைஞன். இந்த தகுதி நான் நெருங்கிப் புழங்கும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிக்குழுவில், இயல்பாகவே என்னை வைத்து விடுகிறது. நான் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவன் என்பதை தனியாக ஒரு முறை சொல்லவும் வேண்டுமா, என்ன?
என்னுடைய கலை உலகில் இசைக்கலைஞர்கள், சபா நிர்வாகிகள், அமைப்பாளர்கள், விமரிசகர்கள் உள்ளிட்டோரில் அநேகமாக 99 சதவீதம் பேர், ‘உணவுச் சங்கிலியின் மேல் பகுதி’யைச் சேர்ந்த சலுகைபெற்ற பிரிவினர்தான். இந்தக் கலையை நேசிப்பவர்களில் ‘பார்ப்பனராகப் பிறக்காத’ சிலர் இருந்தாலும் அவர்களும் பல விதங்களில் பார்ப்பனத் தன்மை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
தென்னிந்திய பார்ப்பனர்கள் மற்றும் பிற “உயர் சாதி” ஆண்கள், பெண்கள் பலரிடமும் நான் பேசும் போது, பார்ப்பன வாழ்க்கை முறை, அதன் சடங்குகள், அடையாளம், மற்றும் பொதுவாக வேத மரபு ஆகியவற்றின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையை கவனித்திருக்கிறேன்.
பார்ப்பனர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புகள் மீது அவர்களுக்கு ஏகப்பட்ட பெருமிதம் இருக்கிறது. அவற்றைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற பிடிப்பு இருக்கிறது. அதை விட முக்கியமாக அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீவிரம் இருக்கிறது. சம்பிரதாயங்களில் வலுவான நம்பிக்கையில்லாத குடும்பங்களில் கூட, வேதபாடசாலைகளுக்கு ஆதரவு, கோயில் புனரமைப்பு நடவடிக்கைகள், புனிதப் பசு பாதுகாப்பு திட்டங்கள் என இந்த பாதுகாப்புவாதத்தைப் பார்க்க முடியும்.
எருமை இந்த கணக்கில் சேராது. அது தாழ்ந்த சாதி. மிகவும் சம்பிரதாயமான குடும்பங்களில், காற்றினால் ஆன ஒரு சுவர் பார்ப்பனரல்லாதவர்களை சமையலறைக்குள் நுழைய விடாமல் தடுத்து விடும்; வீட்டுப் பணியாளர்கள் எதைத் தொடலாம், எதைத் தொடக்கூடாது என்பதற்கு தெளிவான கட்டுப்பாடுகள் உண்டு.
புதிர் இந்த இடத்தில்தான் வருகிறது. இந்தப் பிரிவினர், அநேகமாக இவர்கள் அனைவருமே, தம் இயல்புக்கு மாறாக, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கவதற்கு ஆதரவு தெரிவிப்பது ஏன்? அதுவும் மிகத் தீவிரமாக.
மேல்தட்டுப் பிரிவினர் கடந்த காலத்தில் பிற சாதியினர் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நரேந்திர மோடிக்கு அவர்கள் காட்டும் ஆதரவின் தீவிரம் என்பது முற்றிலும் வேறானது. நமது மூளைகளிலிருந்து சாதிய சிந்தனை அழிக்கப்பட்டு விட்டது என்பது இதன் பொருளா? இல்லை என்பது நமக்கே தெரியும். அப்படியானால், எங்கிருந்து பிறந்தது (மோடியின் மீதான) இந்தப் பாசப் பிணைப்பு?
பார்ப்பனர்களும் உயர் வர்க்கத்தினரும் ஆதரித்து நிற்பது பார்ப்பன சாதியின் சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமல்ல; அவற்றைக் காட்டிலும் ஆழமான, பார்ப்பனியத்தை அவர்கள் ஆதரித்து நிற்கிறார்கள். பார்ப்பனியம் என்பது இந்துக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தி வழிநடத்துகிறது. இதனை வடிவமைத்து, பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி, இதனைக் கட்டுப்படுத்தி வரும் குழுதான் பார்ப்பனர்கள்.
பார்ப்பனியம் என்பது உண்மையிலேயே என்ன கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது? இதற்கு அளிக்கப்படும் தத்துவஞான விளக்கவுரைகளை நான் ஏற்கவில்லை. அவையெல்லாம் வெறும் சால்ஜாப்புகள். சமூக நடவடிக்கையின் வெளிப்பாடுகளில் பார்ப்பனியம் என்பதன் பொருள் முற்றிலும் வேறானது. பார்ப்பனியம் என்பது கட்டுப்பாடு, அதிகாரம், படிநிலை அதிகார அமைப்பு, கல்வி, அறிவு, தூய்மை, புனிதம் என்பவை தொடர்பானது. நம்முடைய சமூக கட்டுமானங்கள் அனைத்திலும் இந்தக் கருத்துகள் ஊடுருவியிருக்கின்றன. இந்த இலட்சியங்களை, அல்லது இவற்றில் சிலவற்றை எட்டுபவர்களுக்கு அது உணர்ச்சி பூர்வமான, மத ரீதியான மற்றும் அறிவு பூர்வமான மேலாதிக்க மனோநிலையை வழங்குகிறது.
இந்தக் கட்டுமானத்தில் மோடி எந்த இடத்தில் பொருந்துகிறார்? வளர்ச்சி குறித்து அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டிருக்கும் கதையின் மூலம், அவர் கல்வி, அறிவு, அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றின் பௌதிக வடிவமாகியிருக்கிறார். இத்தகைய பௌதிக வடிவமாக்கல்களை பார்ப்பனர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் (அவர்கள் தங்களைப் பற்றி அவ்வாறே கருதிக் கொள்வதால்).
இத்துடன் மோடி தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் வெளிப்படையான, தனிச்சிறப்பான இந்து மத பிம்பத்தை சேர்த்தால் கிடைப்பது மெருகேற்றப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட ஒரு சின்னம். மோடி எப்போதுமே சக்தி வாய்ந்தவராகவும், உறுதியானவராகவும் சித்தரிக்கப்பட்டு வருகிறார். இது வலிமையின் வெளிப்பாடாக மட்டுமின்றி, தலைவருக்கு மற்றவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்ற தெளிவான அதிகாரப் படிநிலையை உணர்த்துகிறது. அதாவது, பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் பணிவது போன்றது இது. அந்த வகையில், நரேந்திரமோடி பார்ப்பனியத்தை மிகப் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மோடியின் மீதான ஈர்ப்பு நடுத்தர வர்க்க பார்ப்பனர்களை பிடித்த வியாதி மட்டுமா என்று கேட்டால், இல்லை, பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அனைத்து தரப்பு பார்ப்பனர்கள் மத்தியிலும் அது பரவியிருக்கிறது. நரேந்திர மோடி என்ற அடையாளம் அவர்களை கவர்ந்திழுக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதற்கான அரசியல் காரணங்களை எவ்வளவுதான் வக்கணையாக பேசினாலும், கடைசியில் ஒருவர் வாக்களிப்பது தனது உணர்வுநிலையிலிருந்துதான். அந்த ஈர்ப்பு அடையாளப்படுத்தலிலிருந்து வருகிறது, நரேந்திரமோடியைப் பொறுத்த வரை அவர் உள்மயப்படுத்திக் கொண்ட பார்ப்பனியம் அந்த ஈர்ப்பைத் தருகிறது. மேலும், இங்கு அது இரட்டை அபாயமாக வெளிப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரிடமிருந்து பார்ப்பனியம் வெளிப்படுவது, சாதிய படிநிலையில் கீழ் தட்டுகளில் இருப்பவர்கள் தாங்களும் அதே உயர்நிலையை அடையலாம் என்ற நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
தென்னிந்தியாவைப் பொறுத்த வரை, மோடியின் சாதியைப் பற்றி பலர் சிந்திப்பதேயில்லை என்ற சித்தாந்த சாத்தியமும் இருக்கிறது. சாதாரண நிலைமைகளில் இவ்வாறு சாதியை பார்க்க மறுப்பதை போற்றலாம். ஆனால், இங்கு இந்த சாதிக் குருட்டுக்கு காரணம் வேறு. ஒருவரது நிறம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது நமது சமூகத்தின் இன்னொரு அழுக்கான உண்மை. ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு வெள்ளையாக இருக்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பார்ப்பனராக தோற்றமளிப்பார். யாராவது ஒரு தென்னிந்தியரிடம் மோடி எந்த சாதி என்று கேட்டுப் பாருங்கள், “அவர் ஒரு பார்ப்பனர் என்றுதான் நினைத்தேன்” என்று விடை வரும். ஒருவர் பார்ப்பனராக இல்லா விட்டாலும், வெள்ளையாக இருந்தால், ‘நிறத்தால் பார்ப்பனர்’ என எடுத்துக் கொள்ளப்படுவார்.
பார்ப்பனியத்துக்கு இன்னொரு பரிமாணத்தையும் சேர்த்திருக்கிறார், மோடி. தனது மதத்தை வெளிப்படையாக தோளில் தரித்துக் கொண்டிருக்கிறார் அவர். அதை பெருமையாக காட்டிக் கொள்கிறார். அவர் ‘மாற்றார்களை’ (முசுலீம்கள் என்று பொருள்) எதிர்த்து நிற்பதை மேல்தட்டு வர்க்கத்தினர் பெருமையாக உணர்கின்றனர். தங்களிடம் இல்லாததாக உணரும் விடாஉறுதியை பார்ப்பனர்கள் போற்றுகின்றனர். அந்த உறுதியோடு கூடவே பார்ப்பனியம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மேட்டிமைத்தனத்தையும் இணைப்பதன் மூலம் இந்த கௌரவ பார்ப்பனர் இந்து உலகத்தை ஒன்றுபடுத்துகிறார், அந்த சாதனையைத்தான் இந்துத்துவா என்று சொல்கிறோம்.
நன்றி : The Hindu
ஆங்கில மூலம் : The big paradox – by T.M. Krishna
டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘கர்நாடக’ இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, 6 வயது முதல் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவர். ஜே கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியில் படித்து பின்னர் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கிருஷ்ணா, கர்நாடக இசை குறித்து எழுதிய A Southern Music: The Karnatik Story என்ற நூலில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக சங்கீதத்தில் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கம் மற்றவர்களை ஒதுக்கி வைத்து இப்போது நடைமுறையில் உள்ள உயிரற்ற கச்சேரி வடிவத்தை கொடுத்த வரலாற்றை விவரித்திருக்கிறார். இசை குறித்தும் சமூகம், அரசியல், கலாச்சாரம், மதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.
source: http://www.vinavu.com/2014/05/12/why-brahmins-support-modi/