வெயிலும் நிழலும்
வெயில் காலம் வந்துவிட்டது. வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான். மழையை விரும்பும் அளவுக்கு மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள்.
கடைவீதிகளும் நீளமாகப் பந்தல் போடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் கூட வெயிலை அதிகமாக வரவேற்பதில்லை. கவிமணிகூட “வெய்யிற்கேற்ற நிழலுண்டு’ என்று நிழலையே போற்றிப் பாடினார்.
இயற்கை நமக்குக் கொண்டுவருகிற எத்தனையோ இன்பங்களில் ஒன்று வெயில். நல்ல வெயில் வேளையான மதியப் பொழுதில் தெருக்கள் மோன நிலையில் மூழ்கி இருக்கும். மனிதர்கள் வெயிலை விரும்பாவிட்டாலும் மரங்களும் செடிகொடிகளும் அதிகமாகவே விரும்புகின்றன.
வெயில் காலத்தில் வேப்ப மரமும் புங்க மரமும் பச்சை இலைகள் தளிர்த்து வெயிலோடு சேர்ந்து நிழலையும் பிரசவித்திருக்கும். வெயிலின்றி ஏது நிழல்?
ஒவ்வொரு மரத்தின் நிழலும் ஒவ்வொரு விதமான சுகம். ஆலமர நிழலில் படுத்துறங்க ஆசை கொள்ளாத மனிதனும் உண்டா? தூங்குமூஞ்சி மர நிழலின் குளிர்ச்சிக்கு இணையேது? வாதா மர நிழல், பூவரச மர நிழல் இவற்றுக்கெல்லாம் தனித்தனி வாசனைகூட உண்டு. இலுப்பை மரங்களின் நிழலில் நுழையும்போதே கம்மென்று இலுப்பம் பூக்களின் வாசனை நம் மூக்கைத் துளைக்கும். கண்மாய்க் கரைகளில் பனைமர நிழல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அதுவும் ஒரு கருப்பு-வெள்ளை ஒளிப்படம்போல் நம் கருத்தைக் கவரும்.
புதுமைப் பித்தன் ஒரு சிறுகதையில் பனை மரத்தடியில் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனின் மன ஓட்டம் எங்கெங்கோ சஞ்சரிப்பதை அழகாக எழுதியிருப்பார். இரண்டு பக்கமும் மரங்கள் வைத்த சாலைகள் முழுக்க நிழல் கம்பளம் விரித்திருக்க, அதன் வழியிலே பயணிப்பது பரமானந்தமாக இருக்கும். “பிரம்மாண்டமான மரங்களின் பிம்பங்கள் வெயிலுக்கேற்ப கார் கண்ணாடியில் தோன்றித் தோன்றி மறைந்தாலும் கண்ணாடி ஒன்றுமே ஆவதில்லை’ என்று ஏறக்குறைய கவிதை போன்ற வரிகள் மனதில் பளிச்சிடும்.
வெயில் வேளையில் சில சமயம் எங்கிருந்தோ சின்னஞ்சிறு காற்று திடீரென வரும். உடம்புக்கு உள்ளே நுழைந்து ஆன்மாவையே தொட்டு ஆசுவாசப்படுத்தும் சக்தி, அந்த திடீர்க் காற்றுக்கு உண்டு. அப்போதெல்லாம் வெயில் காலம் வந்து விட்டால் வீடுகளில் புழுக்கத்தை போக்க விசிறிகள்தான் துணை. அழகான கைக்கடக்கமான பனை விசிறிகள். விசிறும்போது கொஞ்சமே கொஞ்சம் காற்று முகத்திலும் மார்பிலும் படும். ஆஹா…அதில் அப்படியொரு ஆனந்தம்.
உச்சி வெயிலில் கிராமத்து மாந்தோப்பு நிழலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டு கிளைகளுக்கிடையே விட்டுவிட்டுத் தெரியும் வானத்தை ரசிப்பதற்காகவே கோடைக் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.
அப்பொதெல்லாம் வீட்டுத் திண்ணைகளில் ஒரு குடத்திலோ மண் பானையிலோ தண்ணீரும் டம்ளரும் வைத்திருப்பார்கள். வெயிலில் களைத்து வருபவர்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இப்படியோர் ஏற்பாடு.
ஆனால் பாவம், கோடையில் காக்கைக் குருவிகளின்பாடுதான் கஷ்டம். அவற்றுக்காக சின்ன சின்ன பிளாஸ்டிக் கிண்ணங்களில் தண்ணீரை ஊற்றி காம்பவுண்டு சுவர்களின் மீது வைத்து விட்டால் போதும். காக்கைக்கும் குருவிக்கும் தாகம் தணிந்துபோகும்.
வெகு நாள்களுக்கு முன் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. பேருந்து ஓட்டுநர் ஒருவர் நாள்தோறும் நெடுஞ்சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அருகில் தனியாக இருக்கும் ஒரு குடிசைக்குள் சென்று வருவார். காரணம் புரியாமல் விசாரித்ததில் கிடைத்த தகவல், அந்த குடிசைக்குள் நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் இருக்கிறார். ஒரு தடவை பேருந்து அந்த இடத்தில் பழுதாகி நின்றபோது ஓட்டுநர் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தபோது பாட்டி தண்ணீர் வேண்டும் என்று சைகை காட்டி இருக்கிறார். ஓட்டுநர் ஒரு தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த நாளும் தண்ணீர் கொடுக்க அதுவே பழக்கமாகி விட்து.
-தஞ்சாவூர்க் கவிராயர், தினமணி