சிறுவர்கள் வீதிக்கு வர காரணம் என்ன?
நெல்லை சலீம்
“வீட்டுத் தோட்டத்தில் களை அகற்ற மறந்துவிட்டால் புதர் வளர்ந்து விடும்.
பிள்ளைகளைச் சரியாய் வளர்க்காவிட்டால் நாட்டுக்கும் இதே நிலையே ஏற்படும்.”
– லுத்தர் பர்பான்க்
இன்று நாட்டில் நடைபெறும் குற்றங்களில் சிறுவர்கள் தான் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்கிறபோது, வேதனையாக இருக்கின்றது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக, பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்களாக, அரசுகளால் ஒதுக்கப்பட்டவர்களாக சிறுவர்கள் இருக்கின்றார்கள்
ஒரு காலங்கள் வரை டீ கடைகள், ஹோட்டல்கள், பீடி சுற்றும் கம்பெனிகள், செங்கல் சூளைகள் என்று சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்தியவர்கள், இன்று சமூகத் தீமைகளின் ஆணிவேறாக திகழக்கூடிய போதை பொருட்கள், கள்ளச்சாரயம், மது விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுதல் போன்றவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த சிறுவர் சமூகம் கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றது. பொது சமூகங்களும் இவர்களை குற்றப்பரம்பரையாக பார்த்து ஒதுக்கி விடுகின்றனர்.
child beggerஇவர்களின் பெற்றோர்களே தங்களின் வறுமையை காரணம் காட்டி, அவர்கள் செய்யக்கூடிய தறவான தொழிலை ஆதரிக்கின்றனர். இதனால், இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் நம்மை வேதனையடையச் செய்கின்றது. இதைப்பற்றிய, காரணங்களை கண்டு அதை களையடுக்க முயற்சி செய்யாவிட்டால், எதிர்கால இளைய தலைமுறை எப்படி உருவாகும் என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சிறுவர்கள் சீரழிந்து போவதற்கு முக்கிய காரணம் “கலாச்சார சீரழிவுகள்” தான் என்பதை நாம் உணர வேண்டும். இதன் ஆரம்பம் வீடுகளில் இருந்தே தொடர்கின்றது. சிறுவர்கள் டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களின் மூலம் பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டாலும், அதிகமாக அவர்கள் தவறான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். இது இவர்களுக்கு வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கேற்ப அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இன்று வீடுகளில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முன்பே சிறு சிறு பிரச்சனைகளுக்கு சண்டை போடுவதும், தொலைக்காட்சிகளில் ஆபாசமான காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்ப்பது, அவர்கள் மனம் புண்படும்படியான ஆபாச வார்த்தைகளை பேசுவது என்று பெற்றோர்களே பிள்ளைகளுக்கு முதல் எதிரிகளாக இருக்கிறார்கள். இதனால், வளரும் சிறு பருவம் அவர்களை தவறாக வளர்த்தெடுக்கின்றது.
இன்றைய காலக்கட்டங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் டி.வி. நிகழ்சிகளும் சமூகத் தீமைகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளாகவே இருக்கின்றன. இதில் வரும் கற்பழிப்பு காட்சிகள், ஆபாசமான பேச்சுகள், இரட்டை அர்த்தம் கொண்ட நகைச்சுவைகள், இன்ன பிற காட்சிகள் என்று ஒட்டு மொத்தமும் தவறான சிந்தனைகளை பிங்சு உள்ளங்களில் பதியக் காரணமாக இருக்கின்றன. சுருக்கமாக சொன்னால் பெண்கள் என்றால் போதைப் பொருளாக மனதில் பதிய வைக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு தான் பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு காரணமாகின்றன.
இதற்கு சிறு உதாரணம் தான் டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் சிறுவர் தொடர்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேப்போன்று, தற்போது நடைபெறக்கூடிய பெண்களுக்கெதிரான குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் சிறுமிகளுக்கு தான் என்பதை நாம் உணர வேண்டும். இதில் ஈடுபவர்களும் பெரும்பாலும் சிறுவர்கள் தான் என்பதை அனைத்து சம்பவங்களும் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
அதேப்போன்று, டி.வி. நிகழ்ச்சிகளில் வரும் ஒவ்வொரு காட்சிகளில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் ஒரு ஸ்டைலாக காண்பிக்கப்படுகின்றது. இதனால், சிறுவர்களின் உள்ளத்தில் அது ஒரு பெரும் தவறாக எண்ணாமல், சர்வ சாதாரணமாக தெரிகிறது. சிறுவர்களின் உள்ளம் என்பது சாதாரணமானதல்ல. அவர்களின் உள்ளங்களில் பதியப்படக்கூடிய செய்தி, வலுவான வடுவாக மாறிவிடுகின்றது. எதை உள் வாங்குகிறார்களோ, அதையே செயல்படுத்துகின்றார்கள்.
இதை, ஆரம்பமே பெற்றோர்கள் அறிந்து சீர்திருத்த வேண்டும். இல்லையென்றால், அது பெரிதாகி அனைத்து இடங்களிலும் வெளிப்படத் தொடங்கிவிடும் என்பது தான் உண்மை. தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாதது என்று சொல்வார்கள். இது பழமொழி மட்டுமல்ல. நிகழ்ந்து கொண்டிருக்கும் நிதர்சனமான உண்மை என்பதை அனைவரும் அறிவர்.
அடுத்ததாக பெற்றோர்களே குழந்தைகளை தவறானவர்கள் என்ற முடிவு செய்து விடுவது. அவர்கள் செய்யக்கூடிய சிறு தவறுகளை கூட, பெரிதாக கருதி பலி சொல்லால் திட்டி, அவர்களை வெறுப்படையச் செய்தல். அவர்களுக்கு அறிவுரை கூறி, சீர்படுத்தாமல் அவர்களை புறக்கணித்து அப்படியே விட்டு விடுவதனால், அவர்கள் செய்யக்கூடிய நல்ல விஷயங்கள் கூட கண்டு கொள்ளப்படாமல், ஆர்வப்படுத்த யாரும் இல்லாமல் தத்தளிக்கின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுவே அவர்களுக்கு முதல் புறக்கணிப்பாக மாறுகிறது.
அவர்களுடைய எதிர்கால கனவுகள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. அவர்களின் அன்றாட வாழ்க்கை பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என்று பொதுவிடமாக மாறுகின்றது. அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக செய்யக்கூடிய சிறு தவறுகளால், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகின்றது. பொதுவிடங்களில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்துகிறார்கள்.
இவர்களை, மீட்டு வாழ்வளிக்க வேண்டிய பொது சமூகமோ, இவர்களை புறக்கணித்து ஓரம் கட்டுகின்றனர். இதனால், பெற்றோர்களாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட இவர்களை வழிகாட்ட யாருமில்லாமல் அநாதைகளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற, சூழ்நிலையில் தான் இவர்களின் பலஹீனங்களை பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள், அவர்களின் தேவையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இதுதான், இன்றைய குற்றச்செயல்களுக்கு பெரும்பாலான காரணங்களாக அமைகின்றன என்பதை நாம் உணர வேண்டும். இதுவெல்லாம் சிறு சிறு காரணங்கள் தான்.
நம் நாட்டில் சிறுவர்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும் வாழ்வதை விட வீதிகளில் வாழ்வோர் தான் அதிகம் என்பதை தற்போதுள்ள கணக்கெடுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த கணக்கெடுப்பு குறிப்பாக, மஹாராஷ்டிரா மாநில மும்பையில் எடுத்த கணக்கெடுப்பு மட்டும் தான். இது நமக்கு சிறுவர்கள் தொடர்பான கவலையை ஏற்படுத்துகின்றது.
சமீபத்தில், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் மற்றும் ஆக்ஷன் எய்டு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், மும்பை நகரில் 2013ல் இருந்த தெருக் குழந்தைகளின் எண்ணிக்கை 37,059 ஆகும். அவர்களில் படிக்காதவர்கள் 24 சதவீதத்தினரும், போதைப் பழக்கங்களில் சிக்கியவர்கள் 15 சதவீதத்தினர் என்றும் கூறியுள்ளது. இதில், ஏதோ ஒரு வகையில் நேரடியாக பாலியல் வக்கிரத்திற்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட அவமதிப்புகளைச் சந்தித்தவர்கள் அல்லது அப்படிப்பட்ட மோசமான செயல்களுக்கு மற்றவர்கள் உட்படுத்தப்பட்டதை பார்த்தவர்கள் 40 சதவிகிதத்தினரும் இருக்கின்றனர் என்று கூறியுள்ளது.
இவர்களில் 65 சதவீதத்தினர் தங்களுடைய குடும்பத்தினரோடு தெருவில் வாழ்கின்றவர்கள். 24 சதவீதத்தினர் ஏதாவது வேலை செய்து பிழைக்கிறவர்கள். 8 சதவீதத்தினர் எந்தப் பாதுகாப்புமின்றி தங்கள் சொந்த முயற்சியில் வாழ்கிறவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் சமூகவிரோதிகளிடமும், வக்கிரப்பேர் வழிகளிடமும் அகப்படுகிறவர்கள். ஆதரவற்ற பெண் குழந்தைகளில் பலர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.
பெரும்பாலான தெருக்குழந்தைகள் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில், சாக்கடைகளுக்குப் பக்கத்தில், மேம்பாலங்களின் அடிப்பகுதியில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலைய நடைமேடைகளில் வசிக்கிறார்கள். பட்டினியோடு உறங்கும் குழந்தைகளில் 72.2 சதவீதத்தினர் சொல்லும் காரணம் உணவு வாங்க காசு இல்லை என்பதுதான்.
மேலும், 88.5 சதவீதத்தினர் தாங்கள் பிறந்த ஊரைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். 50.8 சதவீதத்தினர் வீடுகளில் நிலவிய சங்கடமான நிலைமைகள் காரணமாக வெளியேறி இருக்கிறார்கள். 15.8 சதவீதத்தினர் வேலை தேடியோ அல்லது சினிமாக் கனவுகளுடனோ வந்தவர்கள். 7.7 சதவீதத்தினர் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். 11 சதவீதத்தினர் தங்களது பெற்றோர்களால் விரட்டப்பட்டவர்கள். குடும்ப வறுமையும், அதைச்சார்ந்த நிலைமைகளும் தான் பல குழந்தைகள் அந்த தெருவுக்கு வரக்காரணமாக இருந்திருக்கின்றது என்று அந்த ஆய்வுகள் கூறுகின்றன. இது மும்பை நகரத்தின் நிலையாகும்.
இதே ஆய்வுகளை ஒட்டுமொத்த மாநிலத்திலும் எடுத்தால், இதேப்போன்று பல தகவல்கள் வெளிவரும். இதுதான், சிறுவர்களின் இன்றைய நிலைமை என்பதை நாம் உணர வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்களும், பொது சமூகமும் குழந்தைகளை அணுகுவதில் கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் வீடுகளில் இருந்து, வீதிகளுக்கு செல்வதற்கு நாம் ஒரு காரணமாக ஆகிவிடக்கூடாது.
கல்விச் செல்வம் என்பது மனித வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாத ஒரு செல்வமாகும். அதனால், படிக்கின்ற வயதில் சிறுவர்களை வேலைக்கு அனுப்பாமல், பள்ளிக்கு அனுப்புங்கள். அதன் மூலம் வளமான இந்தியாவை உருவாக்க பெற்றோர்களாகிய நீங்கள் காரணமாக இருங்கள். அவ்வாறு செய்யும் பொழுது தான் இதுபோன்ற அவலங்கள் நம் நாட்டில் இருந்து முழுமையாக விரட்டப்படும். இல்லையென்றால், ஒட்டுமொத்த குழந்தைகளும் இதில் விழுந்து விடுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
– நெல்லை சலீம்
source: http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26440-2014-05-05-04-37-47