மத்தளக் கணவர்!
[ பெரும்பாலும் திருமணமான ஆணின் வாழ்க்கை இரண்டு பெண்களினால் பந்தாடப்படுகிறது – ஒன்று தாய் ஒன்று தாரம்.
திருமணம் ஒரு ஆணை பொறுத்தவரையில் இரண்டு குடும்பங்களின் சங்கமம். அவனின் மனைவியைப் பொறுத்தவரையில் அவரது குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் அல்லது அவருக்கு மட்டுமேயான ஒரு துணை.
அவனின் தாயைப் பொறுத்தமட்டில் தான் தட்டிக் கேட்டு ஆள ஒரு பெண். இந்தப் பூக்களின் போர்க்களத்தில் யார் வென்றாலும் தோற்பது அந்த ஆண்தான். அவர்கள் தான் சிந்திக்கவேண்டும்….]
என் வயது 44; என் மனைவிக்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகிறது. நான் ரயில்வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக்கிறார்; அவருக்கு, வயது 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட்டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர்கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு வேலையில் மற்றும் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கின்றனர். எங்கள் தாய் எங்களை ஒழுக்கமாக வளர்த்தார்.
என்னுடைய மனைவிக்கு, உடன் பிறந்தவர் ஒரு அக்கா; அவளுக்கும் தந்தை கிடையாது. எங்களுக்கு திருமணமாகி, ஒரு வருடத்தில் இறந்து விட்டார்.
என் பிரச்னை என்னவென்றால், நாங்கள் ஆவடியில் தனி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம். என் தாய் எங்கள் வீட்டிற்கு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதெல்லாம் எங்களுக்கு தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் எங்கள் அண்ணன் வீட்டிலிருந்து வந்து, போய் கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் என் மனைவியிடம் சண்டை போட்டு, என் தாயை வரவழைத்துக் கொண்டிருந்தேன். மேலும், என் மனைவி திருமணமாகி வந்ததிலிருந்து, சொல்லாலும் செயலாலும் என் தாயை கஷ்டப்படுத்துகிறார்.
என் அண்ணன் வீட்டிலிருந்து, என் வீட்டிற்கு வர விடாமல் தடுக்கிறார். ஏனெனில், அவளுடைய அக்கா, அம்மா, அக்கா மகன்கள் இவர்கள் அடிக்கடி இங்கு வரவும், செல்லவும், அவர்கள் இஷ்டப்பட்டதை செய்து போடவும் துடிக்கிறார்; ஆனால், எங்கள் வீட்டிலிருந்து வருபவர்களை ஆதரிப்பதில்லை. மேலும், அவர்கள் ஒவ்வொருவர் மீதும் பழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒரு நாளைக்கு குறைந்தது, 20 – 25 போன் கால்கள் அவளுடைய அக்கா வீட்டிலிருந்து வருகிறது. என்னுடைய மனைவி யின் படிப்புக்காக, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து பி.எட்., மற்றும் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தேன். இன்று, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
இது சம்பந்தமாக என் மனைவியுடன் எவ் வளவோ பேசியும், அவர் சம்மதிக்கவில்லை. சில சமயங்களில் கூச்சல் போட்டு தேவையில்லாத வார்த்தைகள் பேசி கஷ்டப்படுத்துகிறார். இப்படி, என் தாய் முன்பே பலமுறை செய்கிறார். மேலும், என் தாய் இந்த விஷயத்தால் கஷ்டப்படுகிறார், அழுகிறார். நான் மன நிம்மதி, தூக்கம் இழந்துள்ளேன். இதனால், என் அண்ணிகள் இருவரும், இதே பாணியை கடைபிடிக்கின்றனர். என் தாய்க்கு தர்ம சங்கடமாக உள்ளது.
எனவே, நீங்கள்தான் எனக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
— இப்படிக்கு, உங்கள் அன்பு சகோதரன்.
பதில்:
இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் இந்த மாமியார் மருமகள் சண்டை தீர்ந்த பாடில்லை. என் மனதில் ஓடும் எண்ண அலைகளை வெளிப்படுத்த எண்ணுகிறேன். மாமியார் மருமகள் ஒற்றுமை என்றால் தான் செய்திகளிலே வரும், அந்த அளவிற்கு திருமணமாகி இல்லத்தில் காலடி வைக்கும் மருகளை மாமியார் ஆட்டிப் படைப்பதும் பொறுக்க முடியாத மருமகள் குழந்தைகள் பிறந்த பிறகு பொங்கி எழுவதுமாய்ப் பிரச்சினைகள் பூதாகரமாய் வெடிக்கிறது. நன்றாக யோசிக்க வேண்டும். முதலில் பிரச்சினைகளுக்கான ஆணி வேரைப் பிடுங்க வேண்டும். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த வாசகரின் வயது 44 மற்றும் இவரது மனைவியின் வயது 34, திருமணமாகி 15 ஆண்டுகள் கணக்கு என்றால் திருமணத்தின் போது இந்தப் பெண்ணின் வயது 19 மற்றும் இவருக்கு 29 வயது. மாமியாரின் வயது 57. பொதுவாக மாமியாரின் குணம் என்னவென்றால் (எல்லா மாமியார்களையும் குறிப்பிடவில்லை)
திருமணமாகி புகுந்த வீடு வரும் மருமகளை மகனின் தேவைகளையும் இல்லத்தேவைகளையும் தீர்க்கப் பயன்படுத்தும் பொருளாகவே பயன்படுத்துவது. எங்கே, நேற்று வந்தவள் பையனைப் பிரித்துக் கூட்டிக் கொண்டு தன்னை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவாளோ என்று பயந்து மாமியாராய் அதிகாரம் செய்து அடக்கி வைப்போம் என்று தவறாக எண்ணிக் கொண்டு தங்களால் முடிந்த வரை அந்தப் பெண்ணைப் பாடாய்ப்படுத்துவது. பையன் மேல் வைத்த பாசத்தை யாரும் பங்கு போட விரும்ப மாட்டார்கள். இன்னொரு காரணம், தன் மாமியார் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார், அந்த அளவில் பாதியையாவது காட்டுவது, அதிலும் நார்த்தனார் உள்ள குடும்பம் என்றால் கேட்கவே வேண்டாம்.
இந்தப் பெண்ணிற்குத் திருமணமான புதிதில் ஏதேனும் கசப்பான சம்பவங்கள் நேர்ந்திருக்கலாம். பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்த திருமண வாழ்க்கையில் இவர் அம்மாவை வைத்திருக்க மனைவி விரும்பவில்லை, சுடுசொல் சொல்கிறார் என்றால் மாமியார்-மருமகள் உறவைக் கசப்படையாமல் தொடக்கத்திலேயே பார்த்திருக்க வேண்டியது இவரது பொறுப்பு. இந்த மாமியார் விதவை, ஒரு வேளை இவர் கொடுத்த சுதந்திரத்தை மூத்த மருமகள்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்திருந்தால் கூட இவர் நாலு வார்த்தைகள் கடுமையாகப் பேசி இருக்கலாம்.
எல்லா மாமியார்களும் நினைவில் கொல்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், தன் தாய் என்ன திட்டி இருந்தாலும், ஏன் அடித்திருந்தாலும் எளிதில் மறந்து விடும் மருமகள்கள் மாமியார் செய்யும் சிறு முகச்சுளிப்பையோ சுடுசொல்லையோ கூடத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றனர்.
காலையில் அரக்க பறக்க எழுந்து சமையல் வேலைகள், வீட்டு வேலைகள் கவனித்து, குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி, தானும் அலுவலகத்திற்குக் கிளம்பி, மாலையில் வீடு வந்ததும் மிச்சம் மீதி வேலைகள் பார்த்து, சிற்றுண்டி செய்து, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அல்லது அவர்களைச் சிறப்பு வகுப்பிற்கு அனுப்பி இரவில் உண்ட பிறகு வரும் பத்து, பாத்திரங்கள் அலம்பி கணவரின் தேவைகளைத் தீர்த்து படுக்கச் செல்லும் பெண்ணின் உடல் நிலையையும் மன நிலையையும் யோசித்துப் பாருங்கள். அந்த சமயம் மாமியாரின் ஏச்சுப் பேச்சுக்களையும் கேட்க வேண்டும் என்றால் எந்தப் பெண்ணால் முடியும்? அதற்காக மருமகள்கள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை. திருமணமான புதிதிலேயே மாமியார்- மருமகள் உறவாக அல்லாமல் தாய்- மகள் உறவாகப் பூத்துக் குலுங்கச் செய்திருக்க வேண்டும்.
இனி போனது போகட்டும். இனி பையன் வீட்டில் தங்கி இருக்கும் போது வேலைக்குச் செய்யும் மருமகளிற்கு எந்த வகையிலாவது உதவியாக இருக்க முயற்சிக்கலாம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், காய் திருத்தித் தருதல், முடியவில்லையா, தன் வேலைகளைத் தான் பார்த்துக் கொண்டு வம்பு செய்யாமலும் பையனிடம் சிண்டு மூட்டி விடாமலும் இருக்க வேண்டும்.
மருமகளின் அம்மா, சகோதரி வீட்டிற்கு வரும் போது இன்முகத்துடன் வரவேற்று அன்பாய் இருந்தாலே போதும் மருமகளுக்கு மாமியாரைப் பிடித்துப் போக. தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறும் மாமியார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அடுத்து மாமியார் பக்கம் வருகிறேன். மாமியார் என்ன தான் திட்டி இருந்தாலும் கோள் சொல்லி இருந்தாலும் திருமணமான புதிதில் படுத்தியிருந்தாலோ படுத்திக் கொண்டிருந்தாலோ அவரை மன்னித்து அரவணைக்க வேண்டியது மருமகளின் கடமை. அறுபது வயதிற்கு மேல் அவரும் உங்களுக்கு ஒரு குழந்தை, ஆக மொத்தம் உங்களுக்கு உங்கள் இரு குழந்தைகளுடன் வயதான குழந்தை அது. அவர் இல்லாமல் உங்கள் கணவர் இல்லை.
உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள், வீட்டில் ஒரு பெரியவர் இருந்தாலே பாதுகாப்பு அதிகம், குழந்தைகளும் தடம் மாறமல் இருப்பார்கள். உங்கள் அம்மாவின் வசவுச்சொற்கள் போல உங்கள் மாமியாரின் மேல் தவறுகள் இருப்பதாகத் தோன்றும் விஷயங்களையும் தூக்கி எறியுங்கள். உங்களிடம் வந்து தங்கும் வேளையில் மனம் விட்டுப் பேசுங்கள். பாதிப் பிரச்சினைகளுக்குக் காரணம், மனம் விட்டுப் பேசாமை. உங்கள் அன்பையும் அவர் மேல் உங்களுக்கு இருந்த சிறு சிறு மனஸ்தாபங்களைப் பேசித் தீருங்கள். உங்கள் வீட்டில் அவர் இருக்கும் காலங்களில் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.
நீங்கள் அனேகமாகப் புது வீடு கட்டிக் கொண்டிருபதால் அதற்குத் தனியே நீங்கள் மட்டும் குடித்தனம் இருக்க ஆசைப்படுகிறீற்கள் என்று நினைக்கிறேன். அது மிகவும் தவறு. மாமியாருக்குச் செய்ய செய்ய உங்களுக்கு நன்மைகள் தான். உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள். இதையெல்லாம் கருதி செய்ய வேண்டும் என்றில்லை. எந்தப் பிரதிபலனும் இல்லாமல் உண்மையான அன்பை உங்கள் மாமியாரிடமும் பிறந்த வீட்டினரிடமும் காட்டுங்கள். அத்தை, மாமா என்று கூப்பிடாமல் கணவரின் பெற்றோரையும் அம்மா, அப்பா என்றே அழைக்கச் செய்வது. இப்படி செய்வதால் அவருக்கும் தன் மகளாகவும் இவருக்கும் பெற்றவர்கள் பாசமும் வரும். மேற்கூறிய பிரச்சினைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றது.
யார் மேல் குறைகள், குற்றங்கள் இருப்பினும் மறந்து, மன்னிது அன்புடன் வாழ்ந்தாலே போதும் வீடு கோயிலாக. விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை. தயவுசெய்து உங்கள் புகுந்த வீட்டைப் பற்றி பிறந்த வீட்டில் குறைகள் கூறாதீர்கள். அது மிகவும் தவறான அணுகுமுறை. இந்தியாவில் பாதி நல்ல பெண்களே செய்து கொண்டிருக்கும் மிகத் தவறான செயல்.
நீங்கள் எவ்வளவு தூரம் அன்புடன் அவர்கள் மனம் நோகாமல் பார்க்கிறீர்களோ அவ்வளவு தூரம் உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள், நீங்களும் நன்றாக இருப்பீர்கள். ஒரு பெண்ணிற்குக் கணவர் தான் எல்லாமே, பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ உண்மையிலேயே கணவரை நேசிக்கும் ஒவ்வொரு மனைவியும் அவரது உணர்வுகளைச் சாகடிக்காமல் அவர் மனம் கோணாமல் வாழ்வது தான் சிறப்பு. அப்படிப்பட்ட பெண்ணைத் தான் கணவருக்குப் பிடிக்கும். ஒரு சமயம் கோபத்தில் உங்கள் விதவைத் தாயை வீட்டுக்குள் சேர்க்கக் கணவர் விரும்பவில்லை என்றால் உங்கள் மனம் என்ன பாடுபடும்? உங்கள் நிலையில் அவரை வைத்துப் பாருங்கள். வந்த கோபம் காற்றில் போய் விடும். விட்டுக் கொடுத்து, உணர்வுகளை மதித்து வாழுங்கள்.இதைப் படிக்கும் ஒரு மருமகளோ மாமியாரோ மனம் மாறினால் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி, சந்தோஷம். சிந்திப்பீர்களா?
********************************************
இந்த வாசகரின் குழப்பத்திற்கு இதோ இன்னுமோர் அழகாகப் பதில் :
நாணயத்தின் இருபக்கங்களையும் கொஞ்சம் பார்ப்போம்ஸஸஒரு மருமகளுக்கு மாமியாரை எப்போது முதல் பிடிக்காமல் போகிறது? அதன் காரணம் என்ன? – ஒரு மருமகளுக்கு மாமியாரை பிடிக்காமல் போக பல காரணங்கள்…
1) திருமணம் பேசி உறுதி செய்யப்படும் நேரத்திலேயே ஊர்வம்பு பேசும் உறவுகள் சொல்வதால் மனதில் தங்கிவிடும் ஒரு எண்ணம்….(“அவ வீட்டிலயா வாக்கப்படப் போறே….ம்ம்ம்ம்ம் “) —- அந்த உறவுகளின் ‘உச்” கொட்டுதல்கள், உங்களின் மனதை விஷத்தை ஏற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியம்.
2) சொல்லி வளர்க்காத தாய் தந்தை – வளர்ப்பின் குற்றம் – மகனாகட்டும் மகளாகட்டும் சொல்லி வளர்க்கவேண்டும். விட்டுக்கொடுத்தலும் புரிதலும், அனுசரித்துப் போதலும், கவனித்தலும், மரியாதை செய்தலும் ஒரு குடும்பத்தேரின் பல சக்கரங்களில் சில முன்சக்கரங்கள்.முன் சக்கரங்கள் திசை மாறக்கூடாது. என் தந்தை இன்றும் கூறும் வார்த்தைகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. – “குற்றம் என்ற ஒன்று நமது பக்கம் இருக்கக்கூடாது.எந்த ஒரு விஷயத்திலும் நாம் செய்யவேண்டிய கடமைகளையும் மரியாதைகளையும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி செய்யவேண்டும். நம்மை நாளை யாரும் சுட்டிக்காட்டும் வாய்ப்பை நாம் வழங்கக் கூடாது” – (அதில் பத்தில் ஒரு பங்கைக் கூட செய்யாத ஒரு வீணன் நான் என்பது வேறுகதை)
3) குடும்ப நிகழ்ச்சிகள் – முதலில் நடக்கும் நிச்சயதார்தத்தில் ஆரம்பிக்கும் – மணமகனின் ஊரின் வழக்கப்படி எல்லா கட்டுகளையும் செய்துவிட்டு வந்த மணமகளின் தந்தை லேசாக தன் மனைவியிடம் அலுத்துக் கொள்வார்.அது மகளுக்கு இன்னும் கொஞ்சம் அதிகப்படியான அலுப்புடன் தாயால் சொல்லப்படும் போது மணமகனின் தாய் அல்லது சகோதரி பல சமயங்களில் இருவரும் மணமகளின் பார்வையில் எதிரியாகிவிடுகிறார்கள். இது திருமணம்,அதன் பின்னான வைபவங்களில் அதிகப்படுத்தப்படுகின்றது. ——–
சரி, தவறுகளை பின்னால் பார்க்கலாம். காரணங்களை மட்டும் இப்போது பார்ப்போம் ———-இப்போது நாணயத்தின் மறுபக்கம் – Sigmund Freud ஐ எல்லாம் விட்டு விட்டு அலசுவோம். (இதுபற்றி தனியாகப் பதிவு செய்கிறேன்) —- ஏன் ஒரு மாமியாருக்கு மருமகளைப் பிடிக்காமல் போகிறது? எப்போது முதல்? ————-அதே காரணங்கள்தான் ——
1) அதே நிச்சயதார்த்தம் ——- மணமகளின் வீட்டிலிருந்து வந்த லட்டைப்பார்த்துவிட்டு மணமகனின் பக்கமிருந்து குசும்பு பிடித்த உறவு ஒன்று சொல்லும் ——– “லட்டு எங்கே இருக்கு???? இரு நான் கண்ணாடியை போட்டுக்கிறேன், நல்ல வேளை சொன்னே லட்டுன்னு, நான் பூந்தின்னு நெனச்சேன்ஸஸஎன் மவ கல்யாணத்துக்கு குடுத்த லட்டை பாத்துட்டு திருப்பதி லட்டான்னு கேட்டாங்க எல்லாரும்” —–மணமகனின் தாயின் மனம் உடனடியாக போர்க்கோலம் பூண்டுவிடும்ஸஸ.(லட்டுக்குப் பதிலாக இங்கே எந்த இனிப்பைவேண்டுமானாலும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம் – உங்கள் விருப்பம்) போர்க்களம் எது? – கல்யாண வைபோகம்தான்.
2) வளர்ப்பின் குற்றம் இங்கே நமது கதாநாயகன் – மாப்பிள்ளை – தாயென்பதால் தட்டிக்கேட்கத் தயங்கும் தனயன். ஆண்கள் இங்கே செய்கின்ற பெரிய தவறு தன் தாயுடனான பாசப்பிணைப்பை புரிந்து கொள்ள மறந்துவிடுவதுதான். கட்டில் உறவை விட தொட்டில் உறவின் புரிதலும் வலிமையும் அதிகம். ஒருவர் தாயை மனம் புண்படும்படியாகப் பேசினாலும் பிள்ளை மேல் தாயின் பாசம் மாறாது. ”நான் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறாயா? இல்லையா?” என்ற ஒரு கேள்வியில் தாயின் குறைகூறும் செயல்கள் மிக அதிகமாகவே மட்டுப்பட்டுவிடும். ஆனால் தாரத்தை அந்த வார்த்தைகள் கட்டுக்குள் வைத்துவிடாது. அதனால் தாயிடம் குறைகள் கூறுவதை நிறுத்தச் சொல்லுங்கள்,சில குறைகள் மனைவியின் பக்கம் இருந்தால் கூட!ஸஸ..
கேலிப்பேச்சுகள் ( ” நாங்க என்ன பொண்ணா எடுத்தோம்? இவனைத்தான் அங்கே கட்டிக்குடுத்திருக்கோம்” )ஆரம்பத்தில் இருந்தால் கூட பின்னர் நின்றுவிடும்,தாயிடம் கோபப்படுவதால் வரும் இழப்புகள் குறைவு அல்லது இழப்புகள் இல்லை.தாரத்திடம் ஆரம்ப நாட்களில் காண்பிக்கும் கோபங்கள் “விடாது கருப்பாகி” உங்களை வாழ் நாள் முழுவதும் துரத்தும். ஆண்கள் அதை மறந்துவிட்டு இரண்டு பக்கங்களிலும் நல்ல பெயர் வாங்க முயன்றும், தன் மனைவிக்கு நேரம் கொடுக்காமல் அவசரப்பட்டு தன் குடும்பத்தோடு கலக்க முயலும் போது தான் தான் குடும்பத்தலைவன் என்று தாயிடம் நிரூபிக்க முயலும்போது இரண்டுபக்கமும் “இசை”யெழுப்பும் மத்தளமாகிறார்கள்.
3) மூன்றாவது காரணம் பெண்களின் இயற்கை குணங்கள் – எத்தனை கணவன்மாருக்கு மனைவிக்கு பிடித்த நிறத்தின் பெயர் தெரியும், மனைவியின் காலணியின் அளவு தெரியும்? ஆனால் உங்கள் மகளிடம் கேளுங்கள் உங்களின் பிடித்த நிறம், உணவு எல்லாவற்றையும் பிட்டுபிட்டு வைப்பாள்.
இப்படி நுணுக்கமான பார்வை அவர்களுக்கு உண்டு. அந்த நுணுக்கம்தான் உங்களின் வாழ்க்கையில் மலராகவும் வருடுகிறது, முள்ளாகவும் குத்துகிறது. உங்களின் தேவையறிந்து சமைக்கும்போதும், சாப்பாடு கட்டிக் கொடுக்கும்போதும், அலுவலக பிரயாணங்களுக்கு உங்களுடைய சூட்கேசை தயார் செய்யும்போதும் அது மலராக உங்களின் மனதை வருடும். அதே நுணுக்கம் உங்கள் உறவுகளிடமும், தாயிடமும் குறைகாணும்போது முள்ளாக குத்தும்.
”நீ அடக்கமுள்ள பெண்வர்க்கம், மற்ற ஆரும் காணாத்தது காணும், ஞிங்கள் சபிச்சோண்டு கொஞ்சும், சிரிச்சோண்டு கரையும், மோகிச்சோண்டு வெறுக்கும் “. – நுணுக்கமான விஷயங்களை காண்பது அவர்களின் ஹார்மோன் தூண்டும் குணாதிசயம்.அதைப் புரிந்துகொண்டு வரையறைகளை முதலிலேயே நிர்ணயம் செய்வதென்பது பின்னாளில் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவுவதோடு மறைந்திருக்கும் சில குணங்களை காலம்கடக்குமுன் புரிந்து கொள்ள உதவும். ————————பெண்கள் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம், மாமியாரை கையில் போட்டுக்கொள்வது எளிது என்பதை. —
அம்மா என்று கூட அழைக்க வேண்டாம். மாமி என்றே அழையுங்கள். ஆனால் உறவைச் சொல்லி அழையுங்கள். பேச்சுவார்த்தைகள் வந்தாலும் உறவை விளிக்க மறக்க வேண்டாம். மீண்டும் அத்தை என்றழைத்து உறவாடுங்கள். இடம் கொடுத்தால் எதிர்பார்ப்புகள் அதிகப்படும் என்ற மருமகள்களின் எண்ணம் ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் உறவை விலக்கும் அளவுக்கு அல்ல.அடிப்படைக் கடமைகளை மறக்கும் அளவுக்கு அல்ல. நீங்கள் அத்தையென்று அழைக்கும் வார்த்தைகளின் சிலிர்ப்புகளை உங்களிடம் காண்பிக்காவிட்டாலும் வாய் ஓயாமல் உறவுகளிடம் சொல்வார்கள். உள்ளுக்குள் பூரிப்பார்கள்……
ஆண்கள் செய்யவேண்டியது இரண்டு பக்கங்களையும் கொஞ்சம் தெளிவாகவும்., கண்டிப்பாகவும் சொல்லி உறவுகளை பேணவேண்டியது.(கருத்தின் நீளம் கருதி இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.)ஸஸஸ.இங்கே நான் எழுதிய கருத்தில் தவறிருந்தால் மன்னியுங்கள். குறிப்பாக பெண்கள். எல்லாவற்றிலும் விதிவிலக்குண்டு. பொதுப்படையாக நான் சொல்லிய கருத்துகளிலிருந்து என் தாய், சகோதரி உள்ளிட்ட என் வாழ்க்கையில் பிணைந்த உறவுகளும் விலக்கில்லை.
பெரும்பாலும் திருமணமான ஆணின் வாழ்க்கை இரண்டு பெண்களினால் பந்தாடப்படுகிறது – ஒன்று தாய் ஒன்று தாரம் . திருமணம் ஒரு ஆணை பொறுத்தவரையில் இரண்டு குடும்பங்களின் சங்கமம். அவனின் மனைவியைப் பொறுத்தவரையில் அவரது குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் அல்லது அவருக்கு மட்டுமேயான ஒரு துணை. அவனின் தாயைப் பொறுத்தமட்டில் தான் தட்டிக் கேட்டு ஆள ஒரு பெண். இந்தப் பூக்களின் போர்க்களத்தில் யார் வென்றாலும் தோற்பது அந்த ஆண்தான். அவர்கள்தான் சிந்திக்கவேண்டும்….