அறிவு வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகிவரும் இந்துத்துவா
[ இந்தியாவில் கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள், பெருஞ்செல்வர்கள், அரசியல்வாதிகள், ஆராய்ச்சியாளர்கள் முதலானவர்கள் எந்த அளவுக்கு இந்துத்துவ உணர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் அல்லது இந்துத்துவ சக்திகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்கிற நிலை இந்தியாவின் பன்முகப் பண்பாட்டுக்கும், சனநாயகத்துக்கும், தேசிய மொழிகளுக்கும் – இனங்களுக்கும் ஆபத்தானதாகும்.
“இந்துமதம் என்ற வார்த்தையானது நமது தமிழ் நூல்களில் எதிலாவது எங்கேனும் இருக்கிறதா? இல்லை! ஆரியர்களால் எழுதப்பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்டதுமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பவற்றில் ஒரு ஆதாரத்திலாவது ‘இந்து’, ‘இந்துமதம்’ என்ற வார்த்தைகள் உண்டா?” என்று பெரியார் கேட்ட வினாவுக்கு இன்றுவரை இந்துத்துவவாதிகளால் விடைகூற முடியவில்லை.
குசராத்தில் ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியாக’ உருவான நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக அமர்த்திட இந்துத்துவ சக்திகளும், இந்தியப் பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பல மாதங்களாகக் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி பிரதமரானால், பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் இந்துமதத்தின் ஆதிக்கக் கொடுமைகள் – ஆபாசங்கள் குறித்து எழுதியுள்ள நூல்களைத் தடைசெய்ய வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் கோரக்கூடும்!]
16ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 8ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 1984இல் நடைபெற்று இராசிவ்காந்தி பிரதமரானார். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய அளவில் இரண்டு மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இவ்விரண்டு மாற்றங்களுக்கும் அடித்தளமிட்டவர் ராஜிவ்காந்தியே!
முதலாவது தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்ற வெகுமக்களுக்குக் கேடான கொள்கைக் கான நாற்றங்காலை வளர்த்தவர். 1991இல் பிரதமர் நரசிம்மராவும் நிதி அமைச்சர் மன்மோகன் சிங்கும் நாற்றுகளைப் பறித்து இந்திய வயல் முழுவதும் நட் டார்கள். இரண்டாவது அரசியலில் மதவெறி கலப் பதற்கு வழிவகுத்தனர்.
1949 முதல் அயோத்தியில் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகளை 1986 பிப்பிரவரியில் திறக்கவும், ‘இராம ஜென்ம பூமி’ இது தான் என்று இந்துமதவெறிக்கும்பலால் 1949இல் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட இராமன் உருவத்தை இந்துக்கள் வழிபடவும் அனுமதித்தார்.
1984 தேர்தலில் பா.ச.க. இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது. அந்நிலையில், பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு இராமனுக்கு மாபெரும் கோயில் கட்டி, இந்துக்களின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்ற மதவெறி ஆயுதத்தை இராசிவ்காந்தி பா.ச.க.வுக்குக் கொடுத்தார்; 1992 திசம்பரில் இந்து மதவெறிக்கூட்டம் பாபர் மசூதியை இடித்து இராம னுக்குத் தற்காலிகக் கோயில் அமைத்தது. இதன் விளைவாக இந்து-முசுலீம் மோதல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் நடந்தன.
வாஜ்பாய் தலைமை யில் ஆறு ஆண்டுகள் நடுவண் அரசில் பா.ச.க. ஆட்சி செய்தது. இதன் எதிர்வினையாக இசுலாமியத் தீவிர வாதமும் வளர்ந்தது. சங்பரிவாரங்கள் கூறுகின்ற இந்துத்துவக் கருத்துக்கு மாறாகவோ – எதிராகவோ எவர் கருத்து கூறினாலும், அது இந்துக்களின் மனங்களைப் புண்படுத்துகிறது என்று கூறிச் சங்பரிவாரங்கள் அடா வடிச் செயல்களில் இறங்கிவிடுகின்றன. இந்துக்களின் வாக்குகள் பறிபோகுமோ என்று காங்கிரசுக் கட்சி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்துமத வெறிக் கும்பலின் அடாவடித்தனத்துக்கு அஞ்சி, அமெரிக்காவின் பெண் வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் வென்டி டொனிகர் எழுதிய ‘இந்துக்கள் குறித்த ஒரு மாற்று வரலாறு’ என்ற நூலின் கை யிருப்புப் படிகளையும், விற்பனைக்காக வெளியில் கொடுத்துள்ள படிகளையும் திரட்டி அழித்துவிடுவ தாக அந்நூலைப் பதிப்பித்த பெங்குவின் நிறுவனம் 4.2.14 அன்று ஒப்புக் கொண்டது.
வென்டிடொனிகர் அமெரிக்காவில் சிகாகோ பல் கலைக்கழகத்தில் மதத்துறையின் தலைவர் ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் சமற்கிருதத்தில் இரண்டு முனைவர் பட் டங்கள் பெற்றவர்.
அவர் நாத்திகரோ, மத எதிர்ப்பாளரோ, அரசியல் சார்பு உடையவரோ அல்லர். இந்திய மதங்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர். இந்து மத மூல நூல்களைச் சமற்கிருதத்திலேயே ஆழ்ந்து கற்றவர்.
வென்டி டொனிகர் எழுதிய ‘இந்துக்கள் குறித்த ஒரு மாற்று வரலாறு’ என்கிற நூலைப் பெங்குவின் பதிப்பகம் 2009இல் அமெரிக்காவில் வெளியிட்டது. 2010இல் இந்தியாவில் வெளியிட்டது. இந்நூலின் முன்னுரையில் வென்டிடொனிகர், “இந்துமதம் குறித் துப் பார்ப்பன-மேல்சாதி ஆண்களால் எழுதப்பட் டுள்ள கருத்துகளுக்கு மாறுபட்டதாகத் தோன்றலாம். மற்ற கலாச்சாரங்கள், பெண்கள், பறையர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் இந்து மதத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பை வெளிக்கொண்டுவருவதே இந்நூலின் முதன்மையான நோக்கமாகும்” என்று குறிப் பிட்டுள்ளார் (ஃபிரண்ட்லைன், மார்ச்சு 7, 2014).
தெற்கு ஆசியா குறித்த ஆராய்ச்சியாளரும், வென்டி டொனிகரின் கீழ் பணியாற்றியவருமான மலர்விழி ஜெயந்த், “இந்துக்கள் குறித்த ஒரு மாற்று வரலாறு என்னும் நூலில், இந்துக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், வரலாற்றில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், இவற்றில் பார்ப்பனர் அல்லாத மக்கள் ஆற்றிய பங்களிப்பு ஆகியவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
பார்ப்பனர்களின் கண்ணோட்டத்திற்கு இந் நூலின் கருத்துகள் முரணாக இருப்பதால்தான், இந்துத் துவசக்திகள் இதை எதிர்க்கின்றன” என்று கூறியுள்ளார். உலகில் தலைசிறந்த ஓவியருள் ஒருவராகக் கருதப்பட்ட எம்.எஃப். உசேனின் ஓவியங்கள் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி அவர் மீது வழக்குகள் தொடுத்ததுடன், சிவ சேனைக் குண்டர்கள் அவருடைய ஓவியக் கண்காட்சிகளைத் தாக்கி அழித்தனர். மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்திய அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மனம் வெதும்பிய உசேன் தன் தள்ளாத வயதில், இனி இந்தியாவுக்குத் திரும்புவ தில்லை என்ற உறுதிபூண்டு, 2006இல் நாட்டை விட்டு வெளியேறினார். 2011இல் மறைந்தார்.
தில்லியில் உள்ள ‘கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் அதன் தலைவர் தினாநாத் பத்ரா என்பவர், வென்டிடொனிகர் எழுதியுள்ள நூல் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது; எனவே இந்திய தண்டனைச்சட்டம் விதி 295-A-வின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2011இல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் இருப்பதாலேயே இது மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபடும் அமைப்பு என்று கருதிவிடக்கூடாது. இதன் முதன்மையான நோக்கம் இந்துத்துவக் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பதேயாகும். ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் முன்வைக்கின்ற இந்துமதக் கருத்துகள் – கண்ணோட்டங்களுக்கு மாறாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாட நூல்களில் ஏதேனும் இடம் பெற்றிருப்பதாகக் கருதினால் அதை எதிர்ப்பது – நீக்குமாறு போராடுவதுதான் இந்த அமைப்பின் வேலை.
தினாநாத் பத்ரா பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இப்போது 84 அகவையினர். 2008ஆம் ஆண்டு தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஏ.கே. இராமானுஜம் எழுதிய ‘300 இராமாயணங்கள்’ என்ற ஒரு கட்டுரை பாட நூலில் இடம்பெற்றிருந்தது. ஏ.கே. இராமானுஜர் சிறந்த வைணவ பக்தர். அதே சமயம் ஆராய்ச்சியாளர். ‘300 இராமாயணங்கள்’ என்ற கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்று போராடி வெற்றிபெற்றவர்தான் இந்த தினா நாத்பத்ரா.
இந்தியாவில் கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள், பெருஞ்செல்வர்கள், அரசியல்வாதிகள், ஆராய்ச்சியாளர்கள் முதலானவர்கள் எந்த அளவுக்கு இந்துத்துவ உணர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் அல்லது இந்துத்துவ சக்திகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்கிற நிலை இந்தியாவின் பன்முகப் பண்பாட்டுக்கும், சனநாயகத்துக்கும், தேசிய மொழிகளுக்கும் – இனங்களுக்கும் ஆபத்தானதாகும்.
பெரியார் காங்கிரசுக் கட்சியில் தலைவராக இருந்த 1922 முதல் அவருடைய இறுதி மூச்சு வரை இராமாயணம் வருணாசிரமத்தைக் காப்பது – சூத்திரர்களுக்கு – தமிழர்களுக்கு எதிரானது என்று எழுதியும், பேசியும், போராட்டங்கள் நடத்தியும் வந்தார். 1971இல் இராமன் படத்தைச் செருப்பால் அடிக்கும் மாபெரும் ஊர்வலம் நடத்தினார்.
1929ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ வருட அனு பந்தத்திற்கு இராமாயணம் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை 3.3.1929இல் குடிஅரசு ஏட்டில் வெளியிடப் பட்டது. இக்கட்டுரையை எழுதுவதற்கு 1928ஆம் ஆண்டு சி.ஆர். சீனிவாசய்யங்கார் எழுதி வெளியிட்ட ‘இதர இராமாயணங்கள்’ என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை எழுதியதாகப் பெரியார் குறிப்பட்டுள்ளார்.
“இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாக வும், அவைகள் காலப்போக்கில் பல, ‘தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய்விட்டன’ என்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றைத் தோழர் கோவிந்ததாஸ் அவர்கள் வடஇந்தியாவில் உள்ள ஒரு மடத்தில் தாமே பார்த்ததாகவும் தாம் எழுதிய ‘இந்துமதம்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்” என்று பெரியார் குறிப் பிட்டுள்ளார்.
மேலும் 1928-இல் சி.ஆர். சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இதர இராமாயணம்’ என்ற நூலில் ஜைன இராமாயணம், பவுத்த இராமாயணம், யவன இராமாயணம், கிருஸ்தவ இராமாயணம் பற்றி எழுதியிருப்ப தாகப் பெரியார் குறிப்பிட்டுள்ளார். அந்நூலிலிருந்து பெரியார் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஜைன இராமாயணத்தில் இராமனுக்குச் சீதை, பிரபாவதி, ரதினிபா, ஸ்ரீதாமா ஆகிய நான்கு மனைவிகள் இருந்தனர் என்று எழுதப்பட்டுள்ளது.
“பவுத்த இராமாயணத்தில் தசரதனுகுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு இராமன், இலட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆண்களும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன. இளைய மனைவி (கைகேயி) கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்து விட்டு – இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரியைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பிவிட்டான் என்றும், பன்னிரண்டு வருடங்களான பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு இராமன் அயோத்திக்கு வந்த தாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் இராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய இராமனுக்குக் கலியாணம் செய்வித்துப் பட்டங் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.”
“இவைகளை மெய்பிக்கத் தோழர் அய்யங்கார் – அந்தக் காலத்தில் அண்ணனும் தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும், எகிப்து தேச இராஜதர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும், இதை அறிந்துதான் ரிக்வேதம் 10ஆவது மண்டலத்தில் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கிறது என்றும், அதற்கு முன் அவ்வழக்கம் இருந்து வந்ததற்கு மேலும் ஆதார மாகச் சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக் கிறார்” என்று பெரியார் எழுதியுள்ளார் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் பதிப்பு, பக்கங்கள் 1915, 1916, 1917).
இவ்வளவு நீண்ட மேற்கோளை இங்கே குறிப்பிடுவதன் நோக்கம் இந்தப் பின்னணியில் அமெரிக்க பெண் பேராசிரியர் வென்டி டொனிகர் எழுதியுள்ள ‘இந்துக்கள் குறித்த ஒரு மாற்று வரலாறு’ என்ற நூலை எவரும் இதுவரை கேள்விப்பட்டிராத – கடுகு போன்ற – ஒரு சிறிய இந்துத்துவ அமைப்பு எதிர்த்து வழக்குத் தொடுத்ததால், உலகில் மிகப்பெரிய நூல் வெளியீட்டு நிறுவனமான பெங்குவின், அச்சிட்ட நூல்களை யெல் லாம் அழித்துவிட ஒத்துக்கொண்டது ஏன்? என்று நாம் ஆராய வேண்டும்.
25 ஆண்டுகளுக்குமுன் இதே பிப்பிரவரி மாதம் 14ஆம் நாள், ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற நூலில் இசுலாமிய மதத்தை இழிவுபடுத்தியிருப்பதாகக் கூறி அதன் ஆசிரியர் சல்மான்ருஷ்டியைக் கொல்லப்பட வேண்டிய இசுலாமிய மதப்பகைவன் என்று ஈரான் நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா கொமேனி அறிவித்தார். சல்மான்ருஷ்டி இந்திய வம்சாவளியினர். இலண்டனில் வாழ்பவர். ‘நள்ளிரவில் குழந்தைகள்’ போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியவர்.
பிரதமராக இருந்த இராசிவ்காந்தியும் ‘சாத்தானின் கவிதைகள்’ நூலுக்கு இந்தியாவில் தடைவிதித்தார். இந்நூலை பெங்குவின் நிறுவனம் தான் வெளியிட்டது. ருஷ்டிக்கு மத மரணதண்டனை விதிக்கப்பட்டபோதிலும் பெங்குவின் நிறுவனம் அந்நூலைத் தொடர்ந்து வெளி யிட்டது. சல்மான்ருஷ்டி இலண்டனில் பத்து ஆண்டு கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திட பிரித்தானிய அரசு எல்லா உதவிகளையும் செய்தது.
1991இல் இந்நூலை, சப்பானிய மொழியில் மொழிபெயர்த்த பல்கலைக்கழகப் பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். 1993இல் நார்வே மொழியில் இந்நூலை வெளியிட்ட பதிப்பாளர் ஓஸ்லோ நகரில் அவருடைய வீட்டில் கொல்லப்பட்டார். இந்நூலை விற்பனை செய்த கடைகள் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டுகளை வீசித் தாக்கினர். இவ்வளவு எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு, கருத்துரிமையை விட்டுத்தர முடியாது என்று கூறிச் சாத்தானின் கவிதைகள் நூலைத் தொடர்ந்து வெளியிட்ட பெங்குவின் நிறுவனம், வென்டி டொனி கரின் ‘இந்துக்கள் குறித்த ஒரு மாறுபட்ட வரலாறு’ என்ற நூலின் வழக்கில் பின்வாங்கியது ஏன்?
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்திருப்பதே முதன்மையான காரணம். அத்வானி போன்ற தலை வர்கள் கூட “அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான். இது இந்துக்களின் நம்பிக்கை. இது அரசியல் சட்டத்துக்கும் அப்பாற் பட்டது. இதை எவரும் கேள்வி கேட்க முடியாது” என்று கூறுகின்றனர். உச்சநீதிமன்றமும் “‘இந்துத் துவம்’ என்பது இந்து மதத்தைக் குறிப்பதன்று; இது இந்தியர்களின் வாழ்க்கை நெறி” என்று விளக்கம் கூறியிருக்கிறது.
wendy- donigerவென்டி டொனிகரின் நூல் படிகள் அனைத்தையும் அழிப்பதாகப் பெங்குவின் நிறுவனம் ஒத்துக்கொண்டதன் அடிப்படையில் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் தினாநாத் பத்ரா 10.2.2014 அன்று தான் தொடுத்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது குறித்துப் பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தவொரு குடிமக னுக்கும் சுதந்தரமாகச் சிந்திக்கவும் அதை வெளியிடவு மான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்திய தண்டனைச் சட்டம் விதி 295-ஹ என்பது இந்தியாவில் எந்தவொரு பதிப்பாளரும் உலகத்தரத்தில் கருத்துச் சுதந்திரத்துடன் நூலை வெளியிடுவதற்குத் தடையாக இருக்கிறது.
மேலும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோரை அச்சுறுத்தல்களிலிருந்தும், தாக்குதல் களிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் வென்டி டொனிகரும் இதே கருத்தில் அமைந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மாறுபட்ட கருத்தைத் தெரிவிப்பது கிரிமினல் குற்றமா? என்று வினவியுள்ளார்.
“இந்துமதம் என்ற வார்த்தையானது நமது தமிழ் நூல்களில் எதிலாவது எங்கேனும் இருக்கிறதா? இல்லை! ஆரியர்களால் எழுதப்பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்டதுமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பவற்றில் ஒரு ஆதாரத்திலாவது ‘இந்து’, ‘இந்துமதம்’ என்ற வார்த்தைகள் உண்டா?” என்று பெரியார் கேட்ட வினாவுக்கு இன்றுவரை இந்துத்துவவாதிகளால் விடைகூற முடியவில்லை.
குசராத்தில் ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியாக’ உருவான நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக அமர்த்திட இந்துத்துவ சக்திகளும், இந்தியப் பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பல மாதங்களாகக் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி பிரதமரானால், பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் இந்துமதத்தின் ஆதிக்கக் கொடுமைகள் – ஆபாசங்கள் குறித்து எழுதியுள்ள நூல்களைத் தடைசெய்ய வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் கோரக்கூடும்!
“மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்காக மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல், அதுவும் காலத் திற்கும் அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் – மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டி யதே மனிதனின் கடமை என்றும், அது எப்படிப்பட்ட தானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ, திருத்தவோ உரிமை இல்லை என்று சொல்லும்படியான மதம் எதுவானாலும் அதை அழித்துத் தீர வேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகின்ற ஒவ்வொருவருடைய கடமையாகும்” என்று 1931 சனவரியில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ ரிடையே பெரியார் வீறுடன் முழங்கினார்.