நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய கடந்த கால நிகழ்வுகள்
சலீம் எம்.ஐ.எஸ்.ஸி
o புதையலைக் கண்டெடுத்த மனிதர்
o தவறான முறையில் சத்தியமிட்டுக் கூறியவர்
o பாதையில் இருந்த இடையூறை அகற்றியவர்
புதையலைக் கண்டெடுத்த மனிதர்
பிறருக்குரிய பொருட்களை தவறான முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தமக்கு சொந்தமில்லாத செல்வங்களின் மீது ஆசைப்பட்டு அவற்றை அபகரித்துவிடக் கூடாது. அடுத்தவருக்குரிய பொருட்களை மோசடி செய்துவிடாமல் உரிய முறையில் ஒப்படைத்துவிட வேண்டும். இந்தப் போதனைக்கு மாற்றமாக ஏமாற்றுவதை மட்டுமே தொழிலாக செய்து கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் எப்போது திருந்துவார்களோ?
”(பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், “என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை’’ என்று கூறினார்.
நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், “நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)’’ என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், “உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’’ என்று கேட்டார்.
அவ்விருவரில் ஒருவர், “எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்’’ என்று சொன்னார். மற்றொருவர், “எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது’’ என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், “அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணைத் மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்’’ என்று தீர்ப்பளித்தார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 3472, முஸ்லிம் 1721)
தவறான முறையில் சத்தியமிட்டுக் கூறியவர்
அல்லாஹ் தமது அடியார்களில் தான் நாடியவர்களின் பாவங்களை மன்னிப்பான், மன்னிக்காமலும் இருப்பான். பாவங்களை மன்னிப்பது என்பது அவனுக்குரிய தனித்துவமான அதிகாரம். இந்த விஷயத்தில் மட்டுல்ல அல்லாஹ்விற்குரிய எந்தவொரு அதிகாரத்திலும் தலையிடும் விதத்தில் நமது சொற்களோ செயல்களோ ஒருபோதும் இருக்கக்கூடாது.
”(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்’’ என்று கூறினார். அல்லாஹ், “இன்ன மனிதனை நான் மன்னிக்க மாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்’’ என்றோ, அதைப் போன்றோ கூறினான்.” இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம் 5115)
பாதையில் இருந்த இடையூறை அகற்றியவர்
பொதுநலத்தைப் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்திலே இருக்கும் நம்பிக்கையாளர்கள், பிறருக்கு நன்மை தரும் காரியங்களை செய்தால் மட்டும்போதாது. மாறாக, அடுத்தவர்களுக்கு அல்லல் அளிக்கும் காரியங்களை அகற்றுவதிலும் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்களும் மறுமையில் நாம் சொர்க்கத்தில் நுழைவதற்கு வாயிலாக வாய்ப்பாக அமையும் என்பதை மறந்துவிடக் கூடாது.
”ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.” இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 2472, முஸ்லிம் 1914, 652)
கடந்த காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களை நபிமொழிகளின் வாயிலாக தெரிந்து கொண்டோம். இவ்வாறு நாம் முந்தைய கால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும்போது அவற்றைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவற்றில் இருந்து பெறவேண்டிய படிப்பினையை உரிய முறையில் பெற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் மார்க்கத்தின் வழியில் சீராக செயல்படுவதற்கு அவை நமக்கு உதவும். அதன் மூலம் நாம் ஈருலகிலும் வெற்றிபெற முடியும். இதற்கு வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக.