சுகப்பிரசவம் சாத்தியமே!
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை, கூடியமட்டும் சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். மொத்த குழந்தைப் பிறப்பில் 10% முதல் 15% க்குமேல் சிசேரியன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்றுதான் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது.
இதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும், குறிப்பாக இத்தகைய விருப்பம் உழைக்கும் மகளிரிடம் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது. அண்மையில் இந்திய குடும்ப நலத்திட்ட சங்கம் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், மருத்துவ உலகுக்கு வெளியே இருப்போர் சொல்வது இதற்கு நேர் எதிரான ஒன்று. குழந்தை மிகவும் பெரிதாக இருப்பதால் சுகப்பிரசவம் மிகமிக அரிது. வலி அதிகமாக இருக்கும். சிசேரியன் மட்டுமே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சொன்னதால் ஒப்புக்கொண்டோம் என்பதாகவும், குழந்தை தலை புரண்டு கிடக்கிறது என்றும், பனிக்குடம் உடைந்துவிட்டதால் இனி சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றும் கூறித்தான் சிசேரியனுக்கு சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இந்த முரண்பாடுகளின் பின்னணியில் மருத்துவ வணிகம் முக்கிய இடம் பெறுகிறது. சாதாரண மகப்பேறு ரூ.3,000 வரை செலவாகிறது என்றால், சிசேரியனுக்கு ரூ.30,000 முதல் 40,000 வரை செலவாகிறது. இதில் மருத்துவர்களுக்கு பாதி கட்டணம் கிடைக்கிறது என்பதும் சிசேரியன் அதிகரிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், உள்ளாட்சிகள் நடத்தும் மகப்பேறு மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிகமான குழந்தை பிறப்பு தனியார் மருத்துவமனைகளில்தான் நடக்கிறது.
தற்போது அரசு மருத்துவமனைகளிலும்கூட சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. திருச்சி மாவட்டத்தில் 2011இல் 917 சிசேரியன் நடந்தது என்றால், 2013இல் 1,987-ஆக இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதிலும். இதற்குக் காரணம், அரசு மருத்துவமனைகளில் பிரசவ கால இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக ஆக்குவதற்கு, கொஞ்சம் கடினமான பிரசவம் என்றாலும் சிசேரியனாக மாற்றிவிடுகிறார்கள்.
இதன் உண்மைகளும் பின்னணிகளும் எதுவாக இருந்தபோதிலும் சிசேரியன் தேவைப்படும் நேர்வுகள் மிகவும் குறைவு என்பதும் இவற்றை முறையான பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்பால் தவிர்த்துவிட முடியும் என்பதுமே நிஜம். இது ஒரு தாயின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகமிக இன்றியமையாதது.
உழைக்கும் மகளிர் சிசேரியன் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள் என்கின்ற ஆய்வு முடிவு நம்பும்படியாக இல்லை. சிசேரியன் செய்துகொண்டால், அந்தத் தாய் எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகும். அவர் அன்றாடப் பணிகளை தானே செய்வதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இவ்வளவு சிரமங்களை ஒரு கர்ப்பிணி விரும்பி ஏற்கிறார் என்று சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை.
மேலைநாடுகளில், முடிந்தவரை இயற்கையான பிரசவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது தாய் சேய் நல மருத்துவருக்கு இழிவு என்பதாகவும், கர்ப்ப நேரத்தில் மருத்துவர் கர்ப்பிணித் தாயைச் சரியாக வழிகாட்டவில்லை என்பதாகவும் அங்கே கருதப்படுகிறது. இந்தியாவின் நிலைமை நேர் எதிராக மாறிக்கொண்டு வருகிறது. இது ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்திற்கு வழிகோலாது.
மதுரை அருகே ஒரு பழங்குடியினத்தவர், ஒரு கர்ப்பிணியை பிரசவத்துக்காக அழைத்து வந்தபோது, வயிற்றில் இருக்கும் குழந்தை தலை புரண்டு கிடப்பதால் அறுவைச் சிகிச்சை செய்துதான் வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியபோது, அந்த பழங்குடியின மூப்பன் அக்குழந்தையின் தலையை அப்பெண்ணின் வயிற்றைத் தட்டி உருட்டி சரிசெய்து சுகப்பிரசவம் பார்த்ததாக ஒரு செய்தி நமது தினமணியிலேயே வந்தது.
இந்த அளவுக்கு பழைமைக்கு திரும்ப வேண்டியதில்லை. ஆனாலும், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். முந்தைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்திலும் இயற்கையான மக்கட்பேறு சாத்தியமே! அது வலியுறுத்தப்பட வேண்டும்.
source: http://www.dinamani.com/