ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!
”(நபியே!) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்” (அல்குர்ஆன் 3:26.)
ஆட்சிப் பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகையால் அவர்கள் இறைவனால் விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குடிமக்களின் குறைகள் நியாயமானதாக இருக்கும்பட்சம் அவை நிவர்த்தி செய்யப் படாமல் இருந்தால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் இறைவன் முன் குற்றவாளிகளே. இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். காந்தியடிகள் கலீபா உமரின் ஆட்சி போன்று இந்தியாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது இதனால்தான்.
இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு முன்மாதிரியானது.
அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அரசுக் கருவூலத்தின் ஜகாத் எனப்படும் செல்வத்தை தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல பின்வரும் தன் தலைமுறையினர் அனைவருக்கும் சட்டவிரோதமாக்கி அறிவித்தார். அந்த கட்டளை இன்றும் பின்பற்றப்படுகிறது.
o ஒருமுறை அரசாங்கக் கருவூலத்தை சேர்ந்த பேரீத்தப்பழக் குவியலில் இருந்து தன் சிறுவயதுப் பேரன் ஹசன் ரளியல்லாஹு அன்ஹு எடுத்து வாயிலிட்ட ஒரு பேரீத்தம்பழத்தையும்கூட ‘இது நமக்கு அனுமதிக்கப்பட்டது அல்ல, துப்பு துப்பு’ என்று கூறி துப்ப வைத்தார் அந்த மாமனிதர்! சிறுவன்தானே அல்லது ஒரு பேரீச்சம்பழம்தானே என்று கூறி அலட்சியம் காட்டவில்லை. அந்த அளவுக்கு அரசுப் பொருள் என்பது நெருப்பாக சுட்டது அந்த ஆட்சியாளருக்கு!
இறைவழிகாட்டலில் நின்று ஆட்சி நடத்திய அம்மாமனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்கொண்ட உணவைப் பார்க்கின்ற போது மிகப்பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அரசர்கள் உண்ட உணவுகளை அவர்கள் கண்டதில்லை. ஏன் சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் தொடர்ந்து உண்டதில்லை என்பதற்கு அவர்களின் தூய வரலாறு எமக்கு தக்க சான்றாக இருக்கின்றது.
o ‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2567,6459)
o ‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணியாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)
அன்னாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னாள் ஜனாதிபதிகளின் வாழ்விலும் அதே வறுமையைக் கண்டது வரலாறு!
source: http://quranmalar.blogspot.in/2014/04/blog-post_1617.html