முஸ்லிம்களின் தடைகற்கள்!
CMN சலீம்
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலைப் பயிலாத இன்றைய கல்வியாளர்களும் இறையியலின் பகுதிப் பாகத்தை மட்டுமே பயின்ற ஆலிம்களும் இவர்களுக்கு மத்தியில் சிககித் தவிக்கும் சமூக ஆர்வலர்களும் முஸ்லிம்களின் கல்வித் தேவை என்ன என்தையும், கல்விப்பாதை எது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள சாதாரண மக்களிடம் கலந்து அவர்களோடு தொடர்பு இடைவெளி இல்லாத வாழ்வு வாழ வேண்டும்.
என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அவை அத்துனையையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய கல்வியாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் – தங்களுக்கான கடமைகளைச்சரியாக நிறைவேற்றாவிட்டால் – முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றம் வருதற்கு வாய்ப்பில்லை.]
முஸ்லிம்களின் தடைகற்கள்!
CMN சலீம்
இன்றைய முஸ்லிம் சமூகத்தில் அறிவு ஜீவிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்கும் மத்தியில் ஒரு மிகப் பெரிய தொடர்பு இடைவெளி நிலவுகிறது.
அதேபோல சமூகத்தில் செல்வந்தர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கும் சாதாரண ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கும் மத்தியில் மிகப்பெரிய ‘வர்க்க’ இடைவெளி நிலவுவதை முஸ்லிம் சமூகத்தில் பார்க்க முடிகிறது.
அறிவு ஜீவிகள் அதிகமான பட்டங்களை தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்திருப்பவர்கள். இவர்களில் பலருக்கு தங்களை பிறரிடமிருந்து தனித்துக் காட்ட வேண்டும் என்ற சிந்தனைக்குச் செருக்கு ஏற்படுகிறது. வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுத்தராத, சாறுபிழியப்பட்ட சக்கைகளை உருவாக்கும் இன்றைய முதலாளித்துவக் கல்வியைக் கற்ற அறிவு ஜீவிகள் தான் அப்படி என்றால் மனிதனைப் புனிதனாக்கும் வல்லமை பொருந்திய மார்க்கக் கல்வியைப் பயின்ற சிலரிடம் கூட இந்த சீழ் பிடித்த சிந்தனை இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்; வேடிக்கையிலும் வேடிக்கை.
பண்பாடு சார்ந்த கல்வி சமூக மாற்றத்திற்கான ஆயுதம். உயர்ந்த நாகரீகச் சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். இந்த இலக்கோடு கல்வியாளர்கள் உருவான காலத்தில் ‘பொதுமக்களிடமிருந்து இடைவெளி விட்டு வாழுதல்’ என்கிற சிந்தனை அந்தக் கல்வியாளர்களிடம் இருந்ததில்லை. மார்க்கக் கல்வி என்பது இறைச் சிந்தனையில் வாழும் மனித சமூகத்தை உருவாக்குவதற்கே என்ற இலக்கோடு உலமாக்கள் உருவாக்கப்பட்டபோது இந்த குணம் இருந்ததில்லை.
அதே போல தங்களிடம் பணம் இருக்கிறது, வசதி வாய்ப்பு இருக்கிறது என்றால் அப்படிப்பட்டவர்கள் சாதாரண மக்களிடமிருந்து எந்த அளவிற்கு தன்னை தூரமாக்கிக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு தூரமாக்கிக் கொண்டு, சாதாரண மனிதன் தன்னை நெருக்கிவிட முடியாத அளவிற்கு விலகி வாழ்கின்றனர். அதைப் பெருமையாகவும் கருதுகின்றனர். அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றால் “அப்பாயிமென்ட்” வாங்கித்தான் சந்திக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
“நம்பிக்கையாளர்களில் எவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும். (அல்-குர்ஆன் – 26:215)
முதலாளித்துவ வாழ்வியல் சூழலுக்காக வளர்க்கப்பட்டுள்ள “சேவைத் துறைப் பொருளாதாரத்தில்” “அறிவுசார் உழைப்பு” அதிகரித்து அதன் மூலம் கூடுதல் வருமானம், குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி, முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த சிந்தனை என்ற மாயை நிலை மககளிடையே வளர்ந்ததினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புக்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம் ஆகும்.
உடல் உழைப்பு, அதன் மூலம் மிதமான அதே நேரம் நிலையான நீடித்த பொருளாதார வளர்ச்சி நிலவிய காலத்தில் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடம் ஏழை எளிய மக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற இந்த சிந்தனைப் போக்கு மிக அரிதாக இருந்ததை தமிழக முஸ்லிம்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
முஸ்லிம் சமுதாய கல்வியாளர்களிடமும் செல்வந்தர்களிடமும் இந்த சிந்தனைப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல உதாரனங்களைப் பார்க்க முடியும். முஸ்லிம்களில் பெரும்பான்மையான விளிம்பு நிலை மக்களிடமிருந்து கல்வியாளர்களும் செல்வந்தர்களும் விலகி வாழ்வதால் அந்த மக்களின் எண்ண ஓட்டங்களையும் கல்வி மற்றும் வாழ்வியல் தேவைகள் என்ன என்பதையும் இந்த இரு சாராரும் சரியாகப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
கல்வியாளர்கள் தங்களால் இயன்றதை, தங்களுக்குச் சரி என்று பட்டதை இது தான் சரியான பாதை என்று சமூக மக்களிடம் திணிக்கின்றனர். அப்படிப்பட்ட கல்விச் சேவையை சிறந்த செயல்முறையாகச் செய்து தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களின் கல்வி மற்றும் அறிவுசார் தேவைகள், எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக இருக்கிறது. அதனால் கல்வி ரீதியாக சமூகம் அடைய வேண்டிய சரியான முன்னேற்றத்தை அடைய இயலவில்லை. முஸ்லிம்களின் இன்றைய கல்விப் பின்னடைவிற்கான முக்கிய காரணிகள் இவை.
அதேபோல விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான உடனடி உதவிகள், எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்த போதிய புரிதல் இன்மை காரணமாக அல்லது புரிந்து கொள்வதற்கான நேரமின்மை காரணமாக செல்வந்தர்கள், வசதி படைத்தோர் தங்களின் பணம் தாங்கள் விரும்பிய வடிவத்தில் விரும்பிய மக்களுக்குச் செலவிடப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
வறுமை, இதனால் சமுதாயத்தின் நிலை மாறி பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வுகள் குறைந்தபாடில்லை. சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் தான் சமூக மாற்றம் ஏற்படும். சிந்தனை மாற்றத்தை அறிஞர்களால் தான் ஏற்படுத்த முடியும். அந்தச் சிந்தனைகள் சமூகத்தின் வேர் வரை விதைக்கப்படுவதற்கும் அதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் செல்வந்தர்களின் உதவியும் ஒத்துழைப்பும் தேவை.
சமுதாயத்தில் அறிஞர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே புரிதலும் இணக்கமும் இல்லை. வறியவர்கள் மற்றும் ஏழைகளுடன் அமர்வது, அவர்களிடம் தம்மை உயர்வாகக் காட்டிக் கொள்ளாமலிருப்பது, மக்களுடன் முகமலர்ச்சியுடன் நடந்து கொள்வது, பிறரை விட தன்னைச் சிறந்தவராக கருதாமலிருப்பது ஆகியவை பணிவின் வெளிப்பாடுகளாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
இந்தியாவில் அல்லது தமிழகத்தில் ஷரீஅத் அடிப்படையிலான ஒரு அரசோ அல்லது குறைந்த பட்சம் முஸ்லிம்களின் ஆட்சியோ இருந்தால் முஸ்லிம்களின் ஆன்மீகத் தேவைக்கும் ஷரீஅத் அடிப்படையிலான கல்வி, சமூக, பொருளாதாரம் போன்ற வாழ்வியல் தேவைக்கும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமோ அவை அத்துனையையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய கல்வியாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் – தங்களுக்கான கடமைகளைச் சரியாக நிறைவேற்றாவிட்டால் – முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றம் வருதற்கு வாய்ப்பில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலைப் பயிலாத இன்றைய கல்வியாளர்களும் இறையியலின் பகுதிப் பாகத்தை மட்டுமே பயின்ற ஆலிம்களும் இவர்களுக்கு மத்தியில் சிககித் தவிக்கும் சமூக ஆர்வலர்களும் முஸ்லிம்களின் கல்வித் தேவை என்ன என்தையும், கல்விப்பாதை எது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள சாதாரண மக்களிடம் கலந்து அவர்களோடு தொடர்பு இடைவெளி இல்லாத வாழ்வு வாழ வேண்டும். அதேபோல அவதிப்படும் மக்களின் அவசியத் தேவைகளை அறிந்து கொள்ளவும் வறுமையின் காரணமாக குஃப்ர் பாதைக்குச் செல்வதைத் தடுப்பதற்கும் செல்வந்தர்கள் வெகுஜன மக்களிடம் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தால் முஸ்லிம் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.
• அறிவு உயர்ந்தாலும்
• செல்வம் உயர்ந்தாலும்
• எளிமையான வாழ்வு தேவை
• அதுதான் பெருமானாரின் வாழ்வு.
source: http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/81-2013-09-11-11-51-06