சுற்றுலாக்களும் படிப்பினைகளும்
இயற்கை அழகை இரசிக்கவும் அவற்றில் அமைதியைக் காணவும் கோடைவாசத் தலங்கள் நோக்கி நாம் பயணங்கள் மேற்கொள்ளும் காலம் இது!
மலையும் மடுவும் ஆறும் அருவிகளும் அவைகளின் சலசலப்பும்…..
மரங்களும் செடிகளும் கொடிகளும் தென்றலும் வசந்தமும்….
காய்களும் கனிகளும் மலர்களும் மொட்டுக்களும் மகரந்தமும்…..
அப்பப்பா… நிறத்தாலும் மணத்தாலும் சுவையாலும் எவ்வாறெல்லாம் நமக்கு இன்பமூட்டுகின்றன அவை! பசுமைக் கம்பளத்தின் மீது வண்ணங்களை வாரித்தெளித்த மலர்களும் நம் தலைக்கு மேலே குடைபிடிக்கும் வான்முகில்களும் ஆரத்தழுவும் தென்றலும்…..என்றுமே தொடரக் கூடாதா இவை? என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்கும் இருக்கவே செய்கிறது. இருப்பினும் வாழ்வின் உண்மைகளை நாம் மறக்கவோ அலட்சியம் செய்யவோ முடிவதில்லை. இவற்றை விட்டு விட்டு மீண்டும் பிழைப்புக்காக ஊர் திரும்பியாக வேண்டும்.
ஆனால் இந்த தற்காலிக இன்பங்கள் பின்னால் வர இருக்கின்ற ஒரு நிரந்தர இன்பங்கள் நிறைந்த ஒரு வாழ்விடத்தின் ஒரு சிறு மாதிரியே (sample) என்பதை சிந்திப்போர் உணரலாம். அதைப் பற்றி திருக்குர்ஆனில் நம்மைப் படைத்தவன் இவ்வாறு கூறுகிறான்:
29:58 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
அந்த வாழ்விடம் தற்காலிகமானது அல்ல. நிரந்தரமானது.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.)
ஆனால் அங்கு செல்ல வேண்டுமானால் நாம் இறைவன் மீதும் அவன் தூதர்கள் மீதும் வேதங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிய வேண்டும். அவ்வாறு செய்வோரையே பயபக்தியுடையவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இறைவனின் செய்திகளைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக நடந்தவர்களைப் போல ஆக மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
இயற்கை அழகு இறைவனின் கைவண்ணமே!
இறைவனின் உள்ளமை பற்றியும் அவனது திட்டங்கள் பற்றிய பாடங்களைத் தாங்கி நிற்கின்றன இயற்க்கை காட்சிகள்:
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
16:12. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:13. இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (இறைவனின் அருட்கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு அத்தாட்சியுள்ளது.
வரலாற்றுச்சுவடுகள்
சுற்றுலாக்களின் போது சரித்திரப்புகழ் வாய்ந்த பலவிதமான நினைவிடங்களையும் காண்கிறோம். நமக்கு முன்னர் இங்கு வாழ்ந்து சென்ற முன்னோர்களின் கைவண்ணங்களில் உருவான அவர்களின் மாளிகைகள், அரண்மனைகள், பாறைகளைக் குடைந்து அவர்கள் உண்டாக்கிய சிற்பங்கள், குகைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் என பலவற்றையும் நாம் காண்கிறோம்.
இவற்றில் இருந்து நாம் பெறும் பாடங்கள் என்ன?
நம்மில் பலரும் அவற்றில் கலை அழகு கண்டு வியக்கிறோம். அவர்கள் நம் நாட்டினர் என்பதற்காக பெருமை கொள்கிறோம். அதேவேளையில் நாம் சிந்திக்கவேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது…
அவர்களின் நிலை இப்போது என்ன? என்பதே அந்த சிந்தனை….
o அவர்கள் இப்பூமியில் தங்கள் வாழ்வு நிலையானது என்று எண்ணினார்கள். அதனால்தான் பாறைகளைக் குடைந்தும் தங்கள் வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இன்று அவற்றில் அவர்களைக் காணவில்லை!
o அவர்களில் சிலர் தங்கள் செல்வம் தங்களை நிலைத்திருக்க வைக்கும் என்று எண்ணினார்கள். அதனால்தான் நாட்டு செல்வங்களை அரண்மனைக்குள் சேமித்தார்கள். ஆனால் திரண்ட செல்வங்களை அனுபவிக்க அவர்களின் உடல்கள் இன்று இல்லை.
o தங்கள் புகழை நாடும் நாளைய தலைமுறையும் என்றென்றும் ஓத வேண்டும் என்று விரும்பியே கலைவண்ணம் மிக்க நினைவுச்சின்னங்களை சமைத்தார்கள். ஆனால் அதைக் காணவும் கேட்கவும் அவர்கள் இங்கு இல்லை.
o இறந்துபோன மனைவிக்கு பளிங்குக் கற்களால் மாளிகை கட்டி அழகுபார்த்தவர்களும் அவர்களில் உண்டு. அந்த மாளிகைகளின் அழகை ரசிப்பவர்கள் இன்று உண்டு. ஆனால் அவர்கள் இன்று இல்லை.
o தங்களைக் நீடூழி வாழவைக்கும் என்று தங்கள் இஷ்ட தெய்வங்களாகக் கருதியவற்றுக்கு சிற்பங்கள் வடித்தவர்களும் நம் முன்னோரில் உண்டு. அது பொய்க்கும் என்று அவர்கள் எண்ணிப்பார்க்கவே இல்லை.
ஆம் அன்பர்களே, இன்று சரித்திரங்களில் வைர வரிகளால் புகழப்படும் நமது முன்னோர்கள் தங்களுக்கு அப்படியொரு திடீர் முடிவுரை எழுதப்படும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை!
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
இந்த உண்மையையும் அவர்களில் பெரும்பாலோர் உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகிறது.
”பூமியில் நீங்கள் சுற்றி வந்து, இறை வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 6:11.)
source: http://quranmalar.blogspot.in/2014/04/blog-post_30.html