கண்ணியம் காதலாய் மலரட்டும்!
நீடூர் S.A.மன்சூர் அலீ
பின் வரும் மூன்று திருமணங்களையும் குறித்து சற்று ஆழமாக சிந்தியுங்கள்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை எவ்வாறு மணம் முடித்தார்கள்?
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் – அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.
அத்துடன் மக்காவிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.
தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்! தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!
3. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது எப்படி?
ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி “அறிமுகம்” செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!
இம்மூன்று திருமணங்களிலும் – தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:
படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:
திருமணத்துக்கு முன்னரேயே – பெண் மற்றும் மாப்பிள்ளை – இவர்களின் குண நலன்கள் (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதை இருவருமே அறிந்து கொள்தல் மிக அவசியமான ஒன்றாகும்!
– சுன்னத்தான இல்லறம்