மோடியை அவருடைய கோபமே வீழ்த்திவிடும்!- ராகுல் காந்தி பிரத்யேகப் பேட்டி
வர்கீஸ் கே. ஜார்ஜ்
[நம் நாட்டு வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் நாம் இருப்பதால் இந்தத் தேர்தல் முக்கியமானது என்று கருதுகிறேன். பத்தாண்டுகள் தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் நலக் கொள்கைகளால் செல்வம் பெருக்கப்பட்டதோடு நாட்டின் 15 கோடி மக்களை, இதுவரை இருந்திராத வகையில் வறுமைக்கோட்டுக்கும் மேலே கொண்டுவந்திருக்கிறோம். இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை.
நாம் இப்போது இரு வெவ்வேறு சித்தாந்தங்களிடையேயான போட்டியைப் பார்க்கிறோம். காங்கிரஸின் கொள்கை அனைவரையும் அரவணைப்பது, அதிகாரத்தைப் பரவலாக்குவது, மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, பொருளாதார வளர்ச்சிக்காக ஒற்றுமையை வளர்ப்பது.
எதிர்க்கட்சியின் எண்ணம் மத அடிப்படையில் மக்களைப் பிரிப்பது, ஒரு சிலருக்காக மட்டும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது, முடிவெடுக்கும் அதிகாரத்தை மையப்படுத்துவது, எல்லா அதிகாரங்களையும் ஒரே ஒருவரிடம் கொடுத்துவிடுவது. எங்களை எதிர்ப்போர் இந்தியாவில் ஏழைகளுக்கும், மாற்று மதத்தவருக்கும் மாற்றுச் சித்தாந்தத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடமே இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு.
நம் நாடு சுதந்திரம் பெற்றதுமுதல் இத்தகைய எண்ணம் கொண்டோரை எதிர்த்து வெற்றிபெறுவதே காங்கிரஸின் பாரம்பரியமாக இருந்துவருகிறது. இந்தப் போராட்டத்தைத் தொடருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.]
மோடியை அவருடைய கோபமே வீழ்த்திவிடும்!- ராகுல் காந்தி பிரத்யேகப் பேட்டி
வர்கீஸ் கே. ஜார்ஜ்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதன் கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஆனால், அதற்கு ஓய்வு என்று அர்த்தமல்ல. அவருக்காகக் காத்திருக்கும் மக்களும், பிரச்சினைகளும் ஏராளம். ஆனால், ராகுலோ வெள்ளை குர்தா, கருப்பு ஜீன்ஸ் சகிதம் புதுடெல்லியில் உள்ள அவரது 12, துக்ளக் சந்து இல்லத்தில் புன்னகையோடு காட்சியளிக்கிறார். அவரது ஆளுமை, சித்தாந்தம், அவர்மீது தாக்கம் ஏற்படுத்திய ஆளுமைகள், 2014 தேர்தல், அப்புறம் முக்கியமாக அவரது பிரதான எதிராளி நரேந்திர மோடி என்று எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறார். ‘தி இந்து’வின் அரசியல் பிரிவு ஆசிரியர் வர்கீஸ் கே. ஜார்ஜ்க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து…
அரசியல் அணுகுமுறை, பாணி, பின்பற்றும் விழுமியங்கள் ஆகியவற்றில் நீங்கள் யாரைப் போல இருப்பதாக நினைக்கிறீர்கள்? நேரு, இந்திரா, ராஜீவ் அல்லது சோனியா?
கூர்ந்து கவனித்தால், அவர்கள் எல்லோரும் ஒரே விஷயங்களைத்தான் சொல்லிவந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கருணை, நியாயம், பெருந்தன்மை, வெறுப்பை அடக்கியாளுதல், கோபத்தைக் கட்டுப்படுத்தல்… என்னைப் பொறுத்தவரை இவற்றை எல்லாம் ஒரே கருத்தின் விரிவான அம்சங்களாகவே பார்க்கிறேன்.
புத்தர்தான் உங்களை மிகவும் கவர்ந்தவர் என்று கூறியிருந்தீர்கள், எப்படி என்று சொல்ல முடியுமா?
மிகவும் சிக்கலான கேள்வி. மிகக் குறுகிய காலத்தில் இதற்கான பதிலைச் சொல்லிவிட முடியாது. அவருடைய போதனைகளில் முதலில் வருவது, ‘மற்றவர்களிடத்தில் வன்முறையை அல்ல; அகிம்சையைப் பிரயோகிக்க வேண்டும்’ என்பதுதான். முதலில் நீங்கள் உங்களுக்கு என்ன செய்துகொள்கிறீர்கள், பிறகு மற்றவர்களிடத்தில் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதில்தான் போதனை முக்கியத்துவம் பெறுகிறது. அது என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதைப் பௌத்தம் மட்டும் அல்ல; எல்லா மதங்களும் அதனதன் வழிகளில் போதித்துள்ளன.
அப்படியானால் நீங்கள் அன்பும் கருணையும் நிரம்பப் பெற்றவர், அப்படித்தானே?
அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்க முயல்கிறேன். ஆம், அதுதான் உண்மை. கோபமும் பழிவாங்கலும் நேரத்தை வீணாக்கும்; ஆற்றலை விரயமாக்கும்; அது உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களை விதைக்கும்; அது உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் அப்படியே மாற்றும். அவர்கள் உங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் செய்துவிடுவார்கள்.
உங்களுடைய அரசியல் எதிராளியான நரேந்திர மோடி, கூட்டங்களில் தொடர்ந்து உங்களை ‘ஷாஸாதா’ (இளவரசர்) என்று குறிப்பிடும்போது, நீங்கள் எந்த மாதிரியான உணர்ச்சிக்கு ஆளாகிறீர்கள்? கோபமடைகிறீர்களா?
மற்றொருவரின் கோபமூட்டும் பேச்சை நான் கேட்கவோ, உணர்ச்சிவசப்படவோ தேவையில்லை. ஒருவருக்குக் கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கும். அவர் கோபத்தையும் வெறுப்பையும் சுமந்து திரிகிறார். அது என்னை ஒன்றும் செய்யாது. அது அவரைத்தான் தாக்கும். மோடி என்னை எப்படி அழைக்க விரும்புகிறார், எந்த விதமான வசைச்சொற்களை என்மீது வீச விரும்புகிறார் என்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரோடு சம்பந்தப்பட்டது.
ஒரு சின்ன கதை சொல்கிறேன். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் உட்கார்ந்திருந்தபோது, வேகமாக வந்தார் ஒருவர். புத்தரைப் பார்த்து அவர் வசைமாரி பொழிந்தார். சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர்: “அவர் உங்களை வசைபாடினார், அவமதித்தார், நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை, எதுவும் செய்யவில்லை?” என்று கேட்டனர். புத்தர் அவர்களுக்குப் பதில் சொன்னார்: “அவர் கோபத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார். அந்தப் பரிசுடன் அவர் சிறிது நேரம் இங்கே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பரிசை நான் ஏற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பரிசுடன் அவர் திரும்பிவிட்டார்.
அப்படித்தான். மோடி கொண்டுவரும் இதுபோன்ற பரிசுகளை நான் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவரே அவருடன் வைத்துக்கொள்ளட்டும். மோடி கொண்டுவரும் பரிசான இந்தக் கோபமே அவரை வீழ்த்திவிடும்.
காங்கிரஸ் வாஜ்பாய், அத்வானி தலைமையிலான பா.ஜ.க-வைத் தேர்தலில் எதிர்கொண்டதற்கும் இப்போது எதிர்கொள்வதற்கும் ஏதாவது வேறுபாட்டை உணர்கிறீர்களா?
முன்பு தேசியக் கட்சிகளிடையே இருந்த ஆரோக்கியமான போட்டி, இணக்கமான சூழல் இந்தத் தேர்தலில் இல்லை. எப்போதுமே பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கை நோக்கங்களே வலுவான வகுப்புவாதமும் அதிகாரக்குவிப்பும்தான். அவர்களுடைய சித்தாந்தம் சமூகப் படிநிலையை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. ஏழைகளும் நலிவுற்ற பிரிவினரும் தங்களுடைய கடினமான உழைப்பினால் முன்னேறிவிடக் கூடாது என்ற எண்ணப்போக்கின் வெளிப்பாடு. இப்போதைய பா.ஜ.க. தலைமையின் கீழ் இந்தச் சித்தாந்தம் மேலும் வேகம் பெற்றிருக்கிறது.
நம் நாட்டைப் பிணைத்து வைத்திருக்கும் ஜனநாயக, மதச்சார்பற்ற, அனைவரையும் அரவணைத்துச் செல்கிற கொள்கைகளுக்குத் துளியும் மதிப்பு தந்துவிடக் கூடாது என்பதே அவர்களுடைய கொள்கையாக இருக்கிறது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையும் சில சங்கப் பரிவாரத் தலைவர்களின் சமீபத்திய பேச்சும் எந்தத் திசையில் அவர்கள் போகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. சகிப்புத்தன்மை என்பதற்கு அவர்களிடத்தில் இடமே கிடையாது. இந்த விஷயத்தில் என்னுடைய கொள்கை உறுதியானது. “நீ எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் போ, நான் அந்த அளவுக்கு நன்மையைச் செய்துவிடுகிறேன்” என்பதுதான்.
இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் எது என்று நினைக்கிறீர்கள்?
நம் நாட்டு வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் நாம் இருப்பதால் இந்தத் தேர்தல் முக்கியமானது என்று கருதுகிறேன். பத்தாண்டுகள் தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் நலக் கொள்கைகளால் செல்வம் பெருக்கப்பட்டதோடு நாட்டின் 15 கோடி மக்களை, இதுவரை இருந்திராத வகையில் வறுமைக்கோட்டுக்கும் மேலே கொண்டுவந்திருக்கிறோம். இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை. நாம் இப்போது இரு வெவ்வேறு சித்தாந்தங்களிடையேயான போட்டியைப் பார்க்கிறோம். காங்கிரஸின் கொள்கை அனைவரையும் அரவணைப்பது, அதிகாரத்தைப் பரவலாக்குவது, மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, பொருளாதார வளர்ச்சிக்காக ஒற்றுமையை வளர்ப்பது.
எதிர்க்கட்சியின் எண்ணம் மத அடிப்படையில் மக்களைப் பிரிப்பது, ஒரு சிலருக்காக மட்டும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது, முடிவெடுக்கும் அதிகாரத்தை மையப்படுத்துவது, எல்லா அதிகாரங்களையும் ஒரே ஒருவரிடம் கொடுத்துவிடுவது. எங்களை எதிர்ப்போர் இந்தியாவில் ஏழைகளுக்கும், மாற்று மதத்தவருக்கும் மாற்றுச் சித்தாந்தத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடமே இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. நம் நாடு சுதந்திரம் பெற்றதுமுதல் இத்தகைய எண்ணம் கொண்டோரை எதிர்த்து வெற்றிபெறுவதே காங்கிரஸின் பாரம்பரியமாக இருந்துவருகிறது. இந்தப் போராட்டத்தைத் தொடருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
வரலாற்றின் மிகவும் சிக்கலான கட்டத்தில் காங்கிரஸுக்குத் தலைமை தாங்குகிறோம் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. கட்சிக்குத் தலைமை தாங்குவதைக் கௌரவமாகவே கருதுகிறேன். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்தக் கட்சி எந்தப் பெருமைகளுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது, என்னென்ன சாதனைகளைப் புரிந்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் – மக்களுக்குக் கொஞ்சம் சலிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் நாங்கள் செய்த நல்ல காரியங்களுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.
காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் உற்சாகமாக இல்லை என்கிறார்களே, உற்சாகம் குறைந்த தொண்டர்களுக்கா தலைமை தாங்குகிறீர்கள்?
இதுவும் எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம்தான். 2004, 2009 தேர்தல்களில்கூட இதையேதான் சொன்னார்கள். உண்மை வேறாக இருந்தது. பா.ஜ.க. தொண்டர்களைப் போல அல்லாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தொலைக்காட்சி நிலையங்களில் கட்சி பேனர்களை ஆட்டிக்கொண்டிருக்கவில்லை, ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் வட்டங்களிலும் மதவாத, பிளவுச் சக்திகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய லட்சியங்களுக்காகப் போராடும் வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. அதில் ஒவ்வொரு தொண்டரும் உறுதியாகவே இருக்கிறார்.
இந்தத் தேர்தலில் பெருநிறுவனங்கள் காங்கிரஸுக்கு எதிராக இருப்பதாக நினைக்கிறீர்களா?
கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிக செல்வத்தை உருவாக்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில், வர்த்தகச் சமூகத்தையும் ஏழைகளையும் கூட்டாளிகளாகவே காங்கிரஸ் கருதிவந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரிரு தொழிலதிபர்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது ‘குரோனி கேபிடலிஸ’த்தின் வெளிப்பாடு. இதை எதிர்த்தே தீர வேண்டும். இது நம் நாட்டுத் தொழில் சூழலைக் கெடுக்கும். முற்போக்குச் சிந்தனை, தொழில்துறை நலன் ஆகியவை எங்களிடம் வலுவாகவே இருக்கின்றன. இந்தியப் பெருந்தொழில்களின் சின்னமான நந்தன் நிலகேணி காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பிரதமர் ஆவது உங்களுடைய முன்னுரிமை அல்ல என்று கூறுகிறீர்கள், உங்களுடைய அரசியல் லட்சியம்தான் என்ன?
அரசியலில் என்னுடைய ஆர்வம் என்பது ஒரு பதவியை வகிப்பது என்பதைத் தாண்டியது. நம்முடைய அரசியலின் மிகப் பெரிய சாபக்கேடு என்னவென்றால் சாமானியர்களின் குரலுக்கு அது மதிப்பு தருவதில்லை. தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய அரசியல் முடிவுகளில் தனக்கென்று பங்கு எதுவுமில்லை என்றே சாமானியன் நினைக்கிறான். இதற்குத் தீர்வு, முடிவெடுக்கும் அதிகாரத்தைச் சிலரிடம் மட்டுமே விட்டுவிடுவது என்று நினைக்கிறார்கள். அதிகாரத்தைப் பரவலாக்குவதும் கொள்கைகளை வகுப்பதையும் முடிவுகளை எடுப்பதையும் ஒரு சிலரிடமிருந்து எடுத்துப் பலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நாங்கள் நினைக்கிறோம். நம்முடைய தேசத்தின் நெடிய பயணத்தில் இது ஒரு திருப்புமுனை என்றே நான் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியிலேயே மாணவர் அமைப்பு, இளைஞர் அமைப்புகளில் இதை நான் செய்துவிட்டேன். கட்சிக்கான வேட்பாளர்களைத் தொண்டர்களை விட்டே தேர்ந்தெடுக்கச் செய்வதும் அந்த முயற்சியின் ஒரு பங்கே. இதையெல்லாம் செய்வதற்கு நான் ஒரு பதவியில் இருக்க வேண்டியிருக்கிறது. நான் ஏற்கெனவே கூறியதைப் போல, இதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன். அதிகாரப் பரவலாக்கல் என்பது இறுதிவடிவம் அல்ல, அது ஒரு வழிமுறை. அது புதிதான ஒரு சட்டமோ, ஒரு தேர்தலோ அல்ல. அதிகாரத்தை மையத்திலிருந்து மக்களுக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைதான் அது.
மோடியும் சமீபத்தில் இதேபோலச் சொல்கிறார். “ஒரு தலைவர் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கிறார்”, “125 கோடி மக்களும் சேர்ந்து உழைக்க வேண்டும்”, “இயற்கை வளங்களில் ஏழைகளுக்கு முதல் உரிமை இருக்கிறது”, “அதிகாரப் பரவல்தான் என்னுடைய மந்திரம்” என்றெல்லாம் அவரும் கூறுகிறார்?
மோடிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது, இவற்றை இப்போது கூறுகிறார் என்றால் எங்களுடைய பிரச்சாரத்தின் பலன் என்றுதான் நான் கூறியாக வேண்டும். சித்தாந்தத்தின் எதிர்முனையிலிருந்த ஒருவர் எங்களுடைய கருத்தை ஏற்கிறார் என்றால், அது எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். ஆனால், எல்லோருமே தாங்கள் கூறுவதை நம்புவதில்லை. பா.ஜ.க-வின் பிரச்சாரம் முழுவதுமே ஒரு தனிநபரைப் பற்றித்தான். ஒவ்வோர் அறிக்கையிலும் அவர் அதிகாரங்கள் முழுவதையும் தன்னிடம் தந்தால் இந்த நாட்டின் காவல்காரனாகச் சேவை செய்வதாகச் சொல்கிறார். கடந்த எட்டு மாதங்களில் அவர் திட்டமிட்டு பா.ஜ.க-வின் எல்லா மூத்தத் தலைவர்களையும் – அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்ற எல்லோரையும் – ஓரம்கட்டிவிட்டார். குஜராத்தில் எல்லா முடிவுகளும் முதல்வர் மோடியால்தான் எடுக்கப்படுகின்றன. நிலம், வனவளம், கடற்கரை, கனிமம் போன்ற எல்லா வளங்களும் சில தொழிலதிபர்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
மத்தியதர மக்களுக்குக் கீழே, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள 70 கோடி மக்களைப் பற்றி பேசுகிறீர்கள். அவர்கள் பணக்காரர்களும் அல்ல, நடுத்தர வர்க்கமும் அல்ல, வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களும் அல்ல. அவர்களுடைய அரசியல் வர்க்கம் எப்படிப்பட்டது என்று கருதுகிறீர்கள். விரைந்து முடிவெடுப்பவரே தேவை என்ற மோடியின் பிரச்சாரம் அவர்களைக் கவர்ந்துவிடும் என்று கருதுகிறீர்களா?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்தாண்டுகால ஆட்சியால் 15 கோடிப் பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இதுவரை இதற்கு முன்னர் எந்த ஆட்சியிலும் இந்தச் சாதனை நடந்ததில்லை. இவர்கள்தான் நம் நாட்டின் ரத்தநாளங்கள். இவர்களுக்கென்று தனி அரசியல் அடையாளம் ஏதுமில்லை. இன்னும் அவர்கள் தனியொரு வர்க்கமாக உருவாகவில்லை. அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் நூற்றுக் கணக்கான சாதிகளாகவும் துணை சாதிகளாகவும் அவர்கள் தொழில்ரீதியாகப் பிரிந்திருக்கிறார்கள். மோடி அவர்களைக் குறித்துப் பேசவில்லை. ஆனால், அவர்களை மதரீதியில் பிளவுபடுத்தத் திட்டமிடுகிறார். இவர்களை அரசியல்ரீதியாகத் திரட்ட பா.ஜ.க-வால் முடியவில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான இடைத்தரகர்களால் இவர்கள் சுரண்டப்படுகிறார்கள். இவர்களுடைய நிலைமை மேம்பட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
மோடியின் பொருளாதாரத் திட்டத்திலிருந்து உங்களுடைய திட்டம் எந்த வகையில் மாறுபட்டது? வளர்ச்சி குறித்து அக்கறை குறைவாகவும் வளங்களை விநியோகிப்பதில் மட்டும் அக்கறையாகவும் செயல்பட நினைக்கிறீர்களா?
பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் பலன் தர வேண்டும் என்று நினைக்கிறேன். தொழிலதிபர்களின் நலனும் ஏழைகளின் நலனும் பங்கேற்பின் மூலம் காக்கப்பட்டால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும். இதில் யாராவது ஒருவரின் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை செலுத்தினால் இந்தியா முன்னேறாது. இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் நமக்கு உணர்த்திய பாடம் அது. இதுதான் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். வளர்ச்சி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது. கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 7.5% பொருளாதார வளர்ச்சி வீதத்தை அளித்தோம். சாலைகள் அமைப்பதில் பா.ஜ.க. கூட்டணியை விட மூன்று மடங்கு சாதித்தோம். உற்பத்தித் துறையில் இந்தியாவை முதலிடத்துக்குக் கொண்டுவருவதே எங்களுடைய லட்சியம். இந்ததிசையில்தான் தொழிற்கூடங்களை நாடெங்கும் அமைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தோம். இது லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளை நம்முடைய இளைஞர்களுக்கு அளிக்கும்.
கட்சித் தலைவர் சோனியா காந்தியுடனும் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் உங்களுடைய உறவு எப்படி இருந்தது? அதில் மோதல்கள் ஏற்பட்டனவா? அவை எப்படித் தீர்க்கப்பட்டன?
பரஸ்பர மரியாதையுடன் சுமுகமான, ஒற்றுமையான உறவே நிலவியது. நாங்கள் எங்களுடைய கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்துகொண்டோம். கருத்து வேறுபாடுகள் இருந்தன; ஆனால், முரண்பாடுகள் இல்லை. அவர்கள் இருவருமே என்னுடைய வழிகாட்டிகள், அரசியல் குருக்கள். அவர்கள் மீது நான் அன்பும் பெருமதிப்பும் வைத்திருக்கிறேன். அவர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன், மேலும் கற்றுக்கொள்வேன்.
உங்களுடைய அம்மா, தங்கையுடனான உறவு எப்படியிருக்கிறது? நீங்கள் அவர்களை ரொம்பவும் சார்ந்திருக்கிறீர்களா?
எல்லோருக்கும் எப்படியோ அப்படியே எனக்கும் என் அம்மாவும் தங்கையும் ஆதரவாக இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நான் அதை அவர்களிடம் விவாதிக்க முடியும். அதிலும் என் தங்கை என்னுடைய வாழ்க்கையின் பல கட்டங்களில் என்னுடன் கூடவே இருக்கிறார். எனவே, எந்தச் சூழ்நிலையில் நாங்கள் எப்படி நடந்துகொள்வோம் என்ற பரஸ்பரப் புரிதல் எங்கள் இருவரிடமுமே உண்டு. சில விஷயங்களில், நான் ஏதாவது சொல்லத் தொடங்கும்போதே என்னுடைய தங்கை நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிந்துகொண்டுவிடுவார். அதேபோல அவர் சொல்லவருவதையும் நான் ஊகித்துவிடுவேன். அந்த அளவுக்கு ஆழமான உறவு எங்களுக்கு இடையேயானது.
அண்ணன், தங்கைகளுக்குள் அடிக்கடி சண்டை வருமே? கடைசியாக நீங்கள் இருவரும் எதற்காகச் சண்டை போட்டீர்கள்?
சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது நிறைய சண்டை போட்டிருக்கிறோம். வளர்ந்த பிறகு அந்தச் சண்டையெல்லாம் போயேபோய்விட்டது. இப்போது எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. ஆனால், நாங்கள் சண்டை போடுவதில்லை.
– தமிழில்: சாரி
– தி இந்து