அதர்மத்தினால் ஆட்சி பிடிக்க முடியாது
RASMIN MISC
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாத்தின் கயிறுகள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்படும். ஒரு கயிறு துண்டிக்கப்படும் போதெல்லாம் மக்கள் அற்கு அடுத்ததைப் பற்றிப் பிடிப்பார்கள். அவைகளில் முதலாவதாகத் துண்டிக்கப்படுவது ஆட்சி அதிகாரம் ஆகும். அவைகளில் இறுதியானது தொழுகையாகும். (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 22214)
‘அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:26)
”அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ் வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்கு வான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சு வோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 07:128)
இஸ்லாம் மற்ற மதங்களையும், சித்தாந்தங்களையும் விடுத்து வித்தியாசப்படும் பல சந்தர்பங்களில் ஆட்சி பற்றிய இஸ்லாமியக் கோட்பாடும், அரசியல் நிலைபாடும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.
ஆம், உலகில் தோன்றிய மாதங்களிலும், கொள்கைகளிலும் ஆன்மீகத்தையும், அரசியலையும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கிய ஒரு மார்க்கமாக இஸ்லாம் தான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
மனிதனின் உள்ளத்தை சாந்தப்படுத்தும் ஆன்மீகத்தையும், உலகை ஆளும் அரசியலையும் நீதி, நேர்மை, தர்மம் அனைத்தையும் கவனத்தில் கொண்டு இறைவனினால் இத்தூய மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.
இதே நேரம் மனிதனை நேர்வழிப்படுத்துவதற்காக இறைவனினால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஏகத்துவத்தை நிலைநாட்டவே பாடுபட்டார்களே தவிர இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் இன்று இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றிலும் இயங்கும்சில இயக்கங்கள் இஸ்லாமிய ஆன்மீகத்தைவிட அரசியலை முன்னிலைப்படுத்துவதையும், ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்வதைவிட அரசாங்கம் அமைப்பதுதான் கடமை என்று ஏகத்துவத்தையும், குர்ஆனிய வாழ்வையும் தூக்கியெறிந்துவிட்டு ஆட்சி பற்றியே தமது காலத்தை கழித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
நபிமார்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அனைவரும் ஏகத்துவப் பிரச்சாரத்தை முழு மூச்சுடன் செயல்படுத்தி, அதன் மூலம் மக்களை ஏகத்துவ வாதிகளாக, உண்மை இஸ்லாமியர்களாக வளர்த்து, வார்த்தெடுத்தார்கள். இதன் விளைவு இறுதியில் கொள்கைவாதிகளின் வளர்ச்சி உச்சத்தை அடைந்து ஆட்சி தானாகவே நபிமார்களை வந்தடைந்தது. ஏகத்துவத்தினூடாக சிறப்பானதொரு இஸ்லாமிய ஆட்சி உருவானது.
ஆனால் இன்றைக்கு நமக்கு மத்தியில் செயல்படும் சில இயக்கங்கள் அவர்களின் கருத்துக்களை ஒத்த மற்ற அமைப்புகளாக இருந்தாலும் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் நபியவர்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை பிரச்சாரம் செய்வதை விடுத்து “அதுவெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்” என்று கூறி, ஆட்சி பிடிப்பதுதான் முதல் வேலை என்ற கோஷமெழுப்புகின்றார்கள்.
ஆட்சிக்காக அதர்மத்தை கையிலெடுத்தவர்கள், அழிந்தே போவார்கள்.
இஸ்லாமிய ஆட்சியைப் பிடிக்கப் போகின்றோம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தவர்கள் பலர் வரலாறு முழுவதும் பொதுமக்களை மூலை சலவை செய்து காலப்போக்கில் ஏதோ ஒரு வகையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது பிடித்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதர்மத்தை கையிலெடுத்து பொது மக்களையே பினங்களாக மாற்றிய வரலாறுதான் அதிகமாகவுள்ளது.
ஆட்சி, அதிகாரம் யாருக்கு?
ஆட்சி, அதிகாரம் என்பது ஆட்சி, ஆட்சி என்று கோஷமிடுபவர்களுக்கு இறைவன் கொடுப்பதல்ல மாறாக இவ்வுலகில் கிடைக்கும் தூய கிலாபத் ஆட்சி என்பது இறைவனை மாத்திரம் வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காத தூய ஏகத்துவவாதிகளுக்குத் தான் கிடைக்கும் என்பதை இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாக குறிப்பிடுகின்றான்.
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:55)
கிலாபத் ஆட்சி என்பது, யார் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காமல் கொள்கைத் தெளிவுடன்
பயணிக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் கிடைக்கும் என்பதை மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது.
இன்னும், இறைவன் எப்படியானவர்களுக்கு ஆட்சியை வழங்குவான் என்பதனை கீழுள்ள வசனத்திலும் தெளிவாக உணர்த்துகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 5:54)
யார் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் மாறி விடுகின்றார்களோ, அவர்களை விட்டு விட்டு இறைவன் வேறு ஒரு சமுதாயத்தை கொண்டு வருவான், அவர்கள் இறைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இறைவனுக்கு எதிரானவர்களுடன் போர் புரிவார்கள் இது இறைவன் அவர்களுக்கு வழங்கும் அருள் என்று இறைவனின் மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களை பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.
மார்க்கத்தினை தூக்கியெறிந்துவிட்டு வெரும் ஆட்சிக் கோஷம் எழுப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. மாத்திரமன்றி இறைவனின் மார்க்கப் பிரச்சாரம் தான் முதன்மையானது என்பதையும் இறைவன் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவாக்குகின்றான்.
நல்லாட்சியாளர்கள் யார்?
இறைவனினால் கிலாபத் ஆட்சி யாருக்கு வழங்கப்படும் என்பதை கீழ்கண்ட வசனத்தின் மூலம் இறைவன் தெளிவாக உணர்த்துகின்றான்.
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:55)
இறைவனால் அதிகாரம் வழங்கப்பட்டு கிலாபத் ஆட்சி கிடைக்கப் பெரும் ஆட்சியாளர்கள் “இறைவனை மாத்திரமே வணங்கி, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காக” தூய ஏகத்துவ வாதிகளாகத் தான் இருப்பார்கள் என்பதை மேலுள்ள வசனம் நமக்கு அருமையாக தெளிவுபடுத்துகின்றது.
மீண்டும் கிலாபத்….
இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கிலாபத் ஆட்சி மீண்டும் இவ்வுலகில் தோன்றவிருக்கின்றது. கிலாபத் ஆட்சி ஏகத்துவக் கொள்கையின் பரப்புரையின் மூலம் சத்தியக் கொள்கையின் அடிப்படையில் உருவாகுமே தவிர, கிலாபத் வரும், கிலாபத் வரவேண்டும் என்று கனவு கண்டு கண்டவரையும் அமீர் என்று சொல்லி நாளைக்கே அவர் ஆட்சியைப் பிடிப்பார் என்ற கனவில் மிதப்பதினால் இந்த கிலாபத் உருவாகிவிடாது.
மேலே நாம் சுட்டிக் காட்டிய திருக்குர்ஆனின் 24ம் அத்தியாயம் 55 வது வசனத்தின் அடிப்படையில் இறைவன் ஏகத்துவ வாதிகளின் மூலமாக தர்மத்தினால் உருவாகும் ஓர் ஆட்சியை மீண்டும் இவ்வுலகில் கொண்டு வந்து நிறுத்துவான் என்பதையும் இன்று கிலாபத் கோஷமெழுப்பி எகிப்து, பாகிஸ்தான், வங்கதேசம் என்று முஸ்லிம்களையே கொலை செய்து ஆட்சிக் கனவு காணுபவர்கள் வழியாக கிலாபத் வராது என்பதையும் நாம் தெளிவாக அறிய முடிகின்றது.
அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும்.
அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்குமுறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள். (நூல் : அஹ்மத் 17680)
அஹ்மத் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில் நபித்துவ அடிப்படையிலான கிலாபத் ஆட்சி அமையும் என்பதை நபியவர்கள் தெளிவாக விபரிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
(அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல் : புகாரி 2222)
ஈஸா நபியின் தலைமையில் ஏகத்துவம் தலை நிமிரும் “கிலாபத்” ஆட்சி மீண்டும் உருவாகவுள்ளதை மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.
நமது பணி இறைவனின் ஏகத்துவக் கொள்கையை பரப்புவதும், நன்மையை ஏவி, தீமையை தடுப்பதுமே தவிர கிலாபத் கனவில் ஏகத்துவத்திற்கு எதிராக செயல்படுவதல்ல. இன்று கிலாபத் கனவு காணும் இயக்கங்கள் தாம் விரும்பும் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக “கிலாபத்” தின் பெயரால் முஸ்லிம்களையே கொலை செய்வதும், ஏகத்துவ பிரச்சார மையங்களை தாக்கி அழிப்பதும் சாதாரணமாக அவர்களினால் முன்னெடுக்கப்படும் காரியங்களாக மாறிவிட்டன.
இறைவன் ஏகத்துவத்தின் மூலம் தான் கிலாபத்தை உண்டாக்குவான் என்பதையும், அதர்மத்தினால் ஒரு நாளும் ஆட்சி பிடிக்க முடியாது என்பதையும் திருமறைக் குர்ஆனும், ஆதாரப் பூர்வமான நபி மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளன.