இந்த நாடு அறிவுக்கேந்திரமாக மாறும்போது நாமும் அறிவுமைய சமூகமாக மாறியிருக்க வேண்டும்
ஒரு முஃமினைப் பொறுத்தவரையில் அவனுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. ஒன்று, ஹுகூகுல்லாஹ் என்று அழைக்கப்படும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் கடமைகளான தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் போன்றவைகள் உள்ளடங்கும். அடுத்ததாக, ஹுகூகுல் இபாத் எனப்படும் மனிர்களுக்காக செய்யவேண்டிய கடமைகளான கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.
எமது வாழ்க்கையை நாம் இரண்டு வகையாக கழிக்க முடியும். ஒன்று, நுகர்ந்து முடிக்கலாம். அடுத்தது, வாழ்க்கையை முதலீடு செய்யலாம். ஸகாத், ஸதகா, வக்ஃபு என்பவை பள்ளிவாசல், மத்ரஸாக்களுடன் சுருங்கி விடுகின்றன. ஆனால், இஸ்லாமிய கண்ணோட்டம் அப்படியல்ல. சமூகப் பணியென்றும் சமயப் பணியென்றும் இஸ்லாம் பிரித்து நோக்குவதில்லை. இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் முக்கியமானவையாகும். மத்ரஸா அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாடசாலை அமைப்பதும் முக்கியமானதாகும். பள்ளிவாசல் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பல்கலைக்கழகங்கள் அமைப்பதும் மிக முக்கியமாகும் என்ற உண்மையை நாம் ஆழமாக புரியவேண்டும்.
பாராட்டுதலை, புகழை எதிர்பார்க்கக் கூடாது. புகழை நாடி வேலைசெய்வதில் புண்ணியமில்லை. ஆனால், புகழப்பட வேண்டியவரை புகழ்வதும் பாராட்டப்பட வேண்டியவரை பாராட்டுவதும் மதிக்கப்பட வேண்டியவரை மதிப்பதும் உயர்ந்த மனிதப் பண்பு மாத்திரமன்றி, நபிகளாரின் நடைமுறையுமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நபித் தோழரையும் அவர்களுடைய திறமையையும் பங்களிப்பையும் அடிப்படையாகக் கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டுவது என்பது மேற்கின் கலாசாரமும் அல்ல. இது இஸ்லாத்தினுள்ளே இருக்கும் ஒரு விடயமாகும். எம்மிலிருக்கும் மிகப் பெரிய உலோபித்தனம், கஞ்சத்தனம் என்னவென்றால், பாராட்டப்பட வேண்டியவர்களை பாராட்டாமல் இருப்பதுதான்.
இன்று கலைஞர்கள் பாராட்டப்படுகிறார்கள் ஆனால் அறிஞர்கள் பாராட்டப்படுவதில்லை. சமூகப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை பாராட்ட யாருமில்லை. எனவே, அவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பு இல்லாமல் இருக்கின்றது. இதனால் எமது சமூகத்தில் இளம் தலைமுறையினருக்கு அடையாளப் புருஷர்கள் முன்மாதிரியாக இல்லாமல் இருக்கின்றார்கள். இங்கிருக்கின்ற இளம் தொழிலதிபர்கள் நாளைய சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவது எவ்வளவு பெரிய ஊக்குவிப்பாக இருக்கும். இன்றைய இளைஞர், யுவதிகளுக்கு கலைஞர்களும் நடிகர்களும் நடிகைகளும் பாடகர்களும் விளையாட்டு வீரர்களுந்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
அமைதியாக இருந்து ஆரவாரமில்லாமல் சமூகத்திற்காக பணி செய்கின்றவர்களை கண்டிப்பாக சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால், என்னையும் உங்களையும் அல்லாஹுத் தஆலா புகழ் பாராட்டு, சமூக அங்கீகாரம் என்ற போதையிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
உங்களுக்கு தந்திருக்கும் திறமைகள், ஆற்றல்களை சமூக முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என எதிர்ப் பார்க்கின்றோம்.
முத்தகீன்கள் யாரென்றால் நாங்கள் வழங்கியவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள் என்று அல் குர்ஆன் கூறுகின்றது. இன்று அப்படியான சாரார் இணைந்ததன் விளைவைத்தான் இங்கு நாம் பார்க்கின்றNhம். 6 வருடங்களில் நல்ல விளைவை அடைந்திருக்கின்றோம். மீண்டும் நாங்கள் சந்திக்கும்போது இதைவிட பல மடங்கு வளவாளர்களோடும் சமூகத் தலைவர்களோடும் சந்திக்கவேண்டும். எமக்கிருக்கின்ற வலைப்பின்னல் உறவினால் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இஸ்லாத்துக்கும் பிரயோசனம் அளிக்கக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும்.
தொகுப்பு: எஸ். ஸஜாத் முஹம்மத் (இஸ்லாஹி)
http://www.sheikhagar.org/articles/muslimumma/377-insight-speech