தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரபுக் கலாசாலைகளின் பங்கு
இன்றைய உலகின் பொருளாதாரப் பிரச்சினை உட்பட எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னால் இருப்பது பண்பாட்டு வீழ்ச்சியாகும். இந்த உண்மை விளங்கப்படல் வேண்டும். இன்று உலகிற்கு பொதுவாகவும் எமது தேசத்துக்கு குறிப்பாகவும் தேவைப்படுவது ஆன்மீக, ஒழுக்க, பண்பாட்டு ரீதியிலான வழிகாட்டல்களாகும்.
பிரபல பிரான்சிய இலக்கியவாதி வோல்டயர் (Voltaire) என்பவர் இவ்வாறு சொல்கிறார்:
”ஏன் இறைவனைப் பற்றிய சந்தேகத்தைக் கிளப்புகிறீர்கள். இறைவன் இல்லை என்ற நிலை வந்துவிட்டால்,
எனது மனைவி எனக்கு துரோகம் செய்வாள்.
எனது வீட்டுப் பணியாள் எனது சொத்து செல்வங்களைத் திருடி விடுவான்.
இறைவன் இருக்கின்றான் என்ற பயம்தான் எனது மனைவி எனக்கு விசுவாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இறைவன் இருக்கின்றான் என்ற பயம்தான் எனது பணியாள் எனக்கு நம்பிக்கையோடு நடந்து கொள்வதற்கு காரணமாக இருக்கின்றது”
பிரபலமான தத்துவமேதை இமானுவல் கான்ட் (Immanuel Kant)என்பவர் தெரிவிக்கும் கருத்தும் இங்கே நோக்கத்தக்கது.
மூன்று நம்பிக்கைகள் உலகில் இல்லாத நிலையில் மனிதனிடத்தில் நம்பிக்கை, நாணயம், நேர்மை, நல்ல பண்பாடு என்பவற்றை எதிர்பார்க்க முடியாது. அதில் ஒன்று இறைவன் இருக்கிறான் என்பது. மற்றது ஆன்மா நிலையானது, அது அழியாது என்ற நம்பிக்கை. மூன்றாவது மரணத்துக்குப் பிறகு விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள்தான் உலகில் பண்பாட்டைப் பாதுகாக்கிறன. இவை இல்லாத இடத்தில் பண்பாட்டை எதிர்பார்க்க முடியாது என்கிறார்.
பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த நீதிபதி டெனிங் (Denning)என்பவரின் கருத்தையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
‘மதம் இல்லாத இடத்தில் பண்பாடு இருக்காது. பண்பாடு இல்லாத இடத்திலே சட்டமும் ஒழுங்கும் காணப்படாது’ எனக் கூறியுள்ளார்.
இங்குதான் அரபுக் கலாசாலைகளினதும் அறநெறிப் பாடசாலைகளினதும் வகிபாகம் உணரப்படுகின்றது. பொதுவாக கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றினதும் குறிப்பாக இஸ்லாமிய அரபுக் கலாசாலைகளினதும் பங்களிப்பு மனித இன வரலாற்றில் உலகில் என்றுமில்லாதவாறு இன்று தேவைப்படுகின்றது. ஆன்மீகத்தையும், பண்பாட்டையும் விதைக்கின்ற இடங்களாக இவைதான் காணப்படுகின்றன.
பண்பாடுள்ள, ஒரு சமூகத்தைக் கொண்ட தேசத்தை நிர்மாணிப்பதற்கு அரபுக் கலாசாலைகளினால் சிறந்த பங்களிப்பை செய்ய முடியும். இலங்கை போன்ற பல்லின மக்களும், பல சமயத்தவர்களும் வாழ்கின்ற ஒரு நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பன இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
இந்த நாட்டிலிருக்கின்ற அரபுக் கலாசாலைகளின் தார்மீக கடப்பாடு நல்லொழுக்கமும் பண்பாடும் உள்ள ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றைய அரபுக் கலாசாலைகள் இன்றிருக்கின்ற நிலையைவிட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு கூடிய பங்களிப்பை வழங்க வேண்டும். இது காலத்தின் தேவை. அதேபோன்று முஸ்லிம் – முஸ்லிமல்லாதோர் உறவு, சமூக நல்லிணக்கம் என்பன பற்றிய இஸ்லாத்தினுடைய நோக்கு குறித்து விளக்கும் தெளிவான கலைத்திட்டத்தை அரபுக் கலாசாலைகள் உள்வாங்க வேண்டும்.
அதேபோன்று அரபுக் கலாசாலைகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மற்றொரு அம்சம் இருக்கிறது. அதுதான் சிறுபான்மையினருக்கான சட்ட ஒழுங்கு என்ற பாடத்தை அரபுக் கலாசாலைளில் போதிக்கின்ற நிலை உருவாக வேண்டும் என்பது. இது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கும், கருத்தரங்குகள், பயிற்சி நெறிகள், பாட நெறிகள், விரிவுரைகள் என்பன இக்கலாசாலைகளில் ஒழுங்கு செய்யவும் ஆவண செய்யப்படல்; வேண்டும்.
மேலும் வெறும் கோட்பாட்டு ரீதியாக மாத்திரம் இல்லாமல் நடைமுறையுடன் கூடியதாக இந்த சகவாழ்வு, சமூக நல்லிணக்கம் என்ற அம்சம் அரபுக் கலாசாலைகளில் போதிக்கப்பட வேண்டும். தனியானதொரு கலைத்திட்டத்தினூடாக இது இடம்பெற வேண்டும். அப்போது தான் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் காத்pதிரமான ஒரு பங்களிப்பை எமது அரபுக் கலாசாலைகளினால் வழங்க முடியும்.
http://www.sheikhagar.org/articles/muslimumma/337-arabic-colleges1