மன வெளிச்சம் பெறப் படியுங்கள்!
ஏழ்மையை ஏளனமாகக் கருதும் நிலை ஏழ்மையாளரிடமும் இருக்கிறது. செல்வந்தரிடமும் உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையில் ஏழ்மைத் தனமே மேலான தன்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பு: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகே நடந்து சென்றார். தமக்கருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் “இவரைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள்”? என நபி கேட்டார்கள். அருகிலிருந்தவர் கூறினார் : “மக்களில் இவர் ஒரு பிரமுகர். அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர் பெண்கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியானவர்” என்றார்.
சிறிது நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதி காத்தார்கள். “மற்றொரு மனிதர் தனக்கருகே செல்ல இவரைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?” கேட்டார்கள். “இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவர். பெண் கேட்டால் இவருக்கு (திருமணம்) முடித்து வைக்ப்படாமலும், இவர் பரிந்து பேசினால் செவி தாழ்த்தப்படாமலும் இருப்பதற்குத் தகுதியானவர்” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (முதலில் சென்ற) அவர் போன்றவர் இந்த பூமி நிரம்ப இருந்தாலும், (இரண்டாவதாகச் சென்ற) இந்த ஏழையே மேலானவர். (புகாரி- 6447)
விருந்தினர் வீட்டுக்கு வந்தால் சில உறவுகள் சாயாத்தண்ணி கொடுத்தும், கொடுக்காமலும் வெளியேற்றுவதில் குறியாகவிருப்பர். வேறு சிலர் ஒரு வேளை உணவுடன் விரட்டுவர். விருந்து உபசாரம் குறித்து நபியவர்கள் கூறியதைப் பார்ப்போம்.
அபூஹ§ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவித்திருக்கிறார். “விருந்து உபசாரம் மூன்று நாட்களாகும். அவருடைய கொடையும் (அதில்) அடங்கும்.” என்றார்கள். “அவருடைய கொடை என்ன”? கேட்கப்பட்டது. ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு கொடை) என்றார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும் என்றார்கள் (புகாரி – 6476)
ஏதாவது பேசிக் கொண்டே இருத்தல். அடுத்தோர் குறித்து குறை கூறுதல் பலரது வழக்கம். சிலர் அடுத்த வீட்டார் வீடு கட்டினால் தம் வீட்டருகே எந்த பொருளையும் வைக்கவிடமாட்டர். வேறு சிலர் மற்றவர் இரு சக்கர வாகனங்கள் முன்புறமோ பின்புறமோ தமது வீட்டுக்கு முன் நீட்டிக் கொண்டு நின்றால் சேதம் விளைவிக்கும் சீதேவிகள் எல்லாம் சென்னையில் உண்டு. கிராமத்திற்கும் இப்போது தொத்திக் கொண்டது. அடுத்து வீட்டுக்காரர் ஒரு அடிவிட்டுக் கட்டினால், தாமும் அது போன்று ஒரு அடி இடம் விட்டுக்கட்டாது இவரது இடத்தில் முழுவதுமாகக் கட்டிக் கொண்டு ஜன்னல், குளிர் சாதனப் பெட்களை அடுத்தவர் வீட்டுள்ள இடம் பக்கம் வைத்துக் கொள்வர். காலியாக காற்றுவர இடம் விட்டுக் கட்டிய பகுதியில் சிலர் குப்பை போட்டு நிரப்புவர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள்; “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.” புகாரி – 6475
மற்றவர்கள் தன்னைப் பாராட்ட வேண்டும். தமக்கு உதவவேண்டும். தன்னைப் பற்றி பெரிதாக, பெருமையாக எல்லோரும் பேச வேண்டும் போன்ற நோக்கங்களைக் கொண்டு சமூகத்துள் பலர் செயல்படுகின்றனர். நீ என்னைப் பாராட்டு. நான் உன்னைப் பாராட்டுகிறேன் என்று பேசி செயல்படுவது. தனக்குத்தானே பட்டம் போட்டுக் கொள்வது. பெருமையடிப்பது. இதனை நபியவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பு : யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல்புரிகிறாரோ அவரை அல்லாஹ் அம்பலப்படுத்துவான். (6499 புகாரி)
அல்லாஹ்வால் முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டது மனித வாழ்வு. அல்லாஹ் மனிதனுக்கு அருளிய வாழ்வை அவன் தேடிச் சென்றடைய வேண்டும். அவனது தேடல் முயற்சியில் எது அவனுக்கு மீண்டும் கிடைக்கிறதோ, காட்டப்படுகிறதோ, நின்ற இடத்தை விட்டும் அவனால் மேலேற முடியவில்லையோ அதுதான் விதி. நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்; “உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே அந்தக்கரு ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார்.
– அந்த மனிதன் வாழ்வாதாரம்
– வாழ்நாள்
– நல்ல விதியாளனா
– தீய விதியாளனா
எழுதப்பட்ட பிறகு உயிர் ஊதப்படும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் அல்லது ஒரு மனிதர் நரகவாசிகளின் செயலைச் செய்துகொண்டே செல்வார் இறுதியில் அவருக்கும், நரகத்திற்கும் இடையே விரிந்த இரு கைகளின் நீட்டளவு அல்லது ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக் கொள்ள அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.
ஒருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து கொண்டே செல்வார் இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே ஒரு முழம் அல்லது இரு முழங்கள் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணமாக நரகத்தில் புகுந்து விடுவார்.
-முஸ்லிம் முரசு பிப்ரவரி 2014
source: http://jahangeer.in/?paged=3