கவிதா முரளிதரன்
[பெண்களைப் பற்றிய மரபான, பிற்போக்குச் சிந்தனையிலிருந்து பா.ஜ.க. இன்னமும் வெளியேறவில்லை என்பதை நிர்பயா விவகாரத்தில் பா.ஜ.க-வின் முக்கியப் பெண் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆற்றிய எதிர்வினையிலிருந்து உணர முடியும்.
மோடியை வளர்ச்சியின் நாயகனாகவும் குஜராத்தை வளர்ச்சியின் வடிவமாகவும் முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகள், அங்கு பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டாமல்/அது பற்றிப் பேசாமல் இருப்பது யதேச்சையானது அல்ல. பி.ஜே.பி யின் உண்மை வடிவம் இதுதான். நாட்டின் பெண்கள் அனைவரும் பி.ஜே.பியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
பா.ஜ.க வளர்சிக்காக வாக்களியுங்கள் என்ற கோஷம் எல்லாம் சந்தப்பவாதம் மட்டுமே. அவர்கள் இந்த இந்தியாவில் நிறைவேற்ற துடிக்கும் விஷமத்தனமான விஷயங்களுக்கு தக்க சந்தர்ப்பம் இது என்று முடிவெடுத்துள்ளனர்.
“வளர்ச்சி”, “குஜராத் மாதிரி” என்று ஓராண்டுக்கும் மேலாக கூவிவிட்டு, சந்தடி சாக்கில் விஷத்தை அதன் தேர்தல் அறிக்கையில் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தடவியிருகிறார்கள்.
பெண்களைப் பற்றிய பிற்போக்கான சிந்தனையிலிருந்து சுஷ்மாவும் வரவில்லை; வானதியும் வரவில்லை; தமிழிசையும் வரவில்லை... ஏறக்குறைய எல்லா கட்சிகளும் அப்படியே தொடர்கின்றன.
இந்தியா புதிர் நிறைந்த தேசம்.இப்பொழுதுதான் பிரதம வேட்பாளர் திருமணமானவர் என்பதே வெளியே தெரிகிறது
வளர்ச்சியோ, பெண்கள் முன்னேற்றமோ அவர்களின் விருப்பமோ, கனவோ இல்லை. இதை மக்கள் உணர்ந்து அவர்களின் “கனவை”, “கனவாகவே” தொடர்ச் செய்ய வேண்டும்.
”நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது புரிந்து கொண்டேன் இங்கே மக்கள் மிகவும் பயமுள்ளவர்களாக வாழ்கின்றனர்,
நான் இந்தியா முழுவதும் சென்று பார்த்துவிட்டேன், குஜராத்தைப்போன்று பயத்துடன் வாழும் மக்களை நான் பார்க்கவில்லை, பெண்களுக்கு பாதுகாப் பில்லை, கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது குஜராத் தற்போது மற்ற மாநிலத்திற்கு பதிலாக சாதாரண குடிமகன் பயத்துடன் வாழும் மாநிலமாக மாறிவிட்டது.” இதை சொன்னவர் வேறு யாருமல்ல பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதியே தான்.]
தேர்தல் களம்: பெண்களுக்கு இடமில்லை!
இந்தியாவின் மக்கள்தொகையில் 49 சதவீதம் பெண்கள். வெற்று அடையாளங்களுக்காக மட்டுமே பெண்களின் பங்களிப்பு இருப்பது போய், இன்று பல துறைகளில் பெண்கள் அதிகார நிலைகளில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மறுபுறம், பெண்களின் மீதான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் மீதான அதிகரிக்கும் வன்கொடுமைகளுக்கு முழுமையான, சரியான எதிர்வினையாற்றப் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து, பெண்கள் இன்று பெரிய அரசியல் அதிகார சக்தியாக உருவெடுக்க முடியவில்லை என்பதற்குத் தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு குறியீடு.
பெண் வேட்பாளர்களின் நிலை
இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பட்டியல்களின்படி, பிரதானக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியில்தான் பெண் வேட்பாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கும் 385 வேட்பாளர்களில் 57 பேர் பெண்கள். அவர்களில் சோனி சோரி, தயாமனி பர்லா, மேதா பட்கர் போன்ற போராளிகளும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திலியா தேவி போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரஸின் 413 வேட்பாளர்களில் 53 பேரே பெண்கள்.
அடுத்த அரசை அமைக்கும் என்று நம்பப்படும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்தான் இருப்பதிலேயே குறைந்த அளவு பெண் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. களமிறக்கும் 409 வேட்பாளர்களில் வெறும் 35 பேர்தான் பெண்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வீட்டுக்கு வீடு பா.ஜ.க-வைக் கொண்டுசேர்த்த வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தர்ராஜன் இருவருக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன, கட்சியில் பாலின, சாதி, மத வேறுபாடு இல்லை என்று பல விளக்கங்கள் கொடுத்தாலும், பா.ஜ.க. கட்டமைக்கும் வளர்ச்சி என்பது எல்லாத் தளங்களிலும் பெண்களை உள்ளடக்கியது அல்ல என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் ஒரே ஒரு பெண் வேட்பாளர்தான் (பா.ம.க.), அதுவும் அவருடைய கணவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
சுஷ்மாவின் முரண்பாடு
பெண்களைப் பற்றிய மரபான, பிற்போக்குச் சிந்தனையிலிருந்து பா.ஜ.க. இன்னமும் வெளியேறவில்லை என்பதை நிர்பயா விவகாரத்தில் பா.ஜ.க-வின் முக்கியப் பெண் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆற்றிய எதிர்வினையிலிருந்து உணர முடியும். நிர்பயா என்றால் பயமறியாதவள் என்று பொருள். ஒரு கொடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, அதிலிருந்து மீள எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துகொண்டிருந்த அந்தப் பெண் உயிருடன் இருக்கும்போதே, அவரை நாடாளுமன்றத்தில் நடைப்பிணம் என்று வர்ணித்தார் சுஷ்மா.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாலேயே ஒரு பெண்ணை நடைப்பிணம் என்று சொன்னதன் மூலம், ஒரு பெண்ணுக்கு அவளது உடலும் அதன் மீது சமூகம் ஏற்றி வைத்திருக்கும் போலி கவுரவமுமே முக்கியம் என்கிற மத அடிப்படைவாதச் சிந்தனையை வெளிப்படுத்தினார்.
நிர்பயா வழக்கு, மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கு என்று பரபரப்பான எல்லா வழக்குகளிலும் மரண தண்டனையைத் தீவிரமாகக் கோரிய சுஷ்மா சுவராஜ், சாமியார் ஆசாராம் பாலியல் புகாரில் சிக்கியபோது அமைதி காத்தார். சொல்லப்போனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாகவே ஆசாராமுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள். டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் நெருக்கியபோது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார் சுஷ்மா.
அந்த ‘ஒற்றுமை’
1992-ல் சூரத்தில் நடந்த மதக் கலவரம் தொடங்கி குஜராத் கலவரம், கிறிஸ்துவர்களுக்கு எதிரான கந்தமால் கலவரம், மிகச் சமீபத்தில் நடந்த முசாபர்நகர் கலவரம் எனப் பல கலவரங்களில் இந்துத்வ சக்திகள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தரவுகளோடு எடுத்து வைக்கிறார்கள் பிரஃபுல் பித்வாய், ஹர்ஷ் மந்தர் போன்ற அறிவுஜீவிகள்.
1992-ல் நடந்த சூரத் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக ஏவப்பட்ட சொல்ல முடியாத வன்முறைகளின் பின்னணியில் மோடி இருந்ததாகச் சொல்கிறார் பிரஃபுல் பித்வாய். சரியாக 10 ஆண்டுகள் கழித்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் எண்ணற்ற இஸ்லாமியப் பெண்கள் குரூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்கள். அப்போது மோடி குஜராத் முதல்வர். 2007-2008-ல் கந்தமாலில் நடந்த கிறிஸ்துவர்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத் கலவரங்களைப் பலவிதங்களில் ஒத்திருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் ஹர்ஷ் மந்தர்.
2013-ல் முசாபர்நகரில் நடந்த கலவரத்திலும் அந்த ‘ஒற்றுமை’ தெரிந்தது. கலவரம் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மோடியின் நம்பிக்கைக்குரிய செயலர் அமித் ஷா அங்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
யதேச்சையானது அல்ல
மோடியை வளர்ச்சியின் நாயகனாகவும் குஜராத்தை வளர்ச்சியின் வடிவமாகவும் முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகள், அங்கு பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டாமல்/அது பற்றிப் பேசாமல் இருப்பது யதேச்சையானது அல்ல.
தேசிய அளவில் பாலின விகிதம் தட்டுத் தடுமாறி 933-லிருந்து 940-க்கு உயர்ந்துகொண்டிருந்த 2001-2011 காலகட்டத்தில் குஜராத்தில் அது 918-லிருந்து
915-க்குக் குறைந்திருந்ததாகத் தரவுகள் சொல்கின்றன. பள்ளிகளிலும் இதே நிலைதான். தேசிய அளவில், 100 ஆண் குழந்தைகளுக்கு 94 பெண் குழந்தைகள் அடிப்படை மற்றும் இரண்டாம் நிலைப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். குஜராத்தில், இந்த எண்ணிக்கை அடிப்படைக் கல்வியில் 88 பெண்கள், இரண்டாம் நிலைப் பள்ளியில் 84 என்று இருக்கிறது.
தேசிய அளவில் முறைசார்ந்த வேலையில் 19.9 சதவீதம் பெண்கள் இருப்பதாக மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகள் சொல்கின்றன. குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவே இருந்திருக்கிறது.
இவை எதையும் சரிப் படுத்தாமல், கலாச்சாரத்தின் வேர் பெண்ணின் உடலில் இல்லை என்கிற தெளிவு இல்லாமல், வளர்ச்சி என்பது பெண்களையும் உள்ளடக்கியது என்கிற எண்ணம் இல்லாமல் வளர்ச்சி என்று எதைப் பற்றிப் பேசுகிறார்கள் பா.ஜ.க-வினர்?
வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று, பாலின சமத்துவம் என்பதைப் பல நாடுகள் உணர்ந்துள்ளதாகச் சொல்கிறார் ஐ.நா. சபையின் முன்னாள் செயலர் கோஃபி அன்னான். அதைச் சாத்தியப்படுத்தாத வரையில் இந்தியாவை வளர்ந்த நாடுகளில் சேர்க்க முனையும் பா.ஜ.க-வின் ‘கனவும்’ சாத்தியமற்றதாகவே இருக்கும்.
source: http://tamil.thehindu.com/opinion/
பி.ஜே.பி.யின் பெண் வேட்பாளர்களில் ஒருவரான உமா பாரதி என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போமா?
”மோடி வளர்ச்சிக்கான புருஷரல்ல மாறாக நாசத்தை விளைவிக்கும் புருஷர்” – உமாபாரதி
மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் – உமாபாரதி மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் – உமாபாரதி
நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது புரிந்து கொண்டேன் இங்கே மக்கள் மிகவும் பயமுள்ளவர்களாக வாழ்கின்றனர், இது எல்லாம் நரேந்திரமோடியால் வந்தது, இந்து மக்களின் நலனிற்காக பாடுபடுவதாக கூறும் நரேந்திரமோடி கூறுகிறார். ஆனால் இங்கு பல இந்துக்கள் வாழ்வா தாரமின்றி இருக்கிறார்கள்.
தவறு செய்தவர்களை தூக்கிலிடுங்கள், ஆனால் எந்த தவறும் செய்யாத ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் குறித்து மோடி இன்றுவரை பேசுவதே இல்லை, இவர்கள் வழக்குகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அவர்கள் ஏன் சிறையில் வாழ்கிறார்கள். அவர்களின் வழக்கின் நிலை என்ன மோடியின் சிறந்த நண்பரான அருண் ஜெட்லி தலைசிறந்த வழக்கறிஞரும் கூட அவரிடம் கேட்கிறேன். இவர்களின் வழக்கு குறித்து இந்த மாநிலத்தின் முதல்வர் என்றாவது உங்களிடம் கேட்டிருக்கிறாரா?
நான் இந்தியா முழுவதும் சென்று பார்த்துவிட்டேன், குஜராத்தைப்போன்று பயத்துடன் வாழும் மக்களை நான் பார்க்கவில்லை, பெண்களுக்கு பாதுகாப் பில்லை, கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது குஜராத் தற்போது மற்ற மாநிலத்திற்கு பதிலாக சாதாரண குடிமகன் பயத்துடன் வாழும் மாநிலமாக மாறிவிட்டது.
குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று ஊர் ஊருக்கு சென்று கூவிக்கொண்டு இருக் கிறாரே, இது முழுவதும் பொய், நான் சரியான வேலை யின்றி வாழவழியின்றி நிராதரவாக நிற்கும் குஜராத்திகளை ஆயிரக்கணக்கில் நான் காண்பிப்பேன். மோடி விகாஷ் புருஷ் அல்ல, அவர் வினாஷ் புருசர், நான் நரேந்திர மோடியை 1972-லிருந்து அறிவேன் அதனால் தான் நான் அவரை நான் வினாஸ் புருசன் என்று கூறுகிறேன். ஊடகங்கள் அவரது பொய்யை அதிகமாக பரப்பி பலூன் போல் ஊதிப்பெரிதாக்கி விட்டார்கள், அந்தக் காற்றை பிடுங்கி மோடியை பஞ்சராக்கவேண்டியது தான் இனி ஊடகங்கள் வேலையாக இருக்கவேண்டும் என்று அகமதாபாத்தில் (30.9.2013) பேசினார். பிஜேபியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான உமாபாரதி.