மனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும்!
கணவன் மனைவியரிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது.
”மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!” (அல்குர்ஆன் 2 : 222)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் அல்லது மனைவியின் பின் துவாரத்தில் புணருபவன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை என்று நம்புபவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்து விட்டவனாவான்.” (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 9779)
எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே. பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது. ”உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!” (அல்குர்ஆன் 2 : 223)
மனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும். ஏனெனில் தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்தும் பாலூட்டுதல் என்பது இரண்டு வயதிற்குற்பட்ட நிலையில் தான். இந்த நிலையைத் தாண்டி பாலருந்தினால் தாய் மகன் என்ற உறவு ஏற்படாது. அதாவது பாலை மட்டுமே உணவாகக் கொண்டு பாலருந்தும் பருவத்தில் அருந்தினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும். இதைப் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். திருக்குர்ஆன் 2:233
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன் 31:14
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தெளிவாகவும் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் வீட்டுக்கு வந்த போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். இவர் யார் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு நான் இவர் எனது பால் குடி சகோதரர் என்று கூறினேன். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆயிஷாவே, உங்கள் சகோதரர் யார் என்பதில் கவனமாக இருங்கள். பால்குடி உறவு என்பது பசியினால் தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்-புகாரி 5102)
ஆனால் தாம்பத்தியம் சிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியிடம் பாலருந்துவது தடுக்கப்படாவிட்டாலும் மனைவிக்கு பால் சுரப்பது அவளது குழந்தைக்காகவே. எனவே குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கணவன் மனைவியரியடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல என்பதால் உங்கள் மனைவிமார்கள் உங்கள் விளைநிலங்கள் என்று பொதுவாக அல்லாஹ் கூறி விட்டான். அதில் எல்லாமே அடங்கும். இதிலிருந்து இல்லறம் தொடர்பான ஏனைய சட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.
source: onlinepj.com