M U S T R E A D
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்களும், அதனை விரட்டும் வழிகளும்
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension) என்று பெயர்.
நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.
ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.
95 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல், கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்கள் (உ.ம்) புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு (Sodium salt) உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.
நவீன காலத்தில் டின்னில் அடைத்த உணவுகளும், திடீர் உணவுகளும் (fast food) மிகவும் சாதாரணமாகி, விட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. காரணம் இதில் ருசிக்காக சேர்க்கப்படும் அதிகளவு கொழுப்புப் பொருட்களும், அஜினமோட்டோ என்ற வினோதமான உப்பும்தான். இந்த உப்பு கலந்த உணவை சாப்பிடுபவர்களிடம் ஒரு தீராத விருப்பத்தை (fast food) உண்டுபண்ணிவிடும். மேலும் இதனால் நீண்ட நேரம் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்க முடியும். ஆனால் உடலுக்கு மிகவும் தீங்கு செய்யும்.
உடல் எடை கூடக்கூட உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் கூடுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள சுமார் 50% பேர் ஒன்று அளவுக்கு மீறி எடையுள்ளவர்களாகவோ அல்லது இரத்தத்தில் உயர் கொழுப்புத் தன்மை உடையவர்களாகவோ இருக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.
அடுத்ததாக, வயது ஆக ஆக இரத்த நாள தமணிகளின் சுருங்கி விரியும் தன்மை (addiction) குறைகிறது. இது 45-60 வயது காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி, அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் இரத்தத் தமணிகளின் உட்சுவரின் குறுக்களவு குறைவதால் ஏற்படுகிறது. இது ஏன் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள கொழுப்புப் பொருட்கள் வேதியியல் மாற்றம் அடைந்து மற்ற பல கொழுப்புப் பொருட்களுடனும், இரத்தத்தை உறையவைக்கும் பிற இரத்தப் பொருட்களுடனும் (elasticity) சேர்ந்து இரத்தத் தமணியின் உட்சுவரின் நோய்வாய்ப்பட்ட திசுக்களுக்கு இடையே மெல்ல மெல்ல படிந்து விடுகிறது.
இதற்கு ஃஈஃ கொலஸ்ட்ரால் மிகவும் உதவுகிறது. இதனால் இரத்த நாளக் குறுக்களவு குறைகிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆத்திரோமா’ (Atheroma) என்று பெயர். எந்த அளவுக்கு இது தமணியின் உட்சுவரில் படிகிறதோ அந்த அளவுக்கு அதன் குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் கூடுகிறது. இந்த இரத்த அழுத்தத்தால் மிக மிக சிறு தந்துகிகளின் இரத்த நாளச் சுவர்களின் குறுக்களவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் உணவுப் பொருட்களும் பிராண வாயுவும் திசுக்களுக்குச் சென்று அடைய முடியாமல் அழிய ஆரம்பித்துவிடுகிறது. இது சிறுநீரகத்தில் ஏற்பட்டால் சிறுநீரக திசுக்கள் அழிகிறது. இதுவே மூளையில் ஏற்பட்டால் மூளை செயலிழப்பு (Stroke) உண்டாகிறது. இதுவே இருதய திசுக்களில் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான் எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது.
சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாப்பு முறை
முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.
ரெசிபி
ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் – 1 கப், பச்சை பட்டாணி – 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் – ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.
டயட்
தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.
உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.
கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.
ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.
ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.
இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.
கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.
சர்ப்பகபந்தா வேரை பொடி செய்து தினமும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
source: http://tamilmurasu.org/