இந்திய முஸ்லிம்களின் வசந்த காலம்
மருதன்
இஸ்லாமியர்களையும் இதர சிறுபான்மையினரையும் கவர்வதற்காக காங்கிரஸ், பாரதிய ஜனதா தொடங்கி கிட்டத்தட்ட அனைத்து மத்திய, மாநிலக் கட்சிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரசாரப் போர் செய்துவரும் இந்நேரத்தில் ஹசன் சுரூரின் India’s Muslim Spring புத்தகத்தை வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.
இந்துத்துவ அபாயத்தைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்குத் தூண்டில் வீசுகிறது என்றால் வளர்ச்சி ஆசை காட்டி பாஜக அனைவரையும் தம் பக்கம் ஈர்க்கத் துடிக்கிறது. மதச்சார்பற்ற அரசு வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது காங்கிரஸ். உங்களுக்குத் தேவை வளர்ச்சியா மதச்சார்பின்மையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்கிறது பாஜக. இன்றைய தி இந்துவில் அனன்யா வாஜ்பேயி எழுதியுள்ள கட்டுரை இந்த அம்சத்தைத் தொட்டு விவாதிக்கிறது.
நடைபெறவிருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இந்த இரு கருத்தாக்கங்களில் எது வெற்றி பெறுகிறது என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று சொல்லலாம். வாக்காளர்களுக்கும் இந்த இரு வாய்ப்புகளே பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன. அதாவது, கோளாறுகளுடன்கூடிய போலி மதச்சார்பின்மை. அல்லது, ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே ஆதாயம் அளிக்கும் சமமற்ற வளர்ச்சி. (இடதுசாரிகள் பங்கேற்று மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் அங்கும் மதச்சார்பின்மையே பிரதான கொள்கை முழக்கமாக இருக்கும்).
உண்மையில் காங்கிரஸின் மதச்சார்பின்மை, பாஜகவின் இந்துத்துவம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட, ஒன்றையொன்றை எதிர்க்கும் சித்தாந்தங்கள் அல்ல. மாறாக, இரண்டுக்கும் இடையில் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. தீவிரதத்தின் தன்மை, வெளிப்படுத்தும் விதம் போன்ற சில அம்சங்களில் மட்டுமே இரண்டுக்கும் வித்தியாசங்களைக் காணமுடியும்.
ஓர் உதாரணம். காங்கிரஸ், பாஜக இரண்டுமே குஜராத் 2002 கலவரங்களை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியொன்று நடக்கவேயில்லை என்பது போல் பாஜக காட்டிக்கொள்கிறது என்றால் அதைப் பற்றி உரக்கப்பேசவே அஞ்சுகிறது காங்கிரஸ். அவ்வாறு செய்தால் இந்துக்களைப் பகைத்துக்கொண்டு விடுவாம் என்பது அதன் அச்சம். இந்து ஓட்டுகளைச் சிதறடிக்காமல் முஸ்லிம் வாக்குகளைச் சேகரிக்கவேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கனவு. பாஜகவின் நோக்கமும் இதுவேதான்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் காங்கிரஸால் மோடியைப் போல் எந்த வளர்ச்சி மாடலையும் உயர்த்திக் காட்ட முடியவில்லை. எனவே வசதியாக மதச்சார்பின்மைக்குள் அது ஒளிந்துகொள்கிறது. 2002 குஜராத் கலவரங்கள் பற்றி தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் நரேந்திர மோடியால் மதச்சார்பின்மை பேசமுடியாது என்பதால் குஜராத் மாடலை ஒரு மாற்றாக அவர் உயர்த்திப் பிடிக்கிறார்.
இந்த இருவருமே முஸ்லிம்களை ஒரே வாக்கு வங்கியாக பொட்டலம் கட்டி பார்க்க விரும்புகின்றனர். இந்த இருவருமே முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதையே விரும்புகின்றனர். இந்த இருவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் இந்து அடிப்படைவாதத்தையும் ஊக்குவிக்கின்றனர். அதே சமயம், சாமானிய இந்துக்களையும் முஸ்லிம்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஆனால் இனியும் முஸ்லிம்களை இந்த இரு கட்சிகளால் வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ளமுடியாது என்கிறார் ஹசன் சுரூர். முஸ்லிம்களின் வாழ்நிலையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன; காங்கிரஸ், பாஜக மட்டுமல்ல இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும்கூட முஸ்லிம்களைத் தங்கள் அரசியலுக்குச் சாதகமாக வளைத்துக்கொள்ள முடியாது என்கிறார் சுரூர்.
நம் கண்முன்னே அமைதியாக முஸ்லிம் சமூகத்தில் வசந்தம் மலர்ந்துள்ளது என்கிறார் ஹசன் சுரூர். மதத்தைப் பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று சுரூர் வாதிடுகிறார்.
இது ஆய்வு நூல் அல்ல என்பதால் ஹசன் சுரூர் தன் வாதத்துக்கு வலுவூட்ட புள்ளிவிவரங்கள் எதையும் அளிக்கவில்லை. விரிவான அல்லது முறையான சமூகவியல் ஆய்வுகள் எதையும் அவர் மேற்கொள்ளவும் இல்லை. அவர் செய்ததெல்லாம் ஒரு பத்திரிகையாளராகச் சில முஸ்லிம்களிடம் மனம் திறந்து உரையாடியது மட்டும்தான். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் கருத்துகளை சுரூர் சீராகத் தொகுத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தால் உந்தப்பட்டு ஆய்வாளர்களும் சமூவியலாளர்களும் மேற்கொண்டு விரிவாக இஸ்லாமியச் சமூகத்தை ஆய்வு செய்ய முன்வரவேண்டும்.
காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்து மட்டுமல்ல இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் இருந்தும் முஸ்லிம் சமூகம் வெளிவந்தே தீரவேண்டும். அப்போதுதான் ஹசன் சுரூர் சொன்ன வசந்தம் வாய்க்கும்.
இதே போன்ற ஒரு புத்தகத்தை இந்து மதத்தினரிடம் இருந்தும் உரையாடித் தொகுக்கவேண்டிய அவசியம் உள்ளது.
முஸ்லிம்களைப் போலவே இந்துக்களும் பாஜக மற்றும் காங்கிரஸின் பிடியில் இருந்து விடுபடவேண்டும்.
மிக முக்கியமாக இந்துத்துவ அடிப்படைவாதிகளின் பிடியில் இருந்து விடுபடவேண்டும்.
மதவாதத்தை முன்வைத்து எந்தவொரு கட்சியும் யாரிடமும் இனி வாக்குச் சேகரிக்கமுடியாது என்னும் நிலை எப்போது இங்கே உருவாகிறதோ அப்போதுதான் மெய்யான வசந்த காலம் தொடங்கும்.
ஹசன் சுரூரின் புத்தகம் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் :
– இஸ்லாமியர்களைப் புரிந்துகொள்வது எப்படி?
– முஸ்லிம்கள் : பாபர் முதல் பாகிஸ்தான் வரை
– ஷா பானுவும் பாபர் மசூதியும்
– முஸ்லிம்