பாஜக சொல்லும் “பொது சிவில் சட்டம்” நியாயமான கோரிக்கையா?
அ. மார்க்ஸ்
பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் பாலின சமத்துவத்துக்காக பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம் என்கிறது. ஆனால் பொதுசிவில் சட்டத்தை முஸ்லிம்களும் சமூக நீதியாளர்களும் நீண்டகாலம் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த பொதுசிவில் சட்டம்பற்றி எழுத்தாளர் அ.மார்க்ஸ் தனது “இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.
தமது இணையப் பக்கத்தில் அ.மார்க்ஸ் வெளியிட்டுள்ள இந்த நூலில் பொதுசிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:
எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்? மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு. உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்தியா போன்ற பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி என வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் வழமைகள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படுகிறது. சில சாதிகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்துச் சட்டம் இயற்றும்போது கூட மேற்குப் பஞ்சாபிய உயர்சாதிப் பார்ப்பனப் பண்பாடுகளின் அடிப்படையிலேயே அச்சட்டம் இயற்றப் பட்டது என்றும் அது பல பழங்குடி மக்களின் பண்பாடுகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்றும் ஒரு விமர்சனமுண்டு.
இது போன்ற சந்தர்ப்பங்களில் தல வழமைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கும் நமது சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. இப்படி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். சிறீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்றொரு பிரச்சினை பல ஆண்டுகளக்கு முன்பு வந்தது. நீதிமன்றம் வரை சென்ற அந்தப் பிரச்சினையில் இறுதிவரை பொதுவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. ஒருமாதம் வடகலை நாமம், இன்னொரு மாதம் தென்கலை நாமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துமதத்திற்குள்ளேயே கூட இது சாத்தியமில்லை என்பதையே இது நிறுவுகிறது.
இந்நிலையில் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது முஸ்லிம்களக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை. சென்ற ஜுலை 21 (2003) அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் வழக்கின் வாதங்களுக்கோ, தீர்ப்புகளுக்கோ எவ்விதத் தொடர்பும் இன்றி பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுமாறு தலைமை நீதிபதி காரே பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் பொதுசிவில் சட்டம் வந்தால் தேசிய ஒருமைப்பாடு காப்பப்படுமாம். இதற்கு முன்பே நீதிபதி குல்தீப் சிங், சந்திரசூட் போன்றவர்களும் இப்படிச் சொல்லியுள்ளனர். அரசியல் சட்ட அவை விவாதத்தின் போதும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எம்.ஆர்.மசானி போன்றோர் இதைச் சொல்லியுள்ளனர்.
இதில் சிலஅம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்.
1. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமாக உள்ளதா இல்லையா என ஆய்ந்து தீர்ப்பளிப்பதே நீதிமன்றங்களின் பணி. பாராளுமன்றம் என்ன மாதிரி சட்டங்களை இயற்ற வேண்டும் எனச் சொல்வதற்கோ, கட்டளையிடுவதற்கோ அதற்கு அதிகாரமில்லை.
2. தேசிய ஒருமைப்பாடு குறித்த கவலையும் கூட நீதிமன்ற எல்லைக்கு அப்பாற்பட்டது. அது குறித்துப் பாராளுமன்றம், அரசியல் சட்டம் ஆகியவை கரிசனம் கொள்வதே பொருத்தம்.
3. இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் பாதுகாக்கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் / குடிமகளுக்கும் உறுதியாகும்போதே இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் அவருக்கு நம்பிக்கை வரும். மாறாக பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவருக்கு இது நமது நாடுதானா என்கிற அய்யம்தான் ஏற்படும். முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழிப்பது என்பது அவர்களின் மத உரிமையில் தலையிடுவதுதான்.
சொல்லப்போனால் ‘தனிநபர்’, ‘சட்டம்’ என்கிற இரு சொற்களுமே இங்கே பொருத்தமின்றி கையாளப்படுகின்றன. ‘தனிநபர்’ என்கிற மேலைத்தேய நவீனத்துவக் கருத்தாக்கம் இங்கே பொருந்தாது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் வருபவை தனிநபர் சார்ந்த உரிமைகள் அல்ல. அது அவர்களது ‘தீனின்’ ஒரு பகுதி, மதக் கடமை. தவிரவும் தொகுத்துச் சட்ட ஏற்பு வழங்கப்பட்டவைகளையே ‘சட்டம்’ என்கிறோம்.
சட்டமாகும்போது நீதிமன்றம் அதை சொல்லுக்குச் சொல் கடைபிடிக்க வேண்டும. மீற முடியாது. ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ இவ்வாறு பண்ணப்பட்டதல்ல. அதனால்தான் ஷாபானு வழக்கிலும் வேறு பல வழக்குகளிலும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தையும் மீறித் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகள் இருக்கும் போதும் பொதுசிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுவதன் அர்த்தமென்ன? இந்த மாதிரியான பிரச்சினைகளில் சீர்திருத்தங்கள் கூடாது என்பதில்லை. அவை உள்ளிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிலிருந்து திணிக்கக்கூடாது.
கிறிஸ்தவர்கள் தமது சட்டங்களில் சில மாற்றங்கள் வேண்டுமென்கிறார்கள். இதில் கருத்தொருமிப்பு இருந்தால் அதை ஏற்று தேவையான சட்டத் திருத்தம் செய்யலாம். அதே போல முஸ்லிம்கள் மத்தியிலும் ஏதோ ஒரு விசயத்தில் ஒரு கருத்தொருமிப்பு ஏற்பட்டு சட்டத் திருத்தம் என்கிற குரல் மேலுக்கு வந்தால் அது வேறு விஷயம்; அத்தகைய நிலை இல்லாதபோது வெளியிலிருந்து எதையும் திணிக்க முயல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?
சில விடயங்களில் ஒரே பிரச்சினை குறித்து இருவேறு சூழல்களில் இருவேறு கருத்துக்களைக் கூடப் பேச வேண்டி இருக்கலாம். இதுநாள் வரை பெண்களுக்குப் ‘பர்தா’ வேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் கூட இன்று பிரெஞ்சு அரசாங்கம் பர்தா அணியக் கூடாது என்றொரு நிலையை வன்முறையாகச் செயல்படுத்த முனையும் போது அதற்கெதிராக முஸ்லிம் பெண்களுடன் இணைந்து போராடவில்லையா? இவ்வாறு அ. மார்க்ஸ் தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.