அல்லாஹ்வின் துணை இருக்க அச்சம் எதற்கு?
ஃபைஜுர் ஹாதி AMB, நீடூர்
அப்பாவி முஸ்லிம்களை தான் “போலி என்கவுண்ட்டர்” செய்தார்கள் என்றால் வரலாறுகளையும், உண்மைகளையும் “போலி என்கவுண்ட்டர்” செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் முகத்திரை கிழியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
முஸ்லிம்களை கருவறுப்பதில் மோடியின் பங்களிப்பு என்னவென்பது இந்திய நீதித்துறையை தவிர அனைவருக்கும் நன்கு தெரியும். குஜராத் இனப்படுகொலைக்கு காரணம் இவர்தான் என்று விவாதங்களில் மட்டும் கூறும் ஆட்சியாளர்கள் அவற்றை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க மறுத்தும் தயங்கியும் வருகிறார்கள்.
முஸ்லிம்களே! குற்றவாளிகளை தண்டிக்க தற்போதைய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும், நீதித்துறையும், காவல்துறையும், மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்பவர்களும் முனைவார்கள், நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்பினால் நாம்தான் தோற்றுப்போவோம்!
ஒன்றை நன்றாக விளங்கிக்கொள்வோம். அல்லாஹ்வின் துணையும், அவனின் மீது நாம் வைத்திருக்கும் ஈமானுமே நம்மை பாதுகாக்கும். மோடியின் தலைமையில் ஆட்சி அமையுமேயானால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் வேரறுக்கப்படுவார்கள். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி நம்மை பகடை காயாக்க முயல்கிறார்கள்.
இந்த நரவேட்டையை பார்த்து முஸ்லிம்கள் அஞ்சி நடுங்குவதை போலவும், நாதியற்று நிற்பது போலவும், நரவேட்டையின் ஆட்சி வந்துவிட்டால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போலவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அஞ்சி நடுங்க வேண்டியவர்களும், நாதியற்று நிற்க போகிறவர்களும், பாதுகாப்பு இல்லாமல் அக்கிரமங்களுக்கும், அநியாயங்களுக்கும் உள்ளாக்கப்படுபவர்களும் இஸ்லாமியர் மட்டும் இல்லை. மாறாக, ஏழை எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், RSS என்ற சித்தாந்தத்தை ஆதரிக்க மறுக்கும் அனைவருமே என்பதை மறக்க வேண்டாம்.
இஸ்லாமியர்களின் பாதுகாப்பு பற்றி போலி மதச்சார்பின்மைவாதிகள் கவலைப்படுவது வேடிக்கையான ஒன்று. இந்த நரவேட்டை நாயகனை பார்த்து அஞ்சி நடுங்கும் கோழைகள் அல்ல இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களை வேரறுக்க கங்கணம் கட்டி படுதோல்வி அடைந்த எத்தனை எத்தனையோ அநியாயக்காரர்களை வென்றவர்கள் இஸ்லாமியர்கள்.
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவன் ஒருவனுக்கே அடிபணிய வேண்டும் என்ற உயர்ந்த உண்மையான சித்தாந்தத்தையுடைய இஸ்லாம் பிர்அவ்ன், காரூன், அபூஜஹல் வரிசையில் ஏரியல் ஷரோன், ஜார்ஜ் புஷ் என நூற்றுக்கணக்கான அரக்கர்களையும் அவர்களின் சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
நரவேட்டை நாயகன் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதிலிருந்து தடுக்க நிச்சயமாக நாம் வியூகம் வகுக்க வேண்டும்; பாடுபட வேண்டும்; அதற்காக மக்களிடத்திலே விழிப்புணர்வினை ஏற்படுத்தத்தான் வேண்டும். அதற்காக அஞ்சி நடுங்க வேண்டாம்! நமக்கு பாதுகாப்பு இல்லையோ என்று வருந்த வேண்டாம்!
ஏனெனில் அன்று அபூஜஹல்; இன்று மோடி; நாளை மோடியின் வாரிசுகள்! மோடி என்ற அம்போடு நமக்கான அச்சுறுத்தல்கள் நிற்கப்போவதில்லை. RSS சித்தாந்தம் இன்னும் பல நூறு மோடிகளை உருவாக்கும்.
மோடியின் கொடூரத்தை கண்டு அஞ்சி நடுங்காமல் அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு நம் ஈமானை திடப்படுத்துவோம்! இஸ்லாமியர்களை வேரறுப்பதிலும், உண்மைகளை குழி தோண்டி புதைப்பதிலும் மோடியும் அவரின் பரிவாரங்களும் வல்லவர்களாக இருக்கலாம்.
ஆனால் இஸ்லாமியர்கள் ஒன்றை மறக்க வேண்டாம். பாதுகாப்பதிலும் சரி, உதவி செய்வதிலும் சரி, சூழ்ச்சி செய்வதிலும் சரி அல்லாஹ்வே முதன்மையானவன் என்பதை மறக்க வேண்டாம்.
இஸ்லாமியர்கள் என்ற காரணத்திற்காக விசாரணை கைதிக்கே பிணை மறுத்து மற்றவர்களுக்கு நீதிமன்றங்களால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக பிணை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நீதித்துறையும் சரி, இவர்தான் குற்றவாளி; சூத்திரதாரி என்று வாய் கிழிய கூறிக்கொண்டே தண்டனை வாங்கிக் கொடுக்க மறுக்கும் ஆட்சியாளர்களும் சரி, RSS என்ற மோடியின் தாய்ச்சபைக்கு குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்று பல ஆதாரங்கள் கூறிய பிறகும் நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறையும் சரி, அதனை மூடி மறைக்கும் ஊடகங்களும் சரி – நமக்கு பாதுகாப்பில்லை.
என்றுமே அல்லாஹ் மட்டுமே நமக்கு துணை! அவனின் மீது நாம் வைத்திருக்கும் ஈமானே நமக்கு துணை! சத்தியமும் சமாதானமுமே வெல்லும்! அசத்தியம் அழிந்தே தீரும்!
ஃபைஜுர் ஹாதி AMB, நீடூர்
source: http://www.thoothuonline.com/archives/55472#sthash.Q3w5GLtz.dpuf